Sunday, January 4, 2015

மார்கழி மாதம் திருவாதிரை விழா கொண்டாடுகிறோமே... எதற்காக தெரியுமா?

மார்கழி மாதம் திருவாதிரை விழா கொண்டாடுகிறோமே... எதற்காக தெரியுமா?
சோழ நாட்டின் தலைநகர் காவிரிப்பூம் பட்டினத்தில், சாதுவன் என்ற வியாபாரி இருந்தான். பெரிய பணக்காரன்; அவனது மனைவி ஆதிரை. திருமணமாகி இரண்டு ஆண்டுகள் மனைவியுடன் இன்பமாக குடும்பம் நடத்திய சாதுவன், ஒரு நாடகத்திற்குச் சென்றான். அதில் நடித்த நடிகையின் அழகில் மயங்கி, அவள் மேல் காதல் கொண்டு, அவளது வீட்டிலேயே தங்கி விட்டான்.
அந்த நடிகை, சாதுவனின் பணத்தைப் பறித்த பிறகு, அவனை விட்டு சென்றுவிட்டாள். மனைவிக்கு இழைத்த துரோகத்தால் தான், தனக்கு இந்தக் கதி ஏற்பட்டது என்று எண்ணிய சாதுவன், வீட்டிற்குப் போகவில்லை. இழந்த பொருளை சம்பாதிக்க திட்டமிட்டான். அப்போது, வங்கதேசத்திலிருந்து வியாபாரிகள் காவிரிப்பூம் பட்டினம் வந்தனர். அவர் களுடன், வியாபார நுணுக்கங்கள் குறித்து சாதுவன் பேசவே, அவனை அவர்களுக்குப் பிடித்து விட்டது. சாதுவனை தங்களுடன் பாய்மரக்கப்பலில் அழைத்துச் சென்றனர்.
கப்பல் சென்று கொண்டிருந்த போது, பயங்கரப் புயல் அடித்து கப்பல் கவிழ்ந்தது. உடன் வந்தோரில் பலர், கடலில் மூழ்கி இறந்தனர். உடைந்த கப்பலின் பலகை ஒன்றின் மீதேறி படுத்துக் கொண்ட சாதுவன், 'தான் இறந்து போனால் மனைவியிடம் தனக்கு உண்டான கெட்ட பெயர் அப்படியே நிலைத்து நின்று விடுமே...' என நினைத்து, வருந்தினான்.
ஆதிரையோ, சிவ பக்தியும், கணவன் மேல் நீங்காத அன்பும் கொண்டவள். 'கணவன் எங்கே இருந்தாலும் நல்லபடியாக இருக்க வேண்டும்...' என்று, தினமும் வேண்டிக் கொள்வாள். இது நம் நாட்டுப் பெண்களின் பண்பாடு. அவளது பிரார்த்தனையின் பயனாக, சாதுவன் படுத்திருந்த பலகை பாதுகாப்பாக கரை ஒதுங்கியது.
ஒருநாள், சாதுவன் வெளிநாடு சென்ற விஷயமும், கப்பல் கடலில் மூழ்கிய செய்தியும் ஆதிரையை எட்டியது. கணவன் இறந்து விட்டான் என முடிவு செய்த ஆதிரை, அழுது புலம்பி, தீ மூட்டி உயிர் துறக்க முடிவெடுத்தாள். 'இறைவா... அடுத்த பிறவியிலும் அவரே என் கணவராக வர வேண்டும்...' என்று வேண்டியபடி தீயில் குதித்தாள்.
ஆனால், கற்புக்கரசியான அவளைத் தீ சுடவில்லை; 'ஐயோ... நெருப்பு கூட தீண்ட முடியாத பாவியாகி போனேனே...' என கதறி அழுதாள். அப்போது வானில், 'அம்மா ஆதிரையே... கவலை வேண்டாம்; உன் கணவர் மீண்டும் வருவார்...' என்று அசரீரி கேட்டது.
இதனிடையே கரையில் ஒதுங்கிய சாதுவனை, காவலர் கள் அந்நாட்டு அரசரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் தன் கதையை எடுத்துச் சொன்னான் சாதுவன். அவனை உபசரித்து, மது கொடுத்தார் அரசர். அதை ஏற்காமல், மது அருந்துதலின் தீமைகளை எடுத்துச் சொன்னான் சாதுவன்.
ஆனால், அரசரோ, 'நாம் மகிழ்ச்சியுடன் இருக்கத்தானே கடவுள் மதுவைப் படைத் திருக்கிறார்; அப்படி இருந்தும் ஏன் சாப்பிட மறுக்கிறாய்?' என்று கேட்டார்.
'அரசே... மதுவின் மயக்கத் தால் தான், கட்டிய மனைவியை விட்டு, நடன மாதுவிடம் சிக்கி, பொன், பொருளை இழந்ததுடன் மானத்தையும் இழந்தேன். மது குடிப்பதால், மனம் தடுமாறும்; புத்தி சிந்திக்கும் திறனை இழக்கும். சண்டை உருவாகி, சில சமயம் அது கொலையிலும் முடியும். இம்மது மயக்கமே, மனைவியைத் தவிர பிற பெண்களுடனும் உறவு கொள்ள தூண்டும். இதன் விளைவாக பொருளை இழப்பதுடன், நம்முடைய குலக் கவுரவுமும், மானமும் போகும். இதை என் அனுபவம் எனக்கு உணர்த்தியது...' என்று மதுவின் தீமையை எடுத்துக் கூறினான். இதைக்கேட்ட மன்னரும் மனம் திருந்தி, மது பழக்கத்தை கைவிட்டார்.
அவரது உதவியுடன் நாடு திரும்பிய சாதுவன், மனைவியிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து வாழ்ந்தான். அந்தக் கற்புக்கரசியான ஆதிரையே திருவாதிரை நட்சத்திரமாக வானமண்டலத்தில் மிளிர்கிறாள். சிவபெருமான் அதை, தன் நட்சத்திரமாக ஏற்றதுடன், அந்நாளில் மகிழ்வுடன் நடனமாடி, 'நடராஜர்' எனும் திருநாமமும் பெற்றார்.
ஆண்களே... மதுவும், பிற பெண்களுடனான உறவும் வேண்டாம். அது, உங்கள் பொருளையும், மானத்தையும் அழிக்கும். பெண்களே... தவறு செய்யும் கணவரைப் பொறுமையுடன் திருத்துங்கள்; வாழ்க்கை இனிக்கும்.

No comments:

Post a Comment