Saturday, February 11, 2012

திருவாதிரை விரதம்


திருவாதிரை விரதம்
திருவாதிரை திருநாள் அன்று அதிகாலையில் குளிர்ந்த நீரில் நீராடி, சிவாலயத்தில் உள்ள நடராஜர் சந்நிதியில் நடக்கும் திருவாதிரை திருநடன நிகழ்ச்சியை காண வேண்டும். சிறிதளவு பிரசாதக் களி சாப்பிடலாம். மற்றபடி உபவாசம் (ஏதும் சாப்பிடாமல்) இருப்பதே உயர்ந்தது. 


ஆதிரை என்ற பெண்மணி முதலிரவில் தன் கணவனை இழந்தாள். அவள் சிவபெருமானிடம் போராடி தன் கணவனை மீட்டாள். மேலும், வான மண்டலத்தில் நட்சத்திர அந்தஸ்தும் பெற்றாள்.

சிவபெருமானுக்குரிய வடிவங்களில் முதன்மையானது நடராஜர் வடிவமே. இவர் ஆடுவது ஆனந்த தாண்டவம். அம்பலவாணர், சபாபதி, கூத்தப்பெருமான், நடேசன், சித்சபேசன், நடராஜன், கனகசபாபதி, பொன்னம்பலம் என்ற பெயர்கள் உண்டு. இலக்கியங்களில் இவரை "ஆடல்வல்லான்' என்று குறிப்பிட்டுள்ளனர். ஆனந்த தாண்டவமாடும் நடராஜரை வழிபட்டால், மகிழ்ச்சி என்றென்றும் நிலைக்கும்.

நடராஜருக்கு பஞ்சசபைகள் என்று ஐந்து கோயில்கள் உள்ளன. அவை சிதம்பரம்- கனகசபை, மதுரை- வெள்ளியம்பலம், திருநெல்வேலி-தாமிரசபை, திருவாலங்காடு- ரத்தினசபை, குற்றாலம்- சித்திரசபை.


மூன்றும் ஓரிடத்திலே
சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். இம்மூன்று வடிவங்களிலும் சிவபெருமான் அருள்புரியும் தலம் சிதம்பரம். மூலவர் திருமூலநாதர் அருவுருவத்திலும்(லிங்கம்), நடராஜர் உருவத்திலும், சிதம் பர ரகசியம் என்னும் வெட்டவெளியில் உருவமற்ற அருவ நிலையிலும் சுவாமி காட்சிதருகிறார்.


சிதம்பரம் என்றால் என்ன
சித்+அம்பரம்=சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி. நடராஜர் சந்நிதியின் வலதுபுறம் ஒரு சிறு வாயில் உள்ளது. இதனுள் தங்கத்தினால் ஆன வில்வ மாலை உள்ளது. வாசலில் திரை தொங்கும். பூஜையின் போது திரை விலக்கப்பட்டு ஆரத்தி காட்டப்படும். அங்கே என்ன இருக்கிறது? என்று குனிந்து பார்த்தால், ஆகாயம் தான் தெரியும். இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதை இது குறிக்கிறது. பஞ்சபூத தலங்களில் இது ஆகாயத்தலம்.


சிதம்பரம் கோயிலை "தில்லை அம்பலம்' என்பர் தில்லைமரம் நிறைந்த காடாக இருந்ததால், சிதம்பரத்திற்கு தில்லைவனம் என பெயர். சிதம்பரத்திற்குக் கிழக்கேயுள்ள பிச்சாவரம் உப்பங்கழியோரத்தில் தில்லைமரங்கள் உள்ளன. சேந்தனார் தம்முடைய பாடலில், ""மன்னுக தில்லை! வளர்க நம் பக்தர்கள்!'' என்று சிதம்பரத்தை " தில்லை' என்று குறிப்பிடுகிறார். 

No comments:

Post a Comment