Monday, November 30, 2015

வாஸ்து சாந்தி

வாஸ்து சாந்தி: வாஸ்து என்கிற சொல்லுக்கு, வசிக்கும் இடம் என்றும், பூமி, நிலம் என்றும் பொருள் ஆகிறது. அந்தகன் என்கிற அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தார். அவனது கோரப்பசி தீர்வதற்காக, உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக்கொடுத்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன். வாஸ்து புருஷனையும் அவரது அதிதேவதையான பிரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து ஏனைய தெய்வங்களையும் வழிபட்டு திருப்திசெய்வதே வாஸ்து சாந்தி. மகிழ்வித்த வாஸ்து புருஷனை ஹோமாக்னியால் எரியூட்டி, ஆலயம் முழுவதும் இழுத்து சென்று சுத்திகரித்து இறுதியாக புண்யாஹவாசன நீரினால் அவ்விடங்களை சுத்தி செய்கின்றனர்.
பிரவேச பலி: ஓரிடத்தில் கோயில் எழுப்பப்பட்டிருக்கும்போது, சுற்றியுள்ள எட்டுத் திசைகளிலும் உள்ள பூத பிசாச பிரம்மராக்ஷஸர்கள், துர்தேவதைகளுக்கு பலி கொடுத்து அவற்றை ஏற்றுக்கொண்டு வேறு இடம் செல்லுமாறு அவர்களை வேண்டி, இடையூறுகளை நீக்கிக்கொண்டு பிறகு எண் திசைக் காவலர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலானவர்களை அவரவர்களுக்குரிய திசைகளில் வரவழைத்து வழிபட்டு, ஆலயத்தைக் காத்திடும்படி வேண்டுவதற்கு பிரவேச பலி என்று பெயராகும்.
ரக்ஷோகண ஹோமம்: புறத்தே இருக்கும் தேவதைகளை அகற்ற பிரவேச பலி போல ஆலயத்தின் உள்ளே இருக்கக்கூடிய துர்தேவதைகளை சாந்தி செய்து அகற்றிட ரக்ஷோகண ஹோமம் செய்யப்படுகின்றது ரட்சோ _ அரக்கர்கள். க்ணம்_ஒடுக்குதல்.
ஸ்ரீசூக்த ஹோமம்: மகாலக்ஷ்மியைக் குறித்து செய்யப்படுகின்ற இந்த யக்ஞத்தை, ரிக்வேதத்திலுள்ள ஸ்ரீ சூக்த மந்திரங்களைச் சொல்லி, திருமகளின் கருணை வேண்டி வழிபடல் வேண்டும். இதனால் கும்பாபிஷேகப் பணிகளில் ஈடுபட்டிருப்போரின் வீடுகளில் லக்ஷ்மி கடாட்சம் ஏற்படுமென்பது ஐதிகம்.
சாந்தி ஹோமம்: அமைக்கப்பட்டுள்ள யாக குண்டங்களில் பாசுபதாஸ்திர மந்திரங்களைக் கூறி, கலசத்திலும் ஆவாஹனம் செய்து, அஸ்திர மந்திரங்களால் ஹோமம் செய்து, கலச நீரை அஸ்திர தேவருக்கு அபிஷேகம் செய்து, ஆலயக்கட்டுமானப் பணிகளில் குறைகள் ஏதும் இருப்பின், அவற்றிற்குப் பரிகாரமாக செய்வது சாந்தி ஹோமம்.
மூர்த்தி ஹோமம்: அடுத்ததாக கும்பாபிஷேகத்திற்கு முன்னதாக எழுந்தருளும் தெய்வ பிம்பங்களுக்கு சக்தியூட்டும் விதமாக ஹோமம் செய்வது, மூர்த்தி ஹோமம் எனப்படுகிறது.
சம்ஹிதா ஹோமம்: சிவபெருமானுக்குரிய பெருமைகளைக் கூறி நடத்தும் இந்த யக்ஞம், இது பரிகார யக்ஞம் ஆகிறது.

No comments:

Post a Comment