Thursday, September 27, 2012

சுத்தா சுத்தம்--திரு மந்திரம்

33. சுத்தா சுத்தம் (சுத்தம் - தூய்மை; அசுத்தம் - தூய்மையின்மை. சுத்தாசுத்தமாவது அகத் தூய்மையும் அகத் தூய்மையின்மையுமாம். சுத்த+அசுத்தம்=சுத்தாசுத்தம் - வடமொழி தீர்க்கசந்தி.) 2546. நாசி நுனியினின் நான்குமூ விரலிடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி யிருக்கும் பெருமறை அம்மறை கூசி இருக்கும் குணம்அது வாமே. பொருள் : நாசி நுனியினின்றும் புறப்பட்டு வெளிப்போதரும் உயிர்ப்பு பன்னிரண்டு விரல் அளவு வரையில் ஓடும். அங்ஙனம் ஓடும் அவ் உயிர்ப்பின் இறுதிக்கண் விளங்கி அருள்பவன் சிவபெருமான். அஃது அவன் இருப்பிடம் என்னும் உண்மையை யாரும் அறியார். அங்ஙனம் இருப்பதாகப் பெருமறை பேசியிருக்கும் எனினும் அறுதியிட்டுக் கூற நாணியிருக்கின்றது. இதுவே அம்மறையின் குணமாகும். 2547. கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக் கருவினை யாவது கண்டகன்று அன்பில் புரிவன கன்மக் கயத்துள் புகுமே. பொருள் : உயிர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் செய்பவனின் கருத்தையும் உரிமையையும் செய்வதையும் பொறுத்து அமைவதாய் உள்ளது. இவ்விதம் செய்வதால் பிறவிக்குக் காரணமான வினையாய் அமைவதை அறிந்து உரிமை கொண்டாடாமல் நீங்கி அன்பினால் செய்வன உயிர்களுக்குரிய கன்மத்தைத் தேய்ப்பதாகும். 2548. மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அப்பொருள் மாயை மறைய மறையவல் லார்கட்குக் காயமும் இல்லைக் கருத்தில்லை தானே. பொருள் : மாயையாகிய திரைசீவர்களை மறைக்க மறைந்துள்ள ஈஸ்வரன், அம்மாயை யாகிய திரை அகன்ற போது அப்பொருளான ஈஸ்வரன் வெளிப்படும். மாயை நீங்கும் படி அப்பொருளில் மறையவல்ல உத்தம அதிகாரிகளுக்கு உடலும் இல்லை; மனமும் இல்லை என்பதாம். 2549. மோழை யடைந்து முழைதிறந்து உள்புக்குக் கோழை அடைக்கின்ற அண்ணல் குறிப்பினில் ஆழ அடைத்தங்கு அனலில் புறஞ்செய்து தாழ அடைப்பது தன்வலி யாமே. பொருள் : தியானத்தினால் புருவமத்தியை யடைந்து, கபால வழியைத் திறந்து அதனுள் புகுந்து, கோழை வந்து அடைக்கின்ற இடத்தில் அண்ணல் ஒளி காட்டும் குறிப்பினில், கீழ்ப் போதலின்றி அடைத்து அங்கு உண்டாகும் அக்கினி கலையைப் பிரகாசப்படுத்தும் முறையில் மனம் தாழ்வான மாயைவழிச் செல்லாமல் நிறுத்துவதே தன்னுடைய சாதனா பலமாகும். (மோழை - புருவநடு.) 2550. காயக் குழப்பனைக் காயநன் னாடனைக் காயத்தி னுள்ளே கமழ்கின்ற நந்தியைத் தேயத்து ளேயென்றும் தேடித் திரிபவர் காயத்துள் நின்ற கருத்தறி யாரே. பொருள் : உடலில் இருந்து கொண்டு சூக்கும தேகத்தோடு உறவு செய்து வைப்பவனை உடலின்கண் அக்கினி கலையில் விளங்கும் சிவத்தை, தேசங்களில் சென்று புறத்தே வழிபாடு செய்பவர் உடலில் சிவம் விளங்குவதை அறியாதவராவர். 2551. ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூச மாம்இடம் ஆரும் அறிகிலார் ஆசூச மாம்இடம் ஆரும் அறிந்தபின் ஆசூச மானிடம் ஆசூச மாமே. பொருள் : ஆசூசமாகிய தீட்டுத் தீட்டு என்று செப்புவர் அதன் உண்மை உயர்வறியா எண்மையர். அத்தீட்டு உண்டாகும் இடத்தின் ஒண்மையினை உணரார். அது கருப்பையின்கண் உண்டாவதாகும். அதனை அறிந்தபின் அதுவே திருவடிப்பேற்றுக்கு நேர்வாயிலாக வகுத்த மானிடப் பிறவியின் உடம்புக்குக் காரணமுதலாகும் என்னும் உண்மை புலனாகும். (ஆசூசம் - தீண்டல், சூதகம். ஆமிடம் - உண்டாகும் இடம்.) 2552. ஆசூசம் இல்லை அருநிய மத்தருக்கு ஆசூசம் இல்லை அரனைஅர்ச் சிப்பவர்க்கு ஆசூசம் இல்லையாம் அங்கி வளர்ப்போருக்கு ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே. பொருள் : தத்துவ ஞானத்தால் தன்னை உணர்ந்தவருக்கு அசுத்தம் என்பது இல்லை. எல்லாத் தத்துவங்களையும் சங்கரிக்கும் அரனை வணங்குவார்க்கு அசுத்தம் இல்லை. மூலாக்கினியைத் தூண்டி ஒளிபெறச் செய்யும் அக்கினிகாரியம் செய்வார்க்கும் அசுத்தம் இல்லை. மேலான வேதத்தை உணர்ந்த ஞானிக்கு அசுத்தம் என்பதே இல்லை. 2553. வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்குச் சுழிபட்டு நின்றதோர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழிபட் டவர்க்கன்றிக் காணஒண் ணாதே. பொருள் : அரனை வழிபாடு செய்து வணங்குவார்க்கு, உச்சிக்குழிக்கு மேலுள்ள ஊர்த்துவ சகஸ்ரதளம் சிறப்புற அமைந்து ஒளிபெருகி நிற்பதில் அகத்தூய்மை தொடங்கும். குழியில்பட்டு விந்து நீக்கம் செய்பவர் ஆதார நீராதார யோகங்களால் உணர்த்தும் குறிகளைப் பொருந்தார். வீணாத்தண்டினைப் பொருந்தியுள்ள அதோ முகத்தை ஊர்த்துவ முகமாக்கினவர்க்கின்றிச் சிவம் காணப்படாததாகும். (சுழி - உச்சிக்குழி. கழி - வீணாத்தண்டம்.) 2554. தூய்மணி தூயனல் தூய ஒளிவிடும் தூய்மணி தூயனல் தூரறி வாரில்லை தூய்மணி தூயனல் தூரறி வார்கட்குத் தூய்மணி தூயனல் தூயவும் ஆமே. பொருள் : தூய்மணியாகிய செம்மணி சிவபெருமான், தூய அனல் புறத்தனலுக்கு முதலாய் அகத்தனலாய் நிற்கும் ஒளி என்னும் பூத முதலாம் தன் மாத்திரையாகும். புறத்தனல் தீயாகும். இவ்விரண்டின் முதலாகிய பாய அருளையும் தூய மாமாயையும் அருளால் அறிவார் பலரில்லை. முதல் அவ்விரண்டின் மூலமாகிய அருளையும் தூமாயையையும் அருளால் அறிவார்க்கு அவ்விரண்டும் முறையே நன்மையினாலும் தன்மையினாலும் தூயனவேயாகும். (தூரி - மூலம்). 2555. தூயது வாளா வைத்தது தூநெறி தூயது வாளா நாதன் திருநாமம் தூயது வாளா அட்டமா சித்தியும் தூயது வாளாத் தூயடிச் சொல்லே. பொருள் : முன்மந்திரத்தில் கூறித் தூய்மையான மணியில் விளங்கும் சிவன் வைத்த தூய்மையான நெறி கரும நிவாரணம் செய்யும் பொருட்டு அமைத்ததாகும். அவ்வாறான மணியைச் செழிப்பிக்க நாதன் திரு நாமமாகிய ஒளி வேண்டும். அம்மணி கருவிகளை ஓயச் செய்து அட்டமா சித்திகளை அளிக்கும். தூய மணி மௌனாட் சரத்தின் பீடமாகும். (வாளா - (1) கருமநிவாரனம். (2) பிரணவஒளி. (3) ஓய்வு (4) மௌனம்.) 2556. பொருளது வாய்நின்ற புண்ணியன் எந்தை அருளது போற்றும் அடியவர் அன்றிச் சுருளது வாய்நின்ற துன்பச் சுழியின் மருளது வாச்சிந்தை மயங்குகின் றாரே. பொருள் : எமது ஐயனாகிய சிவபெருமான் விரும்பப்பெறும் விழுப்பொருளாகவும் புண்ணிய வடிவாகவும் உள்ளவன். அவனது அருளைப் பெறப் போற்றி நிற்கும் அடியவர் அல்லாதவர், சொர்க்கம் நரகம் பூமி எனச் சுழன்று வரும் பிறவித் தளையில் மயங்கின உள்ளம் உடையவராய் அசுத்தமுடையவராவர். 2557. வினையாம் அசத்து விளைவது உணரார் வினைஞானம் தன்னில் வீடலும் தேரார் வினைவிட வீடுஎன்னும் வேதமும் ஓதார் வினையாளர் மிக்க விளைவுஅறி யாரே. பொருள் : மயக்கத்தில் உள்ள சீவர்கள் வினையால் அசத்தாகிய மாயை வலுவடைந்து அதன் பயனாக விளையும் துன்பச் சூழலை அறிய மாட்டார்கள். ஞானத்தை உணர்ந்து அதன்வழி நிற்பதில் கொடிய வினை நீங்குதலையும் தெளிந்து அறியமாட்டார். வினைகள் சீவர்களைப் பற்றாமல் நிற்பதில் முத்திநிலை உள்ளது என்று வேதம் கூறும் உண்மையை அறியமாட்டார். தீவினையால் பந்திக்கப்பட்ட சீவர்கள் அதன் காரணத்தையும் அதனால் விளையும் பயனையும் அறியமாட்டார்.

No comments:

Post a Comment