Thursday, February 16, 2012

திருவிளக்கு --விளக்கு பூஜை


விளக்கின் அடிப்பகுதியான பீடம் மலர்ந்த தாமரைப்பூ போல் அகன்று வட்டமானதாக இருப்பதால் தாமரை மலர் மேலுறையும் பிரம்ம தேவனைக் குறிக்கும். தண்டுபாகம் போன்று உயரமாக இருப்பதால் நெடுமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கும். தண்டுக்கு மேலுள்ள எண்ணெய் வார்க்கும் அகல், கங்கையை சடையுள் வைத்துள்ள சிவனைக் குறிக்கும்.
திரி எரிவதற்குரிய மூக்குகள் ஐந்தும், ஐந்து முகமுடைய மகேஸ்வரனைக் குறிக்கும். அகலின் மேல் அமைந்துள்ள கும்பக்கவசம் போன்ற உச்சிப்பகுதி சிவலிங்கம் போலிருப்பதால் சதாசிவனை குறிப்பதாக உள்ளது. ஆக ஐந்து தெய்வ வடிவங்களின் சின்னமாக அமையும் பெருமையுடையது திருவிளக்கு.
திருவிளக்கின் சுடரை சிவ ஜோதியாகவே கருதி திருவைந்தெழுந்து முதலிய மந்திரங்களை ஓதி வழிபட்டு வந்தால் `விளக்கிட்டாருக்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி' என்ற சொல்லின் உண்மை புலப்படும். 
தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற 3 சக்திகளும் உள்ளன. தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது. மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது. தினமும் மாலையில் தீபம் வைத்து வணங்கிப் பூஜை செய்ய வேண்டும்.
பொது இடங்களில் பலரும் சேர்ந்து கூட்டாகத் தீப வழிபாடு செய்யலாம். வீட்டிலே சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, 1/2 மணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு, பூட்டுபோட்டு, தேவியை மனதில் தியானித்துப் பூஜை செய்ய வேண்டும். அப்படிச் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுபாக்கியங்களும் ஏற்படும்.
வீட்டிலே நாம் இம்மாதிரி தீபபூஜை செய்யும்போது, பக்கத்திலேயே குழந்தைகளை வைத்துக்கொண்டு செய்ய வேண்டும். அவர்களையும் நல்ல சுலோகங்களை பாடல்களைப் படிக்க வைத்து பூஜையில் ஈடுபடுத்த வேண்டும்.
தினமும் காலையிலும், மாலையிலும், வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். லட்சுமியின் அருள் கிடைக்கும். ஒவ்வொரு மாதம் அமாவாசை மற்றும் பவுர்ணமியில் திருவிளக்கு ஏற்றி விளக்கு பூஜை செய்தால் கீழ்கண்டபடி பலன்கள் கிடைக்கும்.
சித்திரை- தான்யம் உண்டாகும்
வைகாசி- செல்வம் கிடைக்கும்
ஆனி- விவாகம் நடக்கும்
ஆடி- ஆயுள் விருத்தி
ஆவணி- புத்திரப்பேறு உண்டாகும்
புரட்டாசி- பசுக்கள் விருத்தி
ஜப்பசி- பசிப்பிணி நீங்கும்
கார்த்திகை- நற்கதி உண்டாகும்
மார்கழி- ஆரோக்கிய வாழ்வு கிடைக்கும்
தை- வாழ்வில் வெற்றி கிடைக்கும்
மாசி- துன்பம் அகலும்
பங்குனி- தர்ம சிந்தனை பெருகும்
சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இது பித்தளை அல்லது வெள்ளி குத்துவிளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்துவிளக்கு ஏற்ற வேண்டாம். குத்துவிளக்கு மும்மூர்த்திகளின் வடிவம். குத்துவிளக்கின் தாமரை வடிவமான ஆசனமாகிய அடிப்பாகம் பிரம்ம அம்சம். நீண்ட தண்டு (நடுப்பாகம்) விளக்கேற்றி வைக்கும்பொழுது அது கிழக்குத் திசை பார்த்து இருக்க ஏற்றி வைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தெற்கு திசை பார்க்க ஏற்றி வைக்கக்கூடாது.

தீபம் ஏற்ற கடலை எண்ணெய் பயன்படுத்தக்கூடாது. பின்வருவன நன்மை தரும்.
நெய்-சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தரும். நல்லெண்ணெய்-எல்லாப் பீடைகளையும் விலக்கும்.
விளக்கெண்ணெய்-உடல் ஆரோக்கியம், புகழ், உறவினர், சுகம், தாம்பத்திய சுகம் ஆகியவற்றை விருத்தி செய்யும்.
முக்கூட்டு எண்ணெய்- வேப்பெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து தீபம் இடுவதால் செல்வம் உண்டாகும். இது குலதெய்வத்திற்கு உகந்தது.
ஜங் கூட்டு எண்ணெய்.....
நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை கலந்து மாற்றி எவர் ஒருவர் ஒரு மண்டலம் (45 அல்லது 48) நாட்கள் பூஜை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் உண்டாகும்.

விடியற்காலை விளக்கு வழிபாடு.....
விடியற்காலை 3.00 மணி முதல் 5.00 மணிக்குள் வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் சர்வமங்கள யோகம் உண்டாகும்.
ஒரு முகமும் ஏற்றி வழிபடுவது-மத்திய பலன்
இரண்டு முகம் ஏற்றி வழிபடுவது-குடும்ப ஒற்றுமை பெருகும்
மூன்று முகம் ஏற்றி வழிபடுவது-புத்திர சுகம் தரும்
நான்கு முகம் ஏற்றி வழிபடுவது-பசு, பூமி இவற்றைத் தரும்
ஐந்து முகம் ஏற்றி வழிபடுவது-செல்வத்தைப் பெருக்கும்.
தீபம் ஏற்ற தூய்மையான அகல் விளக்கு புதியது தான் பயன்படுத்த வேண்டும். ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோயில்களில் முறுபடியும் ஏற்றக்கூடாது. அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு விளக்கு ஏற்ற வேண்டும்.
விநாயகப்பெருமானுக்கு 1/ ஏழு தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளுக்கு 5, நாக அம்மனுக்கு 4 தீபம், சிவனுக்கு 3/9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மகாலட்சுமிக்கு 8 தீபம், ஏற்றி வழிபட வேண்டும். தீபங்கள் வாகனங்களுக்கு முன்பாக ஏற்ற வேண்டும். சிவன் கோயிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன்-சிங்கம் /நந்தி முன்பாக,பிள்ளையார்-பெருச்சாளி முன்பாக, பெருமாள்-கருடன் முன்பாக,முருகர்- மயில் முன்பாக ஏற்ற வேண்டும்.
துர்க்கை அம்மனுக்கு மட்டும் எலுமிச்சை பழ விளக்கு 2 ஏற்றவேண்டும். தீராத நோய்கள் தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு 2 அம்மனை தீபம் நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

இந்து தர்மத்தில் எந்தப் பூஜை ஆரம்பித்தாலும் அதில் முதலில் குத்து விளக்கு இடம் பெறும். குத்து விளக்கு இல்லாதவர் காமாட்சி விளக்காவது வைத்து, தீபம் ஏற்றுவது வழக்கும். திருமணத்தின்போது தாய் வீட்டுச் சீதனமாக மணப்பெண்ணிற்கு குத்து விளக்கைக் கொடுப்பது வழக்கும். தை மாதம் வெள்ளிக்கிழமை மாதர்கள் எல்லோரும் கோவில்களில் நடக்கும் குத்து விளக்குப் பூஜையில் கலந்து கொள்வார்கள்.
குத்து விளக்கில் அம்பாளை ஆவாகனம் செய்து கொண்டு பின் தியானித்து, ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் செய்தபடி 1008 நாமங்கள் சொல்லியபடி, பூக்களால் அர்ச்சனை செய்வார்கள். இதைச் செய்து வைக்கும் புரோகிதர், ஒலிபெருக்கியில் இந்தப் பூஜை செய்யும் கிரமத்தை ஒவ்வொன்றாக அழகாக எடுத்துச் சொல்ல, பெண்களும் அப்படியே சொல்வார்கள்.
கோவில் மண்டபங்கள் பலவற்றில் இந்தப் பூஜையில் பங்குபெறும் சுமார் ஐந்நூற்றுக்கும் மேலானவர்களை நாம் காணலாம். அவர்கள் வீட்டிலிருந்து கொண்டுபோகும் பொருட்களில் குத்து விளக்கு முக்கிய பங்கு வகிக்கும். இந்த விளக்குப் பூஜையில் என்ன தத்துவம் இருக்கிறது? விளக்கு எரிந்து, அதனால் இருள் விலகி, அங்கு ஒளி பிரகாசிக்கிறது.
விளக்கு தன்னையே அழித்துக்கொண்டு, மற்றவர்களுக்கு வெளிச்சம் தருகிறது. ஜோதியிலே அம்பாள் அருள் புரியும் ஒரு கோவில், டெல்லியில் ஜனக்புரி என்ற இடத்தில் இருக்கிறது. 24 மணி நேரமும் விடாமல் தீபம் எரிந்த வண்ணம் இருக்க, அதை உன்னிப்பாகக் கவனிப்போமானால் அம்பாள் அங்கு அமர்ந்து அருள் புரிவது விளங்கும்.
காமாட்சி விளக்கு போல் இருக்க, அதன் கீழ்ப்பாகம் வட்ட வடிவமான பாத்திரம் போல் இருக்கிறது. பக்தர்கள் அதில் எண்ணெய் விட்ட வண்ணம் இருக்கிறார்கள். அங்கு ஸ்ரீராஜராஜேஸ்வரியும் சௌந்தர்யபூஷணியாக நின்றபடி அருள் புரிகிறாள். அங்கு ஜோதியிலேயே அன்னையைக் காண்கின்றோம்.
அக்னி புராணத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய்யில் விளக்கு ஏற்ற, பல பலன்கள் விளக்கப்பட்டிருக்கின்றன. நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது. அதே போல் மணிபூரகம், அனாகதம் இரண்டும் நெய் விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன.
நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது. சுஷம்னா நாடி, அந்தப் பரமபொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது.
நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய் விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது. சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம்தான் ஏற்ற வேண்டும். விளக்கெண்ணெய் தீபம், குடும்பத்தில் ஒற்றுமை, தாம்பத்தியம் சுகம், புகழ் ஆகியவற்றை உண்டாக்கும்.
இலுப்ப எண்ணெயிலும் தீபம், ஏற்றலாம். வீட்டிற்கு நலன் உண்டாகும். கடலெண்ணையில் தீபம் ஏற்றுவது உசிதமில்லை. இதனால் கடன், துக்கம், பயம், பீடை எல்லாம் வந்து ஆட்டிப்படைக்கும். விளக்கைத் தேய்த்துச் சுத்தப்படுத்தவும். சில நாட்கள் விதிக்கப்பட்டிருகின்றன. அவை ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகியன.
செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளில் விளக்கினைத் துலக்கக்கூடாது. மழலைச் செல்வம் வேண்டுபவர், வாழைத் தண்டு நூலைப் பக்குவப்படுத்தி, அதைத் திரியாக்கி, தீபம் ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். அதிக அளவில் செல்வம் வேண்டுமென்றால் வெள்ளெருக்கன் பட்டையைத் திரியாக்கி, தீபம் ஏற்ற வேண்டும்.
தாமரைத் தண்டுத் திரி, முன் வினைப்பாவத்தை நீக்கும். பஞ்சுத் திரி, எல்லாவற்றுக்குமே நல்லது. வீட்டில் மங்களம் உண்டாகும். தினமும் காலையிலும் மாலையிலும் குத்து விளக்கேற்றி, மனம் ஒன்றியபடி தியானம் செய்ய மனத்தில் இருக்கும் கொந்தளிப்புகள் அகன்று அங்கு அமைதி நிலவும். மனசாந்தி கிடைக்கும்.

 கார்த்திகை தீபத் திருவிழாவில் திருக்கோவில்களிலும், நமது வீடுகளிலும் வரிசையாக அகல்விளக்குகளை ஏற்றி இறைவனை வழிபடுகிறோம். களிமண்ணால் செய்யப்பட்டு, வரிசையாக ஏற்றப்படும் விளக்குகள் பார்ப்பதற்கு அழகாகவும், மனதுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கக் கூடியதாக விளங்குகின்றன. அகல்விளக்கின் தொன்மைச் சிறப்பினை காண்போமா!
மனிதன் நாகரீகம் அடையாத கற்காலத்தில் நெருப்பின் அவசியத்தையும், உபயோகத்தையும் அறிந்து வைத்திருந்தான். சற்று நாகரீகம் முன்னேற்றம் அடைந்த புதிய கற்காலத்தில், ஓரிடத்தில் தங்கி குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு வாழத் தொடங்கினான். இக்காலத்தில் அவனுக்கு விளக்கின் அவசியம் தேவைப்படலாயிற்று.
எனவே, கையால் ஈரமான களிமண்ணை சற்று குழியாக சிறு விளக்கு போன்று செய்து பயன்படுத்திக் கொண்டதை பையம்பள்ளி போன்ற இடங்களில் நடைபெற்ற அகழாய்வுகளினால் அறிய முடிகிறது. அடுத்த வந்த இரும்பு காலத்தில், பெரிதும் முன்னேற்றம் அடைந்த நிலையில் சக்கரத்தில் யானைகள், சிறு விளக்குகள் செய்யத் தொடங்கினான்.
ஈரமான களிமண்ணில் செய்து பின்னர் அதை சூளையில் இட்டு செய்துகொள்ளும் திறனைப் பெற்று விளங்கினான் என்பதை தமிழகத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளின் மூலம் அறிய முடிகிறது. சற்று குழியான சிறிய மண் பாத்திரம், `அகல்' என்று அழைக்கப்பட்டது.
கொடு மணல், அரிக்கமேடு, கரூர் போன்ற இடங்களில், அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த சிறு மண்பாத்திரங்களில் `கூல அந்தைய சம்பன் அகல்' வாருணி இய் அகல், முதிகுயிர அன் அகல், குறஅகல்' என்றெல்லாம் பண்டைய தமிழ்-பிராமி எழுத்துக்களில் பொறிப்புகள் காணப்படுவது சிறப்பாகும். அகல் விளக்குகள் சக்கரத்தில் வைத்து செய்யப்பட்ட ஒரு திரி போடக்கூடிய ஒரு முக அகல் விளக்குகள் பல அகழாய்வுகளில் கிடைத்துள்ளன.
சங்க இலக்கியங்களான அகநானூறு, நற்றினை போன்றவை கார்த்திகை நாளில் அகல் விளக்குகள் வரிசையாக ஏற்றி வைத்திருந்ததைப் பற்றி குறிப்பிடுகின்றன. இவை மலர்கள் அடுக்கடுக்காய் பூத்திருப்பது கார்த்திகை நாளில் மகளிர் ஏற்றி வைத்த விளக்குகள் போன்று உள்ளன என்று, தமிழ்நாட்டில் அவ்வையார் ஒரு பாடலில் குறிப்பிடுகின்றார்.
கார்த்திகைத் தீபத் திருவிழா, `சுடர் விழா' என்றே குறிப்பிடப்படுகிறது. கி.பி. 10-11ம் நூற்றாண்டுகளில் களிமண் அகல் விளக்குகளில் 4 திரிகள், 6 திரிகள், 8 திரிகள் போடும் அளவுக்கு செய்யப்பட்ட விளக்குகள் பழையாறை, தாராசுரம், திருவாமாத்தூர், போளுவாம்பட்டி போன்ற இடங்களில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.
இத்தகைய விளக்குகளில் நடுப்பகுதி சற்று மேடாக, நீளமான நூல்திரி வைப்பதற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகிறது. அகல் விளக்குகள் களிமண்ணால் மட்டும் செய்யப்படவில்லை. திருச்சோற்றுத்துறை கோவிலுக்கு செம்பினால் ஆன 32 அகல் விளக்குகள் அளிக்கப்பட்டதை ஒரு கல்வெட்டினால் அறிய முடிகிறது.
திருவண்ணாமலை திருக்கோவிலில் கார்த்திகை திருநாளில் அகல் விளக்குகளை ஏற்றவும், தானம் அளித்ததாக முதலாம் இராஜேந்திர சோழன் கால கல்வெட்டில் அறிய முடிகிறது. களிமண் அகல் விளக்குகளில் ஏற்றப்படும் தீபம் மிகச் சிறந்தது என ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர். தொன்மைச் சிறப்பு வாய்ந்த அகல் விளக்குகளை கார்த்திகை தீபத் திருநாளில் ஏற்றி மகிழ்வோம். 
 

No comments:

Post a Comment