Saturday, July 25, 2015

ஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?

ஞானிக்கும் சித்தருக்கும் என்ன வித்தியாசம்?
இளஞ்சூரியன் தனது கதிர்களை சுருக்கிக்கொண்டிருக்கும் மாலை வேளை. தனது சிஷ்யர்களுடன் பயணப்பட்டு கொண்டிருந்தார் பிரபுலிங்கா எனும் ஞானி.
கோகர்ணம் எனும் அழகிய நகரத்தை அடைந்தார்கள்.
கடற்கரையோரம் அமர்ந்து சிஷ்யர்களுடன் சத்சங்கமித்தார் ஞானபுருஷர். தனது சிஷ்யர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவரிடமிருந்து விரிவானதும் ஆழமானதுமான பதில்கள் வெளி வந்தவண்ணம் இருந்தது.
அவரின் முதன்மை சிஷ்யன் பணிவுடன் அவர் முன்வந்து கேள்வி கேட்க துவங்கினான்..
“சத்குரு பல சித்துகள் கைவரப்பட்ட சித்தர் கோரக்நாத் இந்த ஊரில் வாழ்ந்து வருகிறார். அவரின் ஆன்மீக நிலைக்கும் உங்கள் ஆன்மீக நிலைக்கும் என்ன வித்தியாசம்?”
“அனந்தா... எனக்கு எப்படி அவரின் நிலை தெரியும்? ”...தனது உடலை சுட்டிகாட்டி தொடர்ந்தார் ஞானி, “...இதற்கு இதை தவிர அன்னியமான வஸ்து கிடையாது”.
சிஷ்யனுக்கோ அவரின் பதில் திருப்தியை கொடுக்கவில்லை. குருவுக்கு தெரியாமல் சித்தர் கோரக்நாதை சந்தித்து தனது குரு சொன்ன கருத்துக்களை கூறினான்.
எனது அருமை தெரியாமல் உனது குரு அவ்வாறு கூறி இருக்கலாம். நாளை அவர் இருக்கும் இடத்திற்கு நான் வந்து சந்திக்கிறேன். அப்பொழுது அவர் என்னை பற்றி அவர் மட்டுமல்ல அனைவரும் புரிந்துகொள்வீர்கள்” என்றார் கோரக்நாத் சித்தர்.
அதிகாலை நேரம் தனது சிஷ்யர்களுடன் தியானத்தில் இருந்தார் ஞானி பிரபுலிங்கா... சித்தர் அவரின் இருப்பிடத்திற்கு வந்தார்...
கண்களை திறந்து பார்த்த ஞானி அவரை வரவேற்று அமரவைத்தார்.அவர் வந்த காரணத்தை கேட்டார்.
“எனது பெயர் கோரக்நாத், என்னை பற்றி தெரியாது என உங்கள் சிஷ்யர்களிடம் சொன்னீர்களாமே? என்னை பற்றி கூறவே வந்திருக்கிறேன். அஷ்டமா சித்தியை கைவரப்பட்டவன் நான். எனது உடலை காயகல்பமாக்கி இருக்கிறேன்...” என கூறியவாரே தனது இடுப்பில் வைத்திருந்த வாளை எடுத்து தனது மார்ப்பில் குத்தினார்....
அனைத்து சிஷ்யர்களும் அந்த பயங்கரமான செயலால் அதிர்ச்சி அடைந்து எழுந்து நின்றார்கள்...
ஆனால் கோரக்நாத் கையில் இருந்த வாள் வளைந்து போயிற்று. அவர் உடல் காயகல்பம் ஆனதால் வாளைவிட கடினமாக மாறியிருந்தது.
கோரக்நாத் ஞானி பிரபுலிங்காவை பெருமையுடன் பார்த்தார்...அவர் பார்வையில் உன்னால் இதுபோல முடியுமா என்று கேட்பது போல இருந்தது.
தனது சிஷ்யர்களிடம் வாள் கொண்டு வர சொன்னார். அதை கோரக்நாத்திடம் கொடுத்து தனது உடலில் பாய்ச்ச சொன்னார்....
முழுவேகத்துடன் வாள் வீசினார் கோரக்நாத்.... வாள் பிரபுலிங்காவின் உடலில் புகுந்து மறுபுறம் வெளியே வந்தது...
மெல்ல வாளை சுழற்றினாலும் காற்றில் சுழலுவதை போல சுழன்றது...அவர் உடல் அங்கு இருந்தாலும் வாள் அதை தொட முடியவில்லை...
ஞானி பிரபுலிங்கா மெல்ல புன்புறுவலுடன் கூறினார்....”சித்த நிலை என்பது உனது சித்தத்துடன் நின்றுவிடுவது...ஞான நிலை என்பது நான் எனும் அகந்தையை வேறுடன் எடுத்து சித்தத்தை கடந்து சுத்த வெளியில் இருக்கும் தன்மை... ஒருவன் ஞானம் அடைந்ததும் ஆகாசத்தை போல ஆகிவிடுகிறான்..அவனை எதுவும் தடுக்கவோ அசுத்தப்படுத்தவோ முடியாது...ஞானி எல்லை அற்றவன்...சித்தன் உடல் எனும் எல்லைக்கு உட்பட்டவன்..

2 comments: