Thursday, May 26, 2011

ஆடி அமாவாசை


ஆடி அமாவாசை


இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் “பிதிர் காரகன்” என்கிறோம். சந்திரனை “மாதுர் காரகன்” என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும்.
சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந்திரன் எமது மனதுக்கு அதிபதியானவர். இதனால் மகிழ்ச்சி, தெளிவான தெளிந்த அறிவு, இன்பம், உற்சாகம் என்பவற்றை எல்லாம் தரவல்லவர். இத்தகைய பெருமைகளை எல்லாம் தருகின்ற சூரிய, சந்திரனை தந்தை, தாய் இழந்தவர்கள் அமாவாசை, பூரணை தினங்களில் வழிபாடு செய்வர்.
ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன
அமாவாசை, பெளர்ணமி ஆகிய இரண்டு விரதங்களும் முறையே காலமான தந்தை, தாய் ஆகியோரைக் குறித்து அவர்கள் நற்கதியடைய அவர்களின் பிள்ளைகளால் அனுட்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். ஒவ்வொரு மாதத்திலும் இந்த விரதங்களுக்குரிய தினங்கள் வருகின்றன. இவ்விரதங்களை அனுஷ்டிப்பவர்கள் ஆசார சீலர்களாக உபவாசம் இருந்தும் அவ்வாறு இருக்க இயலாதவர் ஒரு பொழுது உண்டும் அனுஷ்டிப்பர்.
இத்தினத்தில் புண்ணியத் தீர்த்தங்களில் நீராடித் தூய்மையாராய் பிதிர், தருப்பணம் செய்தும் பிண்டதானம், சிரார்த்தம் செய்தும் இறைவனை வழிபட்டும் அந்தணர்களுக்குத் தானமும், விருந்தினர், சுற்றந்தார், ஏழைகள், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவும் அளித்தும் அவர்களுடன் போசனம் செய்து விரதக் கொள்கையுடன் இருப்பர்.
இறந்த தந்தை தாயாரின் பாவ வினைகளை நீக்குதற் பொருட்டும் அவர்கள் முத்தியின்பத்தை அடைதற் பொருட்டு அமாவாசை, பெளர்ணமி நாட்களில் விரதங்களை பிள்ளைகள் அனுஷ்டிக்கிறார்கள்.
சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியும், ஆடி, தை மாதங்களில் வருகின்ற அமாவாசையும் சிறப்புப் பொருந்தியன என்று சைவ நுல்கள் கூறுகின்றன.
அவரவர் தந்தை, தாயார் இறந்த திதிகளைத் தவற விட்டவர்கள் ஆடி அமாவாசை தினத்தில் தந்தையை நோக்கியும் சித்திரைப் பெளர்ணமி தினத்தில் தாயின் பொருட்டும் சிராத்தம், தருப்பணம், பிண்டதானம் என்பவற்றைச் செய்வர்.
இந்துக்கள் ஒரு வருடத்தை இரண்டு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாதம் உத்தராயண காலம். ஆடி முதல் மார்கழி வரை உள்ள காலம் தட்சணாயன காலம் என்பர். தட்சணா தொடக்க மாதம் ஆடி என்பதால் பிதுர் காரியங்களுக்கு ஆடி மாதம் சிறப்பானது எனக் கொள்ளப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் அமாவாசைத் திதி பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
ஆடி அமாவாசைத் தினத்தில் கடல், நதி, ஆறு, வாவி போன்ற தீர்த்தங்களில் நீராடினால் பல வினைகள் அறும் என்றும் பாவங்கள் நீங்கும் என்றும் கூறுவர். தீர்த்தங்களை இறைவனின் அருள் குறித்த நீராக நினைத்து முன்னோர்களான பிதுர்களை எண்ணி அவர்களின் பாவங்களை நோக்கி அவர்களுக்கு முத்தி அளிக்கும் படி இறைவனை வேண்டி தீர்த்தமாடுதல் வேண்டும்.
ஆடி அமாவாசையில் தீர்த்தமாடுதல், பிதுர் வழிபாடு செய்தல், தருப்பணம், பிண்டதானம் நிறைவேற்றுதல் என்பவை ஆண்டுதோறும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
ஆடி அமாவாசை தினத்தில் அதிகாலை நித்திரை விட்டெழுந்து தீர்த்தம் ஆடி, பின்னர் சிவாலய தரிசனம், பிதிர்தர்ப்பணம், அன்னதானம் செய்தல் என்பன முக்கியத்துவம் பெறுகின்றன.
பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் தோஷங்களில் இருந்து நீக்கமுறலாம் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
இன்னமும் கொஞ்சம் ஆழமாக பார்த்தால்,
நாம் செய்யும் சடங்குகள் எல்லாம் சரி தானா? இல்லை பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறோமா?என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.
பொதுவாக இந்துக்களின் வழக்கங்கள் ஒரு மன நம்பிக்கையை ஊட்டுவனவாக இருக்கின்றன. ஆடி அமாவாசையன்று, பித்ரு எனப்படும் முன்னோருக்கு செய்யப்படும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலானவையும் மனிதர்களுக்கு நம்பிக்கையை தருவதற்காகவே செய்யப்படுகிறது.
தாய், தந்தை, நெருங்கிய உறவுகள் நம்மை விட்டு போய் விடுகின்றனர். அவர்களுக்கு அமாவாசைகளில், சாஸ்திரப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்நாளில் தீர்த்தங்களில் எள்ளை விடுகின்றனர். வாழைக்காய் உள்ளிட்ட சில காய்கறி வகைகளைப் படைக்கின்றனர். திருவிளக்கு முன் பெற்றவர்களின் படங்களை வைத்து உணவு படைத்து பூஜை செய்கின்றனர். காகங்களுக்கும், ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர். முன்னோருக்காக தர்ப்பணம் செய்யப்படும் எள், தண்ணீர், காய்கறி வகைகள், உணவு ஆகியவை அவர்களைப் போய்ச் சேருகிறதா என்பது பலரது சந்தேகம்.
ஏனெனில்,
எள் தண்ணீரோடு போய் விடுகிறது. வாழைக்காய், அரிசி வகைகளை அந்தணர்கள் கொண்டு போய் விடுகின்றனர். வடை, பாயசம் உள்ளிட்ட உணவுகளை வீட்டில் இருப்பவர்களே சாப்பிட்டு விடுகின்றனர். இப்படியிருக்க, இது முன்னோரைப் போய் எப்படி சேர்ந்தது என்பது தான் சந்தேகத்திற்கான காரணம்.
இறப்புக்கு முன் நம் பெற்றோருக்கு எத்தனையோ சேவை செய்கிறோம். அது இறப்புக்குப் பின்னும் தொடர வேண்டும் என நம்பப்படுகின்றது.
பிதுர் தர்ப்பணம் செய்யாவிட்டால், பிதுர்களால் நமக்கு கிடைக்கும் ஆசி கிடைக்காமல் போய் விடும் என்று சொல்லப்படுகின்றது. உன் பிள்ளையை பொறுப்பற்றவனாக வளர்த்திருக்கிறாயே என பிதுர் தேவதைகள், அவர்களுக்கு தண்டனையும் தந்து, மோட்சத்திற்கு போக விடாமல் செய்து விடுவர் என்று சாஸ்திரம் சொல்கிறது. பெற்றவர்களின் ஆசியின்றி செய்யப்படும் எந்தச் செயலும் வெற்றி பெறாது என் அனைத்து இன மகான்களாலும் சொல்லப்படுகின்றது.
இந்தியாவில் இருப்பவர்கள் ஆடி அமாவாசையன்று மறக்காமல் தங்கள் பெற்றோருக்கு ராமேஸ்வரம், பாபநாசம், கன்னியாகுமரி, வேதாரண்யம் மற்றும் நதிக்கரை, கடற்கரை தலங்களுக்கு சென்று தர்ப்பணம் செய்து பிதிர்களின் நல்லாசியைப் பெறுகின்றனர்.
யாழ்ப்பாணத்து மக்கள் புரதான காலம் தொடக்கம் கீரிமலை நகுலேஸ்வரத்தில் தீர்த்தமாடுவார்கள்.
மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு மாமாங்கப் பிள்ளையார் கோவில் அமிர்தகழியில் தீர்த்தமாடுவர்.
திருகோணமலை வாழ் மக்களுக்கு கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தமாடி பிதுர் கடனைச் செலுத்துவர்.
ஆடி அமாவாசை காலத்தில் கடல் தீர்த்தம் ஆடுதல் பாவத்தைப் போக்கி விமோசனத்தை தருகின்றது என நம்பப்படுகின்றது.


ஆடி அமாவாசை - முழு நிலவின் மறுபக்கம்
காட்சிகள் யாவும் சாட்சிகளல்ல அவை மாயைகளாகவும் இருப்பதுண்டு. நிலா என்றுமே தேய்வதுமில்லை வளர்வதுமில்லை. ஆனால் தேய்ந்து வளர்வது போல்த் தோற்றமளிக்கிறது.
அவ்வாறே சூரியன் காலையில் எழுந்து பூமியைச் சுற்றி வட்டம் போடுவதில்லை ஆனால் அவ்வாறே புலப்படுகிறது. பூமிதான் தானும் சுற்றி சூரியனையும் சுற்றுகிறது. எல்லாமே நாங்கள் அனைத்தையும் எவ்வாறு எங்கிருந்து எப்போது? பார்க்கிறோம் உணர்கிறோம் என்பதைப் பொறுத்த தோற்ற மாயைகளே!.

ஆய்வின்மையால் இந்த உலகில் பெரும்பாலானவை சரிவரப் புரிந்து கொள்ளப்படுவதில்லை. பாமரர் உணர்ச்சிவழி போகையில் மற்றவர்கள் ஆராயும் முனைப்பின்றி உலகாயுதப் போக்கில் முடிவுகளை எடுக்கின்றனர். ஏற்கனவே வேண்டிய அறிவுரைகள் எல்லாம் என்றோ வளர்ந்து விட்ட நமது தமிழ் இனத்தில் நிறைந்திருப்பதால் ஆராய்வின்மை தமிழரின் தேசியக் குறைபாடாகே தொடர்கிறது. கண்ணால் கண்டதும் பொய் காதாற் கேட்டதும் பொய் என்ற பழமொழியின் அர்த்தமே எதையுமே தோற்றமளிப்பதைப்போல் கேள்விப்படுவதைப் போல் அப்படியே எடுத்துக் கொள்ளாது தீர விசாரித்து ஆராய்ந்து அறிவார்ந்த முடிவை எடு என்பது தான்.

“மாதா - பிதா - குரு - தெய்வம்” என்பதும் ஆய்விற்குரிய ஒரு தத்துவார்த்த வரிசையாகும். இது ஒரு வகையில் ஆரோகணம் போல் உயர்வதாகவும் உள்ளது வேறொரு ரீதியில் அவரோகணம் போல் தாழ்வதாகவும் உள்ளது.

தெரியவும் புரியவும் இலகுவான அன்னையை முன்னே வைத்து உணரக் கூட கடினமான கடவுளை இறுதியில் வைத்துள்ளமை இறங்குவரிசை என்றால் அறிவு ஞானம் என்று பாரக்கின்ற போது தெய்வமான கடவுளே அதி உயர்ந்தவர் எனபதால் இதே ஒழுங்கு ஏறு வரிசையாகிவிடுகிறது. இது தந்தை அன்னையைவிட அறிவார்ந்தவர் என்பதை காட்டுகிறது.

முழு நிலவைப் போல் தெளிவாகத் தெரியும் இதமான குளிர்ந்த அரவனைப்பு அன்பு அன்னையினது.

அமாவாசை போல் புலப்படாத ஆனால் யதார்த்த நிஜ அக்கறைநிறை கண்டிப்பு தந்தையினது.

உணர்வு பூர்வமானவள் அன்னை. அறிவு பூர்வமானவர் தந்தை. ஞானத்தை சுட்டி எட்ட உதவுபவர் குரு. அந்தப் பரிபூணர ஞான ஒளிப் பிளம்பே இறை……மாதா - பிதா - குரு - தெய்வம்.

விலங்குகளும் இலகுவில் காணும் அரும் பொருள் அம்மா. விளங்கவும் கடினமான பரம் பொருள் கடவுள்.

இதயத்தை இதமாக வருடிபவள் அன்னை. வாரிசுகளின் மனதையும் சிந்தனையையும் செயல்களையும் பண்படுத்திச் செம்மைப்படுத்துபவர் தந்தை.
அறிவைப் பெருக்குபவர் குரு. ஞானத்தை உணர்த்துபவர் ஆண்டவர்.

கண் காணும் முன்னறி தெய்வங்கள் பெற்றார். பின்னே அறியப்படும் அம்மை அப்பனே இறைவன்.

வயிற்றுப் பசியைப் போக்குபவள் தாய் என்றால் அறிவிற்குரிய அரிசியை ஆக்குபவர் தந்தை.

உடல் உணர்வு சார்ந்தவள் தாய் என்றால் உள்ளம் அறிவு சார்ந்தவர் தந்தை.

தாய் தெளிவாகத் தெரியும் சித்ரா பௌர்ணமியின் பக்கமென்றால் ஆடி அமாவாசை புரியப்பட வேண்டிய அதே முழ நிலவின் புலப்படாத மறு பக்கமாகும்.

பறுவம் என்றாலும் அமாவாசை என்றாலும் நிலா ஒன்று தான்.

இரவும் வரும் பகலும் வரும் நாள் என்பது ஒன்று தான்.

உறவும் வரும் பிரிவும் வரும் வாழ்க்கை ஒன்று தான்.

இரண்டும் ஒன்றே…… அனைத்தும் ஒன்றே.

இந்தப் பிரபஞ்சம் முழுதும் நிறைந்திருக்கும் கதிரியக்க சக்திப் பெருங்கடல் ஒன்றே. அதனால்த் தான் “நீயே அது” என்கிறது அத்வைதம். நிற்க!

இதமான குளிர்மையான அழகிய சித்ராப் பௌர்ணமி அன்னைக்கு.

தெரியாத இருண்ட ஆடி அமாவாசை தந்தைக்கு.

ஒளியும் இருளும் சேர்ந்ததே முழுமை.

இன்ப துன்பத்தில் இன்பத்தை மட்டும் அனுபவித்தவன் அரை மனிதன். இன்பத்தோடு துன்பத்தையும் கடந்து களவையும் கற்று வந்தவனே முழு அனுபவஸ்தன்.

வெற்றியை மட்டும் கண்டு வந்தவன் அதிஷ்டசாலியாக இருக்கலாம். தோல்வியின் படிப்புப் படிகளிலும் ஏறி ஏறி மேலே வந்தவனே அறிவாளி.

இதை எழுதும் உடலிற்கு கருவறையிலேயே உதிரம் தந்தவள் என் அன்னை. இதை எழுதும் இயலுமையைத் தந்தவர் பூக்கள் நிறைந்த ஏரிகளைக் கொண்ட தீப வம்சமும் குறிப்பிடும் பண்டைய நகரமான “பூ நகர ஏரியில்” (பூநகரில்) வாழ்ந்த சித்த ஆயுள் வேத அய்யன். எழுதக் கற்றுக் கொடுத்தவர் குரு. இப்படி எழுத வேண்டும் என்பதையே எழுதி வைத்தவன் ஆண்டவன். மாதா பிதா குரு தெய்வம் - இதில் உயர்ந்தது தாழ்ந்தது என்று எதுவுமில்லை. ஒன்றில்லாமல் மற்றதும் இல்லை.

கவியரசு கண்ணதாசன் - அவன் பலரிற்கும் கால எல்லை கடந்த குரு.

புவியரசுகளின் நில கால எல்லைகளையும் தாண்டியவன் கவிஞன்.

நாங்கள் இன்று தந்தையுடனேயே நிற்போம். பத்து வயதிலேயே பள்ளிக்காய் வீட்டைத் துறந்த எனக்கு தாய் போலவும் தோன்றியவர் என் தந்தையே. இன்று நாட்டையும் இழந்து கொண்டிருக்கையில் நமது இன்றைய கீரிமலை கனடா ஏரிக்கரையே.

ஏங்களிற் பலர் நமது தந்தையரை தவறவிட்ட பின்னரே புரிந்து கொள்ள ஆரம்பிக்கிறோம். நாமும் தவறிவிட்ட பிறகே இறையின் துறைக்குள் நுழைகிறோம்.

தாயின் தயவை பிறக்க முன் கருவறையிலேயே உணர்கிறோம். எங்களிற்காக அடி வயிற்றில் நாமிருந்த போதே நமக்காக அன்றே சுவாசித்ததுடன் உதிரம் தந்தவள் தாய். . ஆம் ஜனனத்திற்கும் முந்திய தெரிதல் அனனை. மரணத்தின் பின்னான புரிதல் கடவுள். இரண்டிற்கும் நடுவே 40 வயதிற்கு பின்னான புரிதல் தந்தை.

ஜனனம் நிறைவடையும் போதாவது தெரிபவர் தந்தை.

மறைவு அது ஒரு முடிவல்ல.- அது அடுத்த சுற்றிக்கான ஆரம்பம்.

அஸ்தமனம் முடிவென்றால் மேற்கில் மறையும் சூரியன் மறுநாள் எழுந்திருக்கவே முடியாது. கீழே விழும் விதை முளைக்கவும் இயலாது.

எனவே மரணம் ஒரு முடிவுப் புள்ளி அல்ல - அடுத்த மாற்றத்திற்கான ஆரம்பப்புள்ளியும் அதுவே. ஒரு புறத்தில் முடிவு அடுத்த பக்கத்தின் தொடக்கம்.

மனித வாழ்க்கை என்பதே ஒரு வகையில் மரணத்தை நோக்கிய பயணம் தான் என்பதை உண்ரந்தவர்கள் மரணத்தை இப்படித்தான் பார்ப்பார்களோ என்னமோ! அதனால்த் தான் எத்திசையில் ஓடுகிறோம் என்பதைத் ஆராயாது நாம் “கேக்” வெட்டி கொண்டாடுகிறோம் நமது பிறந்த நாளை …

ஒரு பூவானது பிஞ்சாகிக் காயாகி கனியாகி உதிர்வது ஒரு முடிவு தான் என்றாலும் அதுவே இன்னொன்றின் ஆரம்பப் புள்ளியாகிவிடுகிறது. அது ஒரு சுற்றின் தற்காலிக முடிவே ஒழிய அதுவே அடுத்த சுழல்வின் தொடக்கம். பிறவிப் பெருங்கடலில் அது ஒரு நிலைமாற்றமே. ஆனால் நாங்களோ அதற்காக அழுகிறோம். ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்டார் வருவரோ?

பழுதடைந்த சட்டயை நாம் வீசி அடுத்த புதிய சட்டையை அணிந்தே ஆக வேண்டும் அதுவும் பழையதாகும் வரை…..ஓ! என்னதான் தத்துவம் பேசினாலும் இந்தப் பிரிவுத் துயர் இருக்கிறதே அது கொடுமையானது. அது யாரையும் விட்டு வைப்பது இல்லை. பட்டினத்தாரே பாடி அழதாரே அன்னையை இழந்த போது…….

இரவும் பகலும் வரும் வாழ்க்கை ஏதோ ஒன்று தான்.

உறவும் வரும் பிரிவும் வரும் ஆனால் நான் ஒருவன் தான்

ஏகத்துள் அநேகம் - ஜீவாத்மா

அநேகத்தையெல்லாம் உள்ளடக்கிய ஏகம் - பரமாத்மா.

ஜீவாத்மாவே பரமாத்மா…அதனால் நீயே அது!

கீரிமலைத் துளி நீரும் பூகோள சமுத்திர ஜலமும் ஒன்றே.

காற்றுக்கேது தோட்டக்காவல் போடி தங்கச்சி!

கடலிற்கேது எல்லைக் கோடு?

மண்ணில் தோன்றி அக்னியில் தோய்ந்து காற்றில் எழுந்து வின்னில் நிற்கும் அந்த ஆத்மாக்களிற்கு சமுத்திரத்தில் ஒரு கலப்பு.

பஞ்ச பூதங்களின் ஐந்தொழிலையும் உருவகிக்கும் நாட்டிய தாண்டவப் பொன்னம்பலத்தானை நாளைய தினம் நாமும் அர்ச்சிப்போம் - நம் தந்தையரது மோட்சத்திற்காய்.

கீரிமலைக் கடலும் புலம் பெயர் தமிழர்களின் பூகோள சமுத்திரங்களும் ஒன்றே!

இருளும் வரும் ஒளியும் வரும் நிலவு ஒன்று தான்.

பறுவமும் வரும் அமாவாசையும் வரும் நிலா ஒன்று தான்.

நிலா - அது தேய்வதும் இல்லை வளர்வதுமில்லை.

பாருங்கள் சுற்றி ஆரம்பித்த இடத்திற்கே வந்து விட்டோம்.

இந்தச் சுற்றைக் காட்டும் வட்டந்தான் இந்தச் சிவ தாண்டவத்தை அடக்கி நிற்கும் பூஜ்ஜியத்தானின் இராஜ்ஜியத்தைக் காட்டும் வட்டமா?

வாழ்க்கை என்பது ஒரு சக்கரமே. ஆதனால் தான் வரலாற்றையும் சக்கரமென்றார்கள் அன்றே. அன்று வாலி வதம் . இன்று புலி வதம் இரண்டுமே மறைந்திருந்து செய்யப்பட்ட போர்க் குற்றங்களே! “கிஸ்றி றிப்பீட்ஸ் இற்செல்வ்.” - ஆய்வாளர்கள் எதிர்வு கூற இதை விட என்ன கணிப்புச் சூத்திரம் தேவை?

உயிரினம் சட உடலினதும் உயிரான ஆன்மாவினதும் கூட்டென்றால் இந்தக் உடலான கூட்டை விட்டு விலகும் ஆவி ……உயிர் எங்கே போகிறது?

நம்மை விட்டுப் பிரிந்த நம் முன்னோரெல்லாம் எங்கே இருக்கிறார்கள்?

ஆண்டுத் திவஜம் முடியும்வரை ஓராண்டு நம்மைச் சுற்றி வரும் அவர்களிற் பலர் பிறவிப் பயணத்தை தொடரலாம் அல்லது மேலெழுந்து ஈர்ப்பு சமநிலையுள்ள உயரத்தில் ஓய்வாக அசைவின்றி அமைதி அடையலாம்.

இருந்தாலும் இந்தத் சிரார்த்த திதிகள் போன்ற காலங்களில் பிதிர் தர்ப்பணங்களிற்கான தொடர்பு வாய்ப்புக்கள் அதிகம் என்கிறார்கள்.

ஆதற்கான விஞ்ஞான விளக்கத்தை பிறிதொரு சமயத்தில் பார்ப்போம்.

பெற்றவரோடு நாம் தொடர்பு கொள்ளக் கூடிய தினங்களே இந்த பறுவ அமாவாசைத் தினங்கள் என்கிறார்கள்.

நம்ப முடிகிறதோ இல்லையோ நாமும் நம் முன்னோர்க்கு  பிதிர் தர்ப்பணம் செய்வோமாக!
ஆற்றல் மிக்க ஆடி அமாவாசை


ஒரு வருடத்தை, அயனங்கள், பருவங்கள் (ருதுக்கள்), மாதங்கள், பட்சங்கள், வாரங்கள், நாட்கள், ராசிகள் என்றெல்லாம் கணக்கிட்டுப் பிரித்துக் காட்டியுள்ளனர் நம் முன்னோர்கள். அதில் "அயனம்' என்பதை ஒரு வருடத்தின் இரண்டு பகுதிகளாக, அதாவது தை முதல் ஆனி வரை "உத்தராயனம்' என்றும், ஆடி முதல் மார்கழி வரை "தட்சிணாயனம் என்றும் கணக்கிட்டுள்ளனர்.
சூரியன், தெற்கு நோக்கி தன் பயணத்தைத் தொடங்கும் காலம் தட்சிணாயனம். இது ஆடி மாதத்தில் தொடங்குகிறது. ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் இருப்பார். சூரியனும், சந்திரனும் கடக ராசியில் சேரும் நாள் "ஆடி அமாவாசை' என்ற புனித நாளாகும்.
சந்திரனின் ஆட்சி பெற்ற வீடு கடகம். அன்று சந்திரனின் பலம் அதிகம். சிவ அம்சம் சூரியன்; சக்தி அம்சம் சந்திரன். பொதுவாக அமாவாசையன்று செய்யப்படும் வழிபாடு, ஜபம், தவம் ஆகியவை பெரிதும் பலன், தரக் கூடியவை. இருப்பினும் தை அமாவாசையும், ஆடி அமாவாசையும் தனிச் சிறப்புடையவை. அதுவும் சந்திரன் ஆட்சி பெற்ற கடக ராசியில் சூரியனும், சந்திரனும் இணையும் ஆடி அமாவாசை மிகவும் விசேஷ நாளாகக் கருதப்படுகிறது. அன்று "தென் புலத்தார்' என்னும் முன்னோர்களை நினைவு கூர்ந்து, அவர்களுக்கு எள்ளும், நீரும் கொடுப்பது மரபு. அதனால் அவர்கள் வாழும் சந்ததியினரை வாழ்த்தி வரம் அளிக்கிறார்கள் என்பது நமது சாஸ்திரம் கண்ட உண்மை. அன்று புனித நீர்நிலைகளில் நீராடி முன்னோர்களுக்கான வழிபாட்டைச் செய்வது மிகவும் உகந்தது.
"வேதாரண்யம்' அருகில் உள்ள கோடிக்கரை என்ற தலத்தில் உள்ள ருத்ர கோடி தீர்த்தத்தில் (கடல்), ஆடி - தை அமாவாசை, மாசி மகம், அர்த்தோதயம், மகோதயம் முதலான புனித நாட்களில் பெருமளவில் மக்கள் நீராடுவது வழக்கம்.
. அமாவாசை திதியோடு சோமவாரமும் சேர்ந்தால் அது "அமாசோமவாரம்' எனப்படும். திங்கள் கிழமை, காலை நேரங்களில், அமாவாசை திதியில், அரச மரத்தை வலம் வருவது மிகவும் விசேஷம். பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் என்னும் மும்மூர்த்திகளின் சொரூபம் "அரச மரம்' என்பதால் அது மிகவும் பெருமைக்குரியது. பசு வழிபட்டதாகக் குறிப்பிடப்பெறும் சிவன் கோயில்களில் பெரும்பாலும் அரச மரமே தல விருட்சமாக இருப்பது சிந்திக்கத் தக்கது. அரச மரம், உயிரியல் மின்சக்தி கொண்டது. அது நாள் ஒன்றுக்கு 1800 கிலோ கரியமில வாயுவை (கார்பன்-டை-ஆக்ûஸடை) ஜீரணித்து, 1400 கிலோ பிராணவாயுவை (ஆக்ஸிஜனை) வெளிவிடுகிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். பௌத்த மதத்திலும் அரச மரத்துக்கு முக்கியத்துவம் உண்டு. புத்தர், ஞானம் பெற்றது அரச மரத்தின் (போதி மரம்) அடியிலமர்ந்து தியானித்த போதுதான்!சந்திரனின் ஆதிக்கம் மிகுந்த அமாவாசையும், அவனுக்குரிய கிழமையான திங்கள் கிழமையும் இணைந்த நாளில், காலையில், அரச மரத்தை அச்வத்த நாராயணராக (அச்வத்தம் - அரச மரம்) தியானித்து 108 முறை வலம் வருவார்கள். இதனை "அமாசோமவார விரதம்' அல்லது "சோமவார பிரதட்சணம்' என்பர். இப்படி 108 முறை வலம் வரும்போது அவரவர் சக்திக்கேற்ப ஒரு பொருளை மரத்தின் முன் சமர்ப்பிப்பர். இது பிரதட்சண எண்ணிக்கைக்கும் உதவும். 108 முறை வலம் வந்த பின் அப்பொருளைத் தானமாக அளிப்பர். அமாசோமவார விரதம் இருந்து அரசமரத்தை வலம் வரும் பெண்களுக்கு "நன்மக்கட் பேறு' ஏற்படும் என்பது பெரியோர்கள் கண்ட உண்மை. வயதானவர்கள் இவ்விரதத்தை மேற்கொண்டால் பித்ரு சாப நிவர்த்தி (தென் புலத்தார் இட்ட சாபம் தீர்தல்) ஏற்படும் என்றும் நமது சாஸ்திரம் கூறுகிறது. இந்த விரதத்தின் பெருமையை பீஷ்மர் தருமருக்கு விளக்கியதாக மகாபாரதம் கூறுகிறது.
சூரியனும், சந்திரனும் இணைந்து இயற்கை செயல்படுகின்ற நாள் அமாவாசை அல்லவா? அன்று பூமி, சூரியன், சந்திரன், கடல், மலை, தாவரங்கள் முதலிய அனைத்திலும் இயற்கையின் போராட்டம் நிறைந்திருக்கும். இயற்கையின் கடும் தீவிர காந்த சக்தி (அல்ட்ரா மேக்னெட் பவர்) மிக அதிக அளவில் கதிர் இயக்க முறையில் அன்று வெளிப்படுகின்றது. இதன் சக்தி பல கோடி மடங்கு மனித சக்தி என்றும், இந்தக் கதிர் இயக்கத்திற்கு மனித சக்தி ஈடு கொடுக்க முடியாது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எனவேதான் நமது தேக ஆரோக்யத்தை வளர்த்துக்கொள்ள அமாவாசை நாட்களில் கோயில் திருக்குளங்கள், புண்ணிய நதிகள், கடல் ஆகிய நீர்நிலைகளில் நீராடி இறைவனை வழிபட வேண்டும் என்று விதித்தார்கள். (தீவிர நோயாளிகளுக்கு இதில் விதி விலக்கு உண்டு). கோயில்களில் உள்ள தல விருட்சங்களை வலம் வந்து, அந்த மூலிகை மரக்காற்றை சுவாசிப்பதால் உடல் ஆரோக்யம் பெருகும். மலை ஏறி அங்குள்ள கோயிலை தரிசிப்பதும் உடல், மன ஆரோக்யத்திற்குப் பெருந்துணை புரிகின்றன.
"தர்ச பூர்ண மாஸம்' என்று ஒரு யாகத்தைப் பற்றி ரிக் வேதம் குறிப்பிடுகிறது. இது அமாவாசையிலும், பௌர்ணமியிலும் ஆயுட்காலம் முழுவதும் செய்யப்படுவதாகும். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் இருப்பதால், அன்று சூரிய ஒளியில் சந்திரனைப் பார்க்க முடியாது. எனவே, வேத காலத்தில் இதை வைத்துக் கொண்டுதான் நாட்களைக் கணக்கிட்டு அறிந்தார்கள் என்று உணர முடிகிறது.
திருநாவுக்கரசு சுவாமிகள் தம்முடைய எண்பதாவது வயதில், கயிலை மலையில் சிவபெருமானை தரிசிக்க வேண்டி, வடதிசை நோக்கிச் சென்றார். வயது முதிர்ந்த நிலையில், கால், உடல் தேய நடந்தும், தவழ்ந்தும், உருண்டும் "எப்படியும் கயிலைநாதனை தரிசிக்க வேண்டும்' என்ற உறுதியோடு யாத்திரையைத் தொடர்ந்தார். அவரது பக்தியின் உறுதியில் மகிழ்ந்த இறைவன், வழியில் தடாகம் ஒன்றை உண்டாக்கினார். ""நாவுக்கரசே! நீவிர் எழுந்து இத்தடாகத்தில் மூழ்கி, திருவையாறு அடைந்து அங்கு கயிலைக் காட்சியைக் கண்டு இன்புறும்'' என்று பணித்தருளினார். அதன்படி அப்பொய்கையில் நீராடி எழுந்ததும், திருவையாறில் கயிலைநாதன் காட்சியைக் கண்டு வியந்தார் திருநாவுக்கரசர். ""கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்'' என்று விவரிக்கும் ""மாதர் பிறைக் கண்ணியானை'' என்று தொடங்கும் காந்தாரப் பண்ணில் அமைந்த பதிகத்தைப் பாடி, அந்த அற்புதக் காட்சி இன்பத்தில் திளைத்தார்.
இந்நிகழ்ச்சி நடைபெற்ற நன்னாள், ஆடி அமாவாசை தினமாகும். அப்பர் பெருமானுக்குக் காட்சியளித்த மூர்த்தி, திருவையாறு கோயிலில் தெற்கு பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் அருள் பாலிக்கிறார். கயிலைக் காட்சி விழா, ஆடி அமாவாசையன்று திருவையாறு திருக்கோயிலில் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது.


No comments:

Post a Comment