Monday, November 14, 2011

அன்னாபிஷேகம் செய்வது ஏன்


  சிவாலயங்களில் அன்னாபிஷேகம்

அன்னாபிஷேகம் செய்வது ஏன்?
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. உணவுக்கும் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. உண்ணும் உணவே நம் உணர்வாக வெளிப்படுகிறது. சிலர் சாப்பிடும் போது, "இது எங்க அம்மா சமைத்த மாதிரியே இருக்கு' என்று சொல்லி பெருமைப்படுவதுண்டு. "அன்னையோடு அறுசுவை உண்டிபோம்' என்று அறுசுவை உணவுக்கும் அம்மாவுக்கும் உள்ள தொடர்பை பட்டினத்தார் குறிப்பிட்டுள்ளார். எனவேதான், அம்மையப்பராக இருந்து உலகைக் காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம். ஐப்பசி பவுர்ணமியன்று, உச்சிக்கால பூஜையின் போது இந்த அபிஷேகத்தை நடத்துவது மரபாக உள்ளது. அன்னத்தை தெய்வம் என்பார்கள். அதனால் தான் சாப்பிடும் போது, சிந்தாமல் சிதறாமல் சாப்பிட வேண்டும் என்பர்.

சோத்துக்குள்ளே சொக்கநாதர்
வழிபாட்டு முறைகள் எத்தனையோ இருந்தாலும், இறையருளைப் பெற எளியவழியாக இருப்பது அன்னதானம் மட்டும் தான். "தானத்தில் சிறந்தது அன்னதானம்' "சோத்துக்குள்ளே இருக்கார் சொக்கநாத சுவாமி' "உப்பிட்டவரை உள்ளளவும் நினை' "அன்னம் இட்டவீடு சின்னம் கெட்டுப் போகாது' போன்ற சுலவடைகள் இதன் பெருமையை எடுத்துக்காட்டுவதாகும். பொன்,பொருள் எவ்வளவு கொடுத்தாலும் மனம் திருப்தி கொள்வதில்லை. இன்னும் கொடுக்கக் கூடாதா என்று எதிர்பார்ப்புடனே இருக்கும். ஆனால்,"ஒருவன் வேண்டும்' என்று கேட்ட அதே வாயால் "போதும்' என்று சொல்லி மனநிறைவோடு எழுவது சாப்பிடும் போது மட்டுமே.

வள்ளலார் சொல்வதைக் கேளுங்க! 

 அருட்பெருஞ்ஜோதி வழிபாட்டில் அன்னதானத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஜீவகாருண்யத்துடன் வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் உள்ளம் வாடிய அருளாளர் வள்ளலார். இவர் தொடங்கிய சத்திய தருமசாலை ஆல்போல் தழைத்து அருகு போல எங்கும் வியாபித்திருக்கிறது. இவர் ஏற்றிய அணையா அடுப்பு இன்றும் பலருடைய பசியை போக்கி வருகிறது. அன்னதானத்தின் பெருமைகளை குறிப்பிடும்போது,""சக மனிதனின் பசியைப் போக்குபவன் கடவுளின் தயவைப் பூரணமாகப் பெறும் தகுதி பெறுகிறான். பசி என்னும் கொடுமை ஏழைகளின் மீது பாய்ந்து கொல்லும் தருணத்தில், உணவிட்டுக் காப்பதே ஜீவகாருண்யமாகும். அன்னதானம் இடுபவரை வெயில் வருத்தாது. வறுமை தீண்டாது. இறையருள் எப்போதும் துணை நிற்கும். மனதில் மகிழ்ச்சி நிலையாக குடிகொண்டிருக்கும்.'' என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment