Monday, October 20, 2014

இயல்பான ஒன்றே வழிபாடு

ஜென் குரு ஒருவர் இருந்தார். அவர் உயர்ந்த பண்புள்ள ஞானியாக திகழ்ந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பல பகுதியைச் சேர்ந்தவர்களும் அங்கு வந்து குருவிடம் நலம் விசாரித்து, உரையாடி மகிழ்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஒருமுறை குருவைக் காண்பதற்காக, ஒருவர் வந்திருந்தார். அவர் வந்திருந்த நேரத்தில் குருவானவர், புத்தரை வணங்கி வழிபட்டுக் கொண்டிருந்தார். இதைப் பார்த்து அந்த நபர் வியந்து போனார். அங்கிருந்த ஆசிரமச் சீடர்களிடம் அந்த நபர் இதுபற்றி விசாரித்தார்.

அதற்கு அவர்கள், தங்கள் குரு தினந்தோறும் தவறாமல் புத்தரை வணங்குவதாக கூறினார்கள். ‘ஏன்?’ என்று வந்தவர் கேட்க, தங்களுக்கு தெரியாது என்று சீடர்கள் கைவிரித்து விட்டார்கள். புத்தரை வழிபட்டுக் கொண்டிருந்த குரு, தன் வழிபாடு முடிந்ததும் தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்போது வந்திருந்தவர்கள் குருவிடம் சென்று வணங்கி அவர் முன்பாக அமர்ந்தார். பின்னர் ‘இறைவன் என்று தனியாக ஒன்று உண்டா?’ என்ற கேள்வியை குருவின் முன்பாக வைத்தார். அதற்கு குரு, ‘கிடையாது’ என்று பதிலளித்தார்.

‘இறைத் தன்மை என்பது ஒருவனுக்கு உள்ளே இருப்பதா? அல்லது வெளியே இருப்பதா?’ என்று மீண்டும் கேள்வி எழுப்பினார் வந்தவர். ‘உள்ளே தான்’ என்றார் குரு. வந்தவரின் கேள்வி தொடர்ந்தது. ‘இந்திரியங்களை அடக்கித் தன்னுள்ளே தான் லயிப்பதன் மூலம்தானே, ஒருவன் உள் ஒளியைக் காண முடியும்?’. ‘ஆமாம்’ என்றார் குரு.

இப்போது தன்னுடைய சந்தேகத்தை கேள்வியாக வைத்தார் வந்த நபர். ‘அப்படியிருக்க ஆலய வழிபாடுகளால் என்ன பயன்?’ என்றார். குருவோ, ‘ஒன்றுமில்லை’ என்று பதிலளித்தார். ‘சம்சார வாழ்வில் சிக்கி உழலும் மனிதன் ஆன்ம அறிவு பெற வேண்டும் என்றால், உருவ வழிபாடு, ஆலய தரிசனம், யாத்திரை எனப் பல படிகளைத் தாண்டித் தானே ஆக வேண்டும்.

அதன் இறுதியில்தானே அவன் ஞானம் பெறுவான்?’ என்றார் வந்தவர். ‘இருக்கலாம்’ என்று ஒரே சொல்லில் பதிலளித்தார் குரு. ‘நீங்களோ அனைத்தையும் துறந்தவர். ஞானம் பெற்றவர். அப்படியிருக்க இன்னும் புத்தரை விடாமல், தினந்தோறும் அவரை வணங்குகிறீர்களே!,

புத்தரிடம் எதையாவது கேட்கிறீர்களா? அல்லது இன்னமும் உண்மையைத் தேடுகிறீர்களா?’ என்றார் வந்த நபர். ‘புத்தரிடம் நான் எதையும் கேட்பதும் இல்லை. எந்த உண்மையையும் தேடுவதும் இல்லை’ – இது குருவின் பதில். ‘பிறகு எதற்காக புத்தரை தினந்தோறும் வழிபடுகிறீர்கள்?’ என்றார் அந்த நபர்.

‘சும்மா தான்’ என்றார் குரு. அவரது பதில், அந்த நபரின் தலையை கிறுகிறுக்கத் செய்தது. இலக்கின்றி இருத்தலே இயல்பு என்பதை இந்த கதை உணர்த்துகிறது. எதையோ நாடிச் செய்வதல்ல வழிபாடு. எதையும் நாடாது இயல்பாகச் செய்வதும் வழிபாடுதான். இயல்பான ஒன்றை எதற் காக நிறுத்த வேண்டும்

No comments:

Post a Comment