Monday, January 16, 2012

மற்றவர்களின் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைப்பவனே உலகில் உயர்ந்தவன்

ஒருவர், வட்டிக்கடைக்காரரிடம், மகள் திருமணத்துக்கு லட்ச ரூபாய் கடன் வாங்கினார். வட்டி குட்டிபோடவே, கடனை அடைக்க முடியவில்லை. சொத்து சுகமும் இல்லை. ஆண் மக்களும் உதவவில்லை. பெண்ணைக் கட்டிய மாப்பிள்ளையும் "எனக்கென்ன ஆச்சு' என ஒதுங்கிக் கொண்டான்.
கடன் கொடுத்தவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வாங்கியவரை சிறையில் அடைத்து விட்டனர். மிகுந்த வருத்தத்தில் இருந்த அவர், தனது ஊரில் இருந்த சாமியாருக்கு கடிதம் எழுதினார்.
""சுவாமி! கடனைத் திருப்பி அடைக்க முடியாத குற்றத்துக்காக சிறையில் போட்டு விட்டனர். இங்கே, நான் அவஸ்தைப்படுகிறேன். என் கடனை அடைத்து விட்டால், சிறையில் இருந்து விடுவித்து விடுவார்கள். நீங்கள் தான் ஊர் பெரிய மனிதர்களை நாடி கடனை அடைக்க உதவ வேண்டும்,'' என எழுதியிருந்தார்.
சாமியாரும் பலரிடம் பணம் கேட்டார். யாரும் தரத்தயாராக இல்லை. சிறை அதிகாரியை சந்தித்தார்.
""ஐயா! அவன் குடும்பஸ்தன். அவனை விடுதலை செய்யுங்கள். அவனுக்குப் பதிலாக நான் சிறையில் இருக்கிறேன்,'' என்றார். அதிகாரியும் ஒப்புக்கொண்டார். சாமியார் உள்ளே போக, கடன்காரன் வெளியே வந்தான். சாமியாரும் பல இன்னல்களை அனுபவித்து, அங்கேயே உயிரை விட்டார்.
மற்றவர்களின் கஷ்டத்தை தன் கஷ்டமாக நினைப்பவனே உலகில் உயர்ந்தவன்

No comments:

Post a Comment