Wednesday, April 25, 2012

ஸ்ரீ கிருஷ்ணர் தான் பிறந்த யாதவ குலத்தை அழிக்க திருவுள்ளம் கொள்ளல்


ஸ்ரீ கிருஷ்ணர் தான் பிறந்த யாதவ குலத்தை அழிக்க திருவுள்ளம் கொள்ளல்


பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த நோக்கங்களில் ஒன்று பூமியில் உள்ள மக்கள் தொகையை குறைப்பதாகும். மகாபாரதப் போரில் பூ பாரம் கொஞ்சம் குறைந்தது. ஒரு நாள் கிருஷ்ணர் தன் அவதார நோக்கத்தில் நிறைவேறாமல் என்ன பாக்கி இருக்கிறது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார். யாதவ குலம் கட்டுக்கடங்காமல் பல்கிப் பெருகி விட்டதை உணர்ந்தார். எண்ணிக்கை கூடும்பொழுது தரம் குறைவது சகஜம் தானே! எனவே தான் பிறந்த யாதவ குலத்தையே அழிக்க திருவுள்ளம் கொண்டார்.விஸ்வாமித்திரர், கன்வர், துர்வாசர் முதலிய முனிபுங்கவர்கள் அறத்தை வளர்க்கவும், வரவிருக்கம் கலியுகத்தின் தோஷங்களைக் குறைக்கவும் நற்காரியங்களை செய்துகொண்டு பிண்டாரகம் என்னும் க்ஷேத்திரத்தை அடைந்தார்கள்.
வாலிப முறுக்கில், நல்லனவற்றை மதிக்காத யாதவகுல விளையாட்டுப் பிள்ளைகள் சிலர் சேர்ந்து கொண்டு இந்த ரிஷிகளைக் கேலி செய்யத் திட்டம் தீட்டினர்.
அவர்கள் ஜாம்பவதியின் புத்திரன் ஸாம்பனுக்கு நிறைமாத கர்ப்பிணி வேடம் போட்டு, முனிவர்களிடம் அழைத்துச் சென்றனர். அவர்களை போலிப் பணிவுடன் வணங்கி ‘தவத்தில் ஒக்காரும் மிக்காரும் இல்லாத பெரியோர்களே நமஸ்காரம். இந்த இளம் கர்ப்பிணிப் பெண்ணிற்கு என்ன குழந்தை பிறக்கும்’ என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டனர். திரிகாலமும் உணர்ந்த அந்த மகரிஷிகள் இந்த இளைஞர்களின் குறும்பினால் கோபமடைந்து இந்த பெண்ணிற்கு ‘உங்கள் குலத்தை அழிக்கும் இரும்பு உலக்கை பிறக்கும்’ என்று சாபமிட்டனர். ரிஷிகளின் சொற்கள் உடனே பலிக்கும் அல்லவா? ஸாம்பனின் வயிற்றிலிருந்து, ஒரு பெரிய இரும்பு உலக்கை கீழே விழுந்தது. பதைபதைத்துப் போன இளைஞர்கள், அந்த உலக்கையைத் தூக்கிக்கொண்டு மன்னரிடம் சென்றார்கள்.
மன்னர் முன்னிலையில் திரண்டிருந்த மாபெரும் கூட்டத்தில், இந்த இளைஞர்கள் நடந்தன எல்லாவற்றையும் கூறி, தங்களின் தகாத செயலுக்கு மன்னிப்புக் கேட்டனர். உக்கிரசேன மன்னர் இது ஒரு பெரிய நாசத்திற்கு முன்னோடி என்று உணர்ந்தார். அவர் அந்த இரும்பு உலக்கையைப் பொடி பொடியாக உடைத்து கடலில் எறிந்து விட ஆணையிட்டார். அவ்வாறே உலக்கை தூள்தூளாக நொறுக்கப்பட்டது. ஆனால் ஒரே ஒரு சற்றுப் பெரிய துண்டு மட்டும் பொடியாகவில்லை, எல்லாத் துகள்களும் கடலில் வீசப்பட்டன. பெரிய துண்டைக் கண்ட மீன் ஒன்று அதை விழுங்கி விட்டது. மற்ற துகள்கள் கரை ஒதுங்கி கோரைப் புற்களாக வளர்ந்தன. பெரிய துண்டை விழுங்கிய மீன் மீனவர் வலையில் சிக்கியது. அதை ஜரா என்ற வேடன் வாங்கிச் சென்று சமையல் செய்வதற்காக அறுத்த பொழுது பளபள என்று ஒரு இரும்புத் துண்டை அதன் வயிற்றில் கண்டான். நல்ல கூர்மையாக இருந்த அந்தத் துண்டை தன்னுடைய அம்பின் நுனியில் ஜரா பொருத்திக்கொண்டான்.
துவாரகையில் பல அபசகுணங்கள் தோன்றுவதையும், அறவோர் சாபத்தையும் கண்ட கிருஷ்ணர், யாதவக் குல பெரியோர்களை அழைத்து, ‘நாம் உடனடியாக துவாரகையைக் காலி செய்ய வேண்டும் ஸரஸ்வதி நதி கடலில் சங்கமிக்கும் முகத்துவாரத்தில் உள்ள பிரபாஸ க்ஷேத்திரத்திற்குச் சென்று அங்கு அற வாழ்க்கை வாழ்ந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கிருஷ்ணரின் அறிவுரைப்படி பெரும்பாலான மக்கள் துவாரகையை விட்டு வெளியேறி பிரபாஸ க்ஷேத்திரம் சென்றனர். அங்கு பூஜை புனஸ்காரங்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் பொழுது, விதி விளையாடியது. ரிஷிகளின் சாபம் பலிக்கும் நேரம் வந்தது. விதியால் மதியிழந்த அந்த மக்கள், கடற்கரையில் கூடி மதியை மயக்கும், குடியை கெடுக்கும், மதுவை போதை தலைக்கேறும் வரை குடித்தார்கள். மதுவின் மயக்கதிலிருந்த அவர்களிடையே திடீர் என்று கைகலப்பு ஏற்பட்டது.
தங்களிடம் இருந்த ஆயுதங்களால், ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டார்கள். ஆயுதங்கள் முறிந்து விழுந்த பிறகு கடற்கரையில் வளர்ந்திருந்த கோரை புற்களைக் கத்தை கத்தையாகப் பிடுங்கினர். அவர்கள் பிடுங்கியவுடன் அவை இரும்புத் தடிகளாக மாறின. ஏனென்றால் அவை முனிவர்கள் சாபத்தில் தோன்றிய இரும்பு உலக்கையின் தூள்களிலிருந்து துளிர்த்து வளர்ந்தவை அல்லவா! அந்த இரும்புத் தடிகளால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு அடியோடு அழிந்தனர். இப்படித் தன் கண் முன்னேயே பெரும்பாலோர் அழிந்ததை கண்ட கிருஷ்ணர். தனது அவதார நோக்கத்தில் ஒன்றான பூமிபாரம் குறைந்தது என நினைத்தார். யாதவ குலம் அழிந்ததை அறிந்த பலராமர் சமுத்திரக் கரையில் புருஷோத்தம தியான யோகத்தில் அமர்ந்து உடலை உருத்து, தனது இயல்பு நிலையை அடைந்தார்.
ஜரா கிருஷ்ணருடைய சிவந்த பாதத்தில் அம்பு எய்தல்
பலராமர் நிர்வாணம் எய்தியதை அறிந்த கிருஷ்ணர் ஒரு அரச மரத்தடியில் தனது இடது பாதத்தை வைத்துக் கொண்டு அமர்திருந்தார். தனது அம்பின் நுனியில் இரும்புத் துண்டை பொருத்திக் கொண்ட ஜரா அங்கு வேட்டையாட வந்தான். தூரத்திலிருந்து கிருஷ்ணரின் சிவந்த பாதத்தைக் கண்ட அவன், அதை மானின் முகம் எனக் கருதி அம்பை எய்தான். அந்த அம்பு குறி தவறாமல் தாக்கியதைக் கண்ட ஜரா, மான் கட்டாயம் விழுந்திருக்கும் என்று எண்ணி அதை எடுத்துப் போக வந்தான். வந்தவன் சங்கு சக்ர கதாபாணியாக இருந்த கிருஷ்ணரின் இடது காலில் அம்பு பாய்ந்து இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டான். ஜரா, கிருஷ்ணரின் பாதங்களில் நெடுஞ்சாண் கடையாக விழுந்து ‘பிரபுவே! பெரும் பாவம் செய்துவிட்டேன். என்னை மன்னித்தருள வேண்டும்’ என கண்ணீர் மல்க வேண்டினான் கிருஷ்ணர் அவனைத் தூக்கி எடுத்து. “ஜரா! பயப்படாதே! என் விருப்பப்படியே இது நடந்தது. புண்ணிவான்கள் செல்லுமிடமாகிய சொர்க்கத்திற்கு உன்னை தேகத்துடன் செல்ல அனுமதிக்கிறேன்” என்று ஆசீர்வதித்தார்.
கிருஷ்ணருடைய சாரதியாகிய தாருகன் அப்பொழுது அங்கு வந்து பிரபுவே! உங்கள் திருவடித் தாமரைகளைக் காணாமல் என் கண்கள் ஒளியிழந்த விட்டன! மனம் நிம்மதியற்று இருக்கிறது! என்று புலம்பிக்கொண்டிருக்கும் பொழுதே கருடக் கொடியுடைய தேரும் விஷ்ணுவின் தெய்வீக அம்சமான ஆயுதங்களும் விண்ணில் மறைந்தன.
கிருஷ்ணர் “தாருகா! நீ உடனே துவாரகை செல். நமது உறவினர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டு மாண்டார்கள் என்பதையும், பலராமர் வைகுண்டம் சென்றதையும், எனது நிலைமையும் அங்கு எஞ்சியுள்ள மக்களுக்கு தெரிவி. மேலும் துவாரகை விரைவில் கடலுக்குள் மூழ்குமென்றும் எனவே தாமதியாமல் அங்குள்ள மக்கள் அனைவரும் அர்ச்சுனனால் காக்கப்படும் ஹஸ்தினாபுரம் செல்ல வேண்டும் என்று கூறு. நீயும், எனது யோக மாயையால் இந்த அவதாரம் ஏற்பட்டது அதனாலேயே அடங்கிவிடும் என்ற ஞானத்தைப் பெற்று அமைதி பெறுவாயாக!” என்று கூறினார்.
தாருகன் மீண்டும், மீண்டும் கிருஷ்ணரை வணங்கி, பிரிய மனமில்லாமல் மிகவும் துக்கத்துடன் துவாரகை சென்றான். கிருஷ்ணருடைய அறிவுரைப்படி துவாரகையில் இருந்த மக்கள் ஹஸ்தினாபுரம் சென்றனர்.
பிரம்மா, வருணன், இந்திரன், ருத்திரன், மருத் தேவதைகள், யாரை திவ்யமான ஸ்துதிகளால் ஸ்துதிக்கிறார்களோ, ஸாமகானம் செய்கின்றவர்கள் யாரை அங்கமும் பதக்கிரமமும் உபநிஷதங்களும் கூடிய வேதங்களால் பாடுகிறார்களோ, யோகிகள் தியான முதிர்ச்சியால் மனதை யார்பால் வைத்து உணர்கிறார்களோ, சுர அசுரக் கூட்டங்கள் யாருடைய முடிவை அறிகிறார்களில்லையோ அந்த தெய்வத்துக்கு நமஸ்காரம்.

1 comment:

  1. உங்கள் பதிவுகளுக்கு என் உளம்கனிந்த நன்றிகள்

    ReplyDelete