Wednesday, September 26, 2012

நாலு வாக்கு

வாக்குகள் மிக நுண்ணிய நமக்கே தெரியாத நிலையில் உள்ள சூக்குமையிலிருந்து, எல்லோருக்கும் கேட்கும் மற்றவர்களுக்கு ஒலி வடிவமான வைகரி வரையும் நான்கு நிலைகளுக்கூடாக விருத்தியாகி வெளிப்படுகின்றன. இவற்றை சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என எமது சமய நூல்கள் கூறுகின்றன. சூக்குமை மிகவும் நுண்ணியது; புலப்படாதது. வைகரி எமக்கும், மற்றவர்களுக்கும் செவியில் கேட்பதாய் வெளிப்படுவது. பைசந்தி, மத்திமை என்பன இவ்விரு நிலைகளுக்கும் இடைப்பட்ட விருத்தி நிலைகளாகும். புதிய பெயர்களைப்பார்த்து பயந்துவிட வேண்டாம். இலகுவாக விளங்கிக் கொள்ளலாம். 1. சூக்குமை; சூக்குமை என்பது பெயர் குறிப்பிடப்படுவது போல சூக்குமமாக மற்றவர்களுக்கு மட்டுமல்ல எமக்குக்கூட வெளிப்படாமல் இருக்கும் நிலை. இந்நிலையில் வாக்கு மூலாதாரத்தில், பிந்து தத்துவத்தில் இருக்கும். ஆனால் இந்நிலையில் வாக்கு நமக்கே தெரியாமல் இருப்பதால்தான் இதை சூக்குமை வாக்கு என்பர். 2. பைசந்தி; வெளிப்படாத நிலையில் மூலாதாரத்தில் உள்ள சூக்குமை வாக்கு அங்கிருந்து உந்தித்தானத்தை அடையும்போது பைசந்தி எனப்படுகின்றது. இந் நிலையில் வாக்கு என்னவென்று எமக்குத் தெளிவாகத் தெரியாவிட்டாலும் ஏதோ உருவாகின்றது என்று உள்ளுணர்வாக உணரலாம். இது மயில் முட்டையில் உள்ள குஞ்சின் வண்ணங்கள் இருப்பதுபோல தெளிவில்லாமல் இருக்கும் வாக்கு நிலை ஆகும். இது எமது வாக்கு எமக்கே தெளிவாகப் புலப்படாத நிலையில் உள்ள நிலை. 3. மத்திமை; என்பது பெயர் குறிப்படுவது போல கேட்கும் ஒலி மூலம் வெளிப்படும் வாக்குக்கும், முற்றிலுமே வெளிப்படாமல் இருக்கும் சூக்குமை வாக்குக்கும் இடைப்பட்ட நிலை ஆகும். இதற்கு உதான வாயுவின் தொழிற்பாடு உதவும். இந்நிலையில் வாக்கு கண்டத்தில் மெல்லோசையாக செவியில் கேட்கப்படாததாய் ஆனால் எமது மன உணர்விற்கு கேட்கக்கூடியதாய் இருக்கும். எமது எண்ண ஓட்டங்கள் எல்லாம் இவ் வகை மத்திமை வாக்கே. இது மானஸம் என்றும் சொல்லப்படும். 4. வைகரி; இந்நிலையில் வாக்கு காதுக்கு கேட்கத்தக்க ஓசை பொருந்தி வெளிப்படும் நிலையாகும். இந்நிலையில் பிராண வாயுவின் தொழிற்பாடு இதற்கு உதவும். மற்றவர்கள் காதுகளுக்கு கேளாமல் தனக்கு மட்டும் கேட்கக்கூடியதாக மென்மையாக வெளிப்படும் வாக்கு சூக்கும வைகரி என்று கூறப்படும். தமது காதுக்கு மட்டுமல்லாது மற்றவர்களுக்கும் கேட்கக்கூடியதாக வெளிப்படும் வாக்கு தூல வைகரி எனப்படும். தூல என்றால் புலப்படுகின்ற என்று பொருள். (ஒப்பீடு- தூல சரீரம் என்பது புலப்படுகின்ற எமது ஊன சரீரத்தைக் குறிக்கும்). “பரா ப்ரத்யக் சிதிரூபா பச்யந்தி பரதேவதா மத்யமா வைகரி ரூபா பக்த மானஸ ஹம்ஸிகா” என்று லலிதா சகஸ்ரநாமம் அம்பிகையே வாக்கு ரூபத்தில் விளங்குவதாகச் சொல்கிறது. எமது பூலோகத்துக்கு மேலே உள்ள புவனங்களில் வசிப்போர் நம்மைப்போல வைகரி வாக்கில் பேசுவதில்லை. மேலே செல்லச்செல்ல வாக்கு நுண்மைப்பட்டுக்கொண்டே செல்லும். உயர்ந்த புவனங்களில் வசிப்போர் மத்திமை வாக்கிலும் அதற்கும் மேலே உள்ள புவனங்களில் உள்ளவர்கள் பைசந்தி வாக்கிலும் தொடர்பாடல் செய்வார்கள். சில யோகிகளும் ஞானிகளும் இவ்வுலகிலேயே இருந்தாலும் மத்திமை முதலிய சூக்கும வாக்குகளை அறியும் ஆற்றலும் அவற்றின் மூலம் தொடர்பாடல் செய்யும் ஆற்றலும் வாய்க்கப் பெற்றிருப்பார்கள். மற்றவர்களுடைய வார்த்தைகள் வெளிவர முன்னர் சூக்குமை, பைசந்தி மற்றும் மத்திமை நிலையில் உள்ளபோதே வாக்கை உணரும் சக்தி வாய்ந்தவர்கள். இவர்கள்தான் நாம் நினைப்பதை அல்லது சொல்ல இருப்பதை உணர்ந்து சொல்லுபவர்கள். விவேகானந்தர் ஒருமுறை இராமகிருஷ்ணருடன் இருக்கும்பொழுது "இவர் உண்மையில் இறை அவதாரம் என்று இப்போது இவர் சொன்னாரானால் நான் அதை ஏற்றுக்கொள்ளுவேன்" என்று தனது மனதில் நினைத்தார். உடனே அருகிலிருந்த இராமகிருஷ்ணர் "எவன் இராமனாகவும் கிருஷ்ணனாகவும் அவதரித்தானோ அவனே இப்போது இந்த இராம கிருஷ்ணனாகப் பிறந்திருக்கிறான்" என்று கூறியதாக விவேகானந்தர் வரலாற்றில் இருக்கின்றது. இது மற்றவர்களின் வாக்கை அது மத்திமை நிலையிலே இருக்கும்போதே உணரக்கூடிய சித்தியாகும். ஆரூடம் சொல்லும் நபர்களுக்கும் இவ்வகையான ஆற்றல் உள்ளது. அவர்கள் நீங்கள் மனதில் நினைப்பதை வைத்து ஆரூடம் சொல்லிவிடுவார்கள். பின்னர் அது நடப்பதும், நடக்காததும் வேறு விடயம். இதேபோல சில யோகிகளும், ஞானிகளும், சில வேளைகளில் சித்து மந்திரவாதிகளும் கூட மற்றவர்களது வாக்கு வெளிப்படு முன்னரே பைசந்தி அல்லது மத்திமை நிலையில் அதைக் கட்டுப்படுத்தி நிறுத்த முடியும். இது வாக்குத்தம்பனம் எனப்படும். தம்பனம் என்றால் கட்டுதல். இது எமது பாரம்பரியமான அறுபத்து நான்கு கலைகளில் ஒன்று. மாநகரசபை ஆணையாளராகப் பல ஆண்டுகள் கடமையாற்றி எத்தனையோ மேடைகளையும் பேச்சுகளையும் கண்ட ஒரு சாயி பக்தர் ஒருவர் இவ்வாறு ஒருமுறை கொழும்பு சாயி சமித்தியில் பேச எழுந்தபோது அவரது வாக்கு தம்பனமாகி பேசமுடியாமல் தடுமாறி அமர்ந்ததை நேரில் பார்த்திருக்கிறேன். இந்த வாக்குகளில் பைசந்தி, மத்திமை, வைகரி ஆகிய மூன்றும் தோன்றிய வழியே ஒன்றில் ஒன்றாக ஒடுங்கி மறைய இவற்றுக்கு எல்லாம் மூலமாகிய சூக்குமை வாக்கு சுத்தமாயா தத்துவமான பிந்துவில் நிலைபெற்று அழியாது நிற்கும். உசாத்துணை: சூக்கும வாக்கது உள்உறு சோதியாய் அழிவது இன்றி ஆக்கிடும் அதிகாரத்திற்கு அழிவினை தன்னைக் கண்டால் நீக்கம் இல் அறிவு ஆனந்தம் முதன்மை நித்தியம் உடைத்தாய் போக்கொடு வரவு இளைப்பும் விகாரமும் புருடன் இன்று வேற்றுமைப் பட்ட வன்னம் வெவ்வேறி விபாகம் ஆகி தோற்றுதல் அடைவு ஒடுங்கி சொயம்பிர காசம் ஆகி சாற்றிய மயிலின் அண்டம் தரித்திடும் சலமே போன்று ஆற்றவே உடையதாகி பைசந்தி அமர்ந்து நிற்கும் உள்உணர் ஓசைஆகி செவியினில் உறுதல் செய்யாது ஒள்ளிய பிராண வாயு விருத்தியை உடையது அன்றி தெள்ளிய அக்கரங்கள் சிந்திடும் செயலது இன்றி மெள்ளவே எழுவது ஆகும் மத்திமை வேற தாயே வைகரி செவியில் கேட்ப தாய் அத்த வசனம் ஆகி மெய்தரும் உதான வாயு மேவிட விளைந்த வன்னம் பொய்யற அடைவு உடைத்தாய் புந்திகா ரணமது ஆகி ஐயம்இல் பிராணவாயு அடைந்து எழுந்து அடைவு உடைத்தாம் -சிவஞானசித்தியார் பாடல்கள் சுபக்கம் 40-43- வந்தடைந்து பின்னமாய் வன்னங்க டோற்றம் வருமடைவு படவொடுக்கி மயிலண்ட சலநேர் சிந்தைதனி லுணர்வாகும் பைசந்தி யுயிரிற் சேர்ந்துவரு மவைமருவு முருமெவையுந் தெரித்து முந்தியிடுஞ் செவியிலுறா துள்ளுணர்வா யோசை முழங்கியிடு மத்திமைதான் வைகரியி லுதானன் பந்தமுறு முயிரணைந்து வந்தமொழி செவியின் பாலணைய நினைந்த பொருள் பகருந் தானே -சிவப்பிரகாசம் பாடல் 38-

No comments:

Post a Comment