Thursday, December 17, 2015

ஸ்ரீ கிருஷ்ணர் கேட்ட தானம் :


இந்திர பிரஸ்தத்தின் மன்னன் யுதிஷ்டிரன் ..
ரத்னபுரி அரசன் மயூரத்வஜன் ....
இவ்விருவரும் , ஒரே சமயத்தில் யாகம் செய்யத் தீர்மானித்தனர் ; ஆனால் ஒருவர் தீர்மானித்தது மற்றவர்க்கு தெரியாது ; அதன் படி யாகக்குதிரையை தக்க காவலோடு நாடு சுற்ற தீர்மானம் செய்யப்பட்டது ; .அவ்வகையில் யுதிஷ்டிரனின் குதிரைக்கு கிருஷ்ணரும் , அர்ஜுனனும் மயூரத்வஜனின் குதிரைக்கு அவனது மகனான தாம்ரத்வஜனும் அனுப்பி வைக்கப்பட்டனர்; (மயூரத்வஜனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் மேல் அதீத பிரேமை உண்டு )
இரு தரப்பினரும் இடையில் சந்தித்து ஒருவர் குதிரையை ஒருவர் பிடிக்க முற்பட ......கடும் சண்டை நடந்தது !
( கண்ணனின் திருவுளப்படி ) அர்ஜுனன் மயங்கி விழ ........தாம்ரத்வஜன் இரு குதிரைகளோடு நாடு திரும்பினான் ; நடந்ததையறிந்த மயூரத்வஜன் வருந்தி ,
" மகனே ....ஸ்ரீக்ருஷ்ணர் அந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்துமா சண்டையிட்டாய் ? இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யப்போகிறோம் "
என்று நொந்து கொண்டான் ; ....
.இதற்கிடையில் மயக்கம் தெளிந்து எழுந்த அர்ஜுனன் , தன் தோல்வியை எண்ணி கொதித்துப்போய் புலம்பி தீர்த்தான் ;
ஆனால் , ஸ்ரீக்ருஷ்ணரோ அமைதியாக ,
" அர்ஜுனா ...பொறுமையாக இரு !...நாம் இருவரும் ரத்னபுரி செல்வோம் ...ஆனால் ஒரு நிபந்தனை ! நீ அங்கே என்ன நடந்தாலும் வாயே திறக்கக்கூடாது !...எந்த கேள்வியும் கேட்ககூடாது !"என்று கூற , அர்ஜுனனும் அதற்கு சம்மதித்தான் ; இருவரும் ரத்னபுரியை அடைந்தார்கள் ; மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றான் மயூரத்வஜன் ; பின் பணிவுடன்
" தவறு நடந்து விட்டது !....என் மகன் ஏதோ அறியாமல் பிழை செய்து விட்டான் ! தயை கூர்ந்து எங்களை மன்னித்தருள வேண்டும் "....
குற்றஉணர்ச்சியில் தலை குனிந்தவாறு கம்மிய குரலில் பேசிய மயூரத்வஜனை மந்தஹாச புன்னகையுடன் ஏறிட்டார் பரந்தாமன் ;
" மயூரத்வஜா ....அபராதத்தை சும்மா மன்னிக்க முடியாது .....ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டும் !"
என்றார்;
" கண்டிப்பாக ...பரிகாரம் எதுவாயினும் அடியேன் செய்ய தயாராயிருக்கிறேன் ...கூறுங்கள் !"..
.என்றான் மயூரத்வஜன் பரபரப்பாக ;
" நல்லது !...தவறு செய்த உன் மகனை மனப்பூர்வமாக நீயும் உன் மனைவியும் சேர்ந்து இரண்டாக அறுத்து வலது பாகத்தை அடியேனுக்கு தானமாக தரவேண்டும் ...உங்கள் மூவரில் யார் சோகமாக இருந்தாலும் , கண்ணீர் சிந்தினாலும் தானத்தை ஏற்க மாட்டேன் !...சம்மதமா ?"....
கேட்ட பரந்தாமனை அமைதியாய் ஏறிட்டான் மயூரத்வஜன் ; அவன் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை;
" கிருஷ்ணா .....எனக்கு பரி பூரண சம்மதம்.என்னிடம் இருப்பதை கேட்டதற்காக ஆனந்தபடுகிறேன்; உங்களுக்கு தானம் செய்ய நங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்",....
உணர்ச்சி பொங்க கூறிய மயூரத்வஜன் , அடுத்தக்கணம் மகனுக்கு தைல ஸ்நானம் செய்து வைத்து கிழக்கு திசை பார்த்து மணை பலகையில் அமர்ந்தான்.
மனைவி ஆடாத படி மகன் உடலை பிடித்து கொள்ள மயூரத்வஜன் கத்தியால் பிள்ளையை அறுக்க தொடங்கினான்.
தாம்ரத்வஜனின் இடது கண்ணிலிருந்து நீர் வழிந்தது இப்போது ;
மறு கணம் கிருஷ்ணர் பரபரப்புடன்,
" நிறுத்துங்கள் !.. அவன் வலி பொறுக்க முடியாமல் அழுகிறான் ....அழுது கொண்டே தரப்படும் தானம் பாபத்தையே தரும் "...
.என்றார் ;
கிருஷ்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அர்ஜுனனுக்கு தூக்கிவாரி போட்டது !
' இதென்ன ...கிருஷ்ணன் ஏன் இப்படி இரக்கமின்றி நடந்து கொள்கிறார் ?' ..இந்த ரீதியில் அவன் சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே தாம்ரத்வஜனின் குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது ;
" பரந்தாமா ......பெரியவர்கள் பேச்சில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும் ....கண்ணீர் வழிவது என் இடது கண்ணில் !...தாங்கள் தானம் கேட்டது என் உடலின் வலது பாகத்தை !...ஒரே உடம்பாயிருந்தும் தானம் போக நான் அருகதையற்றுப் போனேனே என்று இடது பக்கம் அழுகிறது சுவாமி !..இரு கரங்களும் சேர்ந்து தானே இறைவனை வணங்குகின்றன ?....அப்படியிருக்கும் போது நான் எவ்விதத்தில் தாழ்வு ஆனேன் என்று எனது இடது கண் வருந்தி கண்ணீர் விடுகிறது ! மற்றபடி ..சத்ரியனை ரத்தமும் , கத்தியும் பயப்படுத்தாது பரந்தாமா !.."....
.அவன் பேசி முடிக்க ....இப்போது அர்த்தபுஷ்டியுடன் அர்ஜுனை பார்த்தார் கிருஷ்ணர் ;
அந்த பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் தலை குனிந்த அர்ஜுனனின் மனதில் இப்போது ஆயிரமாயிரம் எண்ண அலைகள் !
' பார்த்தாயா ?...இப்படிப்பட்ட தேக சமர்ப்பணத்தை செய்த இவன் உன்னை வெற்றி கண்டது பொருத்தமானது தானே ? உன் அகந்தை அழிந்ததா ?'
.கிருஷ்ணன் கேட்பது போலிருக்க ......
.மறு கணம் அர்ஜுனன் வாயிலிருந்து அனிச்சையாய் வார்த்தைகள் வெளி வந்தன ;
" மன்னா .....தாம்ரத்வஜா .....அடியேன் உங்கள் முன் கூனிக் குறுகி சிறுமைப்பட்டு நிற்கிறேன் !...செயற்கரிய செயலை செய்து நீவிர் இருவரும் மலையளவு உயர்ந்து நிற்கிறீர்கள் !...."..
..குரல் கம்ம பேசிய அர்ஜுனனை புன்னகையோடு ஏறிட்டார் பரந்தாமன் ; .
..பின்னர் அவனருளால் தாம்ரத்வாஜன் பூரண தேஜஸோடு மீள .......விருந்துண்டு விடைபெற்றனர் ஸ்ரீக்ருஷ்ணரும் , அர்ஜுனனும் ; ....
" செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்"(விளக்கம்: செய்வதற்கரிய செயல்களை செய்ய வல்லவர் பெரியவர்; செய்வதற்கரிய செயல்களை செய்ய முடியாதவர் சிறியவர்)
மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த சம்பவம் இந்த திருக்குறளை நினைவூட்டுகிறதல்லவா?

1 comment: