Friday, October 7, 2011

ஆன்மிக கதை

கடவுள் என்பவர் யார்? மனிதர்களைப் போல இருப்பாரா? ஒளியாய் பிரகாசிப்பரா? கையில் அரிவாள், கத்தி, சூலம் வைத்திருப்பாரா? அவருக்கு இரண்டு கையா, நான்கா, எட்டா, பதினாறா அதற்கு மேலா! தலைகள் எத்தனை...' இப்படி பல குழப்பம் நீண்டகாலமாக இருக்கிறது. சரி...அவரை நேரில் பார்த்து விட்டால் சந்தேகம் தீர்ந்து விடுகிறது என்றால், கண்ணில் படவே மாட்டான் என்கிறார்.
கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவல் ஒரு மன்னனுக்கு ஏற்பட்டது. காட்டில் இருக்கும் முனிவர்களையெல்லாம் அரண்மனைக்கு அழைத்து வர உத்தரவு போட்டான். முனிவர்களும் வந்து சேர்ந்தனர்.
அவர்களிடம், ""நீங்கள் கடவுளுக்கு யாகம் செய்வதாக சொல்லிக்கொண்டு, அரண்மனையில் இருந்து ஏராளமாக நிதி பெறுகிறீர்கள். யாகத்தின் அவிர்பாகத்தை (பலன்) அவர் பெற்றுச் செல்வதாகச் சொல்கிறீர்கள். உங்களில் சிலர் கடவுளை நேரிலும் பார்த்ததாகச் சொல்கிறீர்கள். எனக்கும் அவரைப் பார்க்க ஆசை. இப்போதே, என்னை காட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். யாகபலனை கடவுள் வாங்க வரும்போது, அவரை என்னிடம் அறிமுகம் செய்து வையுங்கள்,'' என்றான். முனிவர்கள் திகைத்தனர். ஒருமுனிவர் மட்டும், ""மன்னா! கொஞ்சம் பால் கொண்டு வரச் சொல்,'' என்றார்.
ஒரு பாத்திரத்தில் பால் வந்தது. ""இதிலுள்ள வெண்ணெயை எடுத்து தா!''.
முனிவர் இப்படி கேட்கவும் மன்னன் அவரிடம், ""அதெப்படி முடியும்! இதை தயிராக்க வேண்டும், தயிரைக் கடைந்தால் பாலுக்குள் மறைந்திருக்கும் வெண்ணெய் வெளிப்படும்,'' என்றான்.
""இதே போல் தான் கடவுளும்..."வா' என்றால் உடனே வந்துவிட அவர் நமது வேலைக்காரர் அல்ல. முனிவர்கள் ஆன்மிகப்பயிற்சிகளின் மூலம் தங்கள் அகக்கண்களால் அவரைப் பார்க்கின்றனர். சிலர் இதில் தீவிரமாக மூழ்கி நேரில் காணும் பாக்கியம் பெறுகின்றனர். முயற்சி உள்ள ஒவ்வொருவனும் கடவுளைக் காண்பான்,'' என்றார்.

No comments:

Post a Comment