Wednesday, September 10, 2014

உருத்திராக்கம் கோக்கும் முறையும் - அணியும் விதியும்!

உருத்திராக்கம் கோக்கும் முறையும் - அணியும் விதியும்!
உருத்திராக்க மணிகளை நாம் அணிய மாலையாகக் கோக்கின்ற போது; அம்மாலையிலுள்ள மணிகள் அனைத்தும் ஒத்தமுகம் உடையதாகவேயிருக்கும்படி தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஐந்து முக மணி மாலை தயாரிக்கும் போது; அனைத்து மணிகளும் ஐந்து முகம் உடையதாகவே இருக்க வேண்டும். வேறு முகம் கலந்து அணியக் கூடாது. அதைப் போலவே, ஒத்த அளவினதாக உள்ள மணிகளையே ஒரு மாலையில் கோத்தல் வேண்டும். சிகாமணி மட்டும் வேறுபடலாம்; பவளம் படிகம் போன்ற வேறு மணிகளாகவும் இருக்கலாம். உருத்திராக்க மணியின் முகத்தோடு முகத்தையும்; அடியோடு அடியையும்; பொருந்தக் கோத்துத் தரித்தல் வேண்டும். நூலில் கோத்துத் தரிக்கும்போது; மணிகள் ஒன்றோடு ஒன்று தொட்டுக் கொண்டிருக்கும்படி கோத்தல் கூடாது; இடையே, ஏதேனும் ஒரு பொருள் தடுப்பாய் இருக்கும்படி கோத்தல் வேண்டும். இடை இடையே பவழம், ஸ்படிகமணி, தங்கம், வெள்ளி, பொன்மணி, முத்து முதலியவைகளில் ஏதேனும் ஒன்றை சேர்த்து கோத்தும் அணியலாம். உருத்திராக்க மணிகளை; தலைமுடி, சிரசு, இருகாதுகள், கழுத்து, மார்பு, அதன் மேல் அணியும் பூணூல், இரு புயங்கள், கையின் இரு மணிக்கட்டுகள் என பதினொரு தனங்களில் அணியலாம்.
1. தலைமுடியில் ஒரு மணி அணிய வேண்டும்.
2. சிரசில் இருபத்தி இரண்டு மணிய அணிய வேண்டும்.
3. காதுகள் ஒன்றில் ஒரு மணி அல்லது ஆறு மணி அணிய வேண்டும்.
4. கழுத்தில் முப்பத்திரண்டு மணி அணிய வேண்டும்.
5. மார்பில் நூற்றியெட்டு அல்லது ஐம்பத்தி ஒன்று கொண்ட மாலை அணிய வேண்டும்.
6. பூணூலில் ஒரு மணி அணிய வேண்டும்.
7. புயம் ஒன்றில் பதினாறு மணி அணிய வேண்டும்.
8. மணிக்கட்டு ஒன்றில் பன்னிரண்டு மணி அணிய வேண்டும்.
தலைமுடியும், பூணூலும் தவிர்த்த பிற இடங்களில் அவரவர் உடல் தகுதிக்கு ஏற்ப அவ்வத் தானங் கொண்ட அளவு மணிகளையும் அணியலாம் !
நூற்றெட்டு மணிகளைக் கொண்ட மாலையைப் பயன்படுத்துவது சிறந்தது. இயலாதாயின், ஐம்பத்தொரு மணிகளை மாலையாகக் கோத்து அதைக் கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும். ஐம்பத்தி நான்கு மணிகளை மாலையாகக் கோத்து அதை ஜபம் செய்யப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மாறுபாட்டை உணர்தல் முக்கியம். கழுத்தில் அணிந்து கொண்டிருக்கும் மாலையை ஜபத்திற்குப் பயன்படுத்தல் அபச்சாரம். இரண்டிற்கும் தனித்தனி மாலைகளைப் பயன்படுத்த வேண்டும். இதுவே சிவபூஜாவிதி ! உருத்திராக்க மணிகளைக் கோத்து; பூணூலாக அணிதலும்; பௌத்திரமாகப் பயன்படுத்தலும் வழக்கில் உண்டு.

No comments:

Post a Comment