Wednesday, January 20, 2016

வேதாந்தம் ஓர் அறிமுகம்!

வேதாந்தம் ஓர் அறிமுகம்!
=========================
வேதம் ஓர் அறிவுக்களஞ்சியம். ஆதி ரிஷிகளின் மூலமாக இறைவனால் வெளிப்படுத்தப்பட்டதே வேதம் என்று, ரிஷிப் பரம்பரையில் வந்தோர் வேதத்தை பார்க்கின்றனர்.
நாம் வாழ்வில் எவற்றையெல்லாம் அடையலாம் என்ற நம் இலட்சியங்களை பற்றிய அறிவைக் கொடுத்தும் அந்த இலட்சியங்களை அடைவதற்கான பாதைகளின் அறிவைக் கொடுத்தும் நம்முடைய வாழ்வை வேதமானது பயனுடையதாக்குகின்றது.
நம்முடைய அனைத்து இலட்சியங்களையும் நான்காகப் பிரிக்கப்படுகின்றன.
1. அர்த்தம்
2. காமம்
3. தர்மம்
4. மோட்சம்
அர்த்தம் என்பது நம்முடைய பாதுகாப்பிற்காக பயன்படும் பொருட்கள். உடலும் மனமும் வருத்தமடையாமல் இருக்க நாம் சேர்க்கும் உடமைகள் அர்த்தம் எனப்படும். மனிதனின் மனதில் உதிக்கும் முதல் இலட்சியம் இதுவே.
காமம் என்பது இன்பத்திற்காக பயன்படும் பொருட்கள். உடலும் மனமும் இன்புற்றிருக்க நாம் சேர்க்கும் பொருட்கள், அல்லது செயல்கள் காமம் எனப்படும்.
தன்னுடைய பாதுகாப்பிற்கு பின் மனமும், உடலும் விரும்பும் விஷயம் காமம் ஆகும். உதாரணமாக பசியை நீக்க நாம் நாடும் உணவுப் பொருட்கள் அர்த்தம் என்றால், சுவைக்காக நாடும் உணவுப் பொருட்கள் காமம் எனலாம்.
தர்மம் என்பது புண்ணியம். கண்ணிற்கு தெரியாத இந்தப் புண்ணியமானது வேதத்தில் கூறிய கர்மங்களை செய்வதாலும், வேத சாஸ்திரத்திற்கு முரண்படாத செயல்களை செய்வதாலும் அடையப்படுகின்றது. அதாவது இந்த வாழ்விலும், இனி வரப்போகும் வாழ்விலும் துயரத்தினை நீக்கி இன்பத்தை அடைய புண்ணியம் பயன்படுகின்றது.
வேதத்தினை இரண்டு பிரிவுகளாக பிரித்து, அதன் முதல் பகுதிகளை கர்மகாண்டம் என்றும், அதன் பிற்பகுதிகளை ஞான காண்டம் அல்லது வேதாந்தம் என்றும் அழைக்கின்றனர்.
இதில் கர்மகாண்டம் என்பது மனிதன் அவனது வாழ்வில் அர்த்த, காம, தர்மங்களை அடையப் பலவிதமான உபாயங்களை கூறுகின்றது.
உபாயங்களை கூறியபோதிலும் அதே வேதம் இறுதியில் ஞான காண்டத்தில் இந்த மூன்றிலும் உள்ள குறைபாடுகளையும் எடுத்துக் காட்டுகின்றது.
இந்த மூன்றின் மூலமாகவும் மனிதன் இன்பத்தினை அடைய நாடிக்கொண்டு இருக்கின்றார்கள். இன்பமே மனிதனின் முடிவான இலக்காக இருக்கும் பொழுது இன்பத்தில் உள்ள குறைகளை இவ்விதம் வேதம் கூறுகின்றது.
1. ஒவ்வொரு இன்பத்திலும் துன்பம் கலந்தே உள்ளது. இன்பத்தை தரும் பொருளை அடைதல், அவற்றை பாதுகாத்தல், பிறகு அவற்றின் இழப்பு முதலிய காரணங்களால் அனைத்து இன்பங்களும் துயரத்தில் கலந்ததாகவே இருக்கின்றன.
2. எந்த இன்பமும் மனதில் முழு நிறைவைக் கொடுப்பதில்லை.
3. அனைத்து இன்பங்களும் பொருள்களைச் சார்ந்து இருக்கச் செய்து நம்மை அடிமையாக்குகின்றன.
இவ்விதம் நமக்கு அதில் உள்ள குறைகளைக் காட்டி, நிலையற்ற இந்த இன்பத்தினால் ஒரு பயனும் இல்லை, நிலையான, என்றுமே வற்றாத பேரின்பம் உள்ளது என்று நமக்கு மோட்சத்தின் பாதையை காட்டித்தருகின்றது.
உண்மையில் மோட்சம் என்பதுதான் மனிதனின் மேலான இலட்சியம் என்று நமக்கு வேதம் அறிவுரை வழங்கி அதனை அடையும் பாதையை கூட காட்டிக்கொடுக்கின்றது.
இதனால் நாம் மோட்சம் செல்லும் பாதையில் நம் பயணத்தினை தொடங்கியவுடன் நமக்கு முழு மன நிறைவை கொடுத்து, அதன் மூலம் அர்த்த, காம தர்மங்களுக்கு நாம் அடிமைப்படாமல், அவைகள் தேவை என்ற நிபந்தனையிலிருந்து விடுபடுகின்றோம்.
அவைகள் நமக்கு ஆடம்பர பொருட்கள் என்ற ஞானத்தை கொடுத்து, எந்த நிபந்தனையுமின்றி மனதில் நம்மால் அறியப்படும் நிறைவே மோட்சமாகின்றது.
மோட்சமே வேதத்தின் கடைசிப் பகுதியிலிருந்து கிடைக்கும் அறிவின் பலன்.
வேதத்தின் கடைசிப் பகுதியானது வேதாந்தம் எனப்படுகின்றது. இதனை ஞானகாண்டம், உபநிஷத் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.
வேதத்தின் கடைசிப்பகுதியானதால் வேதாந்தம் என்றும், மெய்பொருளைப் பற்றிய அறிவை மையமாகக் கொண்டதால் ஞானகாண்டம் என்றும், ஸம்ஸாரத்தை (ஆணவம், கன்மம், மாயை) நீக்கும் மெய்பொருளைப் பற்றிய ஞானம் என்ற பொருளைக் கொண்டதால் உபநிஷத் என்றும் பொருள் கொள்ளப்படுகின்றது.
மோட்சம் என்ற இலட்சியத்தினை அடைவதற்கு ஒருவனுடைய உண்மையான தன்மையை வேதாந்தம் எடுத்து விளக்குகின்றது.
எப்பொழுதும் பந்தப்படாத தன் உண்மையான ஆத்ம ஸ்வரூபத்தை அறிவதன் மூலமே மோட்சத்தினை அடைய முடியும் என்பதால் ஆத்மஞானம் உபாயமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆத்ம ஞானத்தை நமக்கு கொடுக்க வேதாந்தம் சில வழி முறைகளைக் கையாளுகிறது. குருவின் துணை கொண்டு வேதாந்தத்தினை நாம் பயன் படுத்தும் பொழுதுதான் நாம் முழுப்பலனை அடைய முடியும்.
ஆகவே ஞானத்திற்கு கருவியாக விளங்கும் வேதாந்தம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு குருவும் முக்கியமானவர்.
இன்றைய நவீன கல்வித்திட்டத்தின் வழியாக மனிதனின் அர்த்த, காம, தர்மம் போன்ற நிலையற்ற இன்பம் கிடைத்தாலும், நிலையான பேரின்ப மயமான மோட்சம் என்பது பெரும்பாலான மனிதர்களுக்கு கிடைப்பதே இல்லை.
அவர்களுக்கு அதைப்பற்றிய ஞானம் கூட இல்லை என்றால், அது மிகையாகாது. ஆகவே இன்றைய நவீன தொழில் நுட்பங்களுக்கு இடையில் வாழும் மனிதனுக்கு குருகுலக் கல்வி முறை சாத்தியமில்லாமல் போய்விட்டது. அப்படியே சாத்தியமானாலும் இன்றைய நவீன யுகத்தில் பொருளாதரத்தின் ஆதிக்கத்தின் நடுவில் அவன் வாழவும் முடியாது.
ஆனாலும், இத்தகைய கடுமையான சூழலிலும் சில மனிதர்கள் தன்னுடைய உண்மையான இலட்சியத்தினை உணர்ந்து அதன் பாதையில் செல்ல முடிந்தவரை இந்த மனித சமுதாயத்தில் போராடுவதால், அவர்களுக்கு பயன் படும் என்ற உயரிய நோக்கத்தில் குருமார்களும் நவீன தொழில் நுட்பங்களின் வாயிலாகவே ஆர்வமுள்ளவர்களுக்கு ஆன்லைனில் உபதேசிக்கின்றார்கள்.
அதுபோன்ற ஒரு முயற்சியின் காரணமாக இந்த “பரா வித்யா” என்ற முக நூலின் வாயிலாக மனிதன் அந்த உயர் ஞானத்தினை அடையட்டும் என்று இங்கு “பரமனை அறியும் பாடம்” போதிக்கப்படுகின்றது.
இந்த முக நூலில் வெளியிடப்படுகின்ற ஆடியோ, வீடியோ பாடங்களை தவறாமல் கேட்டும், பார்த்தும், படித்தும் பயன் பெற வேண்டும் என்ற ஆர்வமுள்ள ஒவ்வொரு பாமரனும் பரமன் ஆகலாம்.

1 comment:

  1. நல்ல ஒரு சிறந்த தலைப்பு ARIVOM AANMEEGAM

    ReplyDelete