Monday, January 31, 2011

பஞ்சாமிர்தம் பஞ்சாமிர்தம்
தமிழர் வழிபாட்டு முறைகளில் கோயில் வழிபாடு சிறப்புப் பெற்றது. இறை உருவங்களை பிரதிட்டை செய்து நாளாந்தம் வழிபடும் முறையில் ”அபிடேகம்” முதன்மையானது. அபிடேகத் திரவியங்களில் வரையறை செய்யப்பட்ட பொருட்களும் உள. அவை பல நூல்களில் குறிப்பிடப்ப ட்டுள்ளன. மரபான வழிபாடு நடைபெற்ற போது இவைபற்றிய கருத்து வேறுபாடுகளுக்கு இடமேற்படவில்லை. ஆனால் இன்று புலம்பெயர் வாழ்வியலும் பிறபண்பாட்டின் செல்வாக்கும் சில கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்துள்ளன. அபிடேகத் திரவியங்களில் ஒன்றான பஞ்சாமிர்தம் பற்றி சில கருத்து வேறுபாடுகள் உள.

இறைவனுக்குரிய அபிடேகத் திரவியமாக பஞ்சாமிர்தத்தை இன்று யாவரும் ஏற்றுள்ளனர். ஆனால் அதை தயாரிக்கும் நிலையில் முரண்பாடு ஏற்பட்டு உள்ளது. ஐந்து பொருட்களின் இணைவே பஞ்சாமிர்தமாகும். ”பஞ்ச” என்ற வடசொல் இதனைத் தெளிவாய் உணர்த்துகின்றது. இன்று அந்த ஐந்துக்கு மேற்பட்ட பொருட்களால் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. ஐந்து பொருட்களால்தான் தயாரிக்கப்பட வேண்டுமென்ற உணர்வுடனிருப்பவர்களும் வெவ்வேறு பொருட்களை பயன்படுத்துவதைக்காண முடிகின்றது. சிலர் ஐந்து பழங்களின் கலவையே பஞ்சாமிர்தமென்பர். வேறுசிலர் மா,பலா,வாழை, என்ற முக்கனிகளுடன் தேனும் நெய்யும் கலந்து தயாரிப்பதே பஞ்சாமிர்தமென்பர். கிரியைபற்றி விளக்கம் தருபவரும். மா,பலா,வாழை, மாதுளை, தேங்காய்த்துருவல் என்பன சேர்ப்பதே பஞ்சாமிர்தம் என விளக்கம் தருகின்றனர். இங்கு பழங்களோடு தேங்காயும் இணைக்கப்பட்டுள்ளது. இந்துசமய சொல்லகராதி (கோக்கலை ஜே. ராஜன் 1992ல்) ”பஞ்சாமுதம்” எனச் சொல்லை குறிப்பிட்டு வருமாறு விளக்கம் தருகின்றார்.

பஞ்சாமுதம் - பஞ்சாமிர்தம்

தேவர்களுக்குப் படைக்கப்படும் உணவு. சர்க்கரை, தேன், நெய்,

பால், வாழைப்பழம்,திராட்சை இவை கலந்து தயாரிக்கப்படுவது. இது

இறைவனுக்கு அபிஷேகத்துக்குப் பயன்படுகின்றது.
எனவே தற்காலத்தில் ”பஞ்சாமிர்தம்” பற்றிய ஆய்வு தோன்றியதற்கு இத்தகைய வேறுபட்ட கருத்துக்களே காரணமாகும். வழிபாட்டு மரபுகள் மக்கள் மனதில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது. அதனால் பஞ்சாமிர்தம் பற்றிய தௌpவான விளக்கங்கள் தேவைப்படுகின்றது. முக்கனிகளான மா,,பலா, வாழை மூன்றும் அந்த ஐந்து பொருட்களில் சேருவதை எல்லோரும் ஏற்றுக்கொள்ளுகின்றனர். ஏனைய இரண்டும் தேனும் நெய்யுமாக அமைவதே சாலப் பொருந்தும். தேனும் நெய்யும் மனித உடலுக்கு மிகவும் நன்மையானவை. நெய், தேன் பலநோய்களுக்கு அருமருந்தாகப் பயன்படுகின்றது. "நெய்யுரிக்கி உண்பவர்தம் பேருரைக்கில் போமேபிணி" என்று பழையபாடற் பதிவொன்று அதன் சிறப்பை சொல்கிறது. எனவே நம்நாட்டின் மரபான பழங்களான மா, பலா, வாழையுடன் தேனும் நெய்யும் சேர்ந்தகலவையே நீண்ட ஆயுளைத் தரும் பஞ்சஅமிர்தமாகும். இதுவே இறைவனின் அபிடேகப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டது என்பதே முடிவாகும்.பஞ்சபுராணம்

பஞ்சபுராணம் பாடும் போது கீழ்க்காணும் திருமுறைப் பாடல்களைப் பாடுவது வழக்கம்.

தேவாரம் - 1,2,3,4,5,6,7 திருமுறைகளில் ஏதேனும் ஒரு திருமுறையின் பாடல்
திருவாசகம் - 8 ஆவது திருமுறை - ஒரு பாடல்
திருவிசைப்பா - 9ஆம் திருமுறை - ஒரு பாடல்
திருப்பல்லாண்டு - 9ஆம் திருமுறை - ஒரு பாடல்
பெரிய புராணம் - 12 ஆம் திருமுறை - ஒரு பாடல்தர்ப்பையின் மகிமை -

தர்ப்பையின் மகிமை -

தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் ‘குசா’ என்பதாகும். இராமபிரானின் இரண்டாவது மகனின் பெயர் குசா. அவருடைய பெயரைக் குறிக்கும் அளவில் இந்தப் புல்லின் பெயரை வைத்துள்ளார்கள்.
* தர்ப்பைப்புல் உஷ்ணத்தை அகற்றி உடலைக் குளுமை செய்கிறது.
* பாலும், சிறுநீரும் அதிகளவில் சுரக்கச் செய்கிறது.
* சிறுநீரக வலிக்குக் குணமளிக்கிறது.
* பாம்புக் கடி விஷத்தை அகற்றுகிறது.
* தர்ப்பை புல் பித்தம், வாதம், கபம் ஆகிய மூன்று தோஷங்களை சுத்தம் செய்கிறது.
* சிறநீரக கற்களைக் கரைக்கிறது. இரத்தத்தில் தேங்கும் யூரியா, கிரியாட்டினின் கழிவுப் பொருட்களை அகற்றகிறது.

* உடல் எடையைக் குறைக்கவும் பயன்படுகிறது. மொத்தத்தில் இது சிறுநீரக நோய் நிவாரணி என்று வேதங்கள் கூறுகின்றன.
உயிரைக் குடிக்கும் நோய்களில் கிட்னிஃபெயிலியர்஠ ?ான் மோசமானது. ஆயுர்வேத, யுனானி மருத்துவர்கள் தர்ப்பை புல்லை பதப்படுத்தி மருந்தாகத் தருகின்றனர். அதனால் டயாலிஸிஸ் செய்யத் தேவையில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் தேவைப்படுவதில்லை.
50 வருடங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை இல்லாத காலக்கட்டத்தில் மக்கள் இறைவனை வணங்கிவிட்டு வைத்தியர் தரும் தர்ப்ைப்புல் மருந்தைத்தான் பயன்படுத்தியதாக வேதங்கள் கூறுகின்றன.

இந்து சமுதாயத்தில் நன்றியைச் செலுத்தும் பழக்கம் அதிகளவில் இருப்பதால் தனக்கு வாழ்வளித்த தர்ப்பைப்புல்லை வணங்கும் பழக்கம் உள்ளது.
யுனானி மருத்துவத்தில் தர்ப்பைப்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுக஠ ?றது. இதை முறையாகப் பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.
தர்ப்பையின் மகிமை, இந்துக்களின் நம்பிக்கை:
தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்க. தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது.
மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. எனவேதான் கோவில் கும்பாபிஷேகங்களி தங்க, வெள்ளி கம்பிகளின் இடத்தில் அருளைக் கடத்த தர்ப்பையைப் பயன்படுத்துவார்க
தர்ப்பையின் சாம்பலால்தான் கோவிலில் உள்ள விக்ரங்களையும், பாத்திரங்களையும் துலக்குவார்கள். எல்லா விதமான ஆசனங்களையும்விட தர்ப்பாசனம் சிறந்தது என்பார்கள். பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், கப காரியங்களில் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும் தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும் மோதிரம் போல் முடிய வேண்டும். இறைவழிபாடு, ஜபம், ஹோமம், தானம், பித்ரு தர்ப்பணம் முதலியவற்றில் கையில் தர்ப்பை மோதிரம் போட்டுக் கொள்ளாமல் செய்வது உரிய பலனைத் தராது என்பார்கள்.
கிரகண காலங்களிலும், அமாவாசையிலும் தர்ப்பைக்கு வீரியம் அதிகம். எனவேதான் கிரகண காலங்களில் உணவுப் பண்டங்களில் நுண்ணிய கிருமிகளால் கெடமாமலிக்க தூய்மையான தர்ப்பையைப் பரப்புகிறார்கள். தர்ப்பை மோதிரத்தை அணிந்துதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பதும் வழக்கமாக உள்ளது.
தலவிருட்சம் கொண்ட திருக்கோவில்கள்:
திருநள்ளாறு கோயிலில் தருப்பைப்புல் தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.
சங்க இலக்கியம்:
‘தருப்பை’ என்பது ஒருவகையான நீளமான புல் ஆகும். இதனைக் கொண்டு கூரைவேயப்படும் என்கிறார் கடியலூர் உருத்திரங்கண்ணனா. பெரும் பாணாற்றுப்படை என்னும் நூலில் சங்க இலக்கியப்பெயராக தருப்பை எனவும், உலக வழக்குப் பெயராக தர்ப்பை, குசப்புல், தருப்பை, நாணல் எனவும் வழங்கப்படுகிறது. இது புதர்ச் செடியாகத் தரையடி மட்டத் தண்டிலிருந்து செழித்து வளரும்

28 கொடிய நரகங்கள்.

28 கொடிய நரகங்கள்.


பக்ஷி ராஜனான கருடன் திருமகள் கேள்வனைச் சிரம் வணங்கி கார்மேக வண்ணரே! நரகங்கள் என்பவை யாவை? அவை எவ்வாறு இருக்கின்றன? அவற்றில் யார் யார் எவ்வாறு தண்டிக்கப்படுகின்றார்கள்? அவற்றை அடியேனுக்கு விபரமாக தெரிவிக்க வேண்டும் என்று கேட்க, கார்மேக வண்ணன் கருடனை நோக்கி, காசிப் புத்திரனே காலதேவனால் நிச்சயிக்கப்பட்ட தீவாய் நரகங்கள் எண்பத்து நான்கு லட்சமிருக்கின்றன. அவற்றில் கொடிய நரகங்கள் 28 இருகின்றன. அவை
1 . பிறன்மனைவி,குழந்தை,பொருள் இவற்றை கொள்ளையடிப்போர் அடையுமிடம் தாமிரை நரகம்.
2 . கணவன் அல்லது மனைவியை வஞ்சித்து வாழ்வோர் கண்களில் இருள்,கவ்விய மூர்ச்சித்து விழும் நரகம் அந்த தாமிஸ்ரம்.
3 .அக்கிரமமாகப் பிறருடைய குடும்பங்களை அழித்து பலவந்தமாகப் பொருள் பறிக்கும் சுயநலக்காரர்கள் அடையும் நரகம் ரௌரவமாகும்.
4. குரு என்ற ஒருவகையான அகோரமான மான்கள் பாவிகளைச் சூழ்ந்து துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவமாகும்.
5. தன் சுவைக்காக ஜீவன்களை வதைத்தும் சித்திரவதை செய்தும் புவியில் வாழ்ந்து மரித்தவன் அடையும் நரகம் கும்பி பாகம்.
6. பெரியோரையும், பெற்றோரையும் துன்புறுத்திய வெறியர்கள் அடையும் நரகம் காலசூத்திரம்.
7. தன தெய்வத்தை நிந்தித்து தனக்குரிய தர்மங்களை விடுத்த அதர்மிகளடையும் நரகம் அசிபத்திரமாகும்.
8 .அநியாயமாகப் பிறரை தண்டித்து அகந்தையுடன் அநீதிகளும் பலவகைக் கொடுமைகளும் புரிந்தவர்கள் அடையும் நரகம் பன்றிமுகம்.
9. சித்திரவதை, துரோகம், கொலை செய்த கொடியவர்கள் அடையும் நரகம் அந்தகூபம்.
10.தான் மட்டும் உண்டு பிறரைத் துளைக்கும் கிருமிகள் போல வாழ்ந்து, பக்தியில்லாத பாவிகள் அடையும் நரகம் கிருமி போஜனம்.
11 .பிறர் உரிமைகளையும் உடமைகளையும் தனக்கிருக்கும் வலிமையால் அபகரித்துக் கொள்ளும் பலாத்காரம் பாவிகளைடையும் நரகம் அக்கினி குண்டம்.
12. கூடத் தகாத ஆண் அல்லது பெண்ணைக் கட்டித் தழுவிக் கூடி மகிழும் மோக வெறியர்கள் அடையும் நரகம் வக்ர கண்டகம்.
13. நன்மை, தீமை, உயர்வு, தாழ்வு இவற்றை பாராமல் தரங்கெட்டு எல்லோருடனும் கூடி மகிழும் மோகந்தகாரப் பாவிகள் அடையும் நரகம் சான்மலியாகும்.
14 .அதிகார வெறியாலோ, கபடவேசத்தாலோ, நயவஞ்சகத்தாலோ நல்வழிகளைக் கெடுக்கும் அதர்மிகள் அடையும் நரகம் வைதரணி.
15 .கூச்சமில்லாமல் இழிமகளைக் கூடி ஒழுங்கீனங்கள் புரிந்தும் தன வழியை விட்டு ஓர் இலட்சியமுமில்லாமல் மிருகங்களைப் போல் திரியும் கயவர்கள் அடையும் நரகம் பூயோதம்.
16 .பிராணிகளைத் துன்புறுத்திக் கொலை புரியும் கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் பிராணரோதம்.
17 . டம்பத்திற்க்காக பசு வதை புரிந்து யாகம் முதலியவற்றைச் செய்யும் பித்தலாட்டகாரர்கள் அடையும் நரகம் விசஸனம்.
18 .வாழ்க்கைத் துணைவியை வற்புறுத்தி விபரீத மோக இச்சைக்கு ஆளாகிக் கெடுக்கும் தீயோர்கள் அடையும் நரகம் லாலா பக்ஷம்.
19 .வீடுகளுக்கு தீ வைப்பது, சூறையாடுவது, ஜீவா வதை புரிவது, விஷமூட்டுவது, கூட்டங் கூட்டமாகக் குடிமக்களைக் கொல்வது போன்ற செயல்களைச் செய்த பாவிகள் அடையும் நரகம் சாரமேயாதனம்.
20 .பொய்சாட்சி கூறுதல் முதலிய அகம்பாவச் செயல்புரியும் பாவிகள் அடையும் நரகம் அவீசி.
21 .எக்குலத்தினராயினும் மதுபோதைப் பொருள்களைக் கொடுத்தும் குடித்தும் குடிகளைக் கெடுக்கும் குடிகேடர்கள் அடையும் நரகம் பரிபாதனம்.
22 .தன்னை மட்டுமே பெரியதாய் மதித்து பெரியோரையும், நல்லோரையும் அவமதித்து தீச்செயல் புரிந்த பாவிகள் அடையும் நரகம் கஷாரகர்த்தமம்.
23 .நரமேத யாகம் புரிதல், ஆணாயினும் பெண்ணாயினும் மனித மாமிசம் புசித்தல், சாதுவான பிராணிகளை வதைத்தல் முதலான தீவினை புரிந்தோரை முன்னின்று வதைக்கு அவதிப்படும் நரகம் ரகோஷாகனம்.
24 .எவ்விதத் தீமையும் புரியோதாரைக் கொல்லுதல், நயவஞ்சகமாகக் கொல்லுதல், தற்கொலை செய்து கொள்ளுதல், நம்பிக்கைத் துரோகம் புரிதல் இவர்கள் அடையும் நரகம் சூலரோதம்.
25 .தீமையே புரிந்த துரோகிகளடையும் நரகம் தந்த சூகம்.
26 .பிராணிகளைக் கொடூரமாக வதைத்த கொடுமைக்காரர்கள் அடையும் நரகம் வடாரேவதம்.
27 .வீட்டுக்கு வந்த விருந்தினரை வெறுத்து நிந்தித்த லோபிகளும் பகிர்ந்துண்ண விரும்பாத சுயனலவாதிகாலும் அடையும் நரகம் பரியாவர்த்தனகம்.
28 .செல்வச் செருக்காலும், செல்வாக்கினாலும், பிறரைத் துன்புறுத்துகிறவர்களும் அநீதியாய்ப் பொருள் சம்பாதித்து, அறநெறிகளில் செலவிடாமல் பதுக்கி வைப்பவர்கள் அடையும் நரகம் சூசிமுகம் என்பதாகும்.
இத்தககைய இருபதெட்டு வகை நரகங்கள் ஒவ்வொரு வகையிலும் எராளமானவையாக மிகக் கொடியனவாக அமைந்திருக்கும்.
இறந்தவனைக் குறித்து நாள்தோறும் கொடுக்கபடும் உதககும்ப தானத்தை யமதூதர்கள் பெற்று திருப்தி அடைவார்கள். மாசிக வருஷ பதிகம் முதலியவற்றால் ஜீவன் திருப்தியடைவான். அவற்றால் யம கிங்கரர்களும் திருப்தி அடைவார்கள்.
வைனதேயா! ஒருவன் இறந்த ஓராண்டு முடியுந் தருவாயில் அவனது ஜீவன் பிண்டத்தாலாகிய சரீரத்தோடு யமபுரியை அடைவான் என்றோமே! அந்த ஜீவன் யம லோகத்தை அடையும் முன்பாக அந்த பிண்ட சரீரத்தை தவிர்த்து அங்குஷ்ட பரிமாணமுள்ள ஒரு புதிய வடிவம் பெற்று ஒரு வன்னி மரத்தில் சிறிது காலம் தங்கியிருந்து அதன் பிறகு கர்மத்தாலாகிய சரீரத்தை பெறுவான். அப்போது யம கிங்கர்கள் அந்த ஜீவனை யமபுரிக்கு அழைத்துச் சென்று தர்ம ராஜனின் கொலுமண்டபத்திற்க்குக் கொண்டு செல்வார்கள் என்று திருமால் கூறியருளினார்.

பக்தியின் வகைகள்

பக்தியின் வகைகள்
பல்வகையான பக்தியின் மூலம் முக்தியடைந்த அடியார்களின் வரலாற்றிலிருந்து நாம் பக்தியின் மார்க்கங்களை அறியலாம். சாஸ்திரங்களும் கடவுள் மீது நாம் கொள்ள வேண்டிய பக்தியை வகைப்படுத்தியுள்ளன. அவற்றை நாமும் தெரிந்து கொள்வோம்.

ச்ரவணம்: கேட்டல் அதாவது பல நிலைகளில் பல பெரியோர்களின் மூலம் இறைவனைப்பற்றி கேட்டு அறிந்து அவனிடம் பக்தி கொண்டொழுகுவது சரவணம் ஆகும்.
கீர்த்தனம்: இறைவனின் புகழ்பாடும் பொருட்டு கீர்த்தனங்களை உருவாக்கி அதன் மூலம் இறைபுகழ் பாடித் தொழுவது கீர்த்தனம்.
ஸ்மரணம்: இறைவன் நம் மனதை படைத்த பயன் நிறைவேறும் வகையில் எப் போதும் அவனைப்பற்றி நினைத்துருகுவது ஸ்மரணம்
பாதஸேவனம்: இறைவனின் திருவடிகளை விட்டு நீங்காது குற்றமற்ற தூய உணர்வுடன் கைங்கர்யம் செய்தல் பாதஸேவனமாகும்.
வந்தனம்: இந்த சரீரம் இறைவன் கொடுத்தது எனவே உடலோடு என் உள்ளத்தையும் உனக்களித்தேன் எனும்படி கீழே விழுந்து சாஷ்டாங்கமாய் இறைவனை வணங்கி எழுதல்.
தஸ்யம்: எப்போதும் இறைவனுக்கு தம்மை அடிமையாய் கருதி திருப்பணிவிடை செய்தல் தஸ்யம் ஆகும்.
ஸக்யம்: அடியவன் இறைவனை தம் தோழனாய், தம் அன்பிற்குரியவனாய் கருதி நேசத்துடன் பக்தி செய்வது.
ஆத்ம நிவேதனம்: இந்த ஆத்மாவை அவனுடையது என இறைவனுக்கு அன்னமாய் நிவேதனம் செய்து பூஜிப்பது.தர்மவான்கள் யார் என்று தெரியுமா?

தர்மவான்கள் யார் என்று தெரியுமா?

நமது இந்து தர்ம சாஸ்திரத்தில் நமது முன்னோர்களுக்கு தர்மவான்கள் என்று அடையாளம் சொல்ல முப்பத்து இரண்டு வகையான தர்மங்களை சொல்லியிருக்கிறார்கள். அந்த முப்பத்து இரண்டு அறங்கள் எது என்று உங்களுக்கு தெரியுமா?
1. ஆதுலர் சாலை - ஏழைகளுக்கான தர்ம விடுதி
2. ஓதுவார்க்கு உணவு - படிக்கிற பிள்ளைகளுக்கு உணவு
3. அறு சமயத்தார்க்கு உணவ - அனைத்து சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கும் உணவு
4. பசுக்கு உணவு
5. சிறைச் சோறு - சிறையிலிருக்கும் அனைவருக்கும் உணவு
6. ஐயம் - பிச்சையிடல்
7. திண்பண்டம் வழங்கல்
8. அறவைச் சோறு - அனாதைகளுக்கு உணவளித்தல்
9. மகப்பெறுவித்தல் - பிரசவம் பார்த்தல்
10. மகவு வளர்த்தல் - குழந்தைகள் வளர்த்தல்
11. மகப்பால் வளர்த்தல் - குழந்தைகளுக்குப் பால் வழங்குதல்
12. அறவைப் பிணஞ்சுடுதல் - அனாதைப் பிரேதங்களை அடக்கம் செய்தல்
13. அறவைத் தூரியம் - அனாதைகளுக்கு உடையளித்தல்
14. சுண்ணம் - வெள்ளை கொத்தல்.
15. நோய் மருந்து - வைத்தியம்
16. வண்ணார் - ஏழைகளுக்கு இலவசமாகத் துணி வெளுத்தல்
17. நாவிதர் - ஏழைகளுக்கு இலவசமாகச் சவரம் செய்தல்
18. கண்ணாடி - முகம் பார்க்கும் கண்ணாடி உள்ளே முத்துக் கண்ணாடி
19. காதோலை
20. கண் வைத்தியம்
21. தலைக்கெண்ணெய்
22. பெண்போகம் - காம நோயால் இறந்து படும் திக்கற்றவர்களுக்கு உதவுதல்
23. பிறர் துயர்காத்தல்
24. தண்ணீர்ப் பந்தல்
25. மடம் (சத்திரம்)
26. தடம் ( சாலை அமைத்தல்)
27. சோலை ( கோட்டம் வளர்த்தல்)
28. ஆவுரிஞ்கதறி - பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள மந்தைவெளியில் கல் நடுதல்
29. விலங்கிற்கு உணவு - சக்தியற்ற எல்லாவிதமான விலங்குகளுக்கும் உணவளித்தல்
30. ஏறுவிடுதல் - நல்ல ஜாதி மாடுகளை விருத்தி செய்ய, பொலி காளைகளை இலவசமாய் விடுதல்
31. விலை கொடுத்து உயிர் விடுதல்- விலை கொடுத்தாகிலும் உயிர்களைக் காப்பாற்றுதல்
32. கன்னிகாதானம் - கல்யாணம் செய்து வைத்தல்.மனிதனுக்கு கிடைத்த ஆயுள்

மனிதனுக்கு கிடைத்த ஆயுள்

எல்லா உயிரினங்களுக்கும் வாழ்நாளை எவ்வளவு காலம் வைக்கலாம், என்று சிந்தித்தார் கடவுள். எல்லாவற்றிற்கும் சமமாக முப்பது ஆண்டுகள் என்று முடிவு செய்தார் அவர்.
தன் இருப்பிடத்திற்கு எல்லா உயிரினங்களும் வரச் செய்தார்.
அவற்றைப் பார்த்து, உங்கள் ஒவ்வொருவருக்கும் முப்பது ஆண்டு ஆயுள் தருகிறேன். இந்த வாழ்நாள் போதும் என்பவர்கள் இங்கிருந்து சென்று விடலாம். குறை உடையவர்கள் இங்கேயே இருங்கள். தீர விசாரித்து அவர்கள் குறையைத் தீர்த்து வைக்கிறேன், என்றார் அவர்.
கழுதை, குரங்கு, நாய், மனிதன் ஆகிய நால்வர் மட்டுமே அங்கே இருந்தனர். மற்ற எல்லோரும் அங்கிருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டனர்.
முதலாவதாக நின்றிருந்த கழுதையை அழைத்தார் கடவுள். உன் குறை என்ன? என்று கேட்டார்.
கடவுளே! என் நிலையைப் பாருங்கள். நான் நாள்தோறும் ஏராளமானசுமைகளைச் சுமந்து துன்பப் படுகிறேன். ஓய்வோ தூக்கமோ எனக்குக் கிடைப்பது இல்லை. எப்பொழுதும் பசியால் துன்பப் படுகிறேன். முதுகில் சுமையுடன் வரும் நான், தெருவோரம் முளைத்து உள்ள புற்களில் வாயை வைத்து விடுவேன். என்னை அடித்துத் துன்புறுத்துவார் என் முதலாளி. மகிழ்ச்சி கொடுமைகளை இல்லை. என் வாழ்க்கையே நரகம். இந்தக் கொடுமைகளை எல்லாம் என்னால் எப்படி முப்பது ஆண்டுகள் தாங்கிக் கொள்ள முடியும்? என் மீது கருணை கொண்டு என் ஆயுளைக் குறைத்து விடுங்கள், என்று கெஞ்சியது.
சரி! பன்னிரண்டு ஆண்டுகள் குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பதினெட்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.
இதைக் கேட்ட கழுதை மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது.
அடுத்ததாக இருந்த நாயை அழைத்தார் கடவுள் உன் குறை என்ன? என்று கேட்டார்.
கடவுளே நான் வலிமையுடன் நன்றாக மோப்பம் பிடிக்கும் திறமையுடனும் இருக்க வேண்டும். என் காதுகள் துல்லியமான சிறு ஓசையைக் கூடக் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் எனக்கு மதிப்பு. நான் முதுமையடைந்து தளர்ந்து விட்டால் எல்லோருமே என்னை வெறுக்கின்றனர். எனக்கு உணவும் கிடைப்பதில்லை, என்றது நாய்.
உனக்கு நான் தந்திருக்கும் வாழ்நாள் மிக அதிகம் என்று கருதுகிறாய். குறைத்து விடுகிறேன். இனி உன் வாழ்நாள் பன்னிரெண்டு ஆண்டுகள் தான், என்றார் கடவுள்.
மகிழ்ச்சி அடைந்த நாயும் கடவுளை வணங்கிவிட்டுப் புறப்பட்டது.
குரங்கு கடவுளின் முன் குதித்து வந்து நின்றது. உனக்கு என்ன குறை? என்று கேட்டார், கடவுள்.
பல்லைக் காட்டியக் குரங்கு, கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது நீண்ட காலம் ஆயிற்றே. அவ்வளவு காலமா நாங்கள் கொடுமையை அனுபவிக்க வேண்டும்? உணவுக்காக நாங்கள் மனிதர்களிடம் பல்லைக் காட்டுகிறோம். நாட்டியம் ஆடுகிறோம். என்னென்னவோ செய்கிறோம். இருந்தாலும் எங்களுக்குக் கிடைப்பவை அழுகிப் போன பழங்கள் தான். முதுமை அடைந்து விட்டால் எங்களால் கிளைக்குக் கிளை தாவ முடியாது. அப்பொழுது எங்கள் நிலை மிகப் பரிதாபமாக ஆகி விடும். எங்களால் எந்தச் செயலும் செய்ய முடியாது. ஆகவே எங்கள் ஆயுளைக் குறையுங்கள், என்று வேண்டியது.
இனி உங்களுக்குப் பத்து ஆண்டுகள் தான் வாழ்நாள், என்றார் கடவுள்.
குரங்கும் மகிழ்ச்சியுடன் அங்கிருந்து புறப்பட்டது. கடைசியாக இருந்த மனிதனை அழைத்தார் கடவுள்.
உன் குறை என்ன? உனக்கு எவ்வளவு ஆயுளைக் குறைக்க வேண்டும்? என்று கேட்டார்.
கடவுளே! முப்பது ஆண்டுகள் என்பது எங்களுக்கு மிகக் குறைந்த ஆயுள் ஆகும். அப்பொழுது தான் நாங்கள் ஏதேனும் ஒரு கலையை முழுமையாகக் கற்றிருப்போம். நாங்கள் குடியிருப்பதற்காக ஒரு வீட்டைக் கட்டி முடித்திருப்போம். எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு மகிழ்ச்சியாக நாங்கள் இருக்கத் தொடங்கும் காலம் அது.
நாங்கள் இதுவரை உழைத்த உழைப்பிற்குப் பயன் நுகரும் பருவம் அது. இந்தச் சூழலில் எங்கள் உயிரைப் பறிப்பது கொடுமை ஆகும். முப்பது ஆண்டு வாழ்நாள் என்பது எங்களுக்குப் போதவே போதாது. எங்களுக்கு அதிக ஆயுள் வேண்டும், என்று வேண்டினான் அவன்.
இங்கு வந்த நீ குறையுடன் சொல்லக் கூடாது. கழுதையிடம் பெற்ற பன்னிரெண்டு ஆண்டுகள், நாயிடம் பெற்ற பதினெட்டு ஆண்டுகள், குரங்களிடம் பெற்ற இருபது ஆண்டுகள் இங்கே உள்ளன. அந்த ஐம்பது ஆண்டுகளையும் நீ கூடுதலாகப் பெற்றுக் கொள்ளலாம். இனி உன் வாழ்நாள் எண்பது ஆண்டுகள். உனக்கு மகிழ்ச்சிதானே, என்று கேட்டார் கடவுள்.மகிழ்ச்சிதான் என்ற அவன் கடவுளை வணங்கி விட்டுப் புறப்பட்டான். எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்தார் கடவுள். கூடுதல் ஆயுள் கேட்டுப் பெற்ற மனிதனின் நிலைக்காக அவர் வருத்தப்பட்டார்.கடவுளிடம் வரம் பெற்ற நாளிலிருந்து மனிதன் எண்பது ஆண்டுகள் வாழத் தொடங்கினான். முதல் முப்பது ஆண்டுகளை அவன் மகிழ்ச்சியாகக் கழித்தான். இந்த காலத்தில் தான் அவன் அறிவுள்ளவனாக, வீரனாக, பயனுள்ளவனாக வாழ்ந்தான். ஏனென்றால் கடவுள் அவனுக்கே கொடுத்த ஆயுள் இது. அடுத்த பன்னிரெண்டு ஆண்டுகள் கழுதையின் ஆயுள். அதனால் அவன் இந்தக் காலத்தில் கழுதையைப் போலப் பிறர் சுமைகளைத் தூக்கினான். சூழ்நிலையால் அடிபட்டுப் பசியாலும் பட்டினியாலும் வாடினான். நாற்பத்து இரண்டிலிருந்து அறுபது வரை நாயின் ஆயுள் அவனுடையது. இந்தக் காலத்தில் அவன், தான் சேர்த்த பொருள்களைக் காவல் காக்கும் நாய் போல வாழ்ந்தான். பிறர் அதைக் கைப்பற்ற வந்தால் குரைத்து வாழ்க்கை நடத்தினான். அறுபதிலிருந்து அவன் வாழ்க்கை குரங்கு வாழ்க்கைதான். தன் பேரக் குழந்தைகளிடம் குரங்கைப் போலப் பல்லைக் காட்ட வேண்டியதாயிற்று. கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல அவன் மகன் வீடு, மகள் வீடு என்று மாறி மாறிச் செல்ல வேண்டியதாயிற்று. அவனும் பல்லெல்லாம் விழுந்து கன்னம் ஒட்டிக் குரங்கைப் போலக் காட்சி அளித்துப் பிறகு இறந்தான்.

பட்டினத்தார்

பட்டினத்தார்

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்று கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி. 11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டினத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர். பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு, கௌதம புத்தருக்கு இணையாக தமிழகத்திலே கருதப்படுகின்றது. பாரனைத்தும் பொய்யெனவே பட்டினத்தடிகள் போல் யாரும் துறக்கை அரிது என்ற கூற்றால் பரவலாக பாராட்டப்படுபவர். தம் தாயார் இறந்த பொழுது உடலுக்குத் தீ மூட்டும்முன் அவர் உருகிப் பாடிய பாட்டைக் கேட்டு இன்றும் கண்ணீர் உகுப்பவர் பலர்.
ஞானம் பிறந்த கதை
சிவநேசர் - ஞானகலை தம்பதியருக்கு மகனாக காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்த இவருக்கு, திருவெண்காட்டில் உறையும் சுவேதாரண்யப் பெருமானை நினைத்து சுவேதாரண்யன் என்று பெயரிடப்பட்டது. திருவெண்காடர் என்றும் அழைக்கப்பட்டார். பெருந்தன வணைகக் குடும்பம் என்பதால் திரைகடலோடியும் பெருஞ்செல்வம் திரட்டிமன்னரும் மதிக்கத்தக்க வளத்துடன் இருந்தார். அதனால் பெயர் சொல்லி அழைக்கத் தயங்கிய மக்களால் பட்டினத்தார் என்றே அழைக்கப்படலானார். சிவகலை என்னும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்தினார். குழந்தைப் பேறு இல்லாத வருத்தத்தில் திருவிடைமருதூர் சென்று இறைவனை வேண்டினார். அங்கே சிவசருமர் என்கிற சிவபக்தர், கோவில் குளக்கரையில் கண்டெடுத்ததாகக் கூறி ஓர் ஆண்மகவை பட்டினத்தாருக்குக் கொடுத்தார். அவனுக்கு மருதபிரான் என்று பெயரிட்டு வளர்த்து வந்தார் பட்டினத்தார் . அவன் வளர்ந்து பெரியவனானதும் அவனைக் கடல்கடந்து சென்று வணிகம் சென்று வர அனுப்பினார். அவனோ திரும்பி வரும் போது எருவிராட்டியும் தவிடுமாகக் கொண்டு வந்தது கண்டு அவனைச் சினந்து கண்டித்தார். அவன் தன் தாயாரிடம் ஓர் ஓலைத் துணுக்கும் காது இல்லாத ஊசி ஒன்றும் அடக்கிய பேழை ஒன்றினைத் தந்து விட்டு எங்கோ சென்று விட்டான். அந்த ஓலைத் துணுக்கில் இருந்த "காதற்ர ஊசியும் வாராது காண் கடைவழிக்கே" என்கிற வாசகமே பட்டினத்தாருக்கு ஞானம் தந்த வாக்கியம்.
பட்டினத்தடிகள்
அப்படியே தன் சகல சொத்துக்களையும் செல்வத்தையும் துறந்து கட்டிய கோவணத்துடன் துறவறம் பூண்டு வெளியேறினார் பட்டினத்தார். அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கௌரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை. அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்' எறு கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகல் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.
அன்னையின் ஈமச் சடங்கு
பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார். அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். அந்தப் பாடல்கள் மிகப் புகழ்பெற்றவை.
பத்திரகிரியார் தொடர்பு
பத்திரகிரி தேசத்தின் மன்னன் இவரை தவறான புரிதலில் கள்வர் என்று எண்ணிக் கைது செய்து கழுவிலேற்ற ஆணையிட்டார். கழுமரம் தீப்பற்றி எரிந்த காட்சியில் ஞானம் பெற்ற பத்திரகிரி மன்னன் தன் சொத்துக்களைத் துறந்து இவருடைய சீடரானார். பதினெண் சித்தர்களில் பத்திரகிரியாரும் முக்கியமான ஒருவர். அவருடைய பாடல்கள் "மெய்ஞானப் புலம்பல்" என்று பெயர் பெற்றவை.
பட்டினத்தடிகள் இயற்றிய நூல்கள்
சீடர் பத்திரகிரியார் விரைவில் முக்தி அடைந்து விட அதன் பிறகு பட்டினத்தடிகள், திருவெண்காடு சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங்கலுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. அவையாவன:

• கோயில் நான்மணி மாலை

• திருக்கழுமலை முமணிக்கோவை

• திருவிடைமருதூர் திருவந்தாதி

• திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது
பட்டினத்தடிகளின் பாடல்கள் எளிய வார்த்தைகளும் அரிய பொருளும் கொண்ட அற்புதக் கலவை ஆகும்.
திருவொற்றியூரில் சமாதி
தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள். அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது

சாம்பவி தீட்சை

சாம்பவி தீட்சை

சில மந்திரங்களை உச்சரிக்க வேண்டுமானால் "நீங்கள் சிவதீட்சை பெற்றுவிட்டீர்களா' என கேட்பது வழக்கம். தீட்சை பெற வேண்டுமானால், சில விதிமுறைகள் உண்டு. அந்த முறைகளைப் பின்பற்றி பன்னிரு திருமுறைகளிலும் (தேவாரம், பெரியபுராணம் உள்ளிட்ட நூல்கள்) தெளிந்த நல்லறிவு பெற்றவர்கள் தீட்சை பெறுவர். ஆனால், எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு இறைவன் தானாகவே முன்வந்து தீட்சை அளிக்கிறான். அதற்காக, அவன் வாகனமேறி பவனி வருகிறான். தன்னைக் காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவன் தீட்சை தருகிறான். இதற்கு "சாம்பவி தீட்சை' என்று பெயர்.
"சாம்பவி தீட்சை ' என்றால் இறைவன் தன் ஞானக்கண்ணால் மனிதனையும் பிற உயிர்களையும் சுத்தப்படுத்துவதாகும். இது உடல் சுத்தமல்ல. உள்ளச்சுத்தம். ஒவ்வொருவர் உள்ளமும் சுத்தமானால் உலகமே சுத்தமாகிறது. அப்படியானால், நம் உள்ளத்தில் ஏதோ அழுக்கு படிந்திருந்திருக்கிறது என்று அர்த்தமாகிறது.
நம் உள்ளத்தில் காமம் (விருப்பம்), குரோதம் (பழிவாங்கும் உணர்வு), உலோபம் (கஞ்சத்தனம் அல்லது சுயநலம்), மோகம்( மண், பெண், பொன் உள்ளிட்ட பேராசை), மதம் (ஆணவம்), மாச்சரியம் (பொறாமை) என ஆறுவகையான அழுக்குகள் படிந்துள்ளன. ஆறாம் திருநாளன்று ரிஷபத்தில் பவனி வரும் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் இந்த ஆறுவகை குணங்களையும் நம் உள்ளத்தில் இருந்து விரட்டி நம்மை நல்வழிப்படுத்துவார்கள். இந்த கொடிய அழுக்குகள் நம் உள்ளத்தில் இருந்து நிரந்தரமாக விலக அவர்களை இன்று வேண்டுவோம்.

சாவித்திரி, சத்தியவான்
சாவித்திரி என்றவுடனேயே எமனிடமிருந்து கணவனைப் போராடி மீட்ட பெண் என்ற அளவுக்காவது நம்மில் பலருக்கு அந்தக் கதை கொஞ்சம் தெரிந்திருக்கும்.
மத்ரா தேசத்தின் அரசன் அஸ்வபதி, அவனது ஒரே மகள் சாவித்திரி. திருமண வயது நெருங்கியதும் தகுந்த மணவாளனைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிற சுதந்திரத்தை மகளுக்கு வழங்குகிறார் தந்தை. மகளும், தனக்குப் பொருத்தமான மணாளனைத் தேடி வருகையில், அழகிய வாலிபன் ஒருவனைக் காண்கிறாள். அவன்- சத்தியவானுடைய பண்பினால் கவரப்படும் சாவித்ரியும், சாவித்ரியின் அன்பினால் ஈர்க்கப்பட்ட சத்தியவானும் ஒருவரை ஒருவர் யாரென்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றனர்.
சால்வ தேசத்தின் அரசன் த்யுமத்சேனன், உறவினர்களுடைய சதியால் அரசிழந்து, பார்வையும் இழந்து, தன்னுடைய மனைவி மற்றும் ஒரே மகனான சத்தியவானுடன், கானகத்தில் வசித்து வருகிறார் என்பதை சாவித்ரி அறிந்து கொள்கிறாள்.
தந்தையிடம் திரும்பும் சாவித்திரி, சத்தியவான் தான் தன் கணவனாக வரிக்கப் பட்டவன் என்பதைத் தெரிவிக்கிறாள். விசாரிக்கும் போது, சத்தியவானுடைய ஆயுள் இன்னும் ஒரு வருட காலம் தான் என்பது தெரிய வருகிறது. சாவித்ரியின் தாய் கலங்குகிறாள், மகளை முடிவை மாற்றிக்கொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறாள். ஆனால், சாவித்திரி, சத்தியவானைத் தவிர வேறொருவரைக் கணவனாகக் கனவிலும் கூட ஏற்க முடியாது என்று உறுதியாக இருக்கிறாள்.
சாவித்திரி விருப்பப் படியே அவளுக்கும், சத்தியவானுக்கும் திருமணம் நடக்கிறது. கணவனோடு கானகத்தில் சந்தோஷமாக வாழ்கிறாள். அந்தக் குறிப்பிட்ட தருணமும் நெருங்குகிறது. ஆம், ஒரு வருடம் நிறைகிறது. கணவனும் மனைவியுமாக, கானகத்தில் கனி, கிழங்குகளை சேகரிக்கப் போகையில்கூற்றுவன் சத்தியவானுடைய உயிரைப் பறித்துச் செல்கிறான்.
சாவித்திரி மனம் கலங்காமல் கூற்றுவனைப் பின் தொடர்கிறாள். உனது நாள் இன்னமும் இருக்கிறது, திரும்பிப் போய் விடு என்று கூற்றுவன் நயமாகவும், பயமாகவும் சொல்வதைக் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ளாமல், தன்னுடைய கணவனுடைய உயிரை விட்டுப் பிரிய மாட்டேன், தொடர்ந்தே வருவேன் என்கிறாள்.இடையில், பல உலகங்களைக் கடந்தும் சாவித்ரி உறுதியாக இருப்பதைப் பார்க்கும் கூற்றுவன் பிடிவாதத்தை விட்டு விடு, நீ வேண்டிய வரங்களைத் தருகிறேன், திரும்பப் போய் விடு என்கிறான். என்ன வரம் வேண்டுமானாலும் தருவீரா என்கிறாள் சாவித்திரி! எதுவானாலும் கேள், தருகிறேன் என்கிறான் கூற்றுவன்.

தன் கணவனோடு கூடி நூறு வீரமும் கீர்த்தியும் நிறைந்த பிள்ளைகளையே வரமாகத் தரும் படி சாவித்திரி வேண்டுகிறாள்.
வரமோ, வாக்கோ எதுவானாலும், தருகிறேன் என்று சொன்னால் அதை நிறைவேற்றுகிற தெய்வங்களும், மனிதர்களும், ஏன் மிருகங்களும் கூட வாழ்ந்த புண்ணிய பூமி இது.
'தந்தேன்' என்றான் எமன்.
சக்கயிற்றில் சிக்குண்டிருந்த சத்தியவானுடைய உயிர் மீண்டும் அவனது உடலில் புகுந்தது. சாவித்ரிக்கு அளிக்கப்பட்ட வரம், மாமனாருடைய பார்வையை மீட்டுக் கொடுக்கிறது, இழந்த ராஜ்ஜியம் மீண்டு வருகிறது.
 காரடையான் நோன்பு என்பது தமிழ் நாட்டிலும், கர்வா சௌத் என்கிற பெயரில் வடக்கிலும் பெண்கள் தங்களுடைய மாங்கல்ய பலம் நீடித்திருக்க வேண்டும், கணவன் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற பிரார்த்தனையோடு மேற்கொள்கிற விரதம் தான் இது. மாசியும் பங்குனியும் சந்திக்கும் வேளையில், அதாவது மாசி மாதம் முடிவடைகிற நேரத்திற்கும், பங்குனி மாதம் பிறக்கும் நேரத்திற்கும் இடைப்பட்ட வேளையில், திருமணமான பெண்கள் விரதம் இருந்து, கார் அரிசியில் செய்யப்பட்ட இனிப்பு அடையும், வெண்ணையும் நிவேதனம் செய்து, நோன்புச் சரட்டினைக் கட்டிக்கொள்கின்றனர். சரடைக் கட்டிக்கொள்ளும் போது பிரார்த்தனையாக, 'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என் கணவர் பிரியாதிருக்க வேண்டும்' என்றுவேண்டிக் கொள்வது மரபு.கதையாகச் சொல்லி, அதன் உட்பொருளைப் புரிந்து கொள்வதற்காகவே அதை ஒரு சடங்காகவும், விரதமாகவும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்த வழி வழியாகத் தொடருகிற மரபு.

"மாசிச் சரடு பாசி படரும்" என்பதற்கேற்ப, புதியமாங்கல்யச் சரடை அன்றைய தினம் திருமணமான பெண்கள் அணிந்து கொள்வதும், கன்னிப் பெண்கள் தங்கள் மனதிற்கேற்ற மணவாளன் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்வதும் நம்முடைய மரபு.
மாங்கல்ய பலம் வேண்டிப் பெண்கள் மேற்கொள்ளும் இந்த விரதத்திற்குப் பின்னணியாக, மஹாபாரதத்தில் வரும் சத்தியவான் சாவித்திரி கதை இருக்கிறது.


அருணகிரிநாதர் வரலாறு

அருணகிரிநாதர் வரலாறு

திருவண்ணாமலை என்று சிலரும், காவிரிப் பூம்பட்டினம் என்று சிலரும் அருணகிரிநாதர் பிறந்த இடம் என்று சொல்கின்றனர். தந்தையார் பெயர் திருவெங்கட்டார் என்றும் தாயார் பெயர் முத்தம்மை என்றும் சொல்கின்றனர். திருவண்ணாமலைக்கு எப்போது வந்தார் என்பது சரிவரத் தெரியவில்லை. சிலர் இவருடைய தாயார் ஒரு பரத்தை என்றும் சொல்கின்றனர். இவருக்கு ஒரு மூத்த சகோதரி இருந்தாள். திருமணம் செய்து கொள்ளாமல் தம்பியின் வாழ்க்கையையே நினைத்துத் தம்பிக்குச் சேவை செய்து வந்ததாய்ச் சொல்லுவதுண்டு. அருணகிரிநாதரின் தமக்கையார் அருணகிரிநாதரைச் சிறு வயதில் இருந்து மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்து வந்தார். இவர் தீய செயல்களைச் செய்கின்றார், சிறு வயதில் இருந்தே பெண்ணாசை கொண்டவராய் இருக்கிறார் என்பது தெரிந்தும் அந்த அம்மையார் நாளாவட்டத்தில் இவர் திருந்துவார் என எதிர்பார்த்தார். ஏனெனில் அருணகிரி இளமையிலே நல்ல கல்வி கற்றுத் தமிழில் உள்ள இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்திருந்தார். உரிய வயதில் திருமணமும் ஆகியது. ஆனாலும் இவருக்கு முற்பிறவியின் பயனாலோ என்னவோ, பெண்களின் தொடர்பு அதிகமாய் இருந்தது. வீட்டில் கட்டிய மனைவி அழகியாய் இருந்தும், வெளியில் பரத்தையரிடமே உள்ளத்தைப் பறி கொடுத்ததோடு அல்லாமல், கொஞ்சம் கொஞ்சமாய்ச் சொத்தையும் இழந்து வந்தார். எந்நேரமும் காமத்திலே மூழ்கித் திளைத்ததன் விளைவாய் சொத்தை இழந்ததோடு அல்லாமல், பெருநோயும் வந்து சேர்ந்தது இவருக்கஎன்றாலும் அந்நிலையிலும் இவருக்குப் பெண்ணின் அண்மை தேவைப்பட, கட்டிய மனைவியைக் கட்டி அணைக்க முற்பட்டவரை மனைவி வெறுத்து ஒதுக்க, இவர் சகோதரி தன்னைப் பெண்டாளுமாறு கோபத்துடனும், வருத்தத்துடனும் இவரிடம் சொல்ல தன் தீய செயல்களால் ஏற்பட்ட விளைவு குடும்பத்தையே உருக்குலைத்ததை எண்ணி இவர் வீட்டை விட்டே வெளியேறிக் கால் போன போக்கில் சென்றார். அப்போது ஒரு பெரியவர் இவரைக் கண்ணுற்றார். அவர் தான் அருணாசலேஸ்வரர் என்றும் சொல்லுகின்றனர். குமரக் கடவுள் என்றும் சொல்லுவதுண்டு. எது எப்படி இருந்தாலும் அருணகிரிநாதருக்கு அருட்பேராற்றல் சித்திக்கும் நேரம் நெருங்கி விட்டது. அந்தப் பெரியவர் அவருக்கு, “குன்றுதோறாடும் குமரக் கடவுளைப் பற்றிச் சொல்லி, அந்த ஆறெழுத்து மந்திரத்தையும், அதன் உட்பொருளையும், சரவணபவ என்னும் சொல்லின் தத்துவத்தையும் விளக்கி, குமரனைப் போற்றிப் பெருவாழ்வு வாழச் சொல்லி ஆசீர்வாதம் செய்தார். என்றாலும் குழப்பத்தோடு இருந்த அருணகிரி சரியாகச் செவி சாய்த்தாரில்லை. ஒருபக்கம் பெரியவரின் பேச்சு. மறுபக்கம் குழப்பமான மனது. சற்றுத் தெளிவடைகிறது மனம் என நினைத்தால் மீண்டும், மீண்டும் குழப்பம். முருகனை நினைத்து தியானத்தில் அமர்ந்தால் மனம் ஈடுபட மறுக்கிறது. அமைதி வரவில்லை. என்ன செய்யலாம்? குழப்பத்திலும், கவலையிலும் செய்வதறியாது தவித்த அருணகிரி கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தார். திருவண்ணாமலைக் கோபுர வாயிலில் தவம் இருந்த அருணகிரியார் அந்தக் கோபுரத்தின் மேலே ஏறி அதிலிருந்து கீழே குதித்து தம் உயிரை விட முற்பட்டார். அவர் கீழே குதித்தபோது இரு கரங்கள் அவரைத் தாங்கின. அந்தக் கரங்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் இல்லை. குன்றுதோறாடும் குமரனே ஆகும். தன் கைகளால் அவரைத் தாங்கி, “அருணகிரி !நில்!” என்றும் சொன்னார்.
திகைத்த அருணகிரி தம்மைக் காப்பாற்றியது யாரோ எனப் பார்க்க வடிவேலவன் தன் திருக்கோலத்தைக் காட்டி அருளினான். மயில்வாகனனின் தரிசனம் கிடைத்த அருணகிரி வியப்பின் உச்சியிலிருந்து மீளாமல் தவிக்க, முருகன் அவரை, “அருணகிரிநாதரே! “ என அழைத்துத் தம் வேலால் அவர் நாவிலே “சரவணபவ” என்னும் ஆறெழுத்து மந்திரத்தைப் பொறித்து, யோக மார்க்கங்களும், மெய்ஞ்ஞானமும் அவருக்குக் கைவரும்படியாக அருளினார். சித்தம் கலங்கிய நிலையில் இருந்த அருணகிரியாரின் சித்தம் தெளிந்தது.
பிரணவ மந்திர உபதேசத்தை நேரடியாக முருகனிடமிருந்தே பெற்ற இவர் வள்ளி மணாளனை இரு கரம் கூப்பித் தொழுதார். அவனோ, “அருணகிரி, இந்தப் பிறவியில் இன்னும் செய்யவேண்டியவை நிறைய உள்ளன உனக்கு. ஆகையால் இம்மையில் எம்மைப் பாடுவாயாக. பாடிப் பணிந்து பின்னர் எம்மிடம் வந்து சேருவாய்.” என்று சொல்ல, கந்தனின் கட்டளையால் மனம் மகிழ்ந்தாலும், பாடல் புனையும் வழியே அறியாத தாம் எவ்விதம் கந்தனைப் பாடுவது எனக் கலங்கினார். கந்தவேளோ, “யாமிருக்க பயமேன்? அஞ்சேல்!” என்று சொல்லிவிட்டு, “முத்தைத் தரு பத்தித் திருநகை” என எடுத்துக் கொடுத்துவிட்டு மறைந்தான். ஆஹா, தமிழ் கூறும் நல்லுலகுக்கு அன்று பிறந்தது தமிழில் சந்தக் கவிகள். சந்தக் கவிகளுக்கு ஆதிகர்த்த என அருணகிரிநாதரைச் சொல்லலாமோ??

கந்தன் வந்து உபதேசம் செய்து சென்றபின்னரும் அருணகிரியாரைச் சோதனை விடவில்லை. திருவண்ணாமலை ஆலயத்தின் இளையனார் சந்நிதியில் பெரும்பாலும் மோனத் தவம் செய்து வந்தார் அருணகிரி. தவம் கலைந்த வேளைகளில் சந்தப் பாடல்களை மனம் உருகிப் பாடிவந்தார். இவரின் இந்தப் பாடல்கள் யோகக் கலையை ஒட்டி அமைந்தவை. பரிபூரண யோக ஞானம் கைவரப் பெற்றவர்களுக்கு மட்டுமே இந்தப் பாடல்களின் உட்பொருள் புரியும். அப்போது திருவண்ணாமலையை ஆண்டு வந்தவன் விஜயநகர வம்சத்தைச் சேர்ந்த பிரபுடதேவராயன் என்னும் மன்னன். தெய்வ பக்தி மிகுந்த அவன் அருணகிரியாரைப் பற்றியும் அவர்க்கு நேர்ந்த அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொண்டான். அருணகிரியாரைப் பணிந்து தனக்கும் அவருக்குக் கிடைத்த பாக்கியங்கள் கிடைக்குமாறு செய்யவேண்டும் என வேண்டிக் கேட்க, அருணகிரிக்கும், அரசனுக்கும் நட்பு முகிழ்ந்து மணம் வீசிப் பரவலாயிற்று.
அந்த நட்பின் மணமானது மன்னனிடம் ஆஸ்தான பண்டிதன் ஆன சம்பந்தாண்டானைப் போய்ச் சேர்ந்தது. தேவி பக்தன் ஆன அவன் தேவிகுமாரனைப் பணிந்து வந்த அருணகிரியிடம் ஏற்கெனவே பொறாமை கொண்டிருந்தான். இப்போது மன்னனும் அருணகிரியைப் பணிந்து அவர் சீடர் ஆக முயல்வதைக் கண்டதும் மன்னனைத் தடுக்க எண்ணம் கொண்டான். “மன்னா, யாம் உம் நெருங்கிய நண்பன். உம் நன்மையே நாடுபவர். உமக்கு நல்லதே செய்ய நினைக்கிறோம். அருணகிரி பற்றி நீர் சரிவர அறியாமல் அவனிடம் நட்புக் கொண்டுள்ளீர். வேண்டாம் இந்த நட்பு. பரத்தையரிடமே தஞ்சம் எனக் கிடந்தான் அருணகிரி. உற்றார், உறவினர் கைவிட்டனர். அத்தகைய பெருநோய் வந்திருந்தது அவனுக்கு. ஏதோ மாயவித்தையால் இப்போது மறைந்திருக்கலாம். சித்துவேலைகளை எவ்வாறோ கற்றுக் கொண்டு, முருகன் நேரில் வந்தான், எனக்குச் சொல்லிக் கொடுத்தான், நான் முருகனுக்கு அடிமை, என்று சொல்லித் திரிகின்றான். நம்பவேண்டாம் அவன் பேச்சை!” என்று சொன்னான்.
மன்னரோ, அருணகிரிநாதரின் ஆன்மபலத்தையும், அவரின் பக்தியையும், யோகசக்தியையும் நன்கு உணர்ந்துவிட்டார். அருணகிரியின் செந்தமிழ்ப் பாக்களும், அதன் சந்தங்களும் அவரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. சம்பந்தாண்டானிடம், “நீர் பெரிய தேவி உபாசகர் என்பதை நாம் அறிவோம். அருணகிரி பரிசுத்தமான யோகி. முருகன் அவரை உண்மையாகவே ஆட்கொண்டதோடு அல்லாமல், பாடல் பாடவும் அடியெடுத்துக் கொடுத்துள்ளான். அவரின் கடந்த காலவாழ்க்கை எவ்விதம் இருந்தாலும் இப்போது அவர் வாழ்வது பரிசுத்தமான துறவு வாழ்க்கை. முருகன் அருணகிரியை ஆட்கொள்ளவில்லை என்பதை உம்மால் எவ்விதம் நிரூபிக்கமுடியும்,? “ என்று கேட்டான் மன்னன்.
சம்பந்தாண்டான் இது தான் சமயம் என சாமர்த்தியமாக , “மன்னா, தன்னை முருகனடிமை என்று சொல்லிக் கொண்டிருக்கும் அந்த அருணகிரியை அழையுங்கள். தேவி உபாசகன் ஆன நான் என் பக்தியால் அதன் சக்தியால் அந்தத் தேவியை இங்கே தோன்றச் செய்கிறேன். அதேபோல் அருணகிரியும் தன் பக்தியால் அந்த முருகனைத் தோன்றச் செய்யவேண்டும். தோல்வி அடைந்தால் ஊரை விட்டே ஓடவேண்டும். சம்மதமா?” என்று சவால் விட்டான். மன்னனும் நமக்கென்ன?? தேவி தரிசனம் ஒருபக்கம், இன்னொரு பக்கம் முருகன் தரிசனம். சம்மதமே என்று சொன்னான் மன்னன். குறிப்பிட்ட நாளும் வந்தது. அருணகிரிநாதருக்கும் விஷயம் சொல்லப் பட்டது. என் முருகன், என் அப்பன் என்னைக் கைவிட மாட்டான் என்ற பூரண நம்பிக்கையுடன் அவரும் சம்மதம் சொல்லிவிட்டார். மந்திர, தந்திரங்களில் தேர்ந்த சம்பந்தாண்டான் தன் தந்திர வித்தையால் தேவியைப் போன்ற தோற்றம் உண்டாக்கமுடியும் என்ற நம்பிக்கையில் இருந்தான். ஊரெங்கும் செய்தி பரவி அனைவரும் கூடிவிட்டனர்.
தேவி உபாசகன் ஆன சம்பந்தாண்டான் தான் வழிபடும் தேவியைக் குறித்துத் துதிகள் பல செய்து அவளைக் காக்ஷி தருமாறு வேண்டிக் கொண்டான். கொஞ்சம் ஆணவத்துடனேயே கட்டளை போல் சொல்ல அவன் ஆணவத்தால் கோபம் கொண்ட தேவி தோன்றவே இல்லை. கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. சம்பந்தாண்டானின் தோல்வி உறுதியானது. அனைவரும் அருணகிரியாரை மிகுந்த ஆவலுடன் நோக்கினார்கள். அருணகிரியாரோ கந்தவேளை மனதில் தியானித்துப் பின்னர் அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் வடக்குப் பக்கம் இருக்கும் மண்டபத்தின் வடகீழ்த் தம்பத்தில் முருகன் காக்ஷி அளிக்கும்படி வேண்டிக் கொள்வதாயும், இறைவன் திருவருளால் காக்ஷி கிடைக்கும் என்றும் சொல்லிவிட்டுக் கோயிலை நோக்கி நடக்கலானார். அனைவரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றார்கள். பக்திப் பரவசத்துடன் மனமுருகி, மணிரெங்கு என்று ஆரம்பிக்கும் கீழ்க்கண்ட திருப்புகழைப் பாட ஆரம்பித்தார். பாடி முடித்ததுதான் தாமதம்,. மயில் வாகனன் மயில் மீது அமர்ந்த திருக்கோலத்தில் கையில் வேல் தாங்கியபடி அங்கே அனைவரும் பார்க்கும் வண்ணம் தோன்றி மறைய, கூடி இருந்த கூட்டம் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடியது. சம்பந்தாண்டான் அவமானத்துடன் வெளியேறினான். அருணகிரியார் இயற்றியவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரநுபூதி, வேல் விருத்தம், மயில் விருத்தம், சேவல் விருத்தம், திருவெழுக்கூற்றிருக்கை, திருவகுப்பு போன்றவை ஆகும்

அபிராமி பட்டர்

அபிராமி பட்டர்

அபிராமி பட்டர் அன்றைய சோழநாட்டுப்பகுதியான திருகடவூரில் வாழ்ந்து வந்தார். (அன்னை அபிராமி இருக்கும் இடம்) அவர் எப்பொழுது அன்னை அபிராமி எண்ணி யோக நிலையில் இருப்பது வழக்கம். உலகம் அவரைப்பற்றி பேசுவதைப்பற்றி கவலைப்படாமல் இருந்தார். அப்பொழுது சோழநாட்டை ஆண்ட இரண்டாம் சரபோஜி ராவ் போன்ஸ்லே மன்னர் அன்னை தரிசிப்பதற்கு சென்றார். அப்பொழுதும் அபிராமி பட்டர் மன்னரின் வருகையைப்பற்றி உணராமல் அன்னை அபிராமியின் ஒளிமிகுந்த முகத்தை பற்றி எண்ணி யோக நிலையிலேயே இருந்தார். அப்பொழுது மன்னர் மிகுந்த மரியாதையுடன் அவரை அணுகி இன்று என்ன நாள்(திதி) என்று கேட்டார். அப்பொழுது அபிராமி பட்டர் உண்மையான நாளான அமாவாசையை உணராமல் பெளர்ணமி என்று சொல்ல, அனைவரும் அபிராமி பட்டரைப் பார்த்து சிரித்தனர்.
சரபோஜி மன்னர் கோபம்கொண்டு அபிராமி பட்டரை சொன்னது போல் அவரது வார்த்தைப் பொய்த்தால் அபிராமி பட்டரை உயிரோடு எரிக்குமாறு கூற, அதற்கான தளம் ஏற்பாடு செய்து கீழே நெருப்பு எரியூட்டப்பட்டது. அபிராமி பட்டர் தன் தவறை உணர்ந்தவராக பழியை அன்னை அபிராமியின் மீதே போட்டார். இந்த தவறை அன்னை அபிராமியான உன்னை நினைத்தே நான் யோக நிலையில் மூழ்கி இருந்தமையால் செய்ய நேரிட்டது. அவர் அன்னை அபிராமியைப்பற்றி நூறு சுலோகங்களை மிக அருமையாகப் பாடத் தொடங்கினார்.
அந்தப்பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் அந்தாதி என்றப்பெயரில் வந்தன, அந்தாதி என்றால் அடுத்தப்பாடல் முதல் பாடல் எந்த வார்த்தையில் முடிந்ததோ அதே வார்த்தையில் தொடங்க வேண்டும். அபிராமி பட்டருக்கு இருந்த திறமையையும் கடவுளின் அருளால் இந்த அருமையான நூறு பாடல்களை ஒரே இரவில் பாடியதை பாராட்டியே ஆகவேண்டும். அபிராமி அந்தாதியில் இன்னொரு தனித்துவம் என்னவென்றால் அதற்கு முடிவும் இல்லை ஆரம்பமும் இல்லை. முதல் வரி 'உதிக்கின்ற செங்கதிர் உச்சி திலகம்..... ' என்று தொடங்க 100வது பாடல் ' உதிக்கின்றனவே ' என்று முடிகிறது.
அபிராமி பட்டர் 79வது பாடலை பாடிக்கொண்டிருக்கையில் 'விழிக்கே அருளுண்டு வேதம் சொன்ன..... ' அன்னை அபிரமி அவரது பக்தியால் இன்புற்று அவர் முன்னே தோன்றி தனது காதணியை (தடங்கா அல்லது குண்டலம்) ஆகாயத்தில் வீச அது வான் முழுவதும் முழு பெளர்ணமியைப் போல பிரகாசித்து ஜொலித்து. அனைவரும் அன்னையை வணங்கி அன்னையின் மகத்தான சக்தி கண்டு வியந்தனர். மன்னர் அபிராமி பட்டரிடம் மன்னிப்பு கோரினார்.

அரிச்சந்திரன் கதை

.அரிச்சந்திரன் அல்லது ஹரிச்சந்திரன் இந்தியத் தொன்மக் கதை ஒன்றின் கதைத் தலைவன். இக் கதைகளின்படி இவன் சூரிய குலத்தின் 28 ஆவது அரசன் ஆவான். இவன் தனது வாழ்வில், சொன்னசொல் தவறாமை, பொய் சொல்லாமை என்னும் இரண்டு ஒழுக்கங்களையும் இறுக்கமாகக் கடைப்பிடித்து வந்தான். . தனது கொள்கைகளில் உறுதியாக நின்றமையால் வாழ்க்கையில் அவன் அடைந்த துன்பங்களையும் இறுதியில் அதனாலேயே அவன் உண்மையின் சின்னமாகப் போற்றப்படுவதையும் அரிச்சந்திரனது கதை எடுத்துக் கூறுகிறது. இளம் வயதில் தான் பார்த்த அரிச்சந்திர நாடகமே தனக்கு வாய்மையின் உயர்வை உணர்த்தியதாய் அண்ணல் காந்தியடிகள் தனது வாழ்க்கை வரலாறான “சத்திய சோதனை” நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 அரிச்சந்திரன் கதை

நாடிழத்தல்
விசுவாமித்திரர் என்னும் முனிவர் அரிச்சந்திரனிடம் வந்தார். அரிச்சந்திரன் தனது கனவில் வந்து அவனது நாட்டைத் தனக்கு நன்கொடையாகத் தருவதாக வாக்களித்ததாகவும் அதனால், அந் நாட்டைத் தனக்கு அவன் தந்துவிடவேண்டும் என்று கூறினார். கனவிலாயினும், தான் வாக்குக் கொடுத்ததாக முனிவர் கூறுவதால் தன் நாட்டை அவருக்கே அரிச்சந்திரன் கொடுத்துவிட்டுத் தனது மனைவியையும் சிறுவனான மகனையும் அழைத்துக்கொண்டு அந்நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்த வாரணாசிக்குச் செல்வதற்காக நாட்டை விட்டு வெளியேறினான்.
அடிமைகளாதல்
எனினும் முனிவர் அவனை நோக்கி, அவன் கொடுத்த தானம் நிறைவெய்துவதற்குத் தட்சிணை கொடுக்கவேண்டும் என்றார். தட்சிணையாகக் கொடுப்பதற்குக் கூட எதும் கையில் இல்லாத அரிச்சந்திரன் தன் மனைவியையும் மகனையும் ஒரு பிராமணனுக்கு விற்றான். அதனால் கிடைத்த பணமும் தட்சிணைக்குப் போதுமானதாக இல்லாதிருந்ததால் தன்னையும் சுடலை காப்போன் ஒருவனுக்கு விற்றுவிட்டான். அரசன் சுடலையில் பிணங்களை எரிப்பதற்கு உதவினான். அவனது மனைவியும் மகனும் பிராமணனின் வீட்டு வேலைக்காரர் ஆயினர். இவ்வாறு இவர்கள் மிகவும் துன்பப்பட்டனர்.

மகன் இறப்புஒரு நாள் பிராமணரின் பூசைக்காகப் பூப்பறிக்கச் சென்ற அரிச்சந்திரனின் மகன் பாம்பு தீண்டி இறந்தான். உதவி ஏதும் அற்ற அரிச்சந்திரனின் மனைவி தனியாகத் தனது மகனின் பிணத்தையும் தூக்கிக்கொண்டு புலம்பியவளாய் மயானத்துக்குச் சென்றாள். மகனின் பிணத்தை எரிப்பதற்காகச் செலுத்த வேண்டிய வரியைக் கொடுப்பதற்குக் கூட அவளிடம் பணம் இல்லை. சுடலையில் காவல் காப்போனாக இருந்த அரிச்சந்திரனோ அவனது மனைவினோ ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ளவில்லை. வரி செலுத்தப் பணம் இல்லையெனக் கூறக்கேட்ட அரிச்சந்திரன் கண்ணில் அவள் கழுத்திலிருந்த தாலி பட்டது. அவளைப் பார்த்து அத்தாலியை விற்று வரி கட்டுமாறு அவன் கூறினான். அவளது கணவனான அரிச்சந்திரனுடைய கண்ணுக்கு மட்டுமே அவள் அணிந்திருந்த தாலி தெரியக்கூடியது என்பதனால், காவலாளியாக இருந்தவன் அரிச்சந்திரனே என அவள் அறிந்து கொண்டாள். இதனால் அரிச்சந்திரனும் தனது மனைவியை அடையாளம் கண்டுகொண்டான்.
தேவர்கள் காட்சி கொடுத்தல்
எனினும் கடமையில் கண்ணாய் இருந்த அரிச்சந்திரன் வரி இல்லாமல் பிணத்தை எரிக்க மறுத்துவிட்டான். அவனது மனைவியிடம் ஒரேயொரு சேலை மட்டுமே இருந்தது. அதில் ஒரு பாதியைக் கிழித்துத் தனது மகனின் உடலைப் போர்த்தியிருந்தாள். மற்றப்பாதியே அவளது உடலை மூடியிருந்தது. அதனை வரியாகக் கொடுத்தால் பிணத்தை எரிக்க முடியும் என அரிச்சந்திரன் ஒப்புக்கொண்டான். அவளும் அதற்கு இணங்கிச் சேலையை அவிழ்க்க முற்பட்டபோது, விஷ்ணுவும், தேவர்களும், விசுவாமித்திர முனிவரும் அவர்கள் முன் தோன்றினர். உண்மைமீது அவன் கொண்டிருந்த உறுதிக்காக அவர்கள் அவனைப் போற்றிய அவர்கள் அவனது மகனை உயிர்ப்பித்தனர்.
சுவர்க்கம் செல்லல்
அரிச்சந்திரனுக்கும் அவனது மனைவிக்கும் சுவர்க்க பதவி கொடுத்தனர் எனினும் அதனை ஏற்க அவர்கள் மறுத்தனர். தமது குடிமக்களை விட்டுவிட்டுச் செல்வது சரியல்ல என்றும் அதனால் அவர்களையும் தன்னோடு கூட்டிச்செல்ல விரும்புவதாகவும் அரிச்சந்திரன் இறைவனிடம் வேண்டினான். ஒவ்வொருவரும் தமது வினைப்பயனுக்கு ஏற்பவே சுவர்கம் செல்ல முடியும் என்று அதனால் குடிமக்களை அவன் கூட்டிச் செல்ல முடியாது என்றும் தேவர்கள் கூறினர். ஆகவே தான் செய்யத் புண்ணியங்கள் அனைத்தையும் தனது குடிகளுக்கே கொடுத்து விடுவதாகவும் அவர்களை அங்கே ஏற்றுக்கொள்ளும்படியும் அவன் வேண்டினான். தான் பூமியிலேயே தங்கிவிடவும் தீர்மானித்தான். அவனது செயலுக்காக மகிழ்ந்த இறைவன் அரிச்சந்திரனுக்கும் அவனது மனைவிக்கும் சுவர்க்கம் அளித்தார்.
விசுவாமித்திரர், அரிச்சந்திரனது நாட்டில் புதிதாக புதிதாக மக்களைக் குடியேற்றி அவனது மகனை அரசனாக்கினார்.


 

குசேலர்

குசேலர்

குசேலனின் இயற்பெயர் சுதாமா. இவர் ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் கந்தலாடைகளையே அணிந்திருந்ததால் குசேலன் என்ற பட்டப் பெயர் வந்தது. அனைவரும் இவரைக் குசேலன் என்றே அழைத்து வந்தனர்.
சாந்தீபனி முனிவரிடம் கண்ணன், குசேலன் இருவரும் கல்வி கற்றனர். அப்போதிருந்து இருவரும் நல்ல நண்பர்கள்.
இவரது மனைவி சுசீலை. இவர்களுக்கு 27 குழந்தைகள். இவரது குடும்பத்தில் வறுமை தாண்டவமாடியது. தினந்தோரும் காட்டிற்குச் சென்று குசேலர் தானியங்கள் சேகரித்து எடுத்து வருவார். அதை வைத்து கஞ்சி சமைத்து குழந்தைகளுக்குத் தருவார். அது அவர்களுக்குக் கால் வயிற்றுக்குக் கூட இருக்காது.
குழந்தைகளின் பசியைப் பொறுக்காத சுசீலை, குசேலரிடம் கண்ணனிடம் சென்று உதவி கேட்குமாறு வேண்டினாள். குசேலரும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டார்.
அன்றிலிருந்து அடுத்த சில நாட்கள் குசேலர் காட்டிலிருந்து சேகரித்துவரும் தானியத்தில் தன் பகுதியை அப்படியே சேகரித்து வைத்தாள் சுசீலை. அந்தத் தானியங்கள் கொண்டு கண்ணனுக்குத் தர, அவல் தயார்செய்து குசேலனிடம் தந்து அனுப்பினாள்.
பல மலைகளும் பல கடல்களும் கடந்து துவாரகை சென்றடைந்தார் குசேலர். குசேலர் வந்த செய்தி கேட்டு ஓடோடி வந்து வரவேற்று உபச்சாரம் செய்தார். குசேலன் தான் கொண்டு வந்த அவலை அவருக்குத் தந்தார். ஒரு பிடி அவலை எடுத்து கண்ணன் சுவைத்தார். அந்த ஒரு பிடி அவலுக்கே குசேலனுக்கு உலகம் கொள்ளாத செல்வம் சேர்ந்துவிட்டது.
கண்ணனிடம் உதவி கேக்க மனமின்றி, கண்ண்னிடம் கேட்காமலேயே விடைபெற்றுத் திரும்பினார். அவர் அவரது ஊருக்குத் திரும்பும் வழியில் திடீரென்று அவரது கந்தலாடைகள் விலையுயர்ந்த ஆடையாக மாறியது. உடலெங்கும் நகைகள் பளபளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமானது.
அவரது குடிசை இருந்த இடத்தில் மாளிகை இருந்தது. அந்த மாளிகையில் சுசீலை அவரை வரவேற்றார்.
இவ்வளவு செல்வத்தைப் பார்த்து குசேலருக்கு உள்ளுற ஒரு பயம் வந்தது. ஒரு நாள் யாரும் இல்லாத வேளையிலே, ஒர் அறையில் நுழைந்து இறைவனை மனமுருக வேண்டினார்.
திருமால் குசேலரின் முன் காட்சியளித்தார். குசேலன் அவரிடம், “செல்வத்தைக் காட்டி என் சிந்தையை மயக்காதே. செல்வம் எனக்கு வேண்டாம். உன் திருவடியே வேண்டும்” என வேண்டினார்.
இதற்கு திருமால், “குசேலா! செல்வத்தைப் பழிக்காதே. உன்னைப் போன்றோர் எந்த நிலையிலும் என்னை மறக்க மாட்டார்கள். மன்னுலகில் சில் காலம் மகிழ்ச்சியுடன் இருந்துவிட்டு ஒரு நாள் என் திருவடிகளை அடைவாயாக!” என்று வரமளித்து மறைந்தார்.
அவ்வாறே குசேலர் சிலகாலம் செல்வத்தோடும், ஆண்டவனை மறவாச் சிந்தையோடும் வாழ்ந்திருந்து ஒருநாள் இவ்வுலக வாழ்வு நீத்து திருமாலின் திருவடி சேர்ந்தார்.உறவுகள் மேம்பட……

உறவுகள் மேம்பட……


# எந்த விஷயத்தையும் பிரச்சனையயும் நாசூக்காக கையாளுங்கள்.(
Diplomacy)விட்டுக் கொடுங்கள்.(Compromise)
# சில நேரங்களில் சில சங்கடங்களை சகித்துதான்
ஆக வேண்டும் என்று உணருங்கள்.(Tolerance)
# நீங்கள் சொன்னதே சரி செய்ததே சரி என்று வாதாடாதீர்கள்
.(Adamant Argument)
#குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள்.(Narrow Mindedness)
# உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை
அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும்
விடுங்கள்.(Carrying Tales)
# மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி
நினைத்து கர்வப்படாதீர்கள்.(Superiority Complex)
# அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்.
(Over Expectation)
# எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும் அவர்களுக்கு
சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிக் கொண்டிருக்காதீர்கள்.
# கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பி விடாதீர்கள்.
# அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதீர்கள்.
# உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல்
கொஞ்சம் தளர்த்திக் கொள்ளுங்கள்.(Flexibility)
# மற்றவர் கருத்துக்களை செயல்களை நடக்கின்ற
நிகழ்ச்சிகளைத் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.(Misunderstanding)
# மற்றவர்களுக்குரிய மரியாதை காட்டவும் இனிய இதமான
சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள்.(Courtesy)
# புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களை
சொல்லவும் கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
# பேச்சிலும் நடத்தையிலும் பண்பில்லாத வார்த்தைகளையும்
தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்துஅடக்கத்தையும் பண்பையும் காட்டுங்கள்.
# அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
# பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் முதலில் இறங்கி வர
வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத்துவக்க முன் வாருங்கள்.
-தத்துவஞானி வேதாத்திரி மகரிஷிSunday, January 30, 2011

கீதாசாரம்


கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது

எது நடக்க இருக்கிறதோ,

அதுவும் நன்றாகவே நடக்கும்

உன்னுடையதை எதை நீ இழந்தாய்?

எதற்காக நீ அழுகிறாய்?

எதை நீ கொண்டு வந்தாய் அதை நீ இழப்பதற்கு?

எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு ?

எதை நீ எடுத்து கொண்டாயோ,

அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.

எதை கொடுத்தாயோ,

அது இங்கேயே கொடுக்கப்பட்டது.

எது இன்று உன்னுடையதோ

அது நாளை மற்றொருவருடையதாகிறது

மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்

சௌந்தர்ய லஹரி

சௌந்தர்ய லஹரி

சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கிய
தொகுப்பு. ஈசனால் அம்பிகையின் புகழை பாடுவதாக அவை
அமையப்பட்டுள்ளன.அவற்றை சிவபெருமான் சங்கரருக்கு அளிக்க அவரும்அத்தொகுப்பை பெற்று செல்லும்போது நந்திதேவரால்
வழிமறிக்கப்பெற்று அதிலிருந்து 59 ஸ்லோகங்களை
பறித்து செல்கிறார்.பார்வதி தேவி அந்த 59 ஸ்லோகங்களை சங்கரரே
இயற்றும்படி அருள் பாலிக்கிறார்.

கனகதாரா ஸ்லோகமானது ஒரு ஏழையின் குடும்பத்துக்கு
சங்கரர் மனமிறங்கி லட்சுமி தேவியை ஆராதித்து
ஸ்லோகங்கள் பாடி தங்க மழை பொழிய வைக்கும்
நிகழ்ச்சியை உள்ளடக்கியது.வால்மீகி

வால்மீகி

தங்களின் குழந்தை மிகப்பெரிய வரலாறை எதிர்காலத்தில் படைக்கப்போகிறான் என் பதை அப்போது அந்த பெற் றோர்கள் உணர்ந்திருக்கவில்லை. வீட்டில் ஏழ்மை இருந்தாலும் குழந்தைக்கு ரத்னாகரன்’ என்று பெயர் சூட்டியிருந்தனர் பெற்றோர்.
தெய்வத்தின் அருளால் பழைய கஞ்சியை மட்டுமே குடித்து வளர்ந்த ரத்னாகரன் பலசாலிவாலிபனான், வறுமையால் பள்ளி செல் லாத ரத்னாகரனின் செயல்பாடு நாளுக்குநாள் மோசமானது.
அதே நேரம் பெற்றோரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந் தான்.ஒருநாள் பசி மயக்கத்தில் இருந்த பெற்றோருக்கு “உணவு வாங்கி வருகிறேன்” என சொல்லி வெளியே போனவன் மழையில் மாட் டிக்கொண்டான்.அந்த வழியாக வந்த குதிரை வீரன் “தம்பி! உனக்கு ஏதாவது வேண்டுமா? கேள்” என்றான்.உடனே ரத்னாகரன், தன் கதையை அவனிடம் கூறினான்.
குதிரை வீரன் அவனுக்கு பணம் கொடுத்தாலும் ஒரு நிபந்தனையும் விதித்தான். “உன் பெற்றோருக்கு ஏதாவது வாங்கி கொடுத்துவிட்டு உடனே நீ திரும்பிவிட வேண்டும்.உனக்கு பெரும் செல்வம் கொட்டும் அளவிற்கு ஒருவேலையை நான் தருகிறேன். அதை நீ தொடர்ந்து செய்தால் இந்த உலகிலேயே பெரும் செல்வந்தனாகி விடுவாய்” என்றான்.
ரத்னாகரனுக்கும் அவனது பெற்றோருக்கும் மகிழ்ச்சி ஏற் பட்டது. ரத்னாகரன் குதிரை வீரனை ஒரு குகையில் மீண் டும் சந்தித்தான். அப்போதுதான் அவன் பெரும் கொள் ளைக் கும்பலுடன் அங்கு வசித்தது தெரியவந்தது. படிப் பறிவில்லாத ரத்னாகரனின் மனதை குதிரைவீரன் எளிதாக மாற்றிவிட்டான்.
“கொள்ளையடிப்பது, பணம் தர மறுப்பவர்களை கொலைசெய்வது… இதில் எதை வேண்டுமானாலும் செய். அதில் கிடைப்பதில் பாதி பங்கை எடுத்துக்கொள். மீதியை என்னிடம் கொடுத்துவிடு,” என்றான். அதற்குரிய பயிற்சிகளை எடுத்துக் கொண் டான் ரத்னாகரன்.
ரத்னாகரன் கொலை, கொள்ளையில் ஈடுபட்டான். பணம் சேர்ந்ததும், திருமணமும் செய்துகொண்டான். அவனுக்கு ஒரு மகனும் பிறந்தான்.
ஒருமுறை நாரத முனிவர் ஒரு காட்டின் வழியாக வந்துகொண்டிருந்தார். அவரை வழிமறித்தான் ரத்னாகரன். அவரிடமிருந்த பொருட்களை கேட்டான். உடனே நாரத முனிவர், “நீ யாருக்காக இவற்றை கொள்ளையடிக்கிறாய்?” என்றார்.
என் பெற்றோர், மனைவி, மக்களைக் காப்பாற்ற என்றான் ரத்னாகரன்.
“சரி, உன் வருமானத்திலிருந்து கிடைக்கும் லாபத்தை ஏற்றுக் கொள்ளும் உன் குடும் பத்தார், நீ செய்யும் கொலை, கொள்ளைகளுக்கான பாவத் தையும் ஏற்றுக் கொள்வதுதானே நியாயம்?” என்றார்.
இதற்கு ரத்னாகரன் ஆம்’ என்றான்.
அப்படியானால் இதற்கு விடை தெரிந்து கொண்டு வா. நீ வரும் வரை நான் இங் கேயே நிற்கிறேன்,” என்றார்.
நாரதரை ஒரு மரத்தில் கட்டி வைத்துவிட்டுரத்னாகரன் வீட்டிற்கு சென்றதும், “என் வருமானத்தில் மகிழ்ச் சியை அனுபவிக்கும் நீங்கள், எனது பாவங்களையும் பங் கிட்டுக் கொள்வீர்களா?” என குடும்பத்தாரிடம் கேட்டான்.
அவனது பெற்றோர், “பெற்றவர்களை காப்பாற்றுவது மகனுடைய கடமை. அவன் செய்யும் தொழிலில் உள்ள பாவ, புண்ணியங்களுக்கு அவனே பொறுப்பாவான்” என்றனர். அவனது மனைவியும், மகனும் இதே பதிலை கூறினர். “மனைவி குழந்தைகளை காப்பாற்றுவது ஒரு ஆண்மகனின் கடமை. அவன் என்ன தொழில் செய்கிறான் என்பதோ, அதில் உள்ள பாவங்கள் பற்றியோ தங்களுக்கு கவலை இல்லை என்றனர்.
இதனால் வருத்தமடைந்த அவன் நாரதரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, தனது கண் களை திறந்த அவருக்கு நன்றி யும் கூறினான்.
நாரதர் மகிழ்ந்து, நீ செய்த பாவங்கள் நீங்க வேண்டுமானால் ராம’ நாமத்தை உச்சரி,” என சொல்லி விட்டு சென்றார்.
ரத்னாகரனுக்கு படிப்பறிவு இல்லாததால், அவன் சூராம’ என்ற சொல்லை, சூமரா.. மரா..’ என்றே சொன்னான். அதை வேகமாக சொல்லும் போது, தானாகவே, சூராம ராம’ என மாறியது. அதை சொல்லிக் கொண்டே ஆழ்ந்த தியானத்தில் ஆழ்ந்து விட்டான்.பல ஆண்டுகள் கடந்தன. அவன் உடலைச் சுற்றி “வால் மீகம்” வளர ஆரம்பித்தது. சூவால்மீகம்’ என்றால் புற்று என பொருள்படும். ஒரு காலகட்டத்தில் இறைவன் அவனுக்கு அருள்பாலித்தார். அவன் புற்றிலிருந்து வெளிப் பட்டதால் “வால்மீகி” என அழைக்கப்பட்டான். அன்று முதல் வால்மீகி முனிவர் என அனைவரும் அழைக்க ஆரம் பித்தனர். இந்த மாபெரும் கொள்ளைக்காரனே பிற்காலத்தில் ராமாயணம் என்னும் மகாகாவியத்தை படைத்தான். இன்றும் இறவாப் புகழுடன் வாழ்கிறான்.

நாரதர் கர்வபங்கம். . .

நாரதர் கர்வபங்கம். . .


சர்வ சதா காலமும் நாராயண மந்திரம் செபிக்கும் மகரிஷி நாரதர்.
அவருக்கும் எங்கோ மனதின் ஒரு மூலையில் தன்னைவிட ஒரு
பெரிய பக்தன் இருக்க முடியுமா என்ற எண்ணம் தோன்றியது.
அந்த நாராயணனிடமே தன் சந்தேகத்தை வாய்விட்டு கேட்கவும் செய்கிறார்.
பூலோகத்தில் ஒரு பால்காரனை சுட்டிக்காட்டி அனுப்புகிறார் பெருமாள்.
மிகவும் ஆர்வத்துடன் அவனது நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்குகிறார்நாரதர். இருள் விலகும் முன்பே நாராயண நாராயண என்று சொல்லிக்கொண்டே எழுந்த அவன் தன் தினசரி வேலைகளான பசுக்களைக்குளிப்பாட்டுவது, தீனி வைப்பது, பால் கறப்பது, கறந்த பாலை வீடு வீடாககொண்டு சென்று விற்று வருவது, மதியத்தில் பசுக்களுக்கு புல் அறுத்துவருவது மீண்டும் மாலை பால் கறப்பது,விற்பது இப்படி மூச்சு விடநேரமில்லாமல் வேலையில் ஆழ்ந்து விட்டான்.
இரவு படுக்கச் செல்லுமுன் ஒருமுறை நாராயண நாராயண என்று
சொல்லிக் தூங்கிப் போய் விட்டான்.
இவன் எப்படி பெரும் பக்தனாக முடியும் ?ஏதும் புரியாமல் பெருமாளிடம் மீண்டும் வந்தார் நாரதர்.
 சிரித்துக் கொண்டே அவரிடம் ஒரு எண்ணெய் வழியும் கிண்ணம் கொடுத்து”ஒரு சொட்டு எண்ணெய் கூட சிந்தாமல் உலகத்தை ஒரு முறைசுற்றி வாரும்” என்றார். அதையும் வெற்றிகரமாக செய்து முடித்தார் நாரதர்.
’என்ன புரிந்ததா’ என்று வினவினார் பெருமாள்.இல்லை என்று
தலையசைத்தார் நாரதர். “சரி சுற்றி வரும் பொழுது எவ்வளவு
முறை செபித்தீர்கள்?” என்று கணக்கு கேட்டார்.
’நீங்கள் சொட்டு எண்ணெய் கூட சிந்தக்கூடாது என்றதனால்
என் கவனமெல்லாம் அதிலேயே இருந்தது. உங்கள் நாம செபம்
செய்யும் மனநிலை இருக்கவில்லை’ என்று உண்மையை
ஒத்துக்கொண்டார் நாரத ரிஷி.
“அப்பா! இந்த சிறிய வேலையினாலேயே உன் கவனம் என்னைவிட்டு
அகன்று விட்டதே, அந்த பால்காரனுக்கோ ஆயிரம் கஷ்டம்,
குடும்ப பாரம், உடற்நலப் பிரச்சனைகள். அதனிடையேயும் அவன்மறக்காமல் இருமுறை என்னை நினைத்துக் கொள்கிறானே.
அவனும் என்னுடைய சிறந்த பக்தன் தானே” என்றாராம் நாராயணன்.
ஸ்ரீ இராமகிருஷ்ணர் சொல்லிய கதை இது.
கர்வபங்கம் என்பது இறைவன் பக்தரை தடுத்தாட்கொள்ளும் விதமாக
செய்யும் ஒரு லீலை.அதனால் உண்மையான பக்தன் சிறுமைப்படுவதில்லை.
பதிலாக அவன் தடை நீங்கப் பெற்று இன்னும் வேகமாக முன்னேறுகிறான்.தர்மம் தலைகாக்கும்

தர்மம் தலைகாக்கும்

பஞ்ச பாண்டவர்கள் காட்டில் வசிக்கும்போது ஒரு பொய்கையில்
தாகத்தால் தண்ணீர் அருந்த எல்லோரும் மரண மடைந்தனர்.
யுதிஷ்ட்ரரும் தண்ணீர் அருந்தச் செல்லும்போது யக்ஷதேவதை
நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல். பிறகு சாப்பிடலாம்
என்று சொல்லிற்று.பிறகு அதுவும் கேட்க இவரும் பதில் சொன்னார். இதற்கு யக்ஷப்ரச்னம்
எனப் பெயர்.சந்தோஷமடைந்த யக்ஷன் வரம் கொடுக்கிறேன் கேள் என்று சொல்லிற்று.இவரும், நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதற்கு யக்ஷன் சொன்னதாவது. ”போர் நடக்கும் ஸமயம்.
இப்போது பீமனையோ அர்ஜுனனையோ பிழைக்க விரும்ப வேண்டும்.
அதை விட்டுவிட்டு நகுலன் பிழைக்க வேண்டும் என்று கேட்கிறாயே”.
இது ஆச்சர்யம் என்றது.
அதற்கு விடை யுதிஷ்ட்ரர் சொன்னதாவது. தர்மம்தான் எனக்கு வேண்டும்.என் தகப்பனாரான பாண்டுவிற்கு இரண்டு மனைவிகள். குந்தி என்றும் மாத்ரீஎன்றும். அதில் குந்திக்குப் பிள்ளையாய் நான் ஜீவித்திருக்கிறேன்.
மாத்ரியின் பிள்ளை இருவரும் ஜீவிக்க வில்லை. ஆக அவளுக்கு
மூத்த பிள்ளையான நகுலன் பிழைக்கவேண்டும் என்றுப் ப்ரார்த்தித்தேன்என்றார்.
அதைக் கேட்ட யக்ஷன் உன்னுடைய தர்மபுத்தியைப் பார்த்து
சந்தோஷமடைந்தேன். நீ தர்மம் நழுவாதவன்.
ஆகையால் எல்லோரையும் பிழைக்கச் செய்கிறேன் என்று
எல்லோருக்கும் ஜீவனம் கொடுத்தான்.
இங்குதான் நாம் கவனிக்க வேண்டும். தர்ம புத்திரருடைய செயலை.
தர்மம் தலைகாக்கும் என்பது சரியாகிவிட்டதல்லவா?கும்பகர்ணன் பெற்ற வரம்!

கும்பகர்ணன் பெற்ற வரம்!

இராவணனின் தம்பி கும்பகர்ணன் ஆறுமாதம் தூங்கியும்
ஆறுமாதம் விழித்தும் வாழ்ந்தான். ஏன் அவ்வாறு ?
அது ஒரு சாபம் அல்ல, அவனே கேட்டு பெற்ற வரம்.
நான்முகனை நோக்கி தவம் இருக்கிறான் கும்பகர்ணன்.
இதைக் கண்ட தேவேந்திரன் , ராவணனை விட பல மடங்கு
உருவத்தில் பெரியவனான கும்ப கர்ணன் எதாவது வரம்
பெற்றால் தனக்கு அபாயம் என்று கருதி, சரஸ்வதியிடம்
கும்பகர்ணனின் வரத்தை எப்படியாவது தடுக்க பிரார்த்தனை செய்கிறான்.
“பக்தா , உம் பக்தியை மெச்சினோம் – என்ன வரம் வேண்டும் கேள்!” என்றார் நான்முகன்.
அப்போது சரஸ்வதி கும்ப கர்ணனின் நாவில் விளையாடுகிறாள். ‘நித்தியத்துவம்’ என்பதற்குப்
பதிலாக “நித்திரைத்துவம்” என்று கேட்டு விட்டான்.
நித்தியத்துவம் என்றால் அழியாத வாழ்வு என்பது பொருள்.
நித்திரைத்துவம் என்றால் நன்கு தூங்க வேண்டும் என்பது பொருள்.
பிரம்மனும் “அப்படியே ஆகட்டும்!” என்று வரமளித்துச் சென்று விட்டார்.
அட்சரம் பிசகியதால் அழியாத வாழ்வுக்குப் பதில்
அசைக்க முடியா உறக்கம் பெற்றான் கும்பகர்ணன்
அதன் பின்னர், வாழ்நாள் முழுவதும் தூங்கினால்
எவ்வாறு என்று மன்றாடி ஆறு மாதம் உறக்கம்,
ஆறு மாதம் விழிப்பு, எனினும் இடையில் எழுந்தால்
மரணம் என்று அந்த வரம் மாற்றப்பட்டது.

மகிஷாசுரனின் கதை

மகிஷாசுரனின் கதை

மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமைப்படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள்பாலிக்க, அசுரன் முன் தோன்றினார்.. சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும், படைக்கும் தொழிலில் அது சாதிதயமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும்தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்” என்று பிரம்மா கூற, அறிவிலி அசுரன், கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான்.
தேவர்களை வென்றுவிட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகிவிடுவார்கள் என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான். பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன், சக்தியின் மகிமையை அறியவில்லை.
வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவுலகிலும் இடியென முழங்கியது. அராஜகம் தலை தூக்கியது. தர்மம் அழிந்தது. மக்கள் அவல நிலைக்கு ஆண்டு துன்புற்றனர். ஈசனை வேண்டினர். தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வசக்தியாம் துர்க்கையைத் தோற்றுவித்தார் பரமேஸ்வரன்.சிம்ம வாகனத்தில் ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்ட தேவர்கள், தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லோருடைய பயங்களையும் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி ஆரம்ப நாளில்தான். ச்தியாக தோன்றிய அம்பாள், அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது விஜயதசமி அன்றுதான்.
இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள், ஆராதனைகள் அனைத்தும் போய் சேருவது அன்னை பராசக்தியின் திருப்பாதங்களுக்கே!எண் குணங்களாவன:

எண்குணத்தான் !

எண்குணங்களாவன:
தன்வயத்தனாதல்,
தூய உடம்பினனாதல்,
இயற்கை உணர்வினன் ஆதல்,
முற்றும் உணர்தல்,
இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்,
பேராற்றல் உடைமை,
பேரின்பம் உடைமை,பேரருள் உடைமை என்பன.
எண் குணத்தானை வணங்காத் தலை பயனற்றது என்கிறார்
வள்ளுவர். சிலருக்குக் கண் இருந்தும் குருடாய், காதிருந்தும்
செவிடாய்ப் பயன்படாதவாறுபோல தலையிருந்தும்
எண்குணத்திறைவனை வணங்கவில்லையானால் அத்தலை
பயனற்றது என்கிறார்.கீதையின் சாரம்

கீதையின் சாரம்

சுவாமி சிவானந்தரிடம் சிலர் சென்றார்கள்.
‘சுவாமி எங்களுக்கு வேதம், சாஸ்திரம்,
பகவத்கீதை, புராணம், எதையும் படிக்க
முடியவில்லை. மிகவும் சுலபமாக அத்தனை
விஷயங்கைளயும் தெரிந்து கொள்ள விரும்புகிறோம்
‘கீதையின் சாரம்’ என்ன என்று எங்களுக்குச்
சொல்லுங்கள் என்று கேட்டார்கள்.
கீதையின் சாரத்தைக் கூறுவது மிகவும் சுலபம்.
மூன்றே சொற்களில் கீதையை அடக்கி விடலாம்
என்றார் சிவானந்தர்.
LOVE, SERVE, GIVE -
இதுதான் கீதையின் சாரம்.
‘அன்புசெய்
சேவை செய்
பிறருக்கு வழங்கு’-
இதுதான் கீதையின் சாரம் என்றார் சிவாமி சிவானந்தர்.இறைவனிடம் நீண்ட பட்டியல் வேண்டாம்!

இறைவனிடம் நீண்ட பட்டியல் வேண்டாம்!

இறைவனிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று
கேட்காதீர்கள். ஒரு நீண்ட பட்டியலை வைத்துக்
கொண்டு அவனை அணுகாதீர்கள்.
காரைக்கால் அம்மையார் தவம் புரிந்து தலையால்
நடந்து – என்புருவாகி இறைவனைக் கண்டார்.
பரமசிவன் தன் வாயால் அம்மா என்று யாரையாவது
அழைத்தான் என்றால் அது காரைகைகால்
அம்மையார் ஒருவரைத்தான்.
அத்தகைய காரைக்கால் அம்மையயாரை இறைவன்
கேட்டான்! ‘அம்மா உனக்கு என்ன தேவை ‘என்று.
‘’இறவாத அன்பு வேண்டும்,
பிறவாமை வேண்டும்
மீண்டும் பிறப்பு உண்டேல்
உன்னையென்றும் மறவாமை வேண்டும்’’
என்றுதான் கேட்டார் காரைக்கால் அம்மையர்.
நாவுக்கரசர் கேட்டார்!. புழுவாய்ப்பிறக்கினும்
புண்ணியா உன்னடி என் மனத்தே வழுவாதிருக்
வரம் தர வேண்டும்’ என்றார்.
‘இறைவா! உன்னை மறவாதிருக்க வரம் கொடு’
என்று இறைவனை நோக்கிக் கதறுங்கள்!
கண்ணீர் விடுங்கள்!
அவனிடம் அடைக்கலம் கொள்ளுங்கள்!
மற்றவற்றை அவனை பார்த்துக் கொள்வான்

தாலி மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்

தாலி மகிமை – ஒன்பது இழைத் தத்துவம்

“தாலி மகிமை”
இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம்
என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள்
நிறத்தில் தரப்பட்டது என்று விளக்குகிறார்
பாலகிருஷ்ணசாஸ்திரிகள்.
தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி
இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை.
சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில்
புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த
பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி
அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர்.
நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாக
மாறியிருக்கிறது.பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.
ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக்
குறிக்கிறது.

தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு,


தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதை


உள்ளபடி புரிந்து கொள்ளுதல். இத்தனைக் குணங்களும்

ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்

ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு

அணியப்படுகிறது

ஒருவர் 9 விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டும்

ரகசியமாக வைத்திருக்க வேண்டும்

இந்து தர்மசாஸ்திரப் படி ஒருவர் 9 விஷயங்களை
ரகசியமாக வைத்திருக்க வேண்டும்:
அவை
1.தனது வயது
2.பணம் கொடுக்கல்-வாங்கல்
3.வீட்டுச் சண்டை மற்றும் சச்சரவு
4.மருந்துகளில் சேர்க்கப்படும் பொருட்கள்(மூலிகைகள்)
5.கணவன் மனைவியின் காம அனுபவங்கள்
6.செய்த தான தருமங்கள்
7.கிடைக்கும் புகழ்
8.சந்தித்த அவமானங்கள்
9.பயன்படுத்திய மந்திரம்பலி பீடம்

பலி பீடம்

கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி
கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும் காமம், ஆசை, குரோதம்,
லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் எனும்
எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி
செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் ந‎லன் ஒன்றும்
வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான
இயல்புகளெல்லாம் அந்த ‏ இடத்திலே பலி கொடுக்க
வேண்டும். ம‎னிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு
பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது.
மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
ஆண்கள் இங்கு தலை, கையிரண்டு, இருசெவிகள்,
இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில்
படும்படி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பெண்கள் தலை, இரண்டு முழங்கால், மார்பு, என
நமஸ்காரம் செய்ய வேண்டும். அவ்வாறு கீழே வீழ்ந்து
வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து
வணங்க வேண்டும்.நட்சத்திரமும் அதற்குரிய தெய்வம்

நட்சத்திரமும் அதற்குரிய தெய்வம்


ஒவ்வொரு நட்சத்திரகாரர்களிற்கும் அதிர்ஷ்டம்

தரக்கூடிய தெய்வங்கள் பட்டியல்.

முக்கியமாக துன்பங்களைப் போக்கும் அல்லது

துன்பங்களைத் தாக்குப்பிடிக்கும் தன்மையைத்

தரக்கூடியவை யாகும். அதை மனதில் கொள்க!

விருப்பம் உள்ளவர்கள் வணங்கிப் பயனடையலாம்.
01. அஸ்வினி – ஸ்ரீ சரஸ்வதி தேவி

02. பரணி – ஸ்ரீ துர்கா தேவி

03. கார்த்திகை – ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்)

04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணர். (விஷ்ணு பெருமான்)

05. மிருகசீரிடம் – ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்)

06. திருவாதிரை – ஸ்ரீ சிவபெருமான்

07. புனர்பூசம் – ஸ்ரீ ராமர் (விஷ்ணு பெருமான்)

08. பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)

09. ஆயில்யம் – ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

10. மகம் – ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

11. பூரம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி

12. உத்திரம் – ஸ்ரீ மகாலெட்சுமி

13. ஹஸ்தம் – ஸ்ரீ காயத்திரி தேவி

14. சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

15. சுவாதி – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

16. விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.

17. அனுசம் - ஸ்ரீ லெட்சுமி நாராயணர்.

18. கேட்டை – ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

19. மூலம் – ஸ்ரீ ஆஞ்சனேயர்

20. பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

21. உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்.

22. திருவோணம் – ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு பெருமான்)

23. அவிட்டம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் ( விஷ்ணு பெருமான்)

24. சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

25. பூரட்டாதி – ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

26. உத்திரட்டாதி – ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

27. ரேவதி – ஸ்ரீ அரங்கநாதன்.ஸ்ரீராம நாம ஜெப மகிமை

ஸ்ரீராம நாம ஜெப மகிமை

 வயதான ஒரு ஏழை பிரம்மச்சாரி இருந்தான். அவனுக்கோ கண்கள் குருடு. ஆனால் ராம பக்தன். அவனுடைய பக்தியினைக் கண்டு இரங்கி ராமபிரான் காட்சியளித்தான். ‘ஒரே கேள்வியைக் கேட்டு வரம் பெற்றுக் கொள். கண்டிப்பாக மறு கேள்வி கேட்கக் கூடாதுதென்றான்.’ ராமபிரான்.
கிழவனும் சரியென்று ஒப்புக்கொண்டு ஒரே ஒரு கேள்வி கேட்டான்‘ஏழு அடுக்கு மாளிகையில் தங்கக் கரண்டியால் என் பேரன் பாலை குடிப்பதை எனது கண்களால் பார்க்க வேண்டும்..’ என்று ஒரே ஒரு வரம் கேட்டான். வரம் கொடுத்து ராமபிரான் சென்று விட்டான்.
வீடு இல்லாதவனுக்கு வந்து விட்டது மாளிகை. பேரன் பிறக்க வேண்டுமானால், அவன் கல்யாணம் முடிக்க வேண்டும் அல்லவா? கிழவனுக்கு யார் பெண் கொடுப்பார்கள்?
வர பலத்தால் இளமையும் வந்துவிட்டது. பால் குடிக்கும் கரண்டியே தங்கமானால் எவ்வளவு செல்வம் வரவேண்டும்? அவ்வளவு செல்வமும் வந்துவிட்டது. பேரனைப் பார்ப்பதற்குக் கண்கள் வேண்டுமல்லாவா?
கண்களும் வந்து விட்டன.
கிழவனுக்கு ராமநாம ஜெபத்தின் மகிமையால் தெளிவான ஒரே கேள்வி கேட்டதின் பயனால், மாளிகை , இளமை, செல்வம், கண்கள், இல்லற வாழ்வு இத்தனையும் பெற்றான்.
பக்தி நெறியிலீடுபட்டால் தெளிவான கேள்விகள் உதயமாகி, அறிவு தெளிவடையும்

கிரகங்கள் செய்யும் அனுக்கிரங்கள்

கிரங்கங்கள் செய்யும் அனுக்கிரங்கள்


நவம்பர் 8, 2010 இல் 6:30 மு.பகல் (ஆன்மீகம்)


கிரகங்கள் செய்யும் அனுக்கிரங்கள்
சூரியன்- உடல்நலம், அறிவு, ஆன்மவிருத்தி
சந்திரன்- புகழ், பெருமை, அழகு, மனநலம்
செவ்வாய்- செல்வம், வீரம் இரத்தவிருத்தி
புதன்- கல்வி, அறிவு
குரு- (வியாழன்)- நன்திப்பு, செல்வம்
சுக்ரன்(வெள்ளி)- அழகு, நாவன்மை, இன்பம்
சனி- மங்களங்கள், மகிழ்ச்சி, செயலாற்றல்
ராகு- எதிரிபயம் நீங்கல், காரிய சித்தி
கேது- குல அபிவிருத்தி, ஞானம், முக்திபேறுபொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்?

பொங்கல் – மஞ்சள் குலை வாங்குவது ஏன்?

மங்கலப்பொருள்களில் மகாலட்சுமியின் அம்சமாகத்
திகழும் மஞ்சள் மகிமை மிக்கது.
மஞ்சள் இருக்கும் இடத்தில் திருமகள் வாசம் செய்கிறாள்.
அதனால் தான் சுமங்கலிப்பெண்கள் மஞ்சளை உடலில்
பூசிக்கொள்கிறார்கள்.
புத்தாடை அணியும்போது, அதில் மஞ்சள் தடவி அணிகிறோம்.
எந்த சுபநிகழ்ச்சி என்றாலும் அழைப்பிதழில் மஞ்சள் தடவிக்
கொடுக்கிறோம்.
திருமண வைபவங்களில் மஞ்சள் இடித்தல் என்று கூட
ஒரு சடங்கு இருந்தது. முனைமுறியாத அரிசியான அட்சதை
தயாரிக்கும் போது மஞ்சள் சேர்த்துத் தான் தயாரிப்பர்.
எந்த பூஜை என்றாலும் மஞ்சளால் செய்த பிள்ளையாரை
வணங்குவதும் நம் வழக்கம்.
சுமங்கலிகள் வீடுகளுக்கு வந்து செல்லும்போது அவர்களுக்கு
மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவதும் மங்கலத்தின்

அடையாளம் தான்.
இப்படி மகிமை மிக்க மஞ்சள்கிழங்குச் செடியினை பொங்கல்
நன்னாளில் புதுப்பானையில் கட்டி அடுப்பில் ஏற்றுவர்.
அந்த மஞ்சளைப் பத்திரப்படுத்தி மறுநாள் காலையில்” மஞ்சள்
கீறுதல் ‘ என்னும் சடங்காகச்செய்வர். வீட்டில் இருக்கும்
பெரியவர்கள் அந்த மஞ்சள் கிழங்கினைக் கீறி சிறியவர்களின்
நெற்றியில் இட்டு ஆசியளிப்பர். வீட்டில் உள்ள அனைவரும்
சீரும் சிறப்பும் பெற்று வாழவேண்டும் என்பதே இச்சடங்கின்
நோக்கம்.ராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)

ராகு காலம் என்பது போல் கேது காலம் என்று ஏன் இல்லை?

ராகு காலம் என்று சொல்கிறோம். ஆனால் கேது காலத்தைத்தான் எமகண்டம் என்று சொல்கிறோம். கேது கால‌ம் எ‌ன்பது இ‌ல்லை எ‌ன்று சொ‌ல்ல‌க் கூடாது. அதனை‌த்தா‌ன் எமக‌ண்ட‌ம் எ‌ன்று சொ‌ல்‌கிறோ‌ம்.
நவகிரகங்கள் ஒன்பதும் நவநாயகர்கள் எனப்படுவர். மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிகள் பன்னிரண்டு. இதில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் சொந்த வீடு (ஆட்சி) உண்டு. ராகு- கேதுக்களுக்கு ஆட்சி வீடு இல்லை. அதனால்தான் வாரத்தில் ஏழு நாட்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ராகு- கேதுவுக்குக் கிழமை கள் இல்லை. அப்படியென்றால் ராகு- கேது பலமில்லாத கிரகங்களா? அல்ல!

நவகிரகங்களில் புதனும் அதைவிடச் செவ்வாயும் அதைவிடச் சனியும் அதைவிட குருவும் அதைவிட சுக்கிரனும் அதைவிட சூரியனும் வரிசைப்படி ஒருவரைவிட மற்றவர் பலம் பெற்ற கிரகங்கள். அந்த சூரியனைவிட ராகுவும் ராகுவைவிட கேதுவும் அதிக பலம் பெற்றவர்கள் என்று ஜோதிட சாஸ்திரத்தில் பலத்தை நிர்ணயம் செய் திருக்கிறார்கள். ராகு- கேதுவுக்கு தனி நாள், கிழமை ஒதுக்கவில்லை என்றாலும், ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம். ராகுவும் கேதுவும் தனியான கிரகங்கள் இல்லையென்றும் கிரகங்களின் நிழல் என்றும் விண்வெளி விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசை யில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்; அதே நேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள்.
சூரிய- சந்திரர்கள் வலம் வரும்போது இந்த நிழல் எதிர்முகமாக இடப்புறமாக (Anti Clock wise) நகரும். அதனால்தான் மேஷ ராசியில் ராகு இருந்தால் அதற்கு நேர் எதிரில் சமசப்தம ராசியான துலா ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது இருக்கும்.
மற்ற கிரகங்கள் மேஷம், ரிஷபம், மிதுனம் என்று வலமாகச் சுற்றும்போது ராகுவும் கேதுவும் மேஷம், மீனம், கும்பம் என்று இடமாகச் சுற்றும். சூரியனும் சந்திரனும் பன்னிரு ராசிகளை வலமாகச் சுற்றி வரும்போது ராகு- கேது இடமாகச் சுற்றி வரும். அப்போது சூரியனும் சந்திரனும் ஒரே ராசியில் ஒரே டிகிரியில் சந்திக்கும்போது அமாவாசை! அதே நேரத்தில் அவர்களுடன் ராகு சேரும்போது, அதற்கு ஏழாவது ராசியில் 180-ஆவது டிகிரியில் கேது வரும்போது சூரிய கிரகணம் ஏற்படும். அதேபோல் பௌர்ணமியன்று சூரியனும் சந்திரனும் நேருக்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் வரும்போது, சூரியனுடன் ராகுவும் சந்திரனுடன் கேதுவும் அதே டிகிரியில் சேரும்போது சந்திர கிரகணம் ஏற்படும்.
சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் (டிகிரியில்) சந்திப்பு ஏற்படுவதை கிரகணம் என்கிறோம். அப்படிப் பட்ட நேரத்தில் ஏற்படும் இயற்கையின் அற்புதங்களை அளவிட முடியாது. சமுத்திர நீரில் குளிப்பது, தியானத்தில் ஈடுபடுவது, ஜபம் செய்வது -இப்படி ஆன்மிக வழியில் ஈடுபட்டால் ஒவ்வொருவருக்கும் "வில் பவர்' -ஆன்ம பலம் கிடைக்கும். அதனால்தான் ராகு- கேதுவை ஞான காரகன், மோட்ச காரகன் என்றெல்லாம் ஜோதிட சாஸ்திரம் வர்ணிக்கும். ராகுவைப்போல் கொடுப்பாரில்லை; கேதுவைப்போல் கெடுப்பாரில்லை என்பார்கள். ராகு கொடுத்துக் கெடுக்கும். கேது கெடுத்துக் கொடுக்கும்.

ஒரு ராசியில் சனி இரண்டரை வருடங்களும் குரு ஒரு வருடமும் தங்கிப் பலன் கொடுப்பது போல, ராகு- கேது ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடங்கள் தங்கி நற்பலனோ துர்ப்பலனோ செய்வார்கள். ராகு- கேது குரூர கிரகங்கள். அசுபர்- பாபக் கிரகம் எனப்படும். இவர்கள் எந்த ராசியில் வந்தாலும் அந்த ஸ்தான பலனைக் கெடுப்பார் கள். ஜாதக ரீதியாக ஒருவருக்கு பாக்கிய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ வந்தால், தகப்பனார், பூர்வ புண்ணிய பாக்கியம் ஆகிய அனுகூலப் பலன்களைக் கெடுப்பார் என்று அர்த்தம். அதேசமயம் 6-ல் ராகுவோ கேதுவோ வந்தால், 6-ஆம் இடம் என்பது ரோகம், ருணம், சத்ரு ஸ்தானம் என்பதால் அவற்றைக் கெடுக்கும். அதாவது எதிரி, விவகாரம், வைத்தியச் செலவு, கடன் ஆகியவற்றைக் கெடுப்பார். அதனால் ஜாதகருக்கு நன்மைகள் ஏற்படும். எனவே ராகு- கேதுவுக்கு 3, 6, 8, 11, 12-ஆம் இடங்கள் நற்பலன்களைத் தரக்கூடிய இடங்கள் என்றும்; மற்ற இடங்கள் அனுகூலம் இல்லை என்றும் கூறலாம். ராகுவும் கேதுவும் தாம் நின்ற ராசியில் இருந்து 3-ஆம் இடத்தையும் 7-ஆம் இடத்தையும் 11-ஆம் இடத்தையும் பார்க்கக்கூடும். பொதுவாக எல்லா கிரகங்களும் 7-ஆம் ராசியை (180- ஆவது டிகிரி) பார்க்கும். குருவுக்கு 5, 9-ஆம் பார்வையும் சனிக்கு 3, 10-ஆம் பார்வையும் செவ்வாய்க்கு 4, 8-ஆம் பார்வையும் விசேஷப் பார்வை என்பது போல, ராகுவுக்கும் கேதுவுக்கும் 3, 11-ஆம் பார்வை விசேஷப் பார்வை.
ராகு- கேதுவுக்குரிய பொது ஸ்தலம் காளஹஸ்தியும் சூரியனார் கோவிலும் ஆகும். ராகுவுக்கு மட்டும் நாகர்கோவில், திருநாகேஸ்வரம், பரமக்குடி அருகில் நயினார்கோவில், புதுக்கோட்டை அருகில் பேரையூர், சீர்காழி, பாமினி என்று பல ஸ்தலங்கள் உண்டு. கேதுவுக்கு பூம்புகார் அருகில் பெரும்பள்ளம், பிள்ளையார்பட்டி, திருவலஞ்சுழி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவில், திருவானைக்காவல், பழூர் போன்ற ஸ்தலங்கள் உண்டு. ராகுவுக்கு அதிதேவதையான பத்ரகாளி யையும் துர்க்கையையும், கேதுவுக்கு அதிதேவதையான விநாயகரையும் ராகு காலம், எமகண்ட நேரத்தில் வழிபடலாம்.
புராணத்தில் ராகு- கேது
தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் நீண்டகால நிரந்தரப் பகை இருந்தது. அடிக்கடி அவர்களுக்குள் போர் நடந்தது. இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். அசுரர்களில் இறந்தவர்களை அவர்களின் ராஜகுருவான சுக்ராச்சாரியார் தன்னுடைய மிருத சஞ்சீவினி மந்திரத்தால் உடனே உயிர் பெற்றெழச் செய்தார். ஆனால் தேவர்கள் வகையில் அவர்களின் குரு பிரகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாத காரணத்தால் தேவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. அவர்கள் சாகாதிருக்க வழிவகைகளை ஆராய்ந்த போது, மரணத்தை வெல்லும் சக்தி படைத்த அமிர்தத்தை சாப்பிட்டால் சாகாமல் இருக்கலாம் என்பதைக் கண்டறிந்தார்கள்.
திருப்பாற்கடலில் அற்புத மூலிகைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாக நிறுத்தி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி தயிரைக் கடைவது போல் கடைந்தால் அமிர்தம் வரும் என்று தெரிந்துகொண்டார்கள். இது மிகப் பெரிய முயற்சி. மகா விஷ்ணுவைத் தஞ்சம் அடைந்து உபாயம் கேட்டார்கள். மகாவிஷ்ணு ஆமை அவதாரமெடுத்து தன் முதுகில் மந்தர மலையைத் தாங்கிக் கொள்ள, தேவர்களும் அசுரர்களும் சேர்ந்து பாற்கடலைக் கடைந்தார் கள். அதில் கிடைக்கும் அமிர்தத்தை அசுரர்களுக்கும் பங்கு கொடுப்ப தாக இருந்தால் அமிர்தம் கிடைக்க பாற்கடலைக் கடைய உதவி செய்வதாக இரு தரப்பும் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதிலும் தேவர்கள் சூழ்ச்சி செய்து வாசுகியின் தலைப் பக்கம் அசுரர்களை நிறுத்தி, வால் பக்கம் தேவர்கள் நின்று கடைந்தார்கள். அப்படிக் கடையும்போது வாசுகி என்னும் பாம்பின் ஆலகால விஷம் வெளிப்பட்டது. அதை சர்வேஸ்வரன் அசுரர்களையும் தேவர்களையும் காப்பாற்றும் பொருட்டு தானே சாப்பிட்டுவிட்டார். அந்த விஷம் சிவபெருமானுக்குக் கேடு விளைவிக்கக்கூடாது என்பதற்காக, கழுத்துப் பகுதியில் இருந்து கீழே வயிற்றுக்குள் இறங்கவிடாமல் பார்வதி தேவி சிவனின் கழுத்தைப் பிடித்துக் கொண்டதால் சிவன் கழுத்தில் விஷம் தங்கிவிட்டது. அதனால் அவர் கழுத்தும் நீல நிறமாகி விட்டது. அதனால் சிவனுக்கு நீலகண்டன் என்னும் ஒரு பெயர் உண்டு. நம் அனைவருக்கும் கழுத்தில் சங்கு இருப்பதன் காரணம் அதுதான் என்று ஒரு ஐதீகம் உண்டு.
பாற்கடலில் இருந்து ஆலகால விஷத்தை அடுத்து தேவலோகப் பசுவான காமதேனுவும், வெள்ளைக் குதிரையும், வெள்ளை யானை எனப்படும் ஐராவதமும், கேட்டதைக் கொடுக்கும் பாரிஜாத மரமும், அப்சர ஸ்திரிகளும் தேவதைகளும், திருமகள் மகாலட்சுமியும் தோன்றினார்கள். கடைசியாக அமிர்த கலசத்துடன் தன்வந்திரி தோன்றினார். அவர் தேவலோக வைத்தியரானார்.
அமிர்தம் கிடைத்தவுடன் தங்களுக்கும் அதில் பங்கு வேண்டு மென்று அசுரர்கள் தகராறு செய்தார்கள். மகாவிஷ்ணு தேவர்களை மட்டும் காப்பாற்றுவதற்காக மோகினி அவதாரமெடுத்து அசுரர்களை மயக்கி, முன் வரிசையில் தேவர்களையும் பின் வரிசையில் அசுரர்களை யும் அமர வைத்து எல்லாருக்கும் தன் கையால் பங்கு தருவதாகச் சமாதானப்படுத்தினார். தேவர்களுக்கு மட்டுமே அமிர்தத்தைப் பகிர்ந்தளித்துவிட்டு அசுரர்களை மோகினி ஏமாற்றிவிடுவாள் என்று நினைத்த சொர்ணபானு என்ற ஒரு அசுரன், தேவர் மாதிரி உருமாறித் தேவர்கள் வரிசையில் அமர்ந்து அவனும் அமிர்தத்தை வாங்கி சாப்பிட்டுவிட்டான். இதை அறிந்த சூரியனும் சந்திரனும் இவன் நம் தேவர் இனத்தவன் அல்ல; அசுரன் என்று காட்டிக் கொடுத்தவுடன், மோகினி உருவில் இருந்த மகாவிஷ்ணு தன் கையிலிருந்த சட்டுவத்தால் சொர்ணபானுவின் சிரசை அறுத்துவிட்டார். அமிர்தம் அருந்திய காரணத்தால் சொர்ணபானு சாகவில்லை. தலை ஒரு பாகமாகவும் உடல் ஒரு பாகமாகவும் ஆகிவிட்டது.
யார் இந்த சொர்ணபானு? சப்த ரிஷிகளில் ஒருவரான கஸ்யபருடைய பேரன். விப்ரசித்து என்ற அசுரனுக்கும் பக்தப் பிரகலாதனின் தந்தையான இரணியனின் உடன் பிறந்த சகோதரி சிம்கிகைக்கும் பிறந்த மகன்தான் இந்த சொர்ணபானு.
துண்டிக்கப்பட்ட சொர்ணபானுவின் தலை பர்ப்பரா என்னும் தேசத்தில் வந்து விழுந்தது. அந்த சமயம் அந்த நாட்டின் மன்னரான பைடீனஸன் என்பவன் தன் மனைவியுடன் சென்று கொண்டிருந்தான். இந்தத் தலையைக் கண்ட அவன் அதை எடுத்துக்கொண்டு தன் அரண்மனைக்குச் சென்று வளர்த்தான். அமிர்தம் உண்டதால் உயிர் போகாத நிலையில் தலை இருந்தது. தனக்கு அழியாத நிலையை அளித்த திருமாலை நோக்கிக் கடுமையாகத் தவம் இருக்க, அதன் விளைவாக தலையின் கீழ் பாம்பு உருவம் வளர்ந்து ராகு பகவான் ஆனார். இதன் காரணமாகவே இவரை பைடீனஸ குலத்தவர் என்று போற்றுகிறோம். இது போலவே சொர்ணபானுவின் உடல் பூமியில் மலையம் என்ற பகுதியில் விழுந்தது. அப்படி விழுந்த அந்த உடல் ஜைமினி அந்தண முனிவர் வாழ்ந்த இடத்தில் விழுந்தது. அந்த உடலை ஜைமினி முனிவர் எடுத்து ஆன்மிக உண்மைகளை ஊட்டி வளர்த்து ஞான காரகனாக ஆக்கினார். மேலும் திருமாலை நோக்கி ராகுவைப் போலவே கேதுவும் தவம் இருந்து தலையற்ற உடலின்மீது தலையாக பாம்பின் ஐந்து தலை உருவாகி கேது பகவான் என்று பெயர் பெற்றார். மேலும் இவர் ஜைமினி கோத்திரத்தைச் சேர்ந்தவர் ஆனார்.
இவர்கள் இருவரும் (ராகு-கேது) தங்களைக் காட்டிக் கொடுத்த சூரியன், சந்திரன் இருவரையும் ஆண்டிற்கு இருமுறை கிரகணத்தை ஏற்படுத்தி அவர்களது சக்திகளைப் பாதிக்கின்றனர். இந்த இரு நிழல் கிரகங்களின் பிரத்யேகமான பலன்களை பாவகரீதியாகக் கூறுவதற்கில்லை. வான மண்டலத்தில் இவற்றுக்கான பிரத்யேகமான ராசிகளும் ஆட்சி வீடுகளும் அமைக்கப்படவில்லை.
இவை எந்தெந்த ராசிகளில் தோன்றுகின்றனவோ அல்லது எந்தெந்த கிரகங்களுடன் சேர்ந்து விளங்குகின்றனவோ அந்தந்த ராசிநாதன் அல்லது கிரகங்களுக்குரிய பலன்களையே பெரும்பாலும் கூற வேண்டும். உதாரணமாக, ராகு மீனத்தில் நின்றிருப்பின் குருவின் பலனையே வழங்கும். கும்ப ராசியிலாவது அல்லது சனி கிரகத்துட னாவது சேர்ந்திருக்கும்போது சனி கிரகம் வழங்கக்கூடிய பலன் களையே வழங்குமென்று கூற வேண்டும். சனியைப் போல் ராகு பலன் தரும் என்றும்; செவ்வாயைப் போல் கேது பலன் தரும் என்றும் சில நூல்கள் கூறுகின்றன. அனுபவத்தில் இதுவும் ஓரளவுக்கு உண்மை யென்றே தோன்றுகிறது. சனி வழங்கக்கூடிய பலன்களை ராகுவும் செவ்வாய் வழங்க வேண்டிய பலன்களைக் கேதுவும் ஜாதகருக்கு அளிக்கின்றன. இது அனுபவ உண்மை.
ராகு- மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் ஆகிய ஐந்து ராசிகளில் வலுப்பெறுகிறது என்று சில நூல்கள் கூறுகின்றன. கேதுவுக்கென பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. இந்த இரு கோள் களுக்கும் இடையே ஆறு ராசிகள் அல்லது 180 பாகை வித்தியாசம் இருப்பதால், ராகுவுக்குக் கூறப்பட்ட ராசிகளுக்கு நேர் எதிர் ராசிகளாகிய துலாம், விருச்சிகம் ஆகியவற்றிலும் மற்றும் கூறப்படாத ராசிகளிலும் கேதுவுக்கு வலு அதிகம் என்று கொள்ளலாம். அவ்வாறே மத்திய ரேகைக்கு வட பாகத்தில் உள்ள ராசிகளாகிய மகரம் முதல் மிதுனம் வரை ராகு பலமுள்ளதாகவும்; தென் பாகத்தில் உள்ள கடகம் முதல் தனுசு வரையில் உள்ள ஆறு ராசிகளில் கேது பலமுடையதாகவும் இருக்கும் என்பதும் ஜோதிட ஆராய்ச்சி.


ஜோதிடத்தில் ராகு- கேது தன்மை
கிரகத்தன்மை ராகு கேது
1. நிறம் கருப்பு சிவப்பு
. குணம் குரூரம் குரூரம்
3. மலர் மந்தாரை செவ்வல்லி
4. ரத்தினம் கோமேதகம் வைடூரியம்
5. சமித்து அறுகு தர்ப்பை
6. தேசம் பர்ப்பரா தேசம் அந்தர்வேதி
7. தேவதை பத்ரகாளி, துர்க்கை இந்திரன்,
      சித்திரகுப்தன், விநாயகர்
8. ப்ரத்தியதி தேவதை ஸர்பம் நான்முகன்
9. திசை தென்மேற்கு வடமேற்கு
10. வடிவம் முச்சில் (முறம்) கொடி வடிவம்
11. வாகனம் ஆடு சிங்கம்
12. தானியம் உளுந்து கொள்ளு
13. உலோகம் கருங்கல் துருக்கல்
14. காலம் ராகுகாலம் எமகண்டம்
15. கிழமை சனிக்கிழமை செவ்வாய்க்கிழமை
16. பிணி பித்தம் பித்தம்
17. சுவை புளிப்பு புளிப்பு
18. நட்பு கிரகங்கள் சனி, சுக்கிரன் சனி, சுக்கிரன்
19. பகை கிரகங்கள் சூரியன், சந்திரன், சூரியன், சந்திரன்,
செவ்வாய் செவ்வாய்
20. சம கிரகங்கள் புதன், குரு புதன், குரு
21 காரகம் பிதாமகன் (பாட்டனார்) மாதாமகி(பாட்டி)
22. தேக உறுப்பு முழங்கால் உள்ளங்கால்
23. நட்சத்திரங்கள் திருவாதிரை, சுவாதி, அசுவதி, மகம், மூலம்
சதயம்
24. தசை வருடம் 18 ஆண்டுகள் 7 ஆண்டுகள்
25. மனைவி சிம்ஹிகை சித்ரலேகா
26. உப கிரகம் வியதீபாதன் தூமகேது
27. உருவம் அசுரத்தலை, ஐந்து பாம்புத் தலை,
பாம்பு உடல் அசுர உடல்நவராத்திரி கொலு‌வி‌ல் ஒன்பது படிகள் அமை‌ப்பத‌ன் நோ‌க்க‌ம்

நவராத்திரி கொலு‌வி‌ல் ஒன்பது படிகள் அமை‌ப்பத‌ன் நோ‌க்க‌ம்

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.

துர்க்கா பூஜையில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன் ?

துர்க்கா பூஜையில் எலுமிச்சை பழம் பயன்படுத்துவது ஏன் ?


ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும்.
பழத்தை நறுக்கும்போது ஐம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மூடியை திருப்பும்போது க்ரீம் என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும்.
எண்ணெய் ஊற்றும்போது க்லீம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது சாமுண்டாய விச்சே என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும்.
விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும்.
ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும்.
சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்.
எலுமிச்சையின் மகிமைராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள்.
சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும். மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு.
பலாவில் வியர்வை குற்றம் உண்டு. வாழையில் புள்ளி குற்றம் உண்டு.
ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.
மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.சிவலிங்கத்தில் மூன்று தெய்வங்கள்

சிவலிங்கத்தில்  மூன்று தெய்வங்கள்

சிவலிங்கத்தின் மேல்பாகத்தில் பாணம் இருக்கும். இதுவே சிவபாகமாகும். சிவன் நெருப்பு வடிவானவர். நெருப்பு எந்த நிலையிலும் மேல்நோக்கியே எரியும். நடுபாகமான ஆவுடையார் விஷ்ணு பாகம். விஷ்ணு தண்ணீருக்கு அதிபதி. பாணத்தில் அபிஷேகம் செய்யும் நீரை விஷ்ணு தாங்குகிறார். லிங்கத்தின் அடிப்பாகத்தை "பிரம்ம பகுதி' என்பர். பிரம்மா பூமிக்கு அதிபதி. எனவே அடிபாகம் பூமியில் புதைத்து வைக்கப்படுகிறது. ஆக, லிங்கத்தை வழிபட்டால் முப்பெரும் தெய்வங்களையும் வணங்கியதாக அர்த்தமாகிறது

வாழைப்பழம் படைப்பது ஏன்?

வாழைப்பழம் படைப்பது ஏன்?

எல்லா தெய்வங்களுக்கும் தவறாமல் வாழைப்பழம் படைக்கிறார்கள். மற்ற எந்த பழமாக இருந்தாலும் சாப்பிட்டுவிட்டு கொட்டையை எறிந்தால் மீண்டும் முளைக்கும். ஆனால், வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியற்ற நிலையை காட்டுகிறது. மீண்டும் பிறவாமை வேண்டும் என்பதற்காகத் தான் சுவாமிக்கு வாழைப்பழம் படைக்கப்படுகிறது.

தாலிகட்டும் மந்திரத்தின் பொருள்

திருமணத்தில் பெண்ணின் கழுத்தில் மாங்கல்யம் கட்டும் போது,

"மாங்கல்யம் தந்துனானே

மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே

த்வம ஜீவ சரதஸ்சதம்!!'

என்று சொல்கிறார்கள்.

இதன் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள்.

"மங்கலமான பெண்ணே! உன்னோடு இன்று நான் துவங்கும் இல்லறவாழ்வு நல்லமுறையில் இருக்க வேண்டும் என்று உறுதியளித்து, இந்த திருமாங்கல்யத்தை உன் கழுத்தில் அணிவிக்கிறேன். என் இல்லத்துணைவியாக, என் சுகதுக்கங்களில் பங்கேற்று, நிறைந்த யோகத்துடன் நீ நூறாண்டு காலம் வாழ்வாயாக,'' . வணங்குவதை தவிர்க்கும் நேரம் சுவாமியை கும்பிடக்கூடாத நேரம் என்ற ஒன்றும் இருக்கிறது. எது தெரியுமா?
விழாக்காலங்களில் உற்சவர் வீதியுலா வரும் போது, கோயிலுக்குள் சென்று மூலவரையும், பரிவார தெய்வங்களையும் வணங்குவதைத் தவிர்க்கலாம். இந்நேரத்தில் மூலவரே வெளியில் வருவதாக ஐதீகம் என்பதால், உள்ளே சென்று வணங்கினாலும் பயனில்லை என்பர். திருப்பதி பிரம்மோற்ஸவத்தின் ஐந்தாம் நாளான கருடசேவையின் போது, சுவாமி உலா வரும் வரை நடை அடைக்கப்பட்டிருந்தது ஒரு காலத்தில்! இப்போது கூட்டம் காரணமாக சிறிதுநேரம் மட்டும் தரிசனத்தை நிறுத்தி வைக்கிறார்கள். நைவேத்யத்திற்காக திரையிட்டிருக்கும் போது, உள்ளே உற்றுப்பார்த்து வணங்கக்கூடாது. வலம் வரவும் கூடாது.

ஐங்கரன்- பெயர்க்காரணம்

ஐங்கரன்- பெயர்க்காரணம்

இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பனவாகும். விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டுள்ளவர். அதனால் ஐங்கரன் என்று பெயர் பெற்றார். நாற்கால் பிராணிகள் முன்னங்கால்களையே தம் கைகளாக பயன்படுத்துகின்றன. ஆனால் யானை மட்டும் இதில் விதிவிலக்கானது. யானையின் தும்பிக்கை, கையாகவும், மூக்காகவும், வாயாகவும் பயன்படுகிறது. விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். இதில் எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளலையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.கீதையின் பொருள்

கீதையின் பொருள்

பகவத்கீதையை "பகவத்கீதா' என்று சொல்வதும் வழக்கம்.
"பகவத்' என்றால் "இறைவன்'. "கீதா' என்றால் "நல்ல உபதேசம்'. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. "கீதா' என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது "தாகீ' என்று மாறும். "தாகீ' என்றால் "தியாகம்'. வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். "துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்'
என்பதும் "கீதா' விற்குரிய ஆழமான பொருளாகும். அர்ஜுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களைஅழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலா பலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.

கீதையின் பொருள்

கீதையின் பொருள்

பகவத்கீதையை "பகவத்கீதா' என்று சொல்வதும் வழக்கம்.
"பகவத்' என்றால் "இறைவன்'. "கீதா' என்றால் "நல்ல உபதேசம்'. இதற்கு இன்னொரு பொருளும் உண்டு. "கீதா' என்ற சொல்லை வேகமாகச் சொல்லும் போது "தாகீ' என்று மாறும். "தாகீ' என்றால் "தியாகம்'. வாழ்வில் வரும் அனைத்து சுகதுக்கங்களையும் இறைவனிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்பதும் இதன் பொருள். "துறவு கொள்ளுங்கள், எல்லாவற்றையும் விட்டுவிடுங்கள்'
என்பதும் "கீதா' விற்குரிய ஆழமான பொருளாகும். அர்ஜுனன் தன் உறவினர்கள் மீது அம்பெய்யத் தயங்கிய போது, தர்மத்தைக் காக்க அவர்களைஅழித்தாலும் தவறில்லை. அதற்குரிய பலா பலன்கள் தன்னையே சேருமென பகவான் கிருஷ்ணர் சொன்னார். எனவே, எந்தச் செயலைச் செய்தாலும் அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்பதே கீதையின் பொருள். எனவே தான் கீதை இந்துக்களின் ஐந்தாவது வேதமாக விளங்குகிறது.

கடும் சோதனைகள் வருவது ஏன்?

கடும் சோதனைகள் வருவது ஏன்?

ஆப்பிரிக்காவிலுள்ள செவ்விந்தியர் என்னும் பழங்குடி மக்கள் வீரம் மிக்கவர்கள். அவர்களுக்கு ஒரு தலைவன் உண்டு. அவர்களுடைய தலைவனை வாரிசு அடிப்படையில் தேர்ந்தெடுப்பர். எனவே, தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் தனக்குப் பின் பொறுப்பேற்க இருக்கும் தன் பிள்ளைக்கு, சிறுவயதில் இருந்தே பலவிதமான சோதனைத் தேர்வுகளை நடத்தி, அவர்களை தலைமைப் பதவிக்கு தயார் செய்வார்கள். அந்த இளைஞர்கள் அப்போது கடுமையான சோதனைகளைச் சந்திப்பார்கள். ஒருமுறை ஒரு தலைவன் தன் மகன் சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்ததும், அவனை அமேசான் காட்டின் அடர்ந்த பகுதியில், ஒரு அமாவாசையன்று இருளில் தன்னந்தனியாக விட்டு வந்து விட்டான். அந்த இரவு முழுவதும் அவன் அங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்பது தான் அவனுக்குகொடுக்கப்பட்ட சோதனைப்பயிற்சி. அங்கு மிருகங்கள் ஏராளமாக இருந்தன. அவற்றின் உறுமல் சத்தம் பயங்கரமாக இருந்தது. இதுவரை தந்தையின் அணைப்பில் இருந்த அந்தச்சிறுவனுக்கு, ""இப்போது தனிமையில் இருக்கிறோமோ! என்னாகுமோ?'' என்ற சிந்தனை ஒரு பக்கம். ""இந்தத் தேர்வில் மட்டும் ஜெயித்துவிட்டால், நாளை நான் செவ்விந்தியர்களின் தலைவன் ஆகிவிடுவேனே!'' என்ற ஆவல் மறுபுறம். ஒருவழியாக இரவுப்பொழுது கடந்துவிட்டது. வானம் வெளுத்து லேசான வெளிச்சம் படர்ந்தது. அந்த இளைஞன் தான் இருந்த இடத்தில் இருந்து திரும்பிப் பார்த்தான். தூரத்தில் தன் தந்தை வில்லை நாணேற்றி நின்று கொண்டிருந்ததைக் கண்டான். ""அப்பா! இரவெல்லாம் இங்கேயா இருந்தீர்கள்? என்னைத் தனியாய் விட்டுவிட்டு நீங்கள் சென்றுவிட்டீர்கள் என்றல்லவா நினைத்தேன்!'' என்றான் மகன். அந்த தந்தை அவனிடம், ""உன்னை பயமற்ற தலைவனாக்குவது என் கடமை. அதே நேரம் உன்னைக் காக்க வேண்டிய பொறுப்பும் எனக்குண்டு. அதனால் தான் உன்னை மிருகங்கள் ஏதும் தாக்காதபடி மறைந்து காவல் நின்றேன்.'' என்றான். இந்த தகப்பனின் இருத யத்தைப் போலத் தான் நம்மையெல்லாம் பாதுகாப்பதாக ஆண்டவரின் இருதயமும் உள்ளது. அவரது பிள்ளைகளான நம்மை சிம்மாசனத்திற்கு உயர்த்தும்படியான தகுதிகளை நாம் பெற்றுக்கொள்ள நம்மைக் "கடுமையான சோதனை' என்னும் பாதையில் அவர் வழிநடத்துகிறார். அவற்றில் இருந்து மீளும் பயிற்சியைத் தருகிறார். சில சமயங்களில் அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளைகளில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார். அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயிருக்கின்றன. எனவே, சோதனைகளை பயமின்றி கடந்து சாதனையாக்குவோம்.

நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு

நோய் தீர்க்கும் தன்வந்திரி வழிபாடு

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அண்டமே பிரமிக்கும் வண்ணம் ஜோதி ஒன்று எழுந்தது. அந்த ஜோதியில் பிறந்த மகாபுருஷர் தான் தன்வந்திரி. கற்பனைக்கு எட்டாத அழகுடன், திருக்கரங்களில் சங்கு, சக்கரம், அட்டைப்பூச்சி, அமிர்தகலசம் ஆகியவற்றை ஏந்தி நின்றார். அவர் தான் தன்வந்திரி என்ற தெய்வீக மருத்துவர். மருத்துவக் கலையின் முதல்வரான இவரை வேண்டியே தேவர்கள் அமரவாழ்வைப் பெற்றனர். மனிதர்களுக்கு நோய்நொடிகள் அவரவர் கர்மவினைப்படி வந்து தான் தீரும். இதிலிருந்து நம்மை தன்வந்திரி வழிபாடு ஒன்றே காப்பாற்றவல்லது. இவரை வழிபட்டால் நோய்நொடிகள் நீங்குவதோடு ஆரோக்கியமும் உண்டாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது

தோப்புக்கரணத்துக்கு கதையிருக்கு தெரியுமா?

தோப்புக்கரணத்துக்கு கதையிருக்கு தெரியுமா?

விநாயகர் வழிபாட்டில் கைகளால் குட்டிதோப்புக்கரணம் இடுவர். "தோர்பி கர்ணம்' என்னும் வடசொல்லே தோப்புக் கரணம் எனப்படுகிறது. இந்தச்சொல்லுக்கு "கைகளால் காதைப் பிடித்துக் கொள்வது' என்று பொருள். விநாயகர், தன் மாமா திருமாலின் சக்கரத்தை வாயில் போட்டுக் கொண்டு கொடுக்க மறுத்து அடம் பிடித்தார்.

அவரைச் சிரிக்க வைத்தால் வாயில் இருந்து சக்கரம் வெளியே வந்துவிடும் என்று எண்ணிய பெருமாள், தன் நான்கு கைகளாலும் காதுகளைப் பிடித்துக் கொண்டு கரணம் போட்டு வேடிக்கை செய்தார். விநாயகரும் அதைப் பார்த்து சிரிக்க, சக்கரம் கீழே விழுந்துவிட்டது. அதுமுதல் விநாயகரை மகிழ்விப்பதற்காக இவ்வழக்கம் உண்டானது. இவ்வழிபாட்டிற்கு வேறொரு புராணக்காரணமும் உண்டு. தேவர்களைக் கைது செய்த கஜமுகன் என்ற அசுரன் தனக்கு தோப்புக்கரணம் இடும்படி ஆணையிட்டான். விநாயகப்பெருமானை அவனை அழித்து தேவர்களைக் காத்தார். அவருக்கு நன்றிக்கடனாக தேவர்கள் தோப்புக்கரணம் இட்டனர். அதுமுதல் இவ்வழிபாடு உண்டானதாகவும் கூறுவர்

காகத்திற்கு உணவிடுவது ஏன்?

காகத்திற்கு உணவிடுவது ஏன்?

நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வழங்க வேண்டும். காரணம், நம்முடைய முன்னோர்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. அவர்களுடைய ஆசியினால் தான் நாம் இவ்வுலகில் அமைதியாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ முடிகிறது. எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு காகத்திற்கு தினசரி உணவிடுகின்றனர். காகத்திற்கு உணவிடும் பழக்கத்தினால் கணவன், மனைவி ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலைக்கும் என்பது நம்பிக்கை. சனீஸ்வர பகவானின் வாகனமாகையால், காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனி பகவான் தரும் கெடுபலன்களிலிருந்து விடுபடலாம். இறைவனின் பரிபூரண அருளையும், அன்பையும் பெறலாம். இதில் இன்னொரு தத்துவமும் இருக்கிறது. காகத்தை "ஆகாயத்தோட்டி' என்பர். இந்தப் பறவை யாருக்கும் கெடுதல் செய்வதும் இல்லை. இது நம்மைச் சுற்றியுள்ள அசுத்தங்களை அடியோடு களைவதாலும் இந்த இனம் காப்பாற்றப்பட வேண்டும் என்பதின் அடிப்படையிலும் உணவிடும் பழக்கம் வந்தது. எப்படியிருப்பினும், ஜீவகாருண்யம் மிக்க புண்ணியச்செயல் இது.

சிவனுக்கு பிரியமான பூக்கள்

சிவனுக்கு பிரியமான பூக்கள் சிவபெருமானுக்கு என்னென்ன மலர்கள் பிரியமானவை என்பது பற்றியும், அதை அணிவிப்பதால் ஏற்படும் பலன்கள் பற்றியும் அப்பைய தீட்சிதர் என்ற தீவிர சிவபக்தர் ஒரு சமஸ்கிருத ஸ்லோகம் எழுதியுள்ளார். அந்த ஸ்லோகத்தின் பொருளைக் கேளுங்கள்.

""பரமேஸ்வரா! உன் மேல் எருக்கையும், த்ரோணம் என்னும் தும்பை மலரையும், அர்ச்சனை செய்தாலே போதும். அது ஒருவனுக்கு மோட்ச சாம்ராஜ்யத்தை என்னும் பேரின்ப வீட்டைத் தந்து விடுகிறது,'' என்பதாகும். எருக்கு, தும்பை மலர்கள் பெண்கள் சூடாதவை. எல்லாராலும் ஒதுக்கப் படுபவை, விநாயகருக்கு மட்டுமல்ல, சிவனுக்கும் எருக்கு உகந்ததாகிறது. இனி சிவனுக்கு வில்வமாலையுடன், எருக்கம்மலர்களையும் அர்ச்சனைக்கு எடுத்துச் செல்லலாம். இந்த மலர்களை சிவலிங்கத்தின் மீது அர்ச்சனை செய்து அதையே பிரசாதமாகப் பெற்று வந்து, நம் பூஜை அறையில் வைத்துவிட்டால், இறைவனின் தன்மையே நமக்கும் வந்துவிடும். காஞ்சிப்பெரியவர் சொல்லும் தகவல் இது.

உடல் அமைப்பில் சிதம்பரம் சன்னதி

உடல் அமைப்பில் சிதம்பரம் சன்னதி

மனிதனின் உருவ அமைப்பிற்கும், சிதம்பரத்திலுள்ள நடராஜர் சன்னதிக்கும் ஒற்றுமை இருக்கிறது. பொன்னம்பலத்தில் "நமசிவாய' மந்திரம் பொறிக்கப்பட்டு வேயப்பட்டுள்ள 21 ஆயிரத்து600 தங்க ஓடுகள் உள்ளன. மனிதன் ஒரு நாளைக்கு விடும் சுவாசத்தின் எண்ணிக்கை இது. இங்கு அடிக்கப்பட்டுள்ள 72 ஆயிரம் ஆணிகள், மனிதனின் நாடி நரம்பின் எண்ணிக்கையை ஒத்திருக்கிறது. கோயிலில் உள்ள 9 வாசல்கள் மனித உடலிலுள்ள 9 துவாரங்களைக் குறிக்கிறது. ஐந்தெழுத்து மந்திரமான "சிவாயநம' என்பதின் அடிப்படையில் பொன்னம்பலத்தில் ஐந்து படிகள் உள்ளன. 64 கலைகளின் அடிப்படையில் 64 சாத்துமரங்கள் இருக்கின்றன, 96 தத்துவங்களைக் குறிக்கும் விதமாக 96 ஜன்னல்களும், நான்கு வேதங்கள், ஆறு சாஸ்திரங்கள், பஞ்சபூதங்களின் அடிப்படையில் தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன.

நெய் அபிஷேக மகிமை

நெய் அபிஷேக மகிமை

மனித இதயத்தை தசைநார்கள் சூழ்ந்துள்ளதைப் போல, நார்களால் சூழப்பட்ட தேங்காயைப் பக்தன் தேர்ந்தெடுக்கிறான். அவனது இதயத்தில் உள்ள களங்கமான எண்ணங்களை தேங்காயில் உள்ள நீருக்கு ஒப்பிடலாம். தேங்காயில் துவாரமிட்டு அதை வெளியேற்றி, நவநீதம் என்னும் சுத்தமான எண்ணங்களை பசு நெய்யாக உள்ளே ஊற்றுகிறான். தேங்காயின் துளையை அடைத்து ஐயப்பனின் திருவடியை மனதில் நினைத்து தலையில் வைக்கிறான். பக்தியுடன் சரணம் கூறி சுமந்து செல்கிறான். நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறான். அதாவது, தனது உள்ளத்தில் உள்ள ஆழ்ந்த பக்தியை ஐயப்பனுக்கு காணிக்கையாக்குகிறான். இதன் காரணமாக ஜென்ம சாபல்யம் பெற்ற ஆனந்தம் அடைகிறான்.

துளசிமணி மாலை

துளசிமணி மாலை

தெய்வ வழிபாட்டுக்குரிய பல தாவரங்களில் ஒன்று "துளசி'. ஸ்ரீ மஹா விஷ்ணுவின் பாதங்களில் சேவை செய்யும் பதிவிரதையான தேவிக்கும் "துளசி' என்று பெயர். துளசிக்கு "விஷ்ணுப்பிரியா' என்ற பெயரும் உள்ளது. துளசியை சுத்தமில்லாமல், குளிக்காமல் தொடக்கூடாது. சுத்தமான துளசிச் செடியில் உள்ள கட்டையிலிருந்து செய்யப்பட்ட துளசி மணிகளைத்தான் மாலையாக மணிகண்டன் அணிந்து துளசி மணிமார்பனாக அமர்ந்துள்ளார். பவித்ரமான பக்தியுடன் இருக்கவே துளசி மாலை அணிந்து சபரிமலை செல்லும் பழக்கம் ஏற்பட்டது. ஐயப்பன் விஷ்ணுவின் அம்சம் ஆவார். அவரது தாயே மோகினியாக மாறிய விஷ்ணு தான். தாயைப் போல பிள்ளை என்பார்கள். அதுபோல், விஷ்ணுவுக்குப் பிரியமான துளசி, ஐயப்பனுக்கும் பிரியமாயிற்று

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

ஸ்ரீராமஜெயம் எழுதுவது ஏன்?

சிலர் ஸ்ரீராம ஜெயத்தை லட்சம் முறை, கோடி முறை என எழுதுகின்றனர். வேலை கிடைத்தல், திருமணம், வீடு கட்டுதல் போன்ற உலக இன்பங்கள் கருதிய வேண்டுதல் களுக்காக இதை எழுதுகின்றனர். உலக இன்பங்கள் மட்டுமின்றி, இந்த மந்திரம் அகப்பகை எனப்படும் நமக்குள்ளேயே இருக்கும் கெட்ட குணங்களையும், புறப்பகை எனப்படும் வெளியில் இருந்து நம்மைத் தாக்கும் குணங்களையும் வெல்லும் சக்தியைத் தரும். "ராம' என்ற மந்திரத்துக்கு பல பொருள்கள் உண்டு. இதை வால்மீகி "மரா' என்றே முதலில் உச்சரித்தார். "மரா' என்றாலும், "ராம' என்றாலும் "பாவங்களைப் போக்கடிப்பது' என்று பொருள். ராமனுக்குள் சீதை அடக்கம். அதனால் அவரது பெயரையே தனதாக்கிக் கொண்டாள். "ரமா' என்று அவளுக்கு பெயருண்டு. "ரமா' என்றால் "லட்சுமி'. லட்சுமி கடாட்சத்தை வழங்குவது ராம மந்திரம். ராம மந்திரம் எழுதுவோருக்கும், சொல்வோருக்கும் எங்கும் எதிலும் ஜெயம் (வெற்றி)உண்டாகும். ராமன் என்ற சொல்லுக்கும் பொருளைத் தெரிந்து கொள்ளுங்கள். "ரா' என்றால் "இல்லை' "மன்' என்றால் "தலைவன்'. "இதுபோன்ற தலைவன் இதுவரை இல்லை' என்பது இதன் பொருள்.பத்தும் பறந்து போகும்

பத்தும் பறந்து போகும்

பத்தும் பறந்து போகும்....எப்போது?' எனக் கேட்டால், "பசி வந்தால்' என பதில் வரும். "நமசிவாய' என்று சொன்னாலும் கூட பத்தும் பறந்து விடும்.
திருப்புகழில் அருணகிரியார்
""ஆவியீர் ஐந்தை அபரத்தே வைத்தோதில்
ஆவி ஈரைந்தை அகற்றலாம்'' என்கிறார்.
""உலகமக்களே! ஐந்தெழுத்து மந்திரமான
"சிவாயநம' என்பதை மனதில் ஓதினால் "ஆவி பத்தும்' பறந்து விடும்.
அதென்ன "ஆவி பத்து!'
"ஆ' என்ற எழுத்துடன் பத்தைச் சேர்த்தால் "ஆபத்து'. "வி'யுடன் சேர்த்தால் "விபத்து'. ஆபத்து உடலுக்கு வரும் கஷ்டத்தையும், விபத்து உ<யிருக்கு வரும் துயரையும் குறிக்கும். உடலுக்கு பசி, நோய் முதலிய துன்பங்களும், உயிருக்கு பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்களும் வருகிறது. இதனால் தான் "சிவாயநம' என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை' என்கிறார்கள் ஆன்மிக அறிஞர்கள்.

காயத்ரி மந்திரம்

காயத்ரி மந்திரம்

ஐந்து முக தெய்வமான அன்னை காயத்ரியை வணங்க மந்திரம் இருக்கிறது.

ஓம் பூர்புவஸ்ஸுவ:


தத் ஸவிதுர் வரேண்யம்


பர்கோ தேவஸ்ய தீமஹி


தியோ யோ நஹ் ப்ரசோதயாத்

இதன் பொருள் என்ன?
எல்லா பாவங்களையும், அறியாமையையும் போக்குகிறவரும், வணங்குவதற்குரியவரும், இவ்வுலகத்தைப் படைத்த கடவுளையும், அவரது
புகழையும் தியானிப்போமாக. அவர் நம் புத்தியை வழிநடத்துவாராக.''
வேதங்களின் தாயே காயத்ரி. பசுவின் பாலை விடச் சிறந்த உணவு கிடையாது. அதுபோல காயத்ரி மந்திரத்தை விடச் சிறந்த மந்திரம் வேறில்லை. காயத்ரி மந்திரத்தின் அதிதேவதை சவிதா. விஸ்வாமித்திரரே ரிஷி. அதிகாலைப் பொழுதில் கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து ஜபிக்கவேண்டும். நீராடியபின்
ஜெபிப்பது சிறப்பு. முடியாவிட்டால் பல்தேய்த்து கால், கைகளை சுத்தம் செய்துவிட்டு சொல்லத் தொடங்குங்கள். மந்திரத்தை தெளிவாகவும், தவறின்றியும் உச்சரிக்கப் பழகுங்கள். முடியாவிட்டால், பொருளை மனப்பாடமாக்கிக் கொண்டு தொடர்ந்து சொல்லி வாருங்கள். இந்த மந்திரத்தை ஜபிக்க மனத்தூய்மை பெருகும். மனம் வலிமை பெறும். ஞாபகசக்தி அபரிமிதமாக உண்டாகும். உங்களுக்குப் பிடித்தமான எந்த தெய்வத்தையும் மனதில் தியானிக்கலாம். காயத்ரி பெண்தேவதை என்பதால் சக்தி வழிபாட்டுக்குரியதாக பலரும் எண்ணுகிறார்கள். ஆனால், தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள் யாராக இருந்தாலும், நம்பிக்கையோடு இம்மந்திரத்தை ஜபித்து நன்மை பெறலாம்.