Wednesday, August 31, 2011

விநாயகர் சதுர்த்தி

விநாயகர் என்றால் மேலானவர் என்று பொருள்படும். தனக்கு மேல் தலைவர் ஒருவரும் இல்லை என்பதை உணர்த்துவதே விநாயகரின் தத்துவம். ஓம் எனும் ஓங்கார வடிவமாக விளங்கும் ஸ்ரீ விநாயகப் பெருமான் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகின்ற முக்கியமான விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி. ஆண்டுதோறும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தி திதியன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் முதல்தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து வரும் ஒன்பது நாளும் விநாயகர் நவராத்திரி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில் சதுர்த்தி தொடங்கி 11 நாட்கள் ஆனந்த சதுர்த்தி விழாவாக கொண்டாடுகின்றனர்.

எளிமையின் நாயகன்

விநாயகர் குழந்தைகளின் கடவுள் அதனால்தான் யானை முகமும், மனித உடலும், நான்கு கரங்களும், பெருத்த வயிறும், முறம் போன்ற காதுகளும் கொண்டு அருளே வடிவாக காட்சி தருகிறார். வேண்டுவோருக்கு வேண்டுவன அருளக்கூடிய மிகவும் எளிமையான கடவுள் கணபதி. வேதங்கள் போற்றும் வேழமுகத்தோன். அனைவருக்கும் அருள்பாலிக்கும் ஆனைமுகத்தோன். இவரை எளிமையாக வழிபட்டாலே நமக்கு அருளை வாரி வணங்குவார். அதனால்தான் அருகம்புல்லையும், மூஞ்சூரையும் தனக்கு பிடித்தமானவையாக வைத்திருக்கிறார்.

முழுமுதற் கடவுள்

ஸ்ரீ விநாயகரே முழு முதற்கடவுள். எந்த ஒரு செயலைச் செய்யத் தொடங்கினாலும் விநாயகரை நினைந்து துதித்து அச்செயலை ஆரம்பித்தால் சுபமாக முடியும் என்பது நிதர்சனமான உண்மை.பாரத தேசத்தின் இதிகாச காவியமான மஹாபாரதத்தை தனது தந்தத்தை எடுத்து எழுதியதன் வாயிலாக விநாயகப்பெருமானே எழுத்துக்கலைக்கு வித்திட்டவர் ஆகிறார்.ஆகையினாலேயே எழுதத் தொடங்கும் முன் பிள்ளையாரை ஞாபகப்படுத்தும் சுழியும் - O (ஆதியும் அந்தமும் அவரே), தும்பிக்கையை நினைக்கவைக்கும் கோடும் - இணைந்து "உ" எனும் பிள்ளையார் சுழி உருவானது. பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கும் அனைத்து செயல்களையும் பிள்ளையார் அருளால் பிசிறின்றி முடித்துவிடும் என்பது ஆன்றோர் வாக்கு.

விநாயகரின் தோற்றம்

சிவபெருமான் ஒருமுறை வெளியே சென்றிருந்த போது பார்வதிதேவி நீராடச் சென்றார். அப்போது தனக்குக் காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், குளிப்பதற்காக வைத்திருந்த சந்தனத்தை எடுத்து ஒரு உருவம் செய்தார். இறைவன் அருளால் அதற்கு உயிர் வந்தது. அவ்வுருவத்தை பிள்ளையென பாவித்த பார்வதி தேவி, எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்திவிட்டு நீராடச் சென்றுவிட்டார். அப்போது அங்கு வந்த சிவபெருமானை பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் சினங்கொண்ட சிவன் பிள்ளையாரின் சிரத்தை கொய்துவிட்டு உள்ளே சென்றுவிடார். நீராடி முடிந்ததும் வெளியே வந்த பார்வதி தேவி சிரச்சேதமுற்றுக் கிடந்த பிள்ளையார் கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார். தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்துவிட்டதை அறிந்த அவர் ஆவேசங் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட அனைத்தையும் அழிக்கத் தொடங்கினார்.

வடதிசையில் இருந்த இறைவன்

காளியின் ஆவேசத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து 'வடதிசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொய்து வருமாறு கட்டளையிட்டார். அதன்படி வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது. அவர்கள் அதன் தலையைக் கொய்து சென்று இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பிள்ளையாரின் முண்டத்தில் வைத்து உயிரூட்டிவிட்டார். இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் அகமகிழ்ந்து பிள்ளையாரைக் கட்டி அணைத்துக்கொண்டார். சிவபிரான் அந்தப் பிள்ளையாருக்கு "கணேசன்" என பெயரிட்டு தமது கணங்களுக்கு கணாதிபதியாகவும் நியமித்தாரென 'நாரத புராணத்தில்' தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நடந்தது ஒரு ஆவணி மாதம் சுக்கில பட்ச சதுர்த்தி திதியாகும். அந்த நாளையே ஸ்ரீ விநாயகர் ஜெயந்தியாக, விநாயகர் சதுர்த்தி விழாவாகக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் களி மண்ணில் அமைந்த விநாயகருக்கு அனைத்து அலங்காரங்களையும் செய்து, விநாயகருக்குப் பிடித்தமான கொழுக்கட்டை, அவல், பொரி முதலான அனைத்தும் அமைத்து வழிபடுவது சிறப்பு.

இருபத்தியோருபேறுகள்

விநாயகர் சதுர்த்தி விரதம் கடைபிடிப்பதால் 21 பேறுகள் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை. தர்மம், பொருள், இன்பம், செளபாக்கியம், கல்வி, பெருந்தன்மை, நல்வாழ்வுடன் கூடிய மோட்சம், முக லக்ஷணம், வீரம், வெற்றி,.எல்லோரிடமும் அன்பு பெறுதல், நல்லசந்ததி, நல்ல குடும்பம், நுண்ணறிவு, நற்புகழ், சோகம்இல்லாமை, அசுபங்கள் அகலும், வாக்குசித்தி, சாந்தம், பில்லிசூனியம் நீக்குதல், அடக்கம் ஆகியவை கிடைக்கும் என்கின்றன புராணங்கள். எனவே நன்மைகள் அனைத்தும் கிடைக்க விநாயகப் பெருமானைப் போற்றி நலம் பெறுவோம்.

Sunday, August 28, 2011

பிரம்படி பட்ட இறைவன்

மதுரையில் மாதங்களின் பெயரால் தெருக்கள் உள்ளன. இவை ஆடி வீதி, சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி மூல வீதி எனப்படுகின்றன. முதல் இரண்டு தெருக்களுக்கும் நட்சத்திரங்களின் பெயர் இல்லை. ஆவணித் தெருவுக்கு மட்டும் மூல நட்சத்திரத்தைச் சேர்த்துள்ளதன் மூலம் இந்த நாளின் முக்கியத்துவத்தை உணரலாம். ஆவணி மூலம் என்பது ஆவணி மாதத்து மூல நட்சத்திரத்திலே சிவபெருமானைப் போற்றி எடுக்கப்படும் விழாவாகும்.

ஆவணித்திருவிழா

இந்த ஆண்டிற்கான திருவிழா மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆகஸ்ட் 24 ம் தேதி கொடியேற்றத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. 12 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும் இந்த விழாவில் முக்கிய நிகழ்வுகளாக 30ம் தேதி தங்கச்சப்பரத்தில் பிரியாவிடையுடன் சுவாமியும், அம்மனும் கோவில் வளாகத்தில் உள்ள குலாலர் மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அன்றைய தினத்தில் இருந்து தினம் ஒரு திருவிளையாடல் என கருங்குருவிக்கு உபதேசம், நாரைக்கு முக்தி கொடுத்தல், மாணிக்கம் விற்ற லீலை, தருமிக்கு பொற்கிழி அளித்தல், விறகு விற்றல், வளையல் விற்றல், என தினம் ஒரு திருவிளையாடல் நடைபெறும் செப்டம்பர் 6-தேதி நரி பரியாக்கிய திருவிளையாடலும், செப்டம்பர் 7-தேதி பிட்டுக்கு மண்சுமந்த லீலையும் நடைபெறுகிறது.

திருவிளையாடல் நாயகன்

மதுரையில் கோயில் கொண்டிருக்கும் சொக்கநாதப் பெருமான் ஆடிய 64 திருவிளையாடல்களில் ஆவணி மூல நாளிலே ஆடிய திருவிளையாடல் மக்களை மிகவும் கவர்ந்ததாகும். ஏழை முதியவளுக்காக பிட்டுக்கு மண் சுமந்தததும், மாணிக்கவாசகரின் பக்தியை உணர்த்த நரிகளை பரிகளாக்கியதும் ஆவணி மூலத்தில் ஆடிய திருவிளையாடலாகும்.

ஓயாத பெருமழை பெய்து வைகை நதி பெருக்கெடுத்தது. வைகை ஆற்றின் கரைகளை சீர்ப்படுத்தவும், பலப்படுத்தவும், மதுரை மக்களுக்கு பாண்டிய மன்னனால் கட்டளை இடப்பட்டது. மன்னனின் கட்டளைப்படி கடமைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

வந்தி என்ற, பிட்டு விற்கும் ஏழை மூதாட்டி, வைகை ஆற்றின் கரையின் ஒரு சிறு பகுதியைப் பலப்படுத்த இடம் ஒதுக்கப்பட்டது. தள்ளாமையினால் தனது பகுதி வேலையை வந்தியினால் செய்யமுடியவில்லை. இறைவனிடம் முறையிட்டார் வந்தி. ஏழை மூதாட்டிக்கு உதவுவதற்காகவே இறைவன் கூலியாள் வடிவில் வந்தார். கூலி தர தன்னிடம் எதுவும் இல்லை என்று வந்தி கூறவே உதிர்ந்த பிட்டை சிவபெருமான் ஊதியமாக ஏற்று, மூதாட்டியின் வேலையை செய்ய உடன்பட்டார். ஊதியத்தை உண்டபின், தனது வேலையைச் செய்வதற்காக , மூதாட்டியிடம் விடைபெற்று ஆற்றங்கரைக்குச் சென்றார்.

பிரம்மபடி பெற்ற இறைவன்

உண்ட மயக்கம் தொண்டருக்கும் வருமே அது பிட்டு உண்ட சொக்கருக்கும் வந்தது. கூலியாள் வடிவில் இருந்த இறைவன் வேலை செய்யாமல் ஆற்றங்கரையில் படுத்துறங்கினார். அப்போது மேற்பார்வை பார்க்க வந்த பாண்டிய மன்னன் கூலியாளை எழுப்பி வேலையைச் திருந்தச் செய்யுமாறு கூறினார். அதற்கு கூலியாள் ஒப்புக்கொள்ளாமல் போகவே அவனை பிரம்பால் அடித்து தண்டனை வழங்கினார். சிவனுக்குக் கிடைத்த சவுக்கடியை உலக உயிரினங்கள் எல்லாம் உணர்ந்தன. பாண்டிய மன்னனும் அந்த அடியை உணர்ந்தான், தனது பிழையையும் உணர்ந்தான். உலக மக்களுக்கு தன் இருப்பை உணர்த்தவும், தன்னையே தஞ்சம் என்று அடைந்தவருக்கு உடனடியாக உதவ வருவேன் என்றும் உணர்த்த இறைவன் ஆடிய திருவிளையாடல் இது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மூல நட்சத்திரத்தன்று மதுரையில் பிட்டுக்கு மண் சுமந்த விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுந்தரேசர் பொற்கூடையுடனும் பொன் மண்வெட்டியுடனும் இந்த விழா நாளில் வைகை ஆற்றிலிருந்து பக்தர் சூழ கோயிலுக்கு எழுந்தருளுவர். திருவிழவை காணவரும் பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம் வழங்கப்படும்.

பரிகளை நரிகளாக்கிய இறைவன்

பாண்டிய மன்னனரின் மந்திரியாக பணியாற்றியவர் மாணிக்கவாசகர். பணி என்னவோ பாண்டியனிடம்தான் என்றாலும் மனமெல்லாம் அந்த சுந்தரேஸ்வரனிடம்தான் இருந்தது. அதனால்தால் குதிரைகள் வாங்குவதற்காக மன்னன் கொடுத்த பணத்தை கொண்டு கோவில் கட்டி முடித்து விட்டார் மாணிக்கவாசகர். இதனைக் கேள்விப்பட்ட பாண்டிய மன்னன், மாணிக்கவாசகருக்கு தண்டனை அளித்தார்.

சுவாமியவர்களை விடுவிப்பதற்காகச் சிவபெருமானே குதிரை வியாபாரியாக வந்து காட்டிலுள்ள நரிகளைப் பரிகளாக்கிக் கொண்டுவந்து அவரைச் சிறையினின்றும் மீட்டது ஆவணி மாத மூல நட்சத்திரத் தினமாகும். பின்னர் பரிகள் எல்லாம் நரிகள் ஆக மாறி காட்டுக்குள் ஓடிய உடன்தான் மாணிக்க வாசகரின் அருமை மன்னருக்கு தெரிந்தது. வந்தது இறைவன்தான் என்பதை நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து கொண்டனர். இந்த திருவிளையாடல் நடந்ததும் ஒரு ஆவணி மூல நட்சத்திரத்தில்தான்.

மூல நட்சத்திரத்தின் சிறப்பு

அன்னை சரஸ்வதிக்குரிய நட்சத்திரமும் மூலம்தான். சமயோசித அறிவு, தைரியம், அமானுஷ்ய சக்தி போன்றவை வேண்டாமா! ஆகியவற்றை தன்னுள்ளே கொண்டுள்ள ஆஞ்சநேயருக்கு ஜென்ம நட்சத்திரம் மூலம்தான்.

மூல நட்சத்திரத்திற்குரிய கிரகம் கேது. வாழ்க்கையின் நிலையாமையை பற்றிய ஞானத்தை தருபவர் இவர். கடவுளின் திருவடியே நமக்கு சரணாகதி என்று இவர் உணர்த்துகிறார்.

Monday, August 22, 2011

சூரிய நமஸ்காரம்

ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவத் கீதையில் பகவன் விஷ்ணு. கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும்.

சூரிய நமஸ்காரம்

முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம்.

ஆதித்ய ஹிருதயம்

அகத்தியர், ஸ்ரீ ராமபிரானுக்கு, ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை உபதேசித்தார். இந்த நூலை பாராயணம் செய்து பலம் பெற்றமையால் மிகச்சுலபமாக ராவணனை ராமன் வெற்றி பெற முடிந்தது. பகை, அச்சம் விலக பகலவன் அருள் செய்வான்.

தினமும் சூரியனை வணங்கவேண்டும்.

எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும் காலை எழுந்தவுடன் உடலை தூய்மை செய்து கொண்டு சூரியன் இருக்கக்கூடிய திசையைப்பார்த்து ' ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமே சதா " என்று சொல்லி மூன்று முறை வணங்கினால் போதும். ஆதவன் அளவில்லாத பலன்களை அள்ளி வழங்குவான் என்பது உறுதி.

சூரியன்தான் இப்பூவுலகில் உயில் வாழும் அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால் இப்பூலவுகில் வாழ்க்கையே இருக்காது. பல் ஆயிரம் ஆண்டுகளாக சூரியனிடம் இருந்து ஆற்றல் பெறுவதை நம் முன்னோர்கள் ஒரு விஞ்ஞானமாக வளர்த்து வந்துள்ளார்கள். இந்த விஞ்ஞானம் யோகம் எனப்படுகின்றது. சூரிய நமஸ்காரப் பயிற்சியும் யோகா முறைகளுள் ஒன்றாக கருதப்படுவதால் இன்றும் பலர் அதனை கற்றுக்கொள்கின்றனர்.

சூரிய நமஸ்காரத்தில் உடல் அசைவுகளும் மூச்சு ஒட்டமும் இணக்கமாக நடைபெறுகின்றன. நுரையீரல்களில் காற்றோட்டம் தாராளமாகின்றது. இரத்தம் உயிர்க்காற்றால் நலம் பெறுகின்றது. ஏராளமான கரியமில வாயுவையும் பிற நச்சுப் பொருள்களையும் மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம் சூரிய நமஸ்காரம் உடலுக்குப் பெரும் நன்மை விளைவிக்கின்றது.

சூரிய நமஸ்காரம் ஜீரண மண்டலத்திற்கு உயிரூட்டி ஆற்றலை அளிக்கின்றது. கல்லீரல், வயிறு, மண்ணீரல், குடல்கள் எல்லாம் நன்றாக மசாஜ் செய்யப்படுகின்றன. இதனால் மலச்சிக்கல் மறைகின்றது. வயிற்று உறுப்புக்களில் இரத்தம் தங்ககுவதில்லை என்பதால் உடல் உறுதியடைகின்றது.

நினைவாற்றல் அதிகரிக்கும்:

உடலின் ஆரோக்கியத்தை நிலைநாட்டுவதில் சூரிய நமஸ்காரம் சிறந்த இடம் பெறுகின்றது. இது இரத்தக் கொதிப்பை மட்டுப்படுத்தும். இதயத் துடிப்பைச் சமன் செய்யும். கை, கால் போன்ற உறுப்புகளுக்குச் சூடு கொடுத்துக் காக்கும்.

நரம்பு மண்டலத்தை விழிப்புடனிருக்க வைப்பதில் சூரிய நமஸ்காரத்திற்கு இணையானது வேறு ஒன்றுமில்லை. சிம்பதட்டிக், பாராசிம்பதட்டிக் நரம்புகளின் செயல்களை நெறிப்படுத்துவதன் மூலம் நல்ல ஒய்வுக்கும் உறக்கத்திற்கும் உதவுகின்றது. இதனால் நினைவாற்றல் அதிகரிக்கின்றது.

உடல் பொலிவடையும்:

சூரிய நமஸ்காரத்தை முறைப்படி செய்யும் போது வியர்வை உண்டாகும். ஏராளமாக உடலில் உள்ள நச்சுப்பொருட்கள் தோலின் வழியே வெளியேறும். நன்றாக வியர்க்கும் வரை இப்பயிற்சி செய்வது நல்லதென சூரிய நமஸ்காரத்தைப் பிரபலப்படுத்திய அவுண்ட் அரசர் கூறுகின்றார். வியர்வை பத்துப் பதினைந்து நிமிடங்களிலேயே வெளிவருவதை அனுபவத்தில் அறியலாம். தோலின் மூலம் வியர்வை வெளிவரும் அளவுக்கு உடல்நலம் ஒங்கும்.சூரிய நமஸ்காரத்தில் கழுத்து முன் பின் வளைகின்றது. இதனால் தைராயிட், பாராதைராயிட் சுரப்பிகளுக்கு இரத்தம் கிடைக்கின்றது. அவை செயல்படுவதனால் எல்லா எண்டோக்கிரைன் சுரப்பிகளும் தமக்குரிய இயல்பான காரியங்களைச் செய்கின்றன. தோல் புத்துணர்வு பெற்றுப் பொலிவடைகின்றது.

சூரிய நமஸ்காரம் செய்வதற்கு ஒரு நாளில் மூன்று முதல் பத்து நிமிடங்களே போதும். இது உடம்பு முழுமைக்கும் பயிற்சி அளிக்கின்றது.

சூரிய நமஸ்கரத்திற்குச் செலவொன்றுமில்லை. பளுவான கருவிகள் எதுவும் தேவையில்லை. வேண்டியதெல்லாம் நான்கு சதுர மீட்டர் இடம் தான்.

சூரிய நமஸ்காரத்தைப் பழகப் பழக இன்பம் அதிகரிக்கும். முதலில் சுலபமான உடல் நிலைகளைப் பழக வேண்டும். ஆரம்பத்தில் பூர்ண வெற்றியை எதிர்பார்க்க கூடாது. போகப் போக இலகுவாக இயக்கங்கள் முழுமையான கைவரும்.

சூரிய நமஸ்காரம் ஆண், பெண், சிறுவர், சிறுமியர் அனைவரும் செய்யலாம். தனியாகவும் கூட்டாகவும் செய்யலாம். ஆண்டு முழுவதும் செய்யலாம். அரங்கிலும் செய்யலாம். அறையிலும் செய்யலாம். காலை நேரம் சிறந்தது. முடியாதவர்கள் மாலையிலும் செய்யலாம். சாப்பிட்ட பின் குறைந்தது இரண்டு மணி நேரமாவது கழித்து தான் செய்ய வேண்டும். அலுவலக வேலையால் களைத்துப் போனவர்களுக்குக் கூட பத்து பன்னிரெண்டு நமஸ்காரங்கள் டானிக் போல உயிரூட்டும். தனி அறையில் அமைதியில் செய்வது புத்துணர்வை வளர்க்கும். வேண்டியதெல்லாம் ஒரு சிறு ஜமுக்காளமும் துண்டும் தான்.

ஆவணி ஞாயிறு

தமிழ் மாதங்களில் ஒவ்வொன்றுக்கும் தனி முக்கியத்துவம் உண்டு. சித்திரை தொடங்கி பங்குனி வரை வாரநாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. இதில் ஆடி வெள்ளி, ஆவணி ஞாயிறு, புரட்டாசி சனி, கார்த்திகை சோமவாரம் போன்றவை குறிப்பிடத்தக்க விரதநாட்களாகும்.

விரதங்களும் பலன்களும்

திங்கள் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவரின் பரிபூரண அன்பைப் பெறலாம். செவ்வாய் கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் மனைவி தகராறு நீங்கி வாழலாம். புதன் கிழமை விரதம் இருந்தால் நோய்கள் தீரும். வியாழன் கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கியம் பெறலாம். வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் கணவன் நீண்ட ஆயுளைப் பெறலாம். சனிக்கிழமை விரதம் இருந்தால் செல்வம் பெருகும். ஞயிற்றுக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறலாம், நோய் வராமல் தடுக்கலாம்.

சூரிய நமஸ்காரம்

ஆவணி மாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை விரதம் இருப்பது சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் "ஞாயிறு என்றாலே "சூரியன். அது மட்டுமின்றி, ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிறு காலை 6-7 மணி வரை சூரிய ஹோரையே இருக்கும். ஆவணியில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆன்மிக அறிவைப் புகட்டினால், அவர்கள் அதில் சிறந்து விளங்குவர். சிலருக்கு இயற்கையாகவே ஆன்மிக அறிவு அமையும். தேகநலனுக்காக சூரியநமஸ்காரப் பயிற்சி எடுப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் தொடங்குவது மிகவும் விசேஷம்.

ஆவணி மாதத்தில் சூரியன் சிம்மவீட்டில் ஆட்சி செய்கிறார். சூரியனுக்கு சிம்மவீடு பலமான வீடு. நமக்கு ஆத்மபலத்தைத் தருபவர் சூரியனே. எனவே தான், ஆவணி மாதத்தில் விநாயகர் அவதாரம், கிருஷ்ணாவதாரம் ஆகியன நிகழ்ந்ததாகச் சொல்வர். சஞ்சலமாக இருந்த அர்ஜுனனுக்கு, ஆத்மபலத்தை அளிக்க கீதையை உபதேசம் செய்ய கிருஷ்ணர் இம்மாதம் பிறந்தார். இதனால் தான் ஆவணிமாதத்தில் "ஞாயிற்றுக்கிழமை முக்கியத்துவம் பெற்றது

கண் ஒளி காக்கும் கடவுள்

சூரியன் ஒளி கொடுக்கும் கடவுள் என்பதால் கண் தொடர்பான பிரச்சினை இருப்பவர்கள் ஆவணி ஞாயிற்றுக் கிழமை விரதம் மேற்கொண்டால் கண் நோய்கள் குணமடையும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். இதனாலேயே அவர்கள் ஞாயிறுக்கிழமை விரதத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தந்தை இல்லாதவர்கள் சூரியனைத் தந்தையாக ஏற்றுக்கொள்கின்றனர். இவர்கள் சூரியோதய வேளையில் கிழக்கு நோக்கி விழுந்து வணங்கி, சூரிய பகவானிடம் ஆசி பெறலாம். இந்த ஆசியின் பலன் இரட்டிப்பாக வேண்டுமானால் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளைத் தேர்ந்தெடுக்கலாம். இந்நாளில், "ஆதித்ய ஹ்ருதயம் சொல்லி சூரியனை வழிபட வேண்டும்.

எதிரிகளை வெல்லும் ஆதித்ய ஹிருதயம்

அகத்தியர் ராம பிரானுக்கு ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை பாராயணம் செய்தார். அற்புதமான அந்த மந்திரத்தை தினமும் பாராயணம் செய்ததால்தான் ராமபிரான் எளிதில் ராவணனை வென்றார் என்கின்றன புராணங்கள். எனவே பகை அச்சம் விலக பகலவனை வணங்கவேண்டும்.

ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவான் கிருஷ்ணர். கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும். முறைப்படி செய்யும் சூரிய நமஷ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம்.

எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும், காலை எழுந்தவுடன் குளித்து விட்டு கிழக்கு நோக்கி “ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமோ சதா” என்று கூறி மூன்று முறை வணங்கினால் போதும் ஆயிரம் பலன்களை ஆதவன் அள்ளித்தருவான்.

Saturday, August 20, 2011

பைரவர் சாமியின் முக்கியத்துவம்

பைரவரை சிவனுடைய ஒரு அம்சமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பைவரர் எல்லைத் தெய்வமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது காவல் தெய்வமாக. மூகாம்பிகை கோயில்களுக்குப் போனால் வீரபத்ரசாமிகள் வலப்பக்கத்தில் இருப்பார். அவர் ஒரு எல்லைத் தெய்வம். அம்பாளை வணங்கிவிட்டு வரும்போது காவல் தெய்வமான வீரபத்ரசாமியை வணங்குவார்கள். அதேபோல, பழமையான சிவலாயங்களிலெல்லாம் நோக்கினால் பைரவர் இருப்பார். நாய் வாகனத்துடன் நின்ற கோலம், வதுவான கோலத்தில்தான் இருப்பார். இது என்னவென்றால், காவலாக இருப்பேன் என்பதைச் சொல்கிறது.
காத்து, கருப்பு அண்டாமல் இருப்பது. போட்டி பொறாமை, வயிற்றெறிச்சலால் வரக்கூடியதை கழிக்கக்கூடியதும் பைரவருக்கு உண்டு. அந்தக் காலத்தில் வழித்துணைக்கு பைரவரை வணங்கிவிட்டுத்தான் எல்லோரும் கிளம்புவார்கள். ஏனென்றால், அப்பொழுதெல்லாம் மாட்டு வண்டிப் பயணம், நள்ளிரவுப் பயணமெல்லாம் அதிகம் இருக்கும். அதற்காக அதுபோலச் செய்வார்கள். தேங்காயை உடைத்து கண் இருக்கும் முடியை எடுத்து அதில் ஐந்து விதமான எண்ணெய்களை விட்டு அதில் திரிபோட்டு விளக்கேற்றுவார்கள். இதுபோல பைரவருக்குச் செய்யும் போது, ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய தோஷம் எல்லாம் விலகும் என்று சொல்வார்கள். ஆகமொத்தத்தில் பைரவர் என்பவர் விசேஷமானவர்.

இதுதவிர, ஜுர பைரவர் என்றெல்லாம் இருக்கிறார். ஜுரம் வந்தால் அவரை வணங்கிவிட்டு வந்தால் ஜுரம் போய்விடும். நிறைய பாடல் பெற்ற தலங்களில், பண்ருட்டி பக்கத்தில் திருவதிகை என்று ஒரு ஊர் இருக்கிறது. வீரதானேஸ்வரம் அது. அங்கு ஒரு பைரவர் இருக்கிறார். இப்படி ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பைரவர் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இதுபோல பைரவரை வணங்கும் போது நோய் விலகும், எதிர்மறை எண்ணங்கள் விலகும்.

சனியால், ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளுக்கு பைரவர் வழிபாடு தைரியத்தையும், எதிர்மறை எண்ணங்களை முழுமையாக வேரறுக்கக்கூடியவர் பைரவர். அதனால் பைரவரை வணங்கும் போது எல்லா வகையான சக்தியும் கிடைக்கும்.

‌‌பிரதோஷ‌த்தை யா‌ர் யா‌ர் கடை‌பிடி‌க்க வே‌ண்டு‌ம்?

‌‌பிரதோஷ‌த்தை யா‌ர் யா‌ர் கடை‌பிடி‌க்க வே‌ண்டு‌ம்?
 பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது.

தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். அதேபோல தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருக்கிறோம். தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியைத்தான் பிரதோஷ நாள் என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது விசேஷமானது.

மற்ற நாட்களில் சிவன் மட்டும் காட்சி கொடுப்பார் வணங்கலாம். பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6 வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் எதாவது ரகசியத்தைச் சொல்வார்கள்.

சைவத்தைப் பொறுத்தவரையில் பிரதோஷம் என்பது பிரதானமான விரதம். அன்றைக்கு எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்துவிட்டு பிரதோஷத்தை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்கிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அது ஒரு அற்புதமான நாள். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடம்பும் நலம் பெறும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. குறிப்பிட்ட அந்த பிரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு எல்லாம் நீங்கும். அடுத்து, உடல் நிலை, மனநிலை எல்லாம் சீராகும். இதுபோன்ற சிறப்புகள் உண்டு.

பொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும்.

பிரதோஷத்தில் ஏழு வகைகள் உள்ளது என்கிறார்களே...

அதெல்லாமும் உண்டு. சுக்ல பிரதோஷம், கிருஷ்ண பிரதோஷம், சனிப் பிரதோஷம் என்று ஒவ்வொரு வாரத்திற்கும் ஒவ்வொன்று உண்டு. ஞாயிறு அன்று ஆதிப் பிரதோஷம். திங்களன்று சோமவாரப் பிரதோஷம், மங்கள வாரப் பிரதோஷம், புதவாரப் பிரதோஷம், குருவாரப் பிரதோஷம், சுக்ர வாரப் பிரதோஷம் என்று இருக்கிறது. இது எல்லாவற்றிலும் சிறப்பு வாய்ந்தது சனிவாரத்தில் வரக்கூடிய பிரதோஷம். இந்த சனிப் பிரதோஷம்தான் எல்லா வகையிலும் சிறப்பு வாய்ந்தது. சனிதான் அதிகமான தோஷத்தையும், துன்பங்களையும் கொடுக்கக்கூடியவர் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அந்த சனிக்கிழமையில் பிரதோஷம் வந்துவிட்டால், சனியால் ஏற்படக்கூடிய பெரிய பாதிப்புகள் எல்லாம் விலகி சாதகமாக வரும் என்று உள்ளது.

பழனி முருகன் கோயிலிற்குச் செல்பவர்கள், பொதுவாக இராஜ அலங்காரத்தையே பார்த்து வணங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏன்? அது சரியா?

பழனி முருகன் கோயிலிற்குச் செல்பவர்கள், பொதுவாக இராஜ அலங்காரத்தையே பார்த்து வணங்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏன்? அது சரியா?
 அறுபடை வீடுகளில் அவதாரங்களாக முருகன் உட்கார்ந்திருக்கிறார். அதில் முக்கியமான வீடு பழனி. இதுதான் நமக்கு அஞ்ஞானத்தை விலக்கி மெய்ஞானத்தை தூண்டக்கூடிய இடம். முருகன் ஏன் அந்தக் கோலத்தை பூணுகிறார்? அப்பா, அம்மா என்பது கூட மாயைதான் என்பதை உணர்த்தக்கூடிய இடம் அது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்கிறோம் அல்லவா. அந்த மாதா, பிதா என்பது கூட பொய்தான். அது கூட ஒரு மாயைதான் என்பதை உணர்த்துவதற்காக உருவான அவதாரம்தான் பழனி அவதாரம்.

நீ ஒரு மெய்ஞானியாக இரு, ஓட்டாண்டியாக இரு என்றெல்லாம் அவர் சொல்லவில்லை. ஒன்றுமே இல்லாமல் சாம்பலைப் பூசிக்கொண்டு, கோவணத்தைக் கட்டிக்கொண்டு வந்து நில் என்றெல்லாம் அவர் அந்தக் கோலத்தில் உணர்த்தவில்லை. தவறான வழியில் செல்வத்தை தேடாதே, பொருளைத் தேடாதே, அப்படி தேடினால் அது உனக்கு நிலைக்காது. பிறகு சங்கடங்களை அனுபவிப்பாய். எதுவுமே வேண்டாம் என்று நீ விட்டுவிட்டால் உன்னைத் தேடி எல்லாமே வரும் என்பதுதான் நிர்வாணக் கோலம். தண்டு கொண்டு கோவணத்துடன் நிற்கும் அந்தக் கோலம். இதுபோல விட்டுவிட்டால், ராஜவாக நீ இருப்பாய் என்பதை உணர்த்தத்தான் இராஜ அலங்காரம்.

அதனால் இந்த இரண்டு அலங்காரமுமே மிகவும் பிரதானம். அதனால், பழனிக்கு போய் முருகன் சாதாரணமாக இருந்ததைப் பார்த்தோம். அது சரியில்லை என்றெல்லாம் சொல்லக்கூடாது. அதாவது பற்றற்று வாழ்தல், பற்றற்று என்றால் எதையுமே சாப்பிடாமல் இருப்பது என்பதெல்லாம் பொருளல்ல, சாப்பிடு, அளவாகச் சாப்பிடு. அதேநேரம் அறநெறியில் சம்பாதித்துச் சாப்பிடு. இதுதான் முருகன் பழனியில் உணர்த்தக்கூடிய ஐதீகம். அதனால் பழனி முருகனை எந்தக் கோலத்தில் பார்த்தாலும் நல்ல பலன்கள் உண்டு.

கண்ணன் அவதரித்த கண்ணன் அஷ்டமி

தர்மம் எங்கெல்லாம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அங்கே நான் அவதரிப்பேன் என்று மகாவிஷ்ணு பகவத் கீதையில் அருளியுள்ளார். இறைவனின் அருள் வார்த்தை ஒவ்வொரு யுகங்கள் தோறும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

கிருத யுகத்தில் இரணியகசிபுவை அழிக்க திருமால் நரசிம்மமாக அவதரித்தார். எடுத்தார் . திரேதா யுகத்தில் ராவணனையும் கும்பர்ணனையும் அவனுடன் சேர்ந்த அரக்கர்களையும் கொல்ல ராமனாக அவரித்தார். துவாபராயுகத்தில் கம்சன், சிசுபாலன் , துரியோதனன், நூற்றுக்கணக்கான கௌரவர்களுடன், கர்ணனையும் சேர்த்து அழிக்க கிருஷ்ணாவதாரம் எடுத்தார் மகாவிஷ்ணு.

அவதார நோக்கம்

ஆவணிமாதம், அஷ்டமி திதியுடன் கூடிய ரோகினி நட்சத்திர நன்னாள் அந்த இறைவன் அவதாரம் செய்த நாள் என்பதால் புண்ணியம் தேடிக்கொண்டது. அன்றுதான் தன் தாய்மாமன் கம்சன் உள்ளிட்ட அரக்கர்களை அழித்து மண்ணுலக மக்களை காக்க மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த நாள்.

தர்மத்துக்குப் புறம்பாக பல அநியாயங்கள் செய்த கம்சனை அழிக்கும்படி, பிரம்மாவிடம் முறையிட்டாள் பூமாதேவி. திருமால், கிருஷ்ணாவதாரம் எடுத்து தர்மத்தை நிலைநிறுத்துவார் என, அவருக்கு வாக்குறுதி அளித்தார் பிரம்மா. அதன்படி வசுதேவருக்கும் தேவகிக்கும் எட்டாவது குழந்தையாய் கண்ணனை பிறக்க வைத்து தன் வாக்குறுதியை நிறைவேற்றினார்.

கிருஷ்ணாவதாரம்

தேவகியும், கம்சனும் சகோதர சகோதரிகள். தனது தங்கை தேவகிக்கும், வாசுதேவருக்கும் பிறக்கும் 8வது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நிகழும் என்று வானத்தில் இருந்து ஒரு குரல் கூற, அதனால் அச்சமுற்ற கம்சன், தேவகியை கொல்ல முயன்ற போது அதனை தடுத்த வசுதேவர் தனக்கு பிறக்கும் பிள்ளைகளை அவனிடமே ஒப்படைப்பதாக வாக்களித்தார். அதன்படி சிறையில் அடைத்து அவர்களை கண்காணித்த கம்சன், தேவகிக்குப் பிறந்த ஆறு குழந்தைகளையும் கொன்றான். ஏழாவதாக கருவுற்றதும், திருமால், மாயை என்ற பெண்ணைப் படைத்து, “தேவகியின் வயிற்றிலுள்ள ஏழாவது சிசுவை, வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றில் சேர்த்து விடு. நீ, நந்தகோபனின் மனைவி யசோதையின் வயிற்றில் கருவாக இருக்க வேண்டும்!’ என்றார்.

அதன்படியே, மாயை அவ்வாறு செய்ய, தேவகிக்கு ஏழாவது கர்ப்பம் கலைந்துவிட்டதாக பேச்சு எழுந்தது; கம்சனும் நம்பி விட்டான். அந்தப் பிள்ளை ரோகிணியின் வயிற்றில் பிறந்தது. அவனே பலராமன். தேவகி எட்டாவதாக கருவுற, திருமால் அவள் வயிற்றில் கருவானார். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று அவளுக்கு கிருஷ்ணர் பிறந்தார். தன்னை நந்தகோபன் மனைவி யசோதையிடம் விட்டுவிட்டு, அவளுக்குப் பிறந்துள்ள பெண் குழந்தையை இங்கே எடுத்து வந்து கம்சனிடம் ஒப்படைக்கும்படி பகவானே அருள்வாக்களித்தார்.

அதன்படி வசுதேவர் கோகுலத்தில் வசித்த யசோதையின் அருகில் தன் குழந்தை கிருஷ்ணனை கிடத்திவிட்டு, அவளுக்குப் பிறந்த பெண் குழந்தையை எடுத்து வந்துவிட்டார். மயக்க நிலையில் இருந்த யசோதைக்கு இது தெரியாது. அந்தப் பெண் குழந்தையைக் கொல்ல கம்சன் வந்தான். அது வானில் எழுந்து, எட்டு கைகளிலும் ஆயுதம் ஏந்தி, “துர்க்கையான என்னை, உன்னால் கொல்ல முடியாது. உன்னைக் கொல்லக்கூடியவன் ஏற்கனவே கோகுலத்தில் பிறந்து விட்டான்!’ என்று சொல்லி மறைந்தது. பின்னர், கிருஷ்ணன் வளர்ந்து கம்சனைக் கொன்றார்.

அவதார தின கொண்டாட்டம்

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கூறிய ஆலோசனைகளே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையாக போற்றப்படுகிறது. இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். தங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகளுக்கு கண்ணன், கோபியர்களைப் போல அலங்கரித்தும் மகிழ்கின்றனர். கிருஷ்ணர் கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடத்தப்படுகின்றன. ஏராளமான பக்தர்கள் கிருஷ்ணர் கோயில்களுக்குச் சென்று தரிசனம் செய்கின்றனர்.

இந்த நாளில் உரியடித் திருவிழாவும், மனித பிரமிடுகளை எழுப்புதலும் நடைபெறும். அதாவது மிக உயர்ந்த இடத்தில் வெண்ணை நிரப்பப்பட்ட பானை கட்டி தொங்கவிடப்படும். அதை இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி - பிரமீது போன்ற தோற்றத்தில் - அந்த பானையை உடைத்து அதில் இருக்கும் வெண்ணையை உண்பது சிறப்பம்சமாகும்.

Wednesday, August 17, 2011

நாக வழிபாடு --அவற்றை பூஜிப்பதின் பலன்களும்

நாகங்கள் மாரிச்சி என்ற முனிவரின் மகனான காஷ்யப முனிவரின் பன்னிரண்டு மனைவிகளுக்கு பிறந்தவர்கள் என்று புராணக் கதை ஒன்று கூறுகின்றது. தெய்வீக அம்சம் கொண்ட நாகங்களில் பல வகைகள் உண்டு என்றாலும் நாகங்களில் ராகுவும், கேதுவும்தான் வழிபடப்படுகின்றன. காரணம் அவை நவக்கிரகங்களில் ஒன்று என்பதே.
ஒவ்வொருவரது ஜாதகத்திலும் நாகதோஷம் உள்ளதா எனப் பார்ப்பார்கள். அதற்கேற்ப பரிகாரமும் செய்வார்கள். புராணங்களில் பசுவிற்கு அடுத்தப்படியாக நாகங்களே முக்கிய பெருமையை பெறுகின்றன. நாகங்களில் முக்கியமானவை பத்மா, ஐந்து தலைக்கொண்ட பச்சை வண்ண மகாபத்மா, ஆனந்தா, ஆயிரம் தலைக்கொண்ட சேஷநாக் அல்லது ஆதிசேஷன்.
சந்திரனின் பிறையை தலையில் வைத்துள்ள குளிகை என்னும் குளிகா, ஏழு தலை கொண்ட பச்சை நிற வாசுகி, தக்ஷ்யன், கார்கோடன், நீலநிற பாதி மனித உடல் கொண்ட அஸ்திகா, ஷங்கல்பலா, ஜாலமுகி, யமுனை நதியில் வாழுவதாக நம்பப்படும் கலியா, கடக் மற்றும் வாசுகியின் சகோதரி மனசா போன்றவையாம்.
ராகு மற்றும் கேதுவுக்கு இடையே ஏழு நாகங்கள் இருந்தால் கால சர்ப்ப தோஷம் ஏற்படும். பரிகாரம் தேவைப்படும் என்பது நம்பிக்கை. புராணக் கதைகளின்படி வாசுகியும், ஆனந்தாவும் தம்முடைய அம்சங்கள் என அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் கூறியதாகவும், சேஷ நாகமும் ஆனந்தாவும் விஷ்ணுவின் சங்குகள் எனவும் சூரியனாரின் வாகனத்தை இழுக்கும் குதிரைகளின் கடிவாளங்கள் விசேஷ சக்தி பெற்று இருந்த நாகங்கள், அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிழமைக்கு அதிபதிகள் எனவும் அறிய முடிகின்றது.
நாக வழிபாடு ரிக்வேத காலத்தில் இருந்தே இருந்து உள்ளது. யஜூர் வேதத்தில் கூட நாகத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதனால்தான் பண்டைய காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள் பலவற்றிலும் நாகங்களை தேவதைகளாக பாதி நாக உடம்புகளுடன் உள்ள சிற்பங்கள் பொறிக்கப்பட்டு உள்ளன.
கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன்பே அதாவது சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே இந்தியாவின் வடபகுதியில் பலவற்றில் நாக வழிபாடுகள் இருந்து உள்ளன. காஷ்மீரில் நாக வழிபாட்டை முக்கயமானதாக கருதுகிறார்கள்.
அது போலவே ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டு பகுதிகளில் கிராமங்களில் பெருமளவு நாக வழிபாடுகள் இருந்துள்ளன என்பதற்கு சான்றாக பல இடங்களிலும் நாக தேவதைகளின் ஆலயங்கள் மிகச் சிறு அளவில் ஆங்காங்கே சாலைகளில் உள்ளன. ஆலயங்களில் கூட நாக தேவதைகளின் உருவங்கள் பல விதங்களில் உள்ளன.
புற்றுக் கோவில் எனப்படும் பாம்பு புற்றை வழிபடும் ஆலயங்கள் பல உள்ளன. ராகு கேதுவுடன் பல வகையான நாகஙகள் ஆலயங்களில் காணப்படுகின்றன. பல இடங்களில் மரங்களின் அடியில் நாகங்கள் உருவம் உள்ள பாறைகளும், அவற்றின் உருவங்கள் செதுக்கப்பட்ட கற்களும் உள்ளன.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் நாகராஜர் ஆலயமே உள்ளது. அங்கு உள்ள தெய்வங்கள் அனைத்தும் பாம்பு உருவத்துடன் உள்ளன. ஏன் வெளிச்சுவற்றில் மற்ற நுழைவாயில் கோபுரத்தில் கூட நாக சிலையே உள்ளது அதிசயம். மேலும் கர்நாடகாவில் நாக தேவதைகள் கூட்டமாக உள்ள ஆலயங்கள் மிகவும் அதிகம்.
அங்கு நாக தேவதைகள் வணங்கி பூஜிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பல இடங்களில் பாம்பு புற்றுடன் கூடிய நாகங்கள் அம்மனாக பல ஆலயங்களில் வழிபடப்படுகின்றன. அவற்றில் சேலம் மாரியம்மன், திருவக்கரை வக்கிரகாளி போன்றவை முக்கியமானவை. அது மட்டும் அல்ல எந்த ஒரு மாரியம்மனும் புற்றை வைத்தே முக்கியத்துவம் பெறுகின்றன.
அவற்றில் சில கீழே காணப்படுகின்றன. பாம்பு புற்றில் நாகம் உள்ளதாக கருதி அதில் பாலை ஊற்றியும், முட்டையை உடைத்து போட்டும் மாலைகள் போட்டும் பூஜைகள் செய்வார்கள். இன்னும் சில ஆலயங்களில் ராகு மற்றும் கேதுவின் சிலைகளுக்கு பக்கத்தில் பலவிதமான பாம்புகளின் தோற்றம் கொண்ட கல்வெட்டு சிலைகளை காணலாம்.
நாகங்களில் நாகமணியை தன்னுடைய தலையில் வைத்து உள்ள வாசுகியே நாகங்களின் தலைவி. வாசுகி பற்றிய குறிப்புகள் இந்து மதப் புராணங்களிலும் மட்டும் அல்ல, ஜைன, புத்த, திபெத்திய, ஜப்பானிய மற்றும் சீன புராணக் கதைகளிலும் காணப்படுகின்றன. வங்காளத்தில் வாசுகியின் சகோதரியாக கருதப்படும் மானசா என்ற நாகத்தை வழிபடுவது உண்டு.
நாரத முனிவரால் சபிக்கப்பட்ட கார்கோடன் என்ற நாகம் தனது சாபத்தை நளன் மூலம் விளக்கிக் கொண்டதாக கதை உள்ளது. நேபாளத்தில் தண்டக் என்ற பகுதியில் உள்ள பெரிய ஏரியில் கார்கோடன் விலை மதிப்பு அற்ற தங்க, வைர வைடூரிய அணிகலங்களுடன் தங்கி உள்ளதாக நம்பிக்கை உள்ளது.
மன்னன் பரிகசிட்டின் மகனான ஜனமேயா தனது தந்தையுடன் தக்ஷியன் என்ற நாகத்துக்கு ஏற்பட்ட பகையினால் பாம்புகளின் இனத்தையே அழிக்க யாகம் செய்தபோது அதை பல முனிவர்கள் வந்து தடுத்து நிறுத்தியதால் தான் பாம்புகள் இனம் அழியாமல் போயிற்று என புராணக்கதை உண்டு.
பாம்புகளில் தெய்வீக தன்மை வாய்ந்த நாகங்கள் உண்டு என்பதற்கு அடையாளமாக சிவன் தலையில் உள்ள நாகம், விஷ்ணு பாற்கடலில் படுத்து இருந்தபோது அவருக்கு படுக்கையான நாகம், கிருஷ்ணருக்கு குடையாக இருந்த நாகம், பீமனுக்கு அருள்புரிந்த நாகங்கள், அம்மன் ஆலயங்களில் அம்மன் மீது குடை பிடித்தபடி நிற்கும் நாகங்கள் மற்றும் ராகு, கேது போன்றவை காணப்படுகின்றன.
மேலும் முதலில் கூறப்பட்டு உள்ள நாகங்களும் பல இடங்களில் வழிபடுகின்றன. அதனால்தான் நாகங்களுக்கு அருள் பாலிக்கும் தன்மையை கடவுள் தந்து உள்ளார். விவசாயிகள் தாம் விவசாயம் செய்யும்போது அறுவடை காலத்தின்போது பாம்புகளினால் தீண்டப்படக்கூடாது என்பதற்காக ஆண்டுதோறும் நாகபஞ்சமி விழா எடுத்து நாகங்களை பூஜிக்கின்றனர்.
சிவாலயங்களில் நாகத்தின் மீதே பாலை ஊற்றி சிவலிங்கத்தின் மீது அதுவழியும் வகையில் பூஜைகள் செய்கின்றனர். இப்படியாக நாகங்கள் பலவிதங்களிலும் பூஜிக்கத் தகுந்தவையாகவே உள்ளன. புத்திர பாக்கியம் கிடைக்க ஆனந்தாவையும், புத்திரி பாக்கியம் கிடைக்க வாசுகியையும் குஷ்டரோக நிவாரணம் பெற கார்கோடனையும் பூஜிக்கலாம்.
பலப்பிராப்தி பெற தக்ஷ்யன், குணப்பிராப்தி பெற பத்மா, சூடினால் ஏற்படும் ரோக வியாதிக்கு குணம் பெற நாக ஷங்கபலா என்னும் ஷன்ககர்னாவையும் வணங்கிப் பூஜிக்கலாம். பூர்வ ஜென்ம பாபம் அகல கேஷா, குளுமை வியாதியினால் அவதிப்படுபவர்கள் குளிகை மற்றும் மோட்ஷப்பிராப்தி பெற மகாபத்மாவையும் வணங்கி பூஜிக்க வேண்டும்.

இறைவனை வழிபட கோவிலுக்கு செல்ல வேண்டுமா?

இறைவன் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கின்றார் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் கிடையாது. சூரியனுடைய ஒளிக்கதிர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்திருந்தாலும் வெயிலில் ஒரு காகிதத்தையோ அல்லது பஞ்சினையோ வைத்தால் அது நன்றாகக் காயுமே அன்றி தீப்பற்றாது.
அதே வெயிலில் ஒரு சூரியகாந்தக் கண்ணாடியின் கீழ் வைக்கப்படும் காகிதம் அல்லது பஞ்சு தீப்பற்றி எரியும். அதாவது, எங்கும் பரந்துள்ள சூரிய ஒளிக்கதிர்களை சூரியகாந்தக் கண்ணாடியானது சேர்த்து ஒன்றாக்கி அனுப்புவது போல, எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருளானது மந்திர, யந்திர சக்திகளினால் ஒன்றாக திரட்டி ஆலயங்களில் வைக்கப்பட்டுள்ளது.
அதனால் ஆலயங்களில் சென்று இறைவனை வணங்கும் பொழுது நாம் செய்த ஊழ்வினைகள் யாவும் வெதும்பி, அவற்றின் வேகம் குறைந்து போய்விடும் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள்.

பிள்ளையார் சுழி போடுவதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?


பொதுவாக எழுத தொடங்குவதற்கு முன்பு பிள்ளையார் சுழியை எழுதிவிட்டு அதன் பின்பு முக்கிய விஷயங்களை எழுதுவது நம்மில் பலருக்கு வழக்கமாக உள்ளது. அவ்வாறு பிள்ளையார் சுழி போடுவதன் அர்த்தம் என்ன என்று தெரியுமா?
பிள்ளையார் சுழி என்பது அகரம், உகரம், மகரம் (அ, உ, ம,) ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய நாதப் பிரம்மமாகிய `ஓம்' என்னும் பிரணவத்தின் ஆரம்ப வடிவம். அதில் உள்ள வட்ட வடிவம் சிவசக்தி பீடம். கோடு சிவலிங்கம் என்றும் சொல்லப்படும்.
எழுத தொடங்கும் முன்பு பிள்ளையார் சுழியை எழுதுவது, எழுத மேற்கொள்ளும் செயல் இடைïரின்றி முடிய கணபதியை நிறுத்தி வழிபடுவதைப் போன்றதாகும்.

உருவ வழிபாடு ஏன்?

இறைவன் உருவம் இல்லாதவர் என்றாலும் நாம் அவரை நினைப்பதற்காகவும் வணங்குவதற்காகவும் உருவ வடிவங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. யோகிகள், ஞானிகள் அல்லாத சாதாரண மனிதர்கள் மத்தியில், அவர்கள் மனங்களில் இறைவனை நிறுத்துவதற்கு உருவ வழிபாடு இன்றியமையாததாக கருதப்படுகிறது.
இப்படி உருவான உருவங்கள் இறைவனின் தன்மைகளைக் குறிப்பவையாக அமைவதால் ஆரம்பத்தில் இறைவனைப் பற்றி அறிந்து கொள்ள உருவ வழிபாடு முக்கியமானதாகிறது. அப்படியென்றால், இறைவனை வெவ்வேறு உருவங்களில் தரிசிக்க காரணம் என்ன? இறைவன் ஒருவரே தான்.
அவர், வடிவம் உள்ளிட்டவைகளுக்கு அப்பாற்பட்டவராயினும், சக்தியினால் பல்வேறு தொழில்களைச் செய்வதால் அவர் செய்யும் திருத்தொழில்களைப் பொறுத்து வெவ்வேறு பெயர் கொண்டு வெவ்வேறு உருவங்களில் வழிபடுகின்றோம். இதனை வாரியார் சுவாமிகள் மிக அழகாக குறிப்பிடுகிறார்.
`தங்கம் ஒன்று தான் என்றாலும் அது வெவ்வேறு வடிவங்களில் அணிகலன்களாகச் செய்யப்படும் பொழுது வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது அல்லவா?' என்று கேட்கிறார் வாரியார். கோவிலின் உள்ளே எத்தனை பரிவார மூர்த்திகள் இருந்தாலும் பரம்பொருள் ஒன்றே என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆலய நுழைவாயில்களில் துவார பாலகர்கள் தங்களது சுட்டு விரல்களைக் காட்டி நிற்கின்றார்கள்.

மகாலட்சுமி இருக்கும் இடம் எது,'?


மகாலட்சுமியை வணங்கிய பக்தர்கள் "அன்னையே, தங்களை சிரமமின்றி தரிசித்து தங்கள் அருளைப்பெற வழி என்னப பொதுவாக தாங்கள் இருக்கும் இடம் எது,'' என கேட்டனர்.
மகாலட்சுமி கூறுகையில், எந்த இல்லத்தில் அதிகாலையில் விழித்தெழுந்து, நீராடி தங்களைப் புனிதப்படுத்திக் கொண்டு என்னுடைய நாமங்களைச் சொல்லி வழிபடுகின்றனரோ, எந்த இல்லத்தின் முன் அதிகாலையில் பசுஞ்சாணம் தெளித்து தரையை சுத்தம் செய்து கோலம் போட்டு திருவிளக்கு ஏற்றி வைக்கிறார்களா, எந்த குடும்பத்தில் கணவனும், மனைவியும் நியம நிஷ்டைகளை முறைப்படி அனுஷ்டித்து தங்களுக்குள் சிறு மனவேறுபாடும் இல்லாமல் என்னை வழிபடுகிறார்களோ, எங்கு ஆசாரம் குறை இல்லாமல் கடைப்பிடிக்கப்படுகிறதோ, எங்கு தர்மம் நன்கு அனுஷ்டிக்கப்படுகிறதோ, எங்கு பூஜை, நடக்கின்றனவோ, எங்கு பாத்திரங்கள் பரப்பப்படாமலும், தானியங்கள் சிந்தாமலும் இருக்கிறதோ, எங்கு கோபூஜை வேதத்துடன் நடத்தப்படுகின்றதோ அங்கு நான் எப்போதும் இருப்பேன்'' என்றாள்.

Friday, August 12, 2011

வரலட்சுமி விரதம்!

செல்வத்தை அளிக்கும் வரலட்சுமியை வரவேற்கும் விதமாக இல்லம்தோறும் செய்யப்படும் பூஜை தான் வரலட்சுமி விரதமாகும்.  வரலட்சுமி விரதம் கொண்டாடப்படும் நாளன்றுதான் பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த மகாலட்சுமியை தனலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தான லட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என்ற அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறோம். வரலட்சுமி விரதம் அன்று இந்த எட்டு லட்சுமிகளையும் மனதார வேண்டி பூஜித்தால் இல்லத்தில் எப்போதும் செல்வம் நிறைந்திருக்கும்.

சிரவண மாதம் எனப்படும் ஆடி அல்லது ஆவணி மாதத்தில், பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. சுமங்கலிகள் அனுஷ் டிக்க வேண்டிய சிறப்பான விரதம் இது. இதைச் செய்வதன் மூலம் சுமங்கலித்துவம் வளரும்; குடும்ப நலன் பெருகும். கன்னிப் பெண்கள் இவ்விரதத்தை மேற்கொள்வதன் மூலம் சிறப் பான குடும்ப வாழ்க்கை அமையப் பெறுவர்.

விரதம் அனுஷ்டிக்கும் முறை

பூஜைக்கு முதல்நாள் வீட்டைப் பெருக்கி மெழுகி, மாக்கோலமிட்டு செம்மண் பூச வேண்டும். வாசற்படிக்கு மஞ்சள், குங்குமப் பொட்டு வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டின் தென் கிழக்கு மூலையில் மாக்கோலமிட்டு செம்மண் இட்ட ஒரு பலகையின் மேல் தலைவாழை இலை வைத்து, அதில் சிறிது அரிசியைப் பரப்பி, அதன் மேல் அம்மன் கலசத்தை வைப்பார்கள். சிலர் சிறு மண்டபம் அமைத்து அதில் கலசம் வைத்துப் பூஜை செய்வார்கள்.

கலசத்தில் அரிசி அல்லது தண்ணீரை நிரப்பி, மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து, சந்தனம், மலர் ஆகியவற்றால் அலங்கரித்து, கலசத்தின்மேல் தேவியின் பிரதிமையை வைத்துப் பூஜை செய்வர். பூஜை தினத்தன்று ஒன்பது முடிச்சுடைய மங்களகரமான மஞ்சள் கயிற்றைப் பூஜையில் வைத்து வழிபட்ட பின்னர், அதை வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்ள வேண்டும்.

விரத தினத்தன்று லட்சுமி துதி, லட்சுமி வரலாறு போன்றவற்றைச் சொல்லி தங்களை முழுமையாக வழிபாட்டில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் வீட்டில் எழுந்தருளியிருக்கும் வரலட்சுமியே எங்கள் இல்லத்தில் நிரந்தரமாக குடியேறி எல்லா ஐஸ்வரியங்களும் அருள்வாயே... என்று போற்றி மனம் உருக பாட வேண்டும்.

சுமங்கலிப் பெண்களை வீட்டிற்கு அழைத்து, பூஜை முடிந்ததும் மங்கலப் பொருட்களுடன் தட்சணையும் வைத்துக் கொடுத்து அனுப்ப வேண்டும்.

அன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.

பூஜைக்குப் பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு, அடுத்த வெள்ளிக்கிழமை பாயசம் செய்து நிவேதனம் செய்யலாம்.

கன்னிப் பெண்கள் இந்த விரதம் இருந்தால் விரைவில் திருமணமாகும். வரலட்சுமி விரதத்தை கடைபிடிக்கும் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு உயர்ந்த ஞானம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்வோர் விரும்பிய நலன்கள் எல்லாம் கிட்டும். இந்த விரதம் மேற்கொள்ளும் வீட்டில் எப்போதும் செல்வச் செழிப்பு நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

புராணக் கதை

பத்ரசிவன் என்ற மன்னன் சிறந்த விஷ்ணு பக்தன். அவன் மனைவி கரசந்திரிகா. இவர் களது ஒரே மகள் சியாமபாலா. அவளைத் திருமணம் செய்து கொடுத்தபின் தாய் துயருற்றாள். அவளது கவலையைத் தீர்த்து அவளுக்கு ஒரு ஆண் மகவு பிறக்க அருள் செய்ய எண்ணினாள் மகாலட்சுமி. அதனால் வரலட்சுமி விரதம் பற்றி எடுத்துக்கூற வயதான சுமங்கலி வடிவில் அவளிடம் சென்றாள். ஆனால் வந்திருப்பது லட்சுமிதேவி என்று அறியாத கரசந்திரிகா அவளை அவமானப் படுத்தி அனுப்பி விட்டாள்.

அங்கிருந்து சியாமபாலாவிடம் சென்ற மகாலட்சுமி நடந்தவற்றைக் கூறி, தான் போனால் எல்லா யோகங்களும் அரண்மனையை விட்டுப் போய்விடும் என்று கூறினாள். தன் தாயின் தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கோரிய சியாமபாலா, வரலட்சுமி விரதத்தைப் பற்றிக் கேட்டறிந்து சிரத்தையுடன் அதைக் கடைப் பிடித்து வரத் தொடங்கினாள். அதன் பிறகு அவளுக்குச் சுபிட்சம் பொங்கிய அதே நேரத்தில் அவளது பெற்றோர் அனைத்து செல்வங் களையும் இழந்தனர்.

தன் பெற்றோரது வறுமையை அறிந்த சியாமபாலா ஒரு குடம் நிறைய பொற்காசுகளை அவர்களுக்கு அனுப்பி வைத்தாள். அக்குடத் தில் கரசந்திரிகா கை வைத்ததும் பொற்காசுகள் கரியாகி விட்டன. இதையறிந்த மகள் அந்த ஆண்டு தன் தாயுடன் வரலட்சுமி விரதம் மேற் கொண்டாள். விரதத்தின் மகிமையால் கர சந்திரிகா தன் முந்தையை சுபிட்ச நிலையை எய்தியதோடு ஆண் வாரிசும் பெற்றாள். வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்கள் அஷ்ட போக பாக்கியங்களைப் பெறுவார்கள் என்பதை இவ்வரலாறு எடுத்துரைக்கிறது.

Monday, August 1, 2011

சிறந்த குரு யார் ?

     இன்றைக்கு மக்களிடம் இருக்கும் தலையாய பிரச்சனையே யார் நல்ல குரு என்பது தான். 

   சில குருமார்களின் செயல்பாடுகளை பார்த்தால் ஜனங்களுக்கு மிகவும் அச்சமாகயிருக்கிறது.  அரசியல்வாதிகளும், கொலைகாரர்களும் செய்ய கூடிய பஞ்சமா பாதகங்களை குருமார்கள் என சொல்லப்படுவர்கள் மிக சாதரணமாக செய்து விடுகிறார்கள். 

இதற்கு காரணம் என்ன?

   மக்களின் கண் மூடித்தனமான மூட பக்தியே ஆகும்.  எல்லா மனிதனுக்கும் பிரச்சனையிருக்கிறது.  தோட்டியிலிருந்து தொண்டைமான் வரைக்கும் கவலையிருக்கிறது. அனைவரும் தனது கவலைக்கு யாராவது மருந்து தரமாட்டார்களா?  என ஏங்குகிறார்கள். 
இந்த ஏக்கம் மக்களின் அறிவு கண்னை மறைக்கிறது.  இதனால் புற்றியாசல் போல போலி குருமார்கள் புறப்பட்டு விடுகிறார்கள். 
புரோகிதன் தட்சனை கேட்கலாம்.  ஜோதிடன் காணிக்கை கேட்கலாம்.  பரிகாரம் செய்பவன் கூட பணம் கேட்கலாம்.  ஆனால் குரு பணத்தை எதிர்பார்க்க கூடாது.  அப்படி எதிர்பார்த்தால் அவன் குருவே அல்ல. 
எவனிடம் சுத்தமான வாக்கும், தெளிவான ஞானமும், பரிபூரனமான பக்தியும், உறுதியான வைராக்கியமும், எளிமையான வாழ்க்கையும் இருக்கிற
அவனே சிறந்த குரு.  ஆடம்பர மாளிகையில் குருவை தேடுபவன் நல்ல குருவை எப்போதும் பெறமாட்டான்.