Sunday, February 1, 2015

உண்மை எது?

உண்மை எது?
"எனக்கென்னமோ, இன்றைக்கு உங்களுக்கு ஒரு பெரியகண்டம் காத்திருக்கிறது என்று தான் தோன்றுகிறது யுதிஷ்டிரா!”
"எப்போதும் எங்களை ஊக்குவித்து உய்விக்கும் நீயே இவ்வாறு பேசுவது ஆச்சர்யமா யிருக்கிறது கிருஷ்ணா" என்றான் தர்மன்.
"புரிந்து கொள், யுதிஷ்டிரா!, கடந்த 5 நாளாக உனது சேனையை வாட்டி எடுக்கிறார் த்ரோணாச்சார்யர். இன்று மாலைக்குள் நீ த்ரோணாசார்யாரை வீழ்த்தா விட்டால் பாண்டவ சேனை அழிந்து விடும். ஜாக்ரதை!. என்னால் இதை மட்டும் தான் உறுதியாக சொல்ல முடியும். துரோணரின் பிரம்மாஸ்திரம் உங்கள் சேனையில் பாதி பேரை விழுங்கிவிட்டது என்பதை கவனம் கொள்!" .
“நீ என்ன சொல்கிறாய் அர்ஜுனா?
........
என்ன அர்ஜுனா பேசாமல் இருக்கிறாய்
“ஒன்று மில்லை கிருஷ்ணா.அவரிடம் கற்ற வித்தையெல்லாம் அவர் மேலேயே பிரயோகிக்கிறேன்”.
“போதாது அர்ஜுனா. இந்த போரில் துரோணரை வெல்ல ஒரு உபாயம் தான் எனக்கு தோன்றுகிறது. இதற்கு பீமன் சரியானவன்.
இதோ, பார் பீமா இன்று உனது முக்யமான வேலை கௌரவ சேனையில் இருக்கும் ஒரு யானையை கொல்வது தான். முதலில் அதை முடி பிறகு நான் அடுத்த கட்டத்தை தாண்டுவது எப்படி என்று பார்க்கிறேன்" கிருஷ்ணன் சொன்னதை பாண்டவர்கள் கேட்டார்கள். அப்படியே நடந்துகொண்டார்கள்.
துரோணர் மின்னல் வெட்டில் அன்று பாண்டவர் சேனையை, வியூகங்களை உடைத்து அழிக்க ஆரம்பித்தார். அர்ஜுனனின் பாணங்களை வெகு லாகவமாக எதிர்த்தார். சரியான நேரத்தில் பீமன் அந்த யானையைக் கொன்றான். பாண்டவ சேனை வெகு உற்சாகமாக "அஸ்வத்தாமன் மடிந்தான்" என்று சப்தமிட, சங்கங்களும் பேரிகைகளும் முழங்க ஒரு கணம் 
திகைத்தார் துரோணர். அஸ்வத்தாமன், அவர் மகன், மகா வீரன், எப்படி இறந்தான் என்ற அதிர்ச்சி அவருக்கு. உண்மையா, பொய்யா என்று தெரிந்து கொள்ள ஒரே வழி உண்மையையே பேசும் தர்மனையே கேட்போம் என
"யுதிஷ்டிரா, நீ சொல் என் மகன் அஸ்வத்தாமன் மடிந்தது உண்மையா? “
தர்மன் கிருஷ்ணன் சொல்லிக் கொடுத்தபடியே பதில் சொன்னான்.
"ஆம், அஸ்வத்தாமன் இறந்தான்" , " மனிதனல்ல, யானை" . இந்த இரண்டாவது வார்த்தை துரோணர் காதில் கேட்காதவாறு கண்ணனும் மற்றவர்களும் தத்தம் சங்க நாதங்களை எழுப்ப யுத்தகளத்தின் பேரிரைச்சலில் "அஸ்வத்தாமன் இறந்தான்" என்ற தர்மனின் வாக்கு துரோணரை வீழ்த்தியது. அப்படியே தேர்த் தட்டில் தன வில்லையும் அம்பையும் ஒரு கணம் வைத்து கண்களை மூடினார் துரோணர். இந்த கணத்துக்காகவே காத்திருந்த த்ருஷ்டத்யும்ன னிடம் "விடு துரோணர் மீது உன் பாணத்தை" என்ற கிருஷ்ணன் கட்டளையை துரோணரை கொல்வதற்காகவே காத்து கிடந்த துருபதன் மகன் நிறை வேற்றி துரோணரின் சகாப்தம் முடிந்தது. யுத்தத்தில் ஒரு முக்ய திருப்பம் கிருஷ்ணனால் பாண்டவருக்கு கிடைத்தது

No comments:

Post a Comment