Monday, November 14, 2011

நவராத்திரி

நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால், ஏன் கொ<லு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தெரிந்து கொண்டால் நெகிழ்ந்து போவீர்கள்!
தேவி ஆதிபராசக்தி இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். "யாதுமாகி நின்றாய் காளி' என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு, புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள் பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும் என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு "சிவை ஜோடிப்பு' என்றும் பெயருண்டு. "சிவை' என்றால் "சக்தி'. சக்தியின் வடிவே பொம்மை அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

கொலு மேடைக்கு பூஜை செய்வது எப்படி?
நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும். குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து, மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.

பொம்மைகளை அடுக்கும் முறை
மனிதனாகப் பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வநிலைக்கு உயர வேண்டும். இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை அடுக்குவது மரபு. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலம் போடவேண்டும். கொலு மேடையின் உயரம் கைக்கெட்டும் அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நல்லது. கீழிருந்து மேலாக படிகளில் பொம்மைகளை அடுக்க வேண்டும். முன்னரெல்லாம் களிமண்ணால் செய்யப்பட்ட எறும்பு, புழு உள்ளிட்ட பொம்மைகளைக் கூட தங்கள் கையாலேயே செய்து வைத்தனர். இப்போது கடைகளில் கிடைக்கும் பொம்மைகளையே வைப்பதால், அழகுக்கு தரும் முக்கியத்துவம் ஆன்மிகத்துக்கு தரப்படுவதில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. இந்த ஆண்டில் இருந்தாவது, எந்தெந்த படிகளில் என்னென்ன பொம்மைகள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து செய்யலாமே!
கொலு வைக்கும் போது 5,7,9 என்ற கணக்கில் படி அமைக்கின்றனர். ஒன்பது படிகள் வைப்பது பொருத்தமானதாக இருக்கும். கொலு மேடை படிகளை கிழக்கு அல்லது வடக்கு திசையில் இருக்கும் வகையில் அமைக்க வேண்டும்.
* முதல் படியில் செடி, கொடி, காய், கனி பொம்மைகளை வைக்க வேண்டும். மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
* இரண்டாம் படியில் சங்கால் செய்த பொம்மைகளை வைக்கலாம். நத்தை பொம்மை வைப்பது நலம். எதையும் நிதானமாகச் செய்து உயர் இடத்தை பிடிக்க வேண்டும் என்பது இதன் பொருள்.
* மூன்றாம் படியில் பூச்சி வகை பொம்மைகள், கரையான் புற்று, சிலந்தி வலை, களிமண்ணில் செய்த எறும்பு, வண்ணத்துப்பூச்சி (காதிகிராப்ட் கடைகளில் மரத்தால் செய்தது கிடைக்கிறது) பொம்மைகளை வைக்க வேண்டும். எறும்பு போல் சுறுசுறுப்பு, கரையான் புற்றையும், சிலந்தி வலையையும் கலைத்தாலும் திரும்பத் திரும்பக் கட்டும் திடமனப்பான்மையை அம்பாளிடம் வேண்டி இந்த பொம்மைகளை அடுக்க வேண்டும்.
* நான்காம் படியில் நண்டு,வண்டு, தேனீ பொம்மைகள் இடம்பெற வேண்டும். ஆழமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும் என்பதை இது குறிக்கும்.
* ஐந்தாம் படியில் மிருகங்கள், பறவை பொம்மைகள் வைக்க வேண்டும். மிருக குணத்தை விட்டு, பறவைகள் போல் கூடி வாழ வேண்டும் என்பது இதன் பொருள்.
* ஆறாம் படியில் மனித பொம்மைகள் வைக்க வேண்டும். முதல் ஐந்து படிகளில் வைக்கப்பட்ட பொம்மைகளுக்கு கூறப்பட்ட குணநலன்களைக் கடைபிடித்தால் முழு மனிதன் என்ற அந்தஸ்தைப் பெறலாம்.
* ஏழாம் படியில் மகான்கள், முனிவர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும். மனித நிலையில் இருந்து தெய்வீக நிலைக்கு உயர பக்தி அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. விவேகானந்தர், ராமகிருஷ்ணர், ராகவேந்திரர் பொம்மை கடைகளில் கிடைக்கிறது . வியாசர் போன்ற முனிவர்களின் படங்களைப் பார்த்து பொம்மை செய்யலாம். கிடைக்காத பொம்மைகளுக்கு பதிலாக சுவாமி சிலைகள் வைக்கலாம்.
* எட்டாம் படியில் நாயன்மார்கள் (அப்பர், சம்பந்தர், சுந்தரர்), ஆழ்வார்கள் (ஆண்டாள், பெரியாழ்வார்), சூரியன், நாகர் போன்ற தேவர்களின் பொம்மைகளை வைக்க வேண்டும். மகானாக உயர்ந்தவர் தவம், யாகம் முதலான உயர்நிலை பக்தியைக் கடைபிடித்து தேவர் அந்தஸ்துக்கு உயர வேண்டுமென்பதை இது காட்டுகிறது.
* ஒன்பதாம் படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் தங்கள் தேவியரான சரஸ்வதி, லட்சுமி, பார்வதியுடன் இருக்கும் வகையிலான சிலைகளை வைத்து, நடுவில் ஆதிபராசக்தி சிலையை சற்று பெரிய அளவில் வைக்க வேண்டும். தேவநிலைக்கு சென்ற உயிர்கள் தெய்வநிலையை அடைய வேண்டும் என்பதை இது உணர்த்துகிறது.


ஆண்டுக்கு இருமுறை நவராத்திரி கொண்டாடவேண்டும் என்று தேவி புராணம் கூறுகிறது. சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும், புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரிஎன்றும் பெயர்.இவ்விரு காலங்களும் எமனுடைய கோரைப்பற்களுக்குச் சமமாகும். கோடை, குளிர் என பருவகாலம் மாறும்போது நோய்நொடிகள் பரவும். இந்த ஆபத்திலிருந்து மக்களைக் காக்கும்படி தேவியைப் பூஜிக்கவேண்டும் என்பதால் இவ்விழாவை நடத்தினர். ஆனால், கோடையில் நடந்த சித்திரை நவராத்திரி காலப்போக்கில் மறைந்து விட்டது. புரட்டாசி சாரதா நவராத்திரியே இப்போது வழக்கத்தில் உள்ளது.

ஒவ்வொரு நாளும் தேவியை ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து வழிபடுவது சிறப்பாகும்.

 நவராத்திரியின் ஒன்பது நாட்களை மூன்றாகப் பிரித்து முதல் மூன்றுநாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் திருமகளையும், கடைசி மூன்றுநாட்கள் சரஸ்வதியையும், பத்தாம் நாள் விஜயதசமியன்று ஆதிபராசக்தியையும் பூஜை செய்வது நியதி. ஒவ்வொரு நாளும் தேவியை ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து வழிபடுவது இன்னும் சிறப்பாகும். மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் அம்பிகையை அலங்கரித்து தேவியை வழிபட வேண்டும். ஒன்பது நாளும் வழிபட முடியாதவர்கள் அஷ்டமி, நவமி, தசமி ஆகிய திதிகளில் அவசியம் வழிபடுவது நவராத்திரி விரத பலனைப் பெற எளிய வழியாகும்.

 அம்பாளுக்கு ஐந்தெழுத்து
சிவனை"நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தால் வணங்குகிறோம். அதுபோல, அம்பாளுக்கும் "துர்க்கா' என்னும் சொல் பஞ்சாட்சரமாக (ஐந்தெழுத்து மந்திரம்) விளங்குகிறது. த், உ,ர்,க்,ஆ ஆகிய ஐந்து எழுத்துகளின் சேர்க்கையே துர்க்கை. துர்க்கா என்ற மந்திரத்தை ஜெபித்தால், எதிரிகளின் தொல்லை நீங்கி மன தைரியம் உண்டாகும். இந்த சொல்லுக்கு "அரண்' "கோட்டை' என்று பொருள். வழிபடும் அடியவர்களைக் கோட்டை போலச் சுற்றி பாதுகாக்கும் துர்கையை " துர்க்கா தேவீம் சரணம் ப்ரபத்யே' என்று வேதம் போற்றுகிறது
 லலிதா சகஸ்ர நாமம்
 பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்கியானம் என்ற பகுதியில் அம்பிகைக்குரிய "லலிதா சகஸ்ரநாமம்' இடம் பெற்றுள்ளது. ஒரு சமயத்தில் சிவபெருமானின் விருப்பத்திற்கேற்ப, பார்வதி சாந்த கோலத்தில் அமர்ந்திருந்தாள். அப்போது தேவியின் திருவாயில் இருந்து "வசினீ' என்னும் எட்டு வாக் தேவதைகள் தோன்றினர். அவர்கள் போற்றித் துதித்த ஆயிரம் திருநாமங்களே "லலிதா சகஸ்ர நாமம்' ஆகும். இதனை, உலக நன்மைக்காக திருமாலின் அவதாரமான ஹயக்ரீவமூர்த்தி அகத்தியருக்கு உபதேசம் செய்தார். அகத்தியர் மூலம் இம்மந்திரம் பூலோகத்திற்கு வந்தது.

 மகிஷாசுரன் பிறந்த கதை

 அகத்தியர் ஒருமுறை வரமுனி என்ற தபஸ்வியைச் சந்திக்க வந்திருந்தார். இறுமாப்புடன் இருந்த வரமுனி, அவரைக் கண்டு கொள்ளவில்லை. மற்றவர்களைக் காட்டிலும் தனக்கு தவவலிமை அதிகம் என்ற அகந்தையே இதற்குக் காரணம். ஞானதிருஷ்டியால் விஷயம் அறிந்த அகத்தியர் கோபம் கொண்டு, ""வரமுனியே! ஆணவம் ஒருவனை அழித்துவிடும். அடுத்த பிறவியில் நீ ஒரு மகிஷமாக(எருமை) கடவது'' என்று சபித்தார். இதனால், ரம்பன் என்னும்
அசுரனுக்கும், ஒரு பெண் எருமைக்கும் வரமுனி பிள்ளையாகப் பிறந்தார். "மகிஷன்' என்று பெயரிட்டு வளர்த்தனர். மகிஷன் தவமிருந்து, தான் விரும்பும் பெண்ணைத் தவிர வேறு யாராலும் மரணம் நேரக்கூடாது என்று வரம் பெற்றான். அந்த வரத்தின் அடிப்படையில் துர்காதேவி மகிஷனை அழித்தாள்.

துர்க்காவின் திசை

சிவன்கோயில் பிரகாரத்தில் துர்க்கை பரிவார தேவதையாக இருப்பாள். கயிலாயத்தை நோக்கி இவள் இருப்பதாக ஐதீகம். அதனால் தான் அவளது சிலையை வடக்கு நோக்கி அமைப்பர்.
 ஆற்றல் தரும் அரிய மந்திரம்


"ஓம்' என்பது பிரணவ மந்திரமாகும். பிரபஞ்சத்தை இயக்கும் இறைவனின் ஒலி வடிவமே (நாத தத்துவம்) இம்மந்திரமாகும். கடலலை எழுப்பும் ஓசையும், சங்கில் எழும் நாதமும் பிரணவம் என்பர். பர்வத ராஜகுமாரியான பார்வதிக்குரிய திருநாமங்களில் "உமா' என்பது உயர்வானது. இதனையே "சக்தி பிரணவம்' என்று சொல்வர். சக்தி என்பதற்கு ஆற்றல் என்பது பொருள். அ, உ, ம என்ற மூன்று எழுத்துக்களின் சேர்க்கையே "ஓம்' என்பதுபோல, உமா' என்னும் மந்திரத்திலும் இந்த எழுத்துக்கள் உள்ளன. தேவிக்குரிய மூலமந்திரம்"ஓம் உமாதேவ்யை நமஹ' என்பதாகும். நவராத்திரி நாட்களில் இதை ஜெபிப்பவர் அம்பிகை அருளால் அரிய செயல்களையும் எளிதாக முடிக்கும் ஆற்றலைப் பெறுவர்.
 
ஒரே நாளில் முழுபலன்


நவராத்திரியின் ஒன்பது நாட்களும், பிராம்ஹி, மகேஸ்வரி, கவுமாரி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, நரசிம்ஹி, சாமுண்டி, சரஸ்வதி என்று ஒன்பது கோலங்களில் அம்பிகையை வழிபடுவர். ஒன்பது நாளும் வீட்டில் பூஜை செய்ய இயலாதவர்கள் சரஸ்வதி பூஜையன்று வழிபாடு செய்வர். இந்நாளில் கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் வழங்கும் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியை வணங்கினால் நவராத்திரி விரதத்தின் முழுபலனும் கிடைக்கும்.
 
ஆயி மகமாயி

 அம்பிகையை, "ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்' என்று போற்றுவர். உயிர்களுக்கு எல்லாம் தாயாக இருப்பதால் "ஆயி' என்று அவளுக்குப் பெயர். பிரபஞ்சம் எங்கும் அவளுக்கு கண்கள் இருக்கின்றன. இதனால், "கண்ணாத்தாள், கண்ணுடைய நாயகி, ஆயிரம் கண்ணுடையாள்' என்றெல்லாம் குறிப்பிடுவர். பாரதியாரும் பராசக்தியை, "எங்கெங்கு காணினும் சக்தியடா' என்று போற்றுகிறார். மாயவனின் தங்கையாக இருப்பதால் அவளுக்கு "மாயி' "மகமாயி' என்றும் பெயருண்டு.

 
சரஸ்வதி பூஜையை ஒட்டி காஞ்சிப்பெரியவர் அருளியது

ஈஸ்வரனோடு இருக்கும் அம்பாள் தான், வித்தையின்(கல்வியின்) வடிவம் என்று ஆதிசங்கரர் "கேநோபநிஷத்' பாஷ்யத்தில் சொல்லியிருக்கிறார். அந்த அம்பிகையே நம் எல்லார் மனசிலும் புகுந்து நம்முடைய புராதன வித்தைகளை ரட்சிப்பதில் நம்மைச் செலுத்த அருள்புரிய வேண்டும். பணம் தான் குறி என்ற நம்முடைய மனப்பான்மையை மாற்றி வித்தையே லட்சியம் என்ற ஈடுபாட்டை அம்பிகையின் அனுக்ரஹம்(அருள்) தான் உண்டாக்கித் தரவேண்டும். வித்தை தான் பெரிய பிரகாசம் என்று சொன்ன ஆதிசங்கரர், ""உமா பரமேஸ்வரி மட்டும் தான் இப்படி வித்தையால் ஜொலித்துக் கொண்டு ஹைமவதி (ஹேமாவதி)என்று பெயர் பெற்றதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. எவனொருவன் வித்தையைப் பயின்று வித்வான் ஆனாலும், அந்த வித்தையே அவனுக்கு ஒரு தேஜஸ் மெருகைக் கொடுத்துவிடும்,'' என்று முடித்திருக்கிறார்.
""ஹேமம் என்றால் தங்கம். தங்கமாக ஜொலிப்பவள் ஹைமவதி. இந்த ஜொலிப்புக்கு காரணம் அவள் வித்யாரூபிணியாக(கல்விக்கு தேவதையாக) இருப்பதால் தான்,'' என்கிறார். பாஷ்யத்தை முடிக்கும் இடத்தில், ""வித்வானாக(கல்விமானாக) ஒருவன் இருந்தால், அவன் அங்க லட்சணப்படி குரூபியாக இருந்தாலும் கூட,அழகோடுபிரகாசிக்கிறான்,'' என்கிறார். படிப்பாளியைப் பார்த்தவுடன், ""முகத்திலேயே என்ன அறிவுக்களை, என்ன தேஜஸ்!'' என்று சொல்கிறோம். அம்பிகையின் கிருபை தான் எல்லார்முகத்திலும்சோபையை உண்டாக்கி தேசம் முழுவதும் அறிவொளிபரவச்செய்ய வேண்டும்.

1 comment: