Saturday, November 7, 2015

சாபம் பலிக்குமா?

முன்காலத்தில் ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் கோபம் வந்தால் அவர்கள் சாபம் கொடுப்பதும், அது அப்படியே பலிப்பதும் நாம் கதைகளாக கேட்டு வளர்ந்திருக்கிறோம். இருந்தாலும், இந்த 21ம் நூற்றாண்டில், இதெல்லாம் வெறும் கட்டுக்கதை என்று தான் நமக்குத் தோன்றுகிறது. இது உண்மைதானா? உண்மையில் யாரேனும் சபித்தால் அது பலிக்குமா? இந்த சந்தேகத்திற்கு சத்குரு சொல்லும் பதில்… இக்கட்டுரையில். கேள்வி ஒருவரின் சாபம் பலிக்குமா? சத்குரு: சில நேரங்களில் ஆமாம் என்றே சொல்ல வேண்டும். பல நேரங்களில், நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள், இல்லையா? எண்ணம் என்பது உங்கள் மூளையில் ஏற்படும் ஒரு வகையான சப்தம். ஆனால் அதற்கு நீங்கள் அர்த்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டால் வெவ்வேறு வகைகளில் அர்த்தங்கள் கொடுத்துக் கொண்டே போகலாம். ஒரு எண்ணத்தை பலமாக உருவாக்கி அதற்கு அர்த்தம் கொடுத்துக் கொண்டே போகும்போது அந்த எண்ணம் மிகுந்த சக்தி வாய்ந்ததாக மாறுகிறது. இதுபோன்று ஒரு சக்தியான எண்ணத்தை உருவாக்கி மற்றவர்களுக்கு பயன்களையும் விளைவிக்க முடியும், கேடுகளையும் உண்டாக்க முடியும். உண்மையிலேயே ஒருவர்மீது மிகவும் கோபமாக இருந்தால், உங்கள் முழு சக்தியும் ஒரு திசையில் இருக்கும். தீவிரமான ஆசை கொண்ட மனது எப்படி தீவிரத்துடன் செயல்பட முடியுமோ, தியானத்தன்மையில் உள்ளவர் ஒரே நோக்கத்துடன் எப்படி செயல்பட முடியுமோ, அதேபோல் வெறுப்பான மனமும் அதே தீவிரத்துடன் செயல்பட முடியும். அப்படி ஒரு எண்ணம், ஒரே முகமாக அதிதீவிரத்தில் செயல்படும்போது, பலிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. கேள்வி மேற்கத்திய நாடுகளிலும் ஞானநிலையை எட்டியவர்கள் இருந்தார்களா? சத்குரு: நிச்சயமாக. ஆனால், அப்படிப்பட்ட மனிதர்களுக்கு அந்தக் கலாச்சாரம் ஆதரவு அளிக்கவில்லை. ஆங்காங்கே சில தனிமனிதர்கள் தங்கள் தீவிர முனைப்பால் புத்திசாலித்தனத்தால், ஞானம் அடைந்தார்கள். ஆனால், அப்படிப்பட்ட மனிதர்களை அந்தக் கலாச்சாரம் உயிரோடு விட்டு வைக்கத் தயாராக இல்லை. சமூகம் ‘இது தான் இயல்பு’ என எண்ணியதை இவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், இவர்கள் உயிரோடு எரிக்கப்பட்டார்கள். வாய் திறந்தால் பலியாகிடும் நிலை இருந்ததால், ஞானம் பெறத் தகுதியானவர்கள் கூட வாய்மூடி மௌனம் சாதித்தார்கள். ஆனால், நம் கலாச்சாரத்தில், ஞானத்துக்கான வழிகாட்டுதல் முறைப்படுத்தப்பட்டிருந்தது. அது கைவந்த ஒரு கலையாகி இருந்தது. அதனால், ஒவ்வொரு தலைமுறையிலும் நூற்றுக்கணக்கான ஞானிகள் தோன்றினர். ஒரு விதத்தில் அதுவே இந்த சமூகத்துக்குச் சாபமானது. பாலைவனத்துப் பூ மாதிரி அங்கே ஒரு இயேசு தோன்றினார், அதனால் கவனிக்கப்பட்டார். இங்கே தோட்டமே பூத்துக் குலுங்கியது. அதனால் தனிப்பூக்கள் கவனிக்கப்படவில்லை, பெருமைப் படுத்தப்படவில்லை, கொண்டாடப்படவில்லை. கேள்வி வரும் புத்தாண்டை சிறப்பாக வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள பத்து வழிகள் சொல்லுங்களேன்.. சத்குரு: நம் வாழ்க்கையை கோஷங்கள், கொள்கைகள், விதிமுறைகள் கொண்டு அமைக்க முற்படுவதைப் போல் முட்டாள்தனம் ஏதுமில்லை. எல்லாவற்றையும் கொள்கைகள் கொண்டு நடத்த முற்பட்டால், வாழ்க்கையில் ஆனந்தத்தைத் தொலைத்துவிட்டு இயந்திரங்களாக நடமாட வேண்டி வரும். இப்பொழுதெல்லாம் யாரையாவது பார்த்து சந்தோஷமாக புன்னகைத்தால், பதிலுக்குக் கூடப் புன்னகைக்காமல், அவர்கள் நம்மை சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு வாழ்க்கை உயிரற்று வெறுமையாகிவிட்டது. மனைவியிடம் சில நிமிடங்கள் பேச வேண்டும், வெளியில் செல்கையில், பக்கத்து வீட்டு மனிதருக்கு கையசைக்க வேண்டும், தினமும் குழந்தைக்காக இத்தனை நிமிடங்கள் செலவு செய்ய வேண்டும் என்றெல்லாம் கணக்கிட்டு வாழ்க்கையை நடத்தினால், அது உங்கள் உயிர்த்தன்மையைக் கொன்றுவிடும். நீங்கள் மனைவியிடம் பேசுவதற்காக ஒதுக்கிய நேரத்தில் நீங்கள் சொல்வதைக் கேட்க அவளுக்கு விருப்பமில்லை என்றால், என்ன செய்வீர்கள்? உங்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு இதுபோன்ற கொள்கைகள் பயன்படாது. வாழ்க்கையை அடிப்படையான உயிர்த்தன்மையின் மீது அமைக்க வேண்டும். வாழ்க்கையை அந்தந்த சூழ்நிலைக்கேற்ப, அவசியம் பொறுத்து, தேவையானவற்றை நாம் தான் செய்து கொள்ள வேண்டும். 

No comments:

Post a Comment