Friday, October 7, 2011


நவராத்திரவிரதம்

நவராத்திரவிரதம்புரட்டாதி  மாதத்தில் சூரியன் கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் சக்தியை (தேவியைக்) குறித்து நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) நோன்பாகும். இது தட்சணாயண் காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும் தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவை இரண்டிலும் புரட்டாதி மாதத்தில் நோற்கப்படும் (அனுஷ்டிக்கப்படும்) சாரதா நவராத்திரியையே நாம் எல்லோரும் கைக் கொள்ளுகின்றோம்.

நவராத்திரி பூஜை புரட்டாதி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் ஆரம்பித்து நவமி முடியச் செய்ய வேண்டும் என்று காரணாகமம் கூறுகின்றதுஆகவே புரட்டாதி மாதத்தில் வளர்பிறைப் பிரதமை முதல் நவமி வரை ஒன்பது நாளும் கைக்கொள்ளப்படும் (அனுஷ்டிக்கப்படும் ) நோன்பு (விரதம்) சாரதா நவராத்திரி நோன்பாகும்.

மகா சங்கார (பேரழிவுக்) காலத்தின் முடிவில் இறைவன் உலகத்தைச் உண்டாக்க விரும்புகின்றான் அப்போது இச்சை என்ற சக்தி தோன்றுகின்றது. பின் அதை எவ்வாறு என்று அறிகின்றான். அப்போது ஞானசக்தி தோன்றுகின்றது. பின் கிரியா சக்தியினால் உலகைப் படைக்கின்றான். இக்கருத்தே நவராத்திரி விழாவால் விளக்கப்படுகின்றது. (இச்சை = விருப்பம், ஞானம் =அறிவு, கிரியா = செய்தல், ஆக்கல்)

நவராத்திரியில் முதல் மூன்று நாளும் இச்சா சக்தியின் தோற்றமான துர்க்கையின் ஆட்சிக் காலம். இதில் இறைவன் உலகத்தை வாழ்விக்க விரும்புகின்றான்.

நடுவில் உள்ள மூன்று நாட்களும் ஞானசக்தியின் தோற்றமான இலக்குமியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் ஆன்மாக்களுக்கு தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கும் முறையை அறிகின்றான்[

இறுதி மூன்று நாட்களும் கிரியா சக்தியின் தோற்றமான சரஸ்வதியின் ஆட்சிக்காலம். இதில் இறைவன் முன் அறிந்தவாறு அருள் வழங்குகின்றான் என்பது சிவாகமத்தின் உள்ளுறையாகும்.

ஆலயங்களிலும் இல்லங்களிலும் பிம்பம் (உருவம்) கும்பம் இவைகளால் ஒன்பது நாட்களிலும் வழிபடுபவர்கள் நவராத்திரிக்கு வேண்டிய பூசைக்குத்தேவையான பொருட்களை அமாவாசை யன்றே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை உணவு உண்டு பிரதமையில் பூஜை தொடங்கவேண்டும். நறுமணமுள்ள சந்தனம், பூ (புஸ்பம்), இவைகளுடன் மாதுளை, வாழை, பலா, மா முதலியவற்றின் கனிகளை மிகுதியாக வைத்து நெய் சேர்த்த அன்னம், வடை, பாயாஸம் முதலியவைகளை நிவேதித்தல் வேண்டும். புனுகு கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம், கஸ்தூரி, சந்தணம், அகிற்பட்டை பன்னீர் இவைகளுடன் கூடிய அஷ்ட கந்தகம் சாத்தித் துதித்துப் பலவித ஆடல் பாடல்களால் தேவியை மகிழச் செய்யவேண்டும்.

குமாரி பூஜை நவராத்திரி காலத்தில் இன்றியமையாததாகும். இரண்டு வயதிற்கு மேல் பத்து வயதிற்கு உட்பட்ட குமாரிகளே பூஜைக்கு உரியவர்கள் முதல் நாள் தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு குமாரியாக முறையே குமாரி, திருமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளி, சாண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா என்ற பெயர்களால் பூஜிக்கப்படவேண்டும். பூஜிக்கப்படும் குமாரிகள் நோயற்றவர்களாகவும் அழகுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும். குமாரிகளுக்கு ஆடை, அணி, பழம், தாம்பூலம், மலர், சீப்பு, கண்ணாடி முதலிய மங்களப் பொருட்கள் மஞசள் குங்கும, தட்சணை கொடுத்து உபசரித்து அறுவகை சுவைகளுடன் அமுது செய்வித்தல் வேண்டும்.

நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது மகிஷாசுரனை வதம் செய்தாள் என்றும் இது நவமியில் நிகழ்ந்ததாகவும் மறுநாள் தசமியில் தேவர்கள் வெற்றியை ஆயுத பூசை செய்து கொண்டாடியபடியால், விஜயதசமி என்றும் வழங்கலாயிற்று என்று சொல்வது உண்டு.

ஆயலங்களில் விஜயதசமி அன்று வன்னி மரத்துடன் கூடிய வாழை வெட்டுவது வழமை. பண்டாசுரனுடன் தேவி போர் செய்து அவனை அழிக்கமுடியாமல் சிவபிரானை வழிபட்டு விஜயதசமியில் போர் செய்யும் போது அவன் வன்னி மரத்தில் ஒளிந்தான். தேவி வன்னி மரத்தை சங்கரித்து அசுரனைச் சங்காரம் சங்காரம் செய்தாள் என்பர். இதுவே நாளடைவில் கன்னிவாழை வெட்டு என்று மருவி வழங்கலாயிற்று. அசுரனைச் சங்கரித்த நேரம் மாலை வேளை, செங்கட் பொழுதில் இதனை ஞாபகப்படுத்தும் முகமாக வாழை வெட்டுவது வழக்கம்.

விரதம் கைக்கொள்ளுவோர் (அனுஷ்டிப்போர்) அமாவாசையில் ஒரு வேளை உணவு உண்டு பிரதமை தொடக்கம் பகல் உணவின்றி இரவு பூசை முடிந்தபின் பால் பழம் அல்லது பலகாரம் உண்பது நல்லது.

ஒன்பதாவது நாளாகிய மகாநவமி அன்று பட்டினியாய் (உபவாசம்) இருந்து மறுநாள் விஜயதசமியன்று காலை ஒன்பது மணிக்குமுன் பாரணை செய்தல் வேண்டும். இயலாதவர்கள் முதல் எட்டுநாளும் பகல் ஒருவேளை உணவருந்தி ஒன்பதாம் நாள் பால் பழம் மட்டும் உட்கொள்ளலாம்.

விஜயதசமி அன்று காலையில் சுவையுள்ள உணவுப்பதார்தங்கள் தயார் செய்து சக்திக்கு நிவேதித்து நவமியில் வைத்துள்ள புத்தகம் இசைக்கருவிகளைப் பராயணம் செய்து குடும்ப அங்கத்தவர்களுடன் பாரணையைப் பூர்த்தி செய்யலாம்.

நவராத்திரியில் ஸ்ரீதேவியைத்(திருமகளைத்) துதித்து வழிபடுவோர்களுக்கு தேவியானவள் சகல சௌபாக்கியங்களையும் நல்குவாள் என்பது மட்டுமல்லாமல் வீட்டுப்பேறாகிய முக்தியையும் நல்குவாள் என்று காரணாகமம் கூறுவதாகச் சொல்லப்படுகின்றது[

விரதகாலங்களில் ஓதத்தக்க கேத்திரப்பாடல்கள்

  1. அபிராமி அந்தாதி
  2. இலட்சுமி தோத்திரம் (கனகதார தோத்திரம்)
  3. சகலகலாவல்லி மாலை
  4. சரஸ்வதி அந்தாதி

தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்)விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்றனர்.

மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, “யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்என்றாள்.

அதற்கு சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா…’ என்றனர். அதற்கு தேவி, “தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும்…’ என்றாள்.
இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி.அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.

அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றி, உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து
விடுகிறான். இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.

பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினம்.நவராத்திரி பூஜையை நிறைய பேர் சேர்ந்து சமஷ்டி பூஜையாகச் செய்யலாம். எப்போதுமே கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். நவராத்திரியின் போது காலையில் பூஜையை அனுஷ்டானங்களுடன் செய்ய வேண்டும். தேவி மகாத்மியத்தில் ஒவ்வொரு நாளுக்கும், ஒரு அத்யாயம் அல்லது குறிப்பிட்ட வழிமுறைப்படி பாராயணம் செய்ய வேண்டும்.முதல் மூன்று நாட்கள், துர்க்காஷ்டகமும், இரண்டாவது மூன்று நாட்கள், லட்சுமி அஷ்டோத்திரமும், மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதி அஷ்டோத்திரமும் சொல்லி பூஜை செய்ய வேண்டும்.பூஜைக்குப் பயன்படுத்தும் பூக்களில் வாடல், அழுகல் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதேபோல், வெற்றிலையும் அழுகலோ அல்லது கோணலாகவோ இல்லாமல் தேர்வு செய்ய வேண்டும். பாக்கும் நல்ல பாக்காக இருக்க வேண்டும். ஏனென்றால், தேவிக்கு நாம் சிறப்பானதைத்தான் படைக்க வேண்டும். பூஜை செய்வது நம் வசதியைப் பொறுத்தது. பூஜை முடிந்த பிறகு, தினமும் ஒரு தம்பதிக்கு விருந்து படைக்கலாம் அல்லது ஒன்பது நாட்களில் ஏதாவது ஒரு நாள், இந்த விருந்து உபசாரத்தைச் செய்யலாம். இது செய்ய இயலாதவர்கள், சுமங்கலிக்கு ஒரு நாள் கண்டிப்பாக விருந்து உபசாரம் செய்வது அவசியம். அதே போல், ருது அடையாத கன்யா பெண்களையும் உபசரித்து, உணவளித்து, தாம்பூலம் கொடுக்க வேண்டும். வசதி குறைந்தவர்கள், குத்து விளக்கையே தேவியாக நினைத்து பூஜை செய்து, தம்மால் முடிந்ததை நிவேதனம் செய்து, யாராவது ஒருவருக்கு, மனதார தாம்பூலம் கொடுத்தாலே, பூஜையின் முழுப் பலனும் கிடைக்கும். மூல நட்சத்திரத்தன்றே சரஸ்வதியை ஆவாஹனம் செய்ய வேண்டியது முக்கியம். சரஸ்வதியை விக்ரக வடிவத்திலோ அல்லது புஸ்தக வடிவத்திலோ ஆவாஹனம் செய்யலாம்.ஆத்மார்த்தமாக, மனம் ஒப்பி பூஜை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் நமக்கு தேவிதான் கொடுக்கிறாள்.
அவளுக்குச் செலுத்தும் சிறு நன்றிதான் இந்த நவராத்திரி பூஜை.









கொலு‌வி‌ல் ஒன்பது படிகள் அமை‌ப்பத‌ன் நோ‌க்க‌ம்
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.

* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.


* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.

* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.

* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.



கொலு வைப்பது குறித்து பதினெட்டு புராணங்களில் ஒன்றான மார்க்கண்டேய புராணத்தில் சொல்லப்பட்டுள்ளதை இங்கே காணலாம்.

தன் எதிரிகளை வெற்றிக் கொள்வதற்காக மகாராஜா சுரதா குரு சுமதாவின் ஆலோசனையைக் கேட்கிறார்.
குரு கூறியபடி பரிசுத்தமான ஆற்று மணலைக் கொண்டு காளிரூபத்தை செய்கின்றான். அதை காளியாக அலங்கரித்து, தெய்வத்தின் மீது பற்றுடன் உண்ணா நோன்பிருந்து மனதாலும் மெய்யாலும் வேண்டுகிறான்.

அம்பிகை அவன் வேண்டுதலை பூர்த்தி செய்து அரக்கர்களையும், பகைவர்களையும் அழித்துப் பின் ஒரு புதுயுகத்தினையே உண்டு பண்ணுகிறாள்.



புராணத்தில், ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் ஆன பொம்மையினால் என்னைப் பூஜித்தால் நான் உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிப்பேன் என்கிறாள் அம்பிகை தேவி

இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.


No comments:

Post a Comment