Sunday, January 30, 2011

மகிஷாசுரனின் கதை

மகிஷாசுரனின் கதை

மகிஷாசுரன் என்ற அசுரனுக்கு தேவர்களை அடிமைப்படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அருள்பாலிக்க, அசுரன் முன் தோன்றினார்.. சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும், படைக்கும் தொழிலில் அது சாதிதயமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும்தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்” என்று பிரம்மா கூற, அறிவிலி அசுரன், கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான்.
தேவர்களை வென்றுவிட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகிவிடுவார்கள் என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான். பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன், சக்தியின் மகிமையை அறியவில்லை.
வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவுலகிலும் இடியென முழங்கியது. அராஜகம் தலை தூக்கியது. தர்மம் அழிந்தது. மக்கள் அவல நிலைக்கு ஆண்டு துன்புற்றனர். ஈசனை வேண்டினர். தனது நெற்றிக் கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வசக்தியாம் துர்க்கையைத் தோற்றுவித்தார் பரமேஸ்வரன்.சிம்ம வாகனத்தில் ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டு பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்ட தேவர்கள், தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லோருடைய பயங்களையும் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி ஆரம்ப நாளில்தான். ச்தியாக தோன்றிய அம்பாள், அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது விஜயதசமி அன்றுதான்.
இந்தியாவில் ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு பழக்க வழக்கங்களில் தசரா என்றும், நவராத்திரி என்றும் கொண்டாடினாலும் நாம் செய்யும் பூஜைகள், ஆராதனைகள் அனைத்தும் போய் சேருவது அன்னை பராசக்தியின் திருப்பாதங்களுக்கே!



No comments:

Post a Comment