Thursday, April 26, 2012

எந்த நிலையிலும் இறைவனை நம்பு!


திருமாலும், லட்சுமியும் ஆதிசேஷனின் மீதுஅமர்ந்து சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருந்தனர். கலியுகத்தில் மனிதன் எப்படியிருப்பான் என்பது பற்றிய பேச்சு அது. திடீரென திருமால் எழுந்தார். கருடன் கணப்பொழுதில் அவர் முன் வந்து நின்று, "சுவாமி ஏறுங்கள்' என்றான். அவர் எங்கு போகிறார் எனத்தெரியாவிட்டாலும், தன் மேல் அவர் ஏறியதும், அதுபற்றிய விபரம் கேட்டு, அங்கே வேகமாகப் போய் நிற்பது கருடனின் வழக்கம். பெருமாளும் கருடன் மேல் ஏறி, ""அதோ! வண்ணத்துணிகள் காய வைக்கப்பட்டுள்ள அந்த ஆற்றங்கரைக்குப் போ,'' என்றார். கருடன் அதை நோக்கிப் பறக்கவும், ""வேண்டாம்... வைகுண்டத்துக்கே திரும்பி விடு,'' என்றார்.
கருடனும் வைகுண்டத்தில் அவரை இறக்கி விட்டான். அவரைப் பார்த்த லட்சுமி,""சுவாமி! பேச்சைக் கூட பாதியில் விட்டு விட்டு, என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் அவசரமாகக் கிளம்பினீர்கள்! இப்போது, திரும்பி விட்டீர்களே!'' என்றாள்.
திருமால் சிரித்தபடியே, ""லட்சுமி! ஒரு இளைஞன் என் திருநாமத்தை உச்சரித்தபடியே ஆற்றங்கரையோரமாக நடந்து சென்றான். கவனக்குறைவாக, வழியில் சலவைத் தொழிலாளி ஒருவன் காயப்போடப் பட்டிருந்த ஒரு சேலையை மிதித்து விட்டான். அதைப் பார்த்த தொழிலாளி ஆத்திரத்தில் அவனை விரட்டினான். நான் அவனைக் காப்பாற்ற புறப்பட்டேன். ஓடிய இளைஞன், என் திருநாமம் சொல்வதை விட்டு விட்டு வழியில் கிடந்த கல்லை எடுத்து, சலவைத்தொழிலாளி மீது எறிவதற்கு ஓங்கினான். "ஆகா! இனி என் உதவி அவனுக்கு தேவையில்லை' என திரும்பி விட்டேன்,'' என்றார். எந்த நிலையிலும் இறைசிந்தனையுடன் இருப்பவனையே இறைவனுக்குப் பிடிக்கும்.

No comments:

Post a Comment