Saturday, March 10, 2012

ராமநவமி

ராமபிரான் சித்திரை மாதத்தில் அவதரித்தார் என்று கூறப்பட்டாலும், பெரும்பாலும் பங்குனி மாத வளர்பிறை நவமி திதியிலேயே ராமநவமி கொண்டாடப்படுகிறது.

அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும் தங்களை கெட்ட திதிகளாக எல்லாரும் எண்ணுவதாக மகாவிஷ்ணுவிடம் கூறி வருத்தப்பட்டன. அவர்கள்மீது கருணைகொண்டு நவமி திதியில் ராமராகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணராகவும் அவதரித்து திதி தேவதை களின் மனக் குறையைப் போக்கினார் மகாவிஷ்ணு.

முக்தி தரும் ஏழு தலங்களில் முதன்மை யாகச் சொல்லப்படுவது அயோத்தி. சரயூ நதிக்கரையில் அமைந்த மீன் வடிவமுள்ள இந்த நகரில், இஷ்வாகு குலத்தில் 65-ஆவது மன்னனாக அவதரித்தவர் ராமபிரான்.

தசரதனின் தாத்தாவின் பெயர் ரகு. இவர் விஸ்வஜித் யாகம் நடத்தி, தனது செல்வங்களையெல்லாம் தானமாக வழங்கினார். அதனால் ராமரின் வம்சம் ரகு வம்சம் என்றும் போற்றப்படும்.

ராமநவமியன்று ராமர் படத்தையும் ராமாயண காவியத்தையும் பூஜையறையில் வைத்து வழிபட வேண்டும். ராமர் பட்டாபிஷேக படத்தைப் பூஜிப்பதும் நன்று. வடை, பருப்பு, பானகம், நீர்மோர், பாயசம் போன்றவற்றைப் படைத்து, பின் அவற்றை பக்தர்களுக்கு வழங்க வேண்டும். விசிறி தானம் செய்வதும் நல்லது. நியமத்தோடு விரதம் கடைப்பிடிக்க வேண்டும்.


ராமநவமியன்று, "ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா' என்று 108 முறை மனமொன்றிச் சொன்னாலே போதும்; எல்லை யற்ற புண்ணியம் கிட்டும். ராமநவமி யில் விரதமிருப்பதால் லட்சுமி கடாட்சம், வியாதிகள் அகலுதல், பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல், பிள்ளைப் பேறு போன்றவற்றோடு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

"ஓம் நமோ நாராயணாய' என்னும் எட்டெழுத்து மந்திரத்திலுள்ள "ரா'வும் "ம'வும் இணைந்து உருவானதே "ராம' எனும் மந்திரம். இது ராமபிரான் பிறப்பதற்கு முன்பே உருவானதாகச் சொல்வார்கள். ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை வழங்கக் கூடியது. "ரா' என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்களெல்லாம் வெளியேறி விடுகின்றன என்றும்; "ம' என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போடு அந்தப் பாவங்கள் மீண்டு வராமல் தடுக்கப்படுவதாகவும் சொல்வர்.

வால்மீகி முனிவர் ராமபிரான் பிறக்கும் முன்பே ராம சரிதத்தை எழுதிவிட்டாராம். எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றலை பிரம்ம தேவரிடம் பெற்ற இவர், மகாவிஷ்ணுவைத் தியானித்து, அவரது அவதாரத்தை உணர்ந்து எழுதினார் என்பர். முன்னதாக பிரம்மா நூறு கோடி சுலோகங்கள் கொண்ட ராமாயணத்தை இயற்றியதாகவும்; அதை வால்மீகி 24,000 சுலோகங்களுடன், பல கிளைக் கதைகளைக் கொண்டு 500 சர்க்கங்கள், ஆறு காண்டங் கள் உள்ளதாக எழுதினார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

ராமபிரான் முடிசூடிக்கொண்டபின் அஸ்வமேத யாகம் செய்தார். அதன்பின் அஸ்வமேத யாகத்தைவிட பத்து மடங்கு பெரிதான வாஜபேயம், நூறு மடங்கு பெரிதான ஸுவர்ணகம், கோஸவம், அதிராத்திகம், அக்னிஷ்டோமம் ஆகிய யாகங்களையும் 16 ஆண்டுகள் செய்தார். இவற்றுக்கு வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, கச்யபர், விஸ்வாமித்திரர், புலஸ்தியர், பரத்வாஜர், துர்வாசர், பார்கவர், வாமனர், மார்கண்டேயர், மௌத்கல்யர், கர்க்கர், சியவனர், சதானந்தர், சுப்ரமர், அகத்தியர், அத்ரி, வால்மீகி போன்ற ரிஷிகளும் முனிவர்களும் துணையிருந்தனர்.


ராமாயண கதாபாத்திரங்கள்


சீதை: ஏர் முனையில் கிடைத்தவள் என்பதால் சீதை என பெயர் பெற்றாள். பூமகளின் அவதாரம் என்பதால் பொறுமை யின் சிகரமாக விளங்கினாள்; கற்புக் கனலியாகவும் விளங்கினாள். சிவபெருமான் சீதையாகவும்; உமையவள் ராமனாகவும் அவதரித்ததாக சில புராணங்கள் கூறுகின்றன. சிவனின் நிறம் சீதைக்கும், உமையின் நிறம் ராமனுக்கும் அமைந்திருந்தது.

லட்சுமணன்: பாற்கடல் வாசனின் படுக்கையான ஆதிசேஷனே ராமனுக்குத் தம்பியாக அவதரித்தான். வெளியில் உலவும் ராமனின் உயிர் போன்றவன். தொண்டு செய்யவே பிறந்த உத்தமன். இவனது மனைவி ஊர்மிளா; மகன்கள் அங்கதன், சந்திரசேது.


பரதன்: திருமாலின் சக்ராயுதமே பரதனா கப் பிறந்தது என்பர். ராமபிரான் வனவாசம் செல்லும்போது அவரின் பாதுகைகளைப் பெற்றான் பரதன். அவர் திரும்பி வந்ததும் அவற்றை ராமனின் கால்களில் அணிவித்தவ னும் பரதனே. ஜனகனின் தம்பி குசத்வஜனின் மகள் மாண்டவி என்பவள்தான் பரதனின் மனைவி; தக்ஷன், புஷ்கலன் ஆகியோர் மகன்கள்.


சத்ருக்ணன்: திருமாலின் சங்குதான் இவன் என்பர். ஐம்புலன்களை வென்றவன். லவனும் குசனும் ராம சரிதத்தைப் பாட,
அதை முதலில் கேட்டவன் இவனே. லவண துர்க்கையின் அருளால் லவணாசுரனை வென்றவன். குசத்வஜனின் இரண்டாவது மகள் சுருதகீர்த்தியை மணந்தவன்.

லவன், குசன்: இராமபிரானின் இரட்டைப் பிள்ளைகள். குசனை கோசல நாட்டு மன்னனாகவும்; லவனை உத்தர நாட்டு மன்னனாகவும் ராமர் முடிசூட்டினார்.

பாதுகை: வைகுண்டத்தில் எம்பெருமாளின் பாதுகையை சங்கும் சக்கரமும் ஏளனம் செய்தன. ராமாவதாரத்தின்போது சக்கரமான பரதனும், சங்காகிய சத்ருக்ணனும் அதே பாதுகையை 14 ஆண்டுகள் பூஜிக்கும்படி செய்தார் பகவான் என்கின்றன புராணங்கள்

No comments:

Post a Comment