Sunday, April 26, 2015

துளஸிதாஸர் செய்த ஸ்ரீ இராம தர்சனம்

துளஸிதாஸர் செய்த ஸ்ரீ இராம தர்சனம்
ரங்கன்
துளஸிதாஸருக்கு அவருடைய மனையாளே முதல் குரு போலும்! வெகு நாள்கள் கழித்து துளஸிதாஸர் யாத்திரை முடிந்து வீடு திரும்பினார். மனைவியைக் காணவேண்டிய ஆவல் மிகுந்தவராய் ஓடோடி வந்தார். ஆனால் வீட்டில் மனைவியைக் காண முடியாமல் பதறினார். அக்கம்பக்கத்தில் விசாரித்தார்.
அவள் தன் தம்பியுடன் ஒரு விழாவிற்காக பிறந்தகம் சென்றதாய் சிலர் கூறினர். இருப்பினும் துளஸிதாஸரின் உள்ளம் நிம்மதி அடையாமல் தவித்தது. “எங்கே அவள்? எங்கே அவள்?” எனத் தேடியது. அவ்விரவே அவளின் பிறந்தகத்திற்குப் புறப்பட்டார்.
பெருமழை பெய்தது. அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. செல்லும் வழியில் ஒரு நதி அவர் வழியை மறித்தது. ஆற்றைக் கடக்க வேண்டிய வேகத்தில் ‘ஓடம்’ என்று எண்ணி ஏதோ ஒரு பொருளின் மேலமர்ந்தார். அதன் மூலம் நதியைக் கடந்தார். பிறகுதான் “அது ஓடமில்லை, பிண உடல்” எனத் தெரியவந்தது.
தன் மனையாளின் பிறந்தகத்தை அடைந்து வெளியே நின்றபடி நள்ளிரவில் அவளை உரத்த குரலில் கூப்பிட்டுப் பார்த்தார். இடி, மின்னல், மழை ஒலியில் உள்ளே நன்கு உறங்குபவர்களுக்கு இவர் குரல் காதில் விழவில்லை. எப்படியோ... தொங்கிக் கொண்டிருந்த ஒரு பாம்பைப் பற்றிப் பிடித்துக் கொண்டு வீட்டின் மேலேறி உள்ளே சென்றார்.
உள்ளே தன் மனைவி உறங்கிக்கொண்டு இருந்ததைக் கண்டு நிம்மதி அடைந்தார். அவளும் எழுந்திருந்து அவரை வரவேற்றாள்.
“ஏன் இவ்வளவு வேகம்?” என்றாள்.
“நீ எங்கேயாவது தொலைந்து விட்டாயோ என்ற அச்சம்தான்” என்றார்.
“இவ்வளவு பதற்றம் ஏன்? நான் என்ன அவ்வளவு எளிதில் ஏமாந்து விடுவேனா என்ன? என்னை என் தம்பி வந்து பிறந்தகத்திற்கு அழைத்ததால் நம் வீட்டுச் சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு உங்களிடம் சொல்லச் சொல்லிவிட்டுத்தானே வந்தேன்!” என்றாள்.
“ஆம். அவர்களும் சொன்னார்கள்.” என்றார்.
“அதன் பின்பும் இவ்வளவு பதற்றம் ஏன்” என்றாள்.
“உன்னிடம் எனக்குள்ள கட்டுக்கடங்காத பாசமே பதற்றத்தின் காரணம்.” என்றார்.
உடனே அவள் கூறினாள். “என்னிடம் காட்டும் இத்தீவிரமான இவ்வன்பை இறைவனின் பொருட்டுக் காட்டினால் கடைத்தேறிவிடலாமே. உலக விஷய போகங்களில் ஒரு மனிதனுக்கு எவ்வளவு வேகமும், ஆர்வமும், ச்ரத்தையும் உள்ளனவோ அவையே இறைவனிடம் இருந்தால் கதி மோட்சத்திற்கு வழி வகுக்குமே” என்றாள்.
தன் மனையாளின் வாக்கியம் துளஸிதாஸரின் உள்ளத்தில் நன்கு பட்டது; பதிந்தது; அதையே சிந்திக்கலானார். அதிலிருந்து தன் எண்ணங்கள் அனைத்தையும் தன் இஷ்டதெய்வமான ஸ்ரீஇராமனின் பொருட்டே செலுத்தலானார். காசியில் வாசம் செய்து கொண்டு அகண்டமாய் இராமநாமஜபம் செய்து வந்தார்.
ஒருநாள் கங்காஸ்நானம் முடிந்து அச்வத்தபூஜை செய்தார். அச்வத்தத்தை அவர் தொட்ட மாத்திரத்தில் அங்கு ஒரு கந்தர்வன் தோன்றி அவரிடம் கூறினான் “பெரியவரே! யான் ஒரு ப்ரும்ம ராக்ஷஸன். போன ஜன்மத்தில் வேதமறிந்த ஓர் அந்தணனாய் இருந்த யான் என் குற்றத்தால் ப்ரும்ம ராக்ஷஸனாகி விட்டேன். ஆனால் தற்போது புண்ணிய பலனாய் கந்தர்வப்பிறவியை அடைந்துள்ளேன். தங்களுக்கு உபகாரம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்வது?” என வினவினான்.
“எனக்கு இராமதரிசனம் செய்து வைக்க முடியுமா?” என வினவினார் துளஸிதாஸர்.
உடனே அந்தக் கந்தர்வன் “பெரியவரே! அதற்கான தகுதி எனக்கில்லை. ஆனால் யாருக்கு உண்டு எனக் கூறுகிறேன்.” என்றான்.
உடனே துளஸிதாஸரும் ஆர்வம் ததும்பும் கண்களுடன் கந்தர்வனிடம் “அத்தகுதி உடையவர் யாரோ? யாரோ? சீக்கிரம் கூறுங்கள்.” என்றார்.
கந்தர்வன் கூறினான். “தாங்கள் மாலைதோறும் ஸ்ரீஇராமாயண உபன்யாஸம் செய்கையில் ஒரு முதியவர் தினமும் முதலில் அமர்ந்து கேட்பதை கவனிக்கிறீரா?”
துளஸிதாஸரும், “ஆம். ஆம். கவனித்தது உண்டு. அவர் மிகவும் சிரத்தையுடனும், பக்தியுடனும் இராமகதையை ரசித்துக் கேட்பாரே.” என்றார்.
“ஆம். அவரே தான். அவரிடம் தாங்கள் இராம தர்சனத்திற்காக வேண்டினால் அவர் நிச்சயமாய் செய்து வைப்பார்.” என்றான் அந்தக் கந்தர்வன்.
துளஸிதாஸருக்கு மேனி சிலிர்த்தது. தூக்கிவாரிப்போட்டது. “அப்படியா? அவரிடம் அப்படி என்ன விசேஷம் உள்ளது?” என வினவினார் துளஸிதாஸர்.
“பெரியவரே! அவர்தான் ஹனுமார். கிழவரின் உருவில் வந்து இராமகதை கேட்கிறார்.” என்றான் கந்தர்வன்.
தலைகால் புரியாத துளஸிதாஸர் தனது குடிலுக்குத் திரும்பினார். இன்றும் துளஸிதாஸரின் இராமாயண உபன்யாஸத்தில் அக்கிழவர் தென்பட்டார். துளஸிதாஸரும் அக்கிழவரை ஹனுமான் என்று அறிந்து கதை சொல்லுவதால் மிகவும் ஊக்கத்துடன் சொன்னார்.
கதை முடிந்தது. துளஸிதாஸர் அக்கிழவரிடம் ஓடி வந்தார். அவரை ஏகாந்தமாய் சந்தித்து அவரின் பாதங்களில் விழுந்து தனக்கு இராமதரிசனம் கிட்டும்படி அருள வேண்டினார். கிழவரும் தன் சுயரூபத்தை துளஸிதாஸருக்குக் காட்டியருளினார்.
“கூடிய சீக்கிரம் தங்களுக்கு இராம தரிசனம் கிட்டும்.” எனக் கூறி மறைந்தார் மாருதி.
ஒரு முறை தீர்த்த யாத்திரையாய்க் கிளம்பி துளஸிதாஸர் சித்திரக் கூடம் வந்தடைந்தார். சித்திரக்கூடம் ஓர் எழில் மிகுந்த காடு. ஸ்ரீஇராமன் இங்குதான் முதன்முதலில் வனவாஸம் செய்தார். சள சள வென மந்தாகினி மந்தமாய் ஓடுகிறது. துளஸிதாஸர் அவ்வாற்றில் ஸ்நானம் செய்தார்.
அப்போது அங்கு இரு அழகான வேடுவக் குழந்தைகளைக் கண்டார். அவர்கள் கட்டிளங்காளைகளாகவும், எளிமையாகவும், சாந்தமாகவும், அடக்கமாகவும் இருந்தனர். துளஸிதாஸரின் உள்ளத்தைக் கவர்ந்தனர்.
துளஸிதாஸர் ஸ்நானம் செய்து முடிக்கும் வரை கரையிலேயே காத்திருந்தனர். அவர்களின் பணிவு அவரை வியக்கச் செய்தது. துளஸிதாஸர் ஸ்நானம் முடிந்த பிறகு கரையேறினார். அனுஷ்டானம் செய்வதற்கு முன் ஒரு சந்தனப் பலகையில் சந்தனம் அறைத்தார்.
அப்போது அவ்விரு குழந்தைகளும் கைகளில் வில்லேந்தி துளஸிதாஸரிடம் வந்து “எங்களுக்கும் சந்தனம் வேண்டும்” என்றனர். துளஸிதாஸரும் ஸந்தோஷமாய் அவர் அரைத்த சந்தனத்தை அவர்களின் விசாலமான நெற்றியில் இட்டுவிட்டார்.
அதே சமயத்தில் ஒரு கிளி அங்கு மரத்தின் மேல் அமர்ந்து இப்பாடலைப் பாடியது.
“சித்ர கூட கீ காட் பர் பய் ஸந்தன் கீ பீட்
துளஸிதாஸ் சந்தன் கிஸே திலக் தேத் ரகுவீர்”
“சித்திர கூடத்தின் ஓர் அழகிய ஸ்நான கட்டத்தில் ஸாதுக்களின் கூட்டம் ஏராளம். துளஸிதாஸர் சந்தனம் அரைக்கிறார். ரகுவீரனுக்கு நெற்றியில் திலகம் இட்டுவிடுகிறார்.”
இப்பாட்டைக் கேட்டு வியந்த துளஸிதாஸர் கிளி உள்ள திசையை நோக்கினார். கிளி வடிவிலுள்ள ஹனுமான் சட்டென்று மறைந்தார். அங்கு வந்திருந்த இரு குழந்தைகளும் மறைந்தனர். மிகவும் வருத்தப்பட்டார். “அடேடே! வந்தவர்களை இராம லக்ஷ்மணர்கள் என்றறியாமல் விட்டுவிட்டேனே” எனக் கண்ணீர் மல்க நின்றார்.
ஒரு முறை காசியிலேயே அவர் உள்ள சிறு குடிலிலேயே அவருக்கு சீதாராமர்கள் தரிசனமானார்கள். அப்போதுதான் அவர் மனம் நிறைந்தது. தன் பிறவி பயனுற்றதாய் உணர்ந்தார்.
“ப்ரபோ! ராகவா! தங்கள் கருணைக்கோர் எல்லை இல்லை. இந்த எளியவனைத் தேடி தேவரீர் வந்திருக்கிறீர். தங்களிடம் யான் கேட்க வேண்டிய வரம் ஒன்றுதான். ஸதா ஸர்வகாலமும் இந்த ஸீதாராம தம்பதி என் கண்களிலும் உள்ளத்திலும் நிறைந்திருக்கட்டும்” என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.
ஒரு பக்தன் பகவானை அணுகுகையில் பகவானும் பக்தனை அணுகுவதை உணரமுடியும். பக்தன் எந்த அளவுக்கு அணுகுகிறானோ அந்த அளவிற்கு பகவானும் பக்தனை அணுகுகிறான்.
‘யே யதா மாம் ப்ரபத்யந்தே தாந்ஸ்ததைவ பஜாம்யஹம்’ பகவானுடன் ஸம்பந்தமே அற்றது போல் விஷயபோகங்களில் ஈடுபடுதல் ஒரு நிலை. அப்போதும் பகவான் நம் உற்றார் உறவினரையோ, சூழ்நிலையையோ கொண்டு நமக்கு நல்லுரைகளை உபதேசிக்கிறான்.
பக்தனும் அவ்வுபதேசத்தை உணர்ந்து பகவானை அணுகுகிறான். பிறகு ஹனுமான் போன்ற குருவை அனுப்பி வைக்கிறான். மனம் பக்குவமடைய அடைய பல்வேறு ஸம்பவங்களால் தான் இருப்பதை உணர்த்துகிறான். கனவில் வருகிறான். வேறு உருவில் வருகிறான். முடிவில் தானே பக்தன் முன் தோன்றி தன்னையே பக்தனிடம் ஒப்புவித்து பக்தனை ஆட்கொள்கிறான். இதுவே பகவானின் கருணை.

No comments:

Post a Comment