Wednesday, January 13, 2016

சிலம்பை மட்டுமே அறிந்த லட்சுமணன்!

சிலம்பை மட்டுமே அறிந்த லட்சுமணன்!

சீதாபிராட்டியை ராவணன் தூக்கிச் சென்றபோது, தன்னைத் தூக்கிச் செல்லும் வழி ராமனுக்குத் தெரியவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய ஆபரணங்களைக் கழற்றிப்
போட்டுக்கொண்டே சென்றாள் சீதை.

அனுமன் அவற்றை ஒவ்வொன்றாகச் சேகரித்து வைத்திருந்து கிஷ்கிந்தாபுரிக்கு ராமர்&லட்சுமணர் வந்தபோது கொடுத்தான்.

அந்த ஆபரணங்கள் ஒவ்வொன்றையும் ஊன்றிக் கவனித்த ராமர், அவை சீதை
அணிந்திருந்தவைதான் என்பதை உணர்ந்து மிகவும் வருந்தினார். காதணி, கழுத்து
ஆபரணம், கைவளையல்கள் என ஒவ்வொன்றிலும் சீதையின் முழுவடிவம் மனக்கண் முன்
தோன்றி ராமரை மேலும் வருத்தியது.

தம்பி லட்சுமணா, இந்த ஆபரணங்களைப் பார்! இவை அனைத்தும் உன் அண்ணி
அணிந்திருந்தவை அல்லவா? எனத் தாங்கொணாத் துயரத்துடன் தம்பியிடம் கேட்டார்.

லட்சுமணன் கலங்கிய கண்களுடன் காதணியை எடுத்தான். உடனே விலக்கி அப்பால்
வைத்தான்! வளையல் களை எடுத்தான். விலக்கி அப்பால் வைத்தான்! கழுத்தில்
அணியும் ஆபரணத்தை எடுத்தான். அதையும் அப்பால் வைத்தான்! அடுத்து காலில்
அணியும் சிலம்பை எடுத்தான்.

உடனே,

அண்ணா... இது அண்ணியினுடையதுதான். சந்தேகமே இல்லை என்று குரலில் வருத்தம் தோயச் சொன்னான்.

அண்ணியின் பாதங்களைத் தவிர திருவுருவத்தை அவன் ஏறெடுத்தும் பார்க்காதவன்.
பாதசேவை மாத்திரம் செய்தவன். எனவே, பிராட்டியின் மற்ற ஆபரணம் எதையும் அவன்
பார்த்ததில்லை. திருவடியில் அணிந்திருந்த சிலம்பை மாத்திரம் அடையாளம் கண்டு
சொன்னான்.
 

No comments:

Post a Comment