Tuesday, April 10, 2012

சபரிமலை ஐயப்பன்

கார்த்திகை மாதம் துவங்கியதும், கேரளாவில் மட்டுமின்றி, பாரத தேசமே ஐயப்ப பக்தியில் மூழ்கிப் போகிறது. மாலை அணிந்து பக்திச் செறிவுடன் ஐயப்பன் நாமத்தைச் சொல்லி விரதம் அனுசரிக்கிறார் கள். ஐயப்பன் கலியுக வரதன்; கலிகால தோஷத்தை அகற்ற ஐயப்பனைத் தரிசித்தால் போதும் என்கிற உணர்வு மேலிடுகிறது. ஆண்டுதோறும் இருமுடி ஏந்தி, சபரிமலைக்குப் புனித யாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. கடுமையான முறையில் அனைத்து விதமான விரதங்களையும் கடைப் பிடிக்கும் மாலையிட்ட ஐயப்ப பக்தன், சுவாமி ஐயப்பனின் பரிபூரண அனுக் கிரகம் பெற்றிருப்பதால், பக்தனையே ஐயப்பனின் அவதாரமாக மற்றவர்கள் மதிக்கிறார்கள் என்பது கண்கூடு.

மாலை போட்டுக்கொண்ட ஐயப்ப பக்தர் கள் கார்த்திகை முதல் தேதி முதலே விரதமிருக்க வேண்டும். சூரிய உதயத்துக்கு முன்பே குளிர்ந்த நீரில் நீராடி, சுத்தமாக இருக்க வேண்டும். பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சைவ உணவு மட்டுமே உண்ண வேண்டும். அண்டை, அயலாருடன் விரோதம் மறந்து, சிநேகம் பாராட்டி, பணிவுடன் பழகவேண்டும். இயற்கையின் படைப் புகள் எல்லாவற்றையுமே இறைவனின் சொரூபமாகப் பார்க்க வேண்டும்.

சபரிமலைப் பயணத்தின்போது, இருமுடி கட்டிக் கொண்டு செல்லும் போது, பந்தளத்தில் உள்ள கோவிலில் காணிக்கை செலுத்தி வணங்கிவிட்டு, பயணத்தைத் தொடர வேண்டும் என்பது ஐதீகம்.
அடுத்து முக்கிய மான இடம் எரிமேலி. மத ஒற்றுமைதான் எரிமேலியின் மகத்து வம்! இங்கு ஐயப்ப பக்தர்கள் நடத்தும் "பேட்டை துள்ளல்' வெகு பிரசித்தம். பம்பை முதலிய வாத்தியங்கள் முழங்க, முகத்திலும் உடம்பிலும் வண்ணங் களைப் பூசிக்கொண்டு, கைகளில் இலைக் கொத்துகளை ஏந்தியபடி, "சுவாமி திந்தகத் தோம்... ஐயப்ப திந்தகத்தோம்' என்று சொல்லிக் கொண்டு, ஆட்டம் போட்டபடி வாவரின் சந்நிதியினை நோக்கி வருவார்கள். வாவர் ஒரு இஸ்லாமிய கடற்கொள்ளைக்காரன் என்றும்; அவனைப் போரிட்டு வீழ்த்திய ஐயப்பன் அவனை ஆசீர்வதித்து தன் தளபதியாக்கிக் கொண்டதாகவும் கூறுவார்கள்.

இங்கே தனிவழிபாடு ஏதுமில்லையென்றா லும், தேங்காய் உடைத்து, காணிக்கை செலுத்தி வழிபடலாம். இங்கே மிளகு, கற்கண்டு போன்றவற்றை காணிக்கையாகப் போடுவதும் பக்தர் களின் பழக்கம்.

சபரிமலைப் பயணத்தில் ஐயப்பனின் சந்நிதானத்துக்கு அடுத்தபடியான முக்கியத் துவம் கொண்ட ஸ்தலம் என்றால் அது பம்பா தான். ஐயப்ப பக்தர்கள் பம்பையில் நீராடிய பின்னரே பயணத்தைத் தொடருவார்கள்.




பம்பையில் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்வதும் ஒரு முக்கிய சடங்கு. ஆற்றங் கரையோரத்தில் வரிசையாக புரோகி தர்கள் தர்ப்பணம் செய்விக்க அமர்ந் திருப்பதைக் காண லாம். பெரிய குழுக்க ளாக வரும் ஐயப்ப பக்தர்கள் பம்பையில் உணவு சமைத்து சாப்பிட்டு, சிறிது நேர ஓய்வுக்குப்பின் மலையேறிச் செல் வார்கள். இந்த உணவுக்கு பம்பை சத்யா (பம்பை விருந்து) என்று பெயர். படியேறும் தொடக்கத்தில் அழகுற அமர்ந்து ஆசீர்வதித்துக் கொண்டிருக்கும் விநாயகருக்கு பம்பை கணபதி என்று நாமம். அவருக்கு சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து வணங்கி விட்டு பயணத்தைத் தொடர்வது மரபு. அடுத்து பார்வதி, ராமர், அனுமன் சந்நிதிகளைக் காண லாம். அங்கே பிரதட்சிணம் செய்து, பிரசாதம் பெற்றுக்கொண்டு நகர்ந்தால் அடுத்து நாம் காண்பது பந்தள மகாராஜா. அவரை வணங்கி, ஆசிபெற்று மலையேற்றத்தைத் தொடரலாம்.

சிறிது தூரத்தில் மலையேற்றப் பாதை செங்குத்தாக இருக்குமாதலால், பயணம் சற்றே சிரமமாக இருக்கும். தாகம் எடுக்கும். தண்ணீரை அளவுடன் அருந்தி, பயணத்தைத் தொடர்ந்தால் வருவது அப்பாச்சிமேடு. இங்கே துர்தேவதைகள் இருப்பதாக நம்பிக்கை. அவ்விடம் விற்கப்படும் அரிசி உருண்டைகளை வாங்கி எறிந்துவிட்டு பயணத்தைத் தொடரவேண்டும்.

அடுத்து வருவது சபரிபீடம். இவ்விடத்தில் தான் சபரிக்கு மோட்சம் கிடைத்ததாக ஐதீகம். இங்கேயும் தேங்காய் உடைத்து, கற்பூர தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்யலாம்.

தொடர்ந்து நடந்தால் சரங்குத்தியை அடையலாம். இவ்விடத்தில் கன்னி ஐயப்பன் மார்கள் எடுத்து வரும் சரக்குச்சிகளைப் போட வேண்டும்.

வேறு எங்கும் இல்லாத புதுமையான வழிபாடு ஒன்றை இங்கு காணலாம். அதுவே வெடி வழிபாடு. ஆம்! பக்தர்கள் இன்னார் பெயரில் இத்தனை என்று காணிக்கை செலுத்தி, அதிர்வேட்டுகளை வெடிக்கச் செய்யலாம். பழங்காலத்தில் கொடிய வன விலங்குகளை யாத்திரைப் பாதையிலிருந்து விரட்டி, பத்திரமாய் பயணம் தொடர செய்யப்பட்ட வெடி உபாயம் இன்று ஒரு வழிபாடாக பரிமாணம் பெற்றுள்ளது.

அடுத்து அடைவது சந்நிதானத்தைத்தான். அங்கே அலையெனத் திரண்டு பக்தர்கள் எழுப்பும் சரண கோஷம் வானை அதிர வைக்கும்; மெய்சிலிர்ப்பை ஏற்படுத்திவிடும். விரதமிருந்து, இருமுடி ஏந்திவரும் பக்தர்கள் மாத்திரமே சந்நிதானத்தில் பதினெட்டு படிகள் வழியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

சமீபகாலமாக, இருமுடி கட்டிக் கொள்ளாமல் வரும் பக்தர்களும் உண்டு.

அவர்கள் பின்புறப் படிக்கட்டுகள் வழியே ஏறிவந்து ஐயப்பனைத் தரிசிக்கலாம்.

பதினெட்டு படிகளையும், பாவங்கள் உடைபடும் புனிதப் படிகளாகப் பக்தர்கள் மதிக்கிறார்கள். பதினெட்டு படிகளையும் பயபக்தியோடு சரண கோஷம் சொல்லி தொட்டு வணங்கிய படி ஏறுவது மரபு.

பழங்காலத்தில், பக்தர்கள் இருமுடி யினுள்ளே வைத்துக் கொண்டு வரும் தேங்காயை பதினெட்டாம் படியில் உடைத்து படியேறுவது மரபு. ஆனால், பதினெட்டாம் படிக்கு பஞ்சலோகத் தகடு வேயப்பட்டபிறகு படிகளில் தேங்காய் உடைப்பதற்குத் தடை வந்துவிட்டது. படிகளுடன் இணைத்து அமைக்கப்பட்ட கல்லில் தேங்காயை உடைத்து, வலதுகாலை எடுத்து வைத்து பதினெட்டாம் படி ஏற்றத்தைத் துவக்குவதுதான் தற்போது வழக்கத்தில் உள்ளது.

ஒவ்வொரு படிக்கும் பிரத்தியேகமான சரண முழக்கம் இருக்கிறது. அதனை உதடுகள் உச்சரிக்க, மனம் முழுவதும் ஐயப்பனிடம் சரணடைந்த நிலையில் பதினெட்டு படிகளை ஏறிட வேண்டும்.

இப்போது, படிக்கட்டுகளில் காவல்துறை யினர் நின்றுகொண்டு, படியேறும் பக்தர்களுக்கு கை கொடுத்து உதவுகிறார்கள். பதினெட்டு படிகளும் மிகவும் பவித்திரமானவை.

பதினெட்டு படிகளைக் கடந்து ஐயப்பனைத் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், கண்ணார ஐயனைத் தரிசித்தபின் கன்னிமூலை கணபதி, நாகராஜாவை வணங்கியபின், மாளிகைபுரத்து அம்மன் சந்நிதி நோக்கி நகரலாம்.

ஐயப்பன் பிரம்மச்சரிய விரதம் பூண்டவர் என்பதால், அவரைத் தரிசிக்க இருமுடியேந்தி வரும் பக்தர்கள்கூட, ஒரு மண்டலம் கடுமை யான பிரம்மச்சரிய விரதம் அனுசரிக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், சபரிமலையில் மாளிகைபுரத்து அம்மன் என்கிற பெண் தெய்வத்துக்கும் ஒரு கோவில் இருப்பது சற்றே விசித்திரமாக சிலருக்குத் தோன்றும்.

ஐயப்பன்மீது அளவற்ற காதல் கொண்டு, அவரைத் திருமணம் செய்து கொள்ள விரும்பியவள் மாளிகைபுரத்தாள். அவளது காதலை ஏற்றுக் கொண்டாலும், திருமணத்துக்கு ஐயப்பன் ஒரு நிபந்தனை விதித்தார். தன்னை தரிசிக்க கன்னி ஐயப்பன்மார்கள் வராமல் இருக்கும் காலத்தில் மாளிகை புரத்தாளை மணப்பேன் என்பதே ஐயப்பன் அளித்த வாக்குறுதி.

ஒவ்வொரு வருடமும் மகரஜோதி தருணத் தில் மாளிகைபுரத்து அம்மனை பதினெட்டாம் படிக்கும் அங்கிருந்து சரங்குத்திக்கும் எழுந் தருளச் செய்வார்கள். இப்போதாவது ஐயப்பன் தன்னை ஏற்றுக் கொள்வாரா என்ற கோரிக்கை யுடன் சரங்குத்திக்கு வரும் மாளிகைபுரத்து அம்மன், அங்கே கன்னி ஐயப்பன்மார்கள் குத்திவிட்டுச் சென்ற சரக்குச்சிகளைப் பார்த்த வுடன், மனவேதனை அடைந்து தன் வசிப்பிடம் திரும்பி விடுவது வழக்கம்.

தரிசனம் முடித்தவுடன் மலை இறங்கத் துவங்குவது மரபு. பம்பையை வந்தடைந்தவுடன் மறுபடி கணபதி, ஸ்ரீராமன், அனுமனை சூடம் ஏற்றி வழிபட்டு மனநிறைவு கொள்ளலாம்.

No comments:

Post a Comment