Monday, May 7, 2012

பழி தீர்ப்பதிலும் கூட, இனிமை

பழி தீர்ப்பது நல்ல செயலா என்றால் "இல்லவே இல்லை' என்போம். ஆனால், பகவானையே பழி தீர்த்திருக்கிறாள் ஆண்டாள்.
மனிதனாகப் பிறந்தவனுக்கு மனைவி, குழந்தை, உறவு, நட்பு, பணி என்று எத்தனையோ கட்டுகளை போட்டு வைத்தான் இறைவன். ஆனாலும், வாழ்வில், இன்பத்தைக் கண்டோமா என்றால், அதற்கு "இல்லவே இல்லை' என்று தான் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. விருந்தில் கூட பர்பியையும், பாகற்காயையும் பக்கத்தில் வைக்கிறார்கள். இனிக்கிறதே என சிறிது சுவைத்தால், அடுத்து கசக்கிறது வாழ்க்கை. துன்பம் அதிகமாகி விட்டால், "இந்த துன்பத்துக்கெல்லாம் காரணம் நீ தானே' என இறைவனை சபிக்கவும் செய்கிறோம்.
ஆனால், ஆண்டாள் ஒரு மாலையை எடுத்தாள், கழுத்தில் போட்டாள். ஆண்டவனுக்கு அனுப்பி வைத்தாள். பக்தி என்னும் நாரால் கட்டிய மாலை, அவனையே கட்டிப் போட்டது. ""ஏ கிருஷ்ணா! மனிதனாய் பிறந்த எல்லாரையும் கட்டிப் போடலாம் என கனவு காணாதே. நாங்கள் பக்தி என்னும் கயிறால் உன்னைக் கட்டிப் போட்டு விடுவோம். ஏற்கனவே, எங்கள் யசோதை உன்னை உரலில் கட்டிப் போட்ட முன்னுதாரணம் இருக் கிறது,'' என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறாள். பக்தி என்னும் கயிறால், சம்சாரத்தில் நம்மைக் கட்டிய ஆண்டவனையே பழிக்குப்பழி வாங்கலாம். பழி தீர்ப்பதிலும் கூட, எவ்வளவு இனிமை பார்த்தீர்களா

No comments:

Post a Comment