Monday, September 17, 2012

சதுர்த்திவிரத பலன்கள்

ஆவணி மாதம் - மகா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் ஒரு முறை கைலையில் ஆனந்தமாய்த் திருநடனம் செய்து கொண்டிருந்த வேளையில் அங்கே வந்த சந்திரன், விநாயகரின் அதிசய தோற்றத்தைக் கண்டு சிரித்தான். அவன் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதைக் கண்ட விநாயகர் அவனின் அழகு மற்றும் கலைகள் அனைத்தும் கலையிழந்து போகுமாறு சாபமிட்டார். இதனால் மனம் வருந்திய சந்திரன் அதற்குப் பரிகாரமாகவும், தன்னுடைய தவற்றை நீக்கவும் சதுர்த்தி தினத்தன்று விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றான். அப்போது விநாயகர் சந்திரனிடம், “இன்று முதல் சுக்கில பட்சச் சதுர்த்திகளில் உன்னைப் பார்ப்பவர்களுக்குப் பாவம் சம்பவிக்கும், எனவும், அதைப் போக்கிக் கொள்ளச் சதுர்த்தி விரதம் இருந்து பூஜித்தால் அவர்களுக்கு நன்மையே விளையும்!” எனவும் சொன்னார். இந்த விரதமே சங்கடஹர சதுர்த்தி விரதம் என அழைக்கப் படுகிறது. ஒவ்வொரு பெளர்ணமிக்குப் பின்னரும் வரும் ஒவ்வொரு சதுர்த்தியும் சங்கடஹர சதுர்த்தி எனவும், ஆவணி பெளர்ணமியின் பின்னர் வரும் சங்கடஹர சதுர்த்தி, மகா சதுர்த்தி எனவும் சொல்லப் படுகிறது. வருடம் பூராவுமோ அல்லது மகா சங்கடஹர சதுர்த்தி அன்றிலிருந்தோ விரதம் இருக்க ஆரம்பித்து, சுக்ல பட்சச் சதுர்த்தி ஆன விநாயக சதுர்த்தி அன்று விநாயகருக்குப் பூஜைகள், செய்து வழிபட்டு வருவோருக்குச் சகல நன்மைகளும் கிட்டும் எனவும் கூறினார். சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருள் கிடைக்கும் என்பதற்குக் கீழ்க்கண்ட கதை ஒரு உதாரணம் ஆகும். ஒருமுறை தண்டகாவனத்தில் வசித்து வந்த “விப்ரதன்” என்னும் வேடன், கொலை, கொள்ளைகளுக்கு அஞ்சாதவனை நல்வழிப்படுத்த எண்ணிய “முத்கலர்” என்னும் முனிவர் அவனுக்குச் சங்கட சதுர்த்தி விரதம் பற்றியும், விநாயகர் வழிபாடு, மூலமந்திரம் போன்றவற்றையும் உபதேசித்தார். அன்று முதல் மூலமந்திரத்தை இடைவிடாது ஜபித்து வந்த விப்ரதன், நாள் ஆக, ஆக, உருவமே மாறி அவனின் நெற்றிப் பொட்டில் இருந்து துதிக்கை போலத் தோன்ற ஆரம்பித்து, அவனும் விநாயகரைப் போன்ற வடிவமே பெற ஆரம்பித்தான். “ப்ருகண்டி” என அழைக்கப் பட்ட அவனுக்கு விநாயகரின் தரிசனமும் கிடைக்கவே அவனைப் பார்த்தாலே கிடைக்கும் புண்ணியத்தைப் பெற தேவலோகத்தில் இருந்து தேவேந்திரன் தன் விமானத்தில் ஏறி, பூவுலகு வருகிறான். தரிசனம் பெற்றுத் திரும்பும் வேளையில் விதிவசத்தால் அவனின் விமானம் மண்ணில் புதையுண்டு போகிறது. அப்போது சங்கட சதுர்த்தி விரதம் இருந்தவர்கள் தங்கள் விரத பலனைக் கொடுத்தால் விமானம் கிளம்பும் எனத் தெரிய வர, அவ்வாறே விரத பலனைப் பெற்றுக் கொண்டு விமானம் மூலம் அமரர் உலகு அடைகிறான் தேவேந்திரன். விரத பலன்கள் இவ்விரதத்தை கடைப்பிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய் தீரும். வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடைய முடியும். மிகச் சிறப்பான கல்வி அறிவு, புத்தி கூர்மை, நீண்ட ஆயுள், நிலையான செல்வம், நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடைய முடியும். சனி தோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கம் பெரு‌ம்பகு‌தி குறையும். விரதம் இருப்பது எப்படி? சங்கடஹர சதுர்த்தியன்று அதிகாலை நீராடி, பால் பழம் அருந்தி, உணவு உட்கொள்ளாமல் மாலை வரை கணநாதன் நினைவோடு உபவாசம் இருக்க வேண்டும். மாலை ஆலயத்திற்குச் சென்று, விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையில் கலந்துக் கொள்ள வேண்டும்.அன்றைய தினம் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல் வேண்டும். அனைத்து பூஜைகளும் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து உபவாசத்தை முடித்துக் கொள்ள வேண்டும். விநாயகப் பெருமானுக்கு வெள்ளை எருக்கு, அருகம்புல் மாலை சாற்ற வேண்டும். சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விநாயகருக்குரிய, "ஓம் தத் புருஷாய வித்மஹே வக்ர துண்டாய தீமஹி தன்னோ தந்தி ப்ரசோதயாத்" எனும் கணேச காயத்ரீ மந்திரத்தையும், தமிழில் விநாயகர் அகவலையும் பாடி தொந்திக் கணபதியை தியானித்தால் கூடுதல் பலன் உண்டு.

No comments:

Post a Comment