Friday, September 28, 2012

கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்!

வாக்கு கொடுக்கக் கூடாது. கொடுத்தால் காப்பாற்றியாக வேண்டும். அதிலும், பெண்களுக்கு வாக்களித்து விட்டு, அதைச் செய்ய மறுத்தால், கண் பார்வையே போய் விடும்’ என்கின்றன நம் புராணங்கள். சுந்தரரின் வரலாறு இதை நமக்கு உணர்த்துகிறது. திருநாவலூரை சொந்த ஊராகக் கொண்ட சுந்தரருக்கு, திருவெண்ணெய்நல்லூரில் திருமணம் செய்ய ஏற்பாடாகி இருந்தது. ஆனால், சிவன் அதைத் தடுத்து, சுந்தரரை தன் அடிமை என நிரூபித்து, தன்னுடன் அழைத்துச் சென்றார். அன்று முதல், சிவத்தொண்டையே செய்து வந்தார் சுந்தரர். பூர்வ ஜென்மத்தில், சுந்தரர் சிவனது அடிமையாக இருந்தார். அவர் தேவலோகத்தில் இருந்த காலத்தில், அங்கிருந்த இரண்டு பெண்கள் மீது காதல் கொண்டார். அவர்களும் அவரை விரும்பினர். இதன் காரணமாக, அவர்கள் பூலோகத்தில் பிறக்க வேண்டியதாயிற்று. ஒரு பெண், பரவை என்ற பெயரில் திருவாரூரிலும், மற்றொருவர் சங்கிலி என்ற பெயரில் திருவொற்றியூர் அருகிலுள்ள ஞாயிறு என்ற கிராமத்திலும் அவதரித்தனர். ஒரு சமயம், திருவாரூர் சென்ற சுந்தரர், அங்குள்ள கோவிலுக்கு வந்த பரவையைப் பார்த்தார்; காதல் கொண்டார். சிவன் அருளால் அவர்களுக்கு திருமணமும் நடந்தது. சில காலம், அங்கு தங்கியிருந்த அவர், சிவத்தலங்களைத் தரிசிப்பதற்காக மனைவியை ஊரிலேயே விட்டுவிட்டு கிளம்பினார். திருவொற்றியூர் வந்த போது, அங்கே கன்னிமாடம் அமைத்து தங்கியிருந்த சங்கிலியை கண்டார். பூர்வஜென்ம வினைப் பயனால், அவளையும் திருமணம் செய்யும் எண்ணம் கொண்டார். சங்கிலியின் கனவில் தோன்றி, “என் பரமபக்தன் சுந்தரனை மணம் செய்து வாழ்வாயாக’ என்றார் சிவன். அதற்கு சங்கிலி,”அவர் ஏற்கனவே திருமணமானவராயிற்றே…’ என்றதற்கு,”உன்னை விட்டு அவன் பிரியாமல் இருக்க வாக்குறுதி தரச் சொல்கிறேன்…’ எனக்கூறி மறைந்தார் சிவன். இதேபோல சுந்தரர் கனவில் தோன்றி,”உனக்கும், சங்கிலிக்கும் திருமணம் நிச்சயம். ஆனால், அவளைப் பிரிய மாட்டேன் என அவளிடம் சத்தியம் செய்ய வேண்டும்…’ என்றார். இதன்பின், சுந்தரரும், சங்கிலியும் சந்தித்தனர். சங்கிலியிடம், “உன்னைத் திருமணம் செய்த பின், திருவொற்றியூரை விட்டு எங்கும் போக மாட்டேன்…’ என வாக்கு கொடுத்தார் சுந்தரர். இருவருக்கும் திருமணம் நடந்தது. சிலகாலம் சென்றது. திருவாரூரில் வசந்தவிழா விசேஷம். அதை எப்படியாவது பார்த்தாக வேண்டுமென்ற எண்ணம் சுந்தரருக்கு பிறந்தது. சங்கிலிக்கு கொடுத்த வாக்கை மீறி, அவளுக்குத் தெரியாமல், ஊர் எல்லையைத் தாண்டினார் சுந்தரர். உடனே அவரது கண் பார்வையைப் பறித்து விட்டார் சிவன். அதன்பின் பல சிவத்தலங்களுக்கு சென்று, பார்வை வேண்டி பதிகம் பாடினார் சுந்தரர். அவர் மீது கொண்ட இரக்கத்தால் திருவெண்பாக்கம் (திருவள்ளூர் அருகிலுள்ள திருவளம்புதூர்) என்ற தலத்தில் ஒரு ஊன்றுகோல் மட்டும் கிடைக்கச் செய்தார் சிவன். காஞ்சிபுரம் வந்து ஏகாம்பரநாதரைத் தரிசித்து உருகிப் பாடியதும், சிவனும் மனமுருகி இடதுகண் பார்வையை அளித்தார். அதன்பின் பல தலங்களைக் கடந்து திருவாரூரை அடைந்தார். அங்கு வந்து இறைவனிடம் மன்றாடி, வலது கண் பார்வையையும் தந்தருள வேண்டினார். அவருக்கு பார்வை கிடைத்தது. சுந்தரர் போன்ற தெய்வப்பிறவிகளின் மூலம், இறைவன் நமக்களித்துள்ள பாடம், வாக்கு தவறக் கூடாது என்பது தான்! இது ஒருபுறமிருக்க, பார்வையற்றவர்களுக்கு கண் தானம் செய்ய வேண்டும் என்றும் சிவன் கண்ணப்ப நாயனார் மூலமாக நமக்கு உணர்த்தி இருக்கிறார். கண் தானத்தின் அவசியம் அந்தக் காலத்திலேயே வலியுறுத்தப் பட்டிருக்கிறது. இறப்புக்கு பிறகும், இந்த பூமியில் வாழ்வதற்கு வாய்ப்பளிப்பது கண் தானம். கண் தான நாளில், கண்களைத் தானம் செய்வதுடன், கொடுத்த வாக்கையும் காப்பாற்றும் நற்பண்பை வளர்க்கவும் உறுதி எடுப்போம்.

No comments:

Post a Comment