Monday, June 27, 2011

ஆன்மிக கதைகள் 38 -ஜென்ம புத்தி மாறாது

ஜென்ம புத்தி மாறாது

திருடன் ஒருவன் ஊர் மக்களிடம் பிடிபட்டான். அவன் வெட்கப்படும்படி கடுமையான தண்டனையை கொடுக்க அவர்கள் முடிவெடுத்தனர். என்றும் மறையாத அடையாளத்தை உண்டுபண்ண எண்ணி, மூக்கை வாளால் வெட்டி சேதப்படுத்தினர். மனம் நொந்த திருடன்,யார் கண்ணிலும் படாமல் காட்டுக்குள் ஓடிவிட்டான். அங்கு கிடைக்கும் கனி வகைகளை உண்டு வாழ்ந்தான். வழிப்போக்கர்கள் யாராவது கண்ணில் பட்டால் அவர்களிடம் இருந்து தப்பிக்க, தியானம் செய்வது போல பாசாங்கு செய்வான். நடிப்பதே நாளடைவில் நிஜமானது. அவன் பார்வையில் கனிவு உண்டானது. ஞானியாக மாறிவிட்ட திருடனை மக்கள் "காட்டு பாபா' என்று அன்போடு அழைத்தனர்.
மக்கள் அவனிடம் நெருங்க அச்சப்படுவதற்கு பதிலாக, அவனை வந்து வணங்கத் தொடங்கினர். ஆண்டுகள் பல சென்றன. பாபாவின் புகழ் மக்கள் மத்தியில் பரவியது. அவரிடம் இளைஞன் ஒருவன் உபதேசம் பெற விரும்பினான். குறுவாள் ஒன்றைக் கொண்டு வந்தால் தீட்சை அளிப்பதாக காட்டுபாபா உறுதி அளித்தார். இளைஞனும் வாளோடு திரும்பினான்.
அவனை ஆளரவம் இல்லாத காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று,"தீட்சை பெற்றுக் கொள்' என்று சொல்லி வாளால் மூக்கைத் துண்டித்தார். வலி தாளமுடியாமல் இளைஞன் அலறினான். "தம்பி! இது தான் நான் பெற்ற தீட்சை! அதையே உனக்கும் அளித்துவிட்டேன். தகுந்தவர்களுக்கு நீயும் இதே தீட்சையைக் கொடு' என்று உபதேசம் அளித்ததோடு தன் கடந்த வாழ்க்கையில் திருடனாக வாழ்ந்ததையும், தண்டனையாக மூக்கு அறுபட்டதையும் இளைஞரிடம் எடுத்துச் சொன்னார்.
ஆனால், அதன் பின் தன் தீட்சாரகசியத்தை அந்த இளைஞர் யாரிடமும் தெரியப்படுத்தவே இல்லை. மனமும் குணமும் என்றுமே மாறுவதில்லை. ஜென்மபுத்தியை என்ன செய்தாலும் மாற்ற முடியாததாகவே உள்ளது. நாம் தான் அவரவர் குணத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment