Friday, February 13, 2015

தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து

தெய்வத் திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் 'ஆலயம் ஏன்?' என்ற நூலில் இருந்து)
*
எங்கும் நிறைந்து இருக்கும் இறைவனை ஆலயம் சென்று தான் வழிபட வேண்டுமா?
*
பசுவின் உடம்பு முழுவதும் பால் பரவி இருந்தாலும் மடியின் மூலமாகத் தான் பாலைப் பெற முடியும். காதைப் பிடித்து இழுத்தால் பால் வராது, காது தான் வரும். பூமியின் அடியில் எங்கும் வியாபித்திருக்கும் தண்ணீரை நாம் உபயோகப் படுத்த வேண்டுமாயின் ஓரிடத்தில் கிணறு வெட்டித் தானே தண்ணீரை எடுக்கிறோம்.
*
வெயிலில் வெப்பம் நிறைந்து இருக்கிறது. ஆனால், நேராக சூரியனுடைய வெயிலிலே ஒரு துண்டை வைத்தால், அது பற்றி எரியாது; வெதும்பும். ஆனால், சூரிய காந்திக் கண்ணாடியின் கீழே வருகின்ற மற்றொரு வெயிலிலே துண்டையோ பஞ்சையோ வைத்தால் திக்கென்று தீப்பிடித்துச் சாம்பலாகிப் போகும். நேர் வெயிலுக்கு துண்டை கொளுத்துகின்ற ஆற்றல் இல்லை. என்ன காரணம் ?
*
எங்கும் பரந்திருக்கும் ஆதித்தனின் பேரொளியை சூரிய காந்திக் கண்ணாடி ஈர்த்து அனுப்புகிறது. அதுபோல, எங்கும் நிறைந்திருக்கும் இறைவனுடைய திருவருளை நால்வர்; ஆழ்வார்கள்; அருணகிரிநாதர்; ஸ்ரீபாம்பன் சுவாமிகள் போன்ற அருளாளர்களும், வேத வித்துகளாய் விளங்கும் பெரியோர்களும் மந்திர யந்திரங்களால் சேர்த்தும் - ஈர்த்தும் திரட்டி வைத்துள்ளனர்.
*
மற்ற இடங்களில் இறைவனை வழிபடுவது வெயிலில் வேட்டியை வைப்பது போல. ஆலயங்களில் இறைவனின் சந்நிதியில் வழிபடுவது சூரிய காந்திக் கண்ணாடியின் கீழ் வேட்டியை வைப்பது போல. இது உடனே தீப்பிடித்துக் கொள்கிறதல்லவா ? அது போல நம் வினைகளும் வெந்து போகும். 
*
ஆகவே வினைகள் வெந்து மறுபிறப்பு உண்டாகாமல் இருப்பதற்கு ஆலய வழிபாடு இன்றியமையாதது.

No comments:

Post a Comment