Wednesday, September 26, 2012

தீர்த்தம்

<சென்றாடு தீர்த்தங்கள் ஆயினான் காண்" -திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்-. "ஆர்த்த பிறவித் துயர்கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்" - மாணிக்கவாசகரின் திருவாசகம். "மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே" - தாயுமானார் பாடல் நமது வினைகளைத் தீர்ப்பதனால் "தீர்த்தம்" எனப்பெற்றது என்று வாரியார் சுவாமிகள் கூறுகின்றார். புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபடும் வழமை நம்மவர்களிடையே இன்று அதிகரித்து வருவது கண்கூடு. புண்ணிய தலங்களுக்குச் சென்று வழிபட்டால் நமது பாவங்கள் வினைகள் தொலைந்து நாம் சிவபுண்ணியம் செய்த புண்ணியர்களாகத் திரும்பலாம். ஆயினும் பல வேளைகளில் குளிக்கப்போய் சேறு பூசிக்கொள்வதுபோல நாம் தலங்களுக்கு என்று யாத்திரை கிளம்பி அத்தோடு செய்யும் பல காரியங்களினால் புண்ணியத்துக்குப் பதிலாகப் பாவங்களைச் சம்பாதித்துக்கொண்டு வருகின்றோம். இதனால் முன்னையதிலும் பார்க்க பல படி கஷ்டங்களும் துன்பங்களும் அதிகரிக்க "ஐயோ! நாம் தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தும் எமது கஷ்டங்கள் தீரவில்லையே என அங்காலாய்க்கின்றோம்" . புண்ணிய தலங்களுக்கு யாத்திரை கிளம்புவதற்கு முன்னர் அருகிலுள்ள எமது இஷ்ட தெய்வத்தின் கோவிலுக்குச் சென்று வழிபட்டுக் கிளம்பவேண்டும். இதை புறப்படும்போதோ அல்லது அதற்கு முந்திய நாட்களிலோ செய்து கொள்ளலாம். அப்போதுதான் எமது தல யாத்திரை முறையாகத் தொடங்குகின்றது. ஆகவே அந்த நாளில் இருந்து மச்ச மாமிச உணவுகளைத் தவிர்த்து ஆசாரமாக இருந்து தினமும் உங்களால் இயன்ற தேவார திருமுறைப் பாடல்களை ஓதி வரல் வேண்டும். "முந்தை வினை முழதும் ஓய உரைப்பன் யான்" என்று திருவாசகம் கூறும். இவ்வாறு சிவபுராணம், விநாயகர் அகவல், அபிராமி அந்தாதி, திருமுருகாற்றுப்படை போன்ற பாடல்களை ஓதி வருவதனாலேயே எமது வினைகள் பாவங்கள் விலகும். இது இயலாதவர்கள் நமச்சிவாய நாமத்தையோ தமது இஷ்ட தேய்வத்தின் நாமத்தையோ தொடர்ந்து சொல்லி வரலாம். கலியுகத்தில் நாமஜபம் பாவங்களைப்போக்கும் சிறந்த நிவாரணியாகும். "ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாமைவ கேவலம் காலௌ நாஸ்தி ஏவ நாஸ்தி நாஸ்தி ஏவ கதிர் அன்யதா" - பிரஹண் நாரதீய புராணம்- இனி தல யாத்திரை கிளம்பி இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்குச் சென்று இறங்கியதும் அங்கும் முதல் வேலையாக அருகில் உள்ள தலம் ஒன்றுக்குச் சென்று வழிபட வேண்டும். தல யாத்திரையின் போது மட்டுமல்ல, எந்தப் பிரயாணத்தின்போதும் ஒரு இடத்திற்குச் சென்று அங்கு தங்கும்போது அவ்விடத்தில் உள்ள தலத்துக்குச் சென்று தரிசனம் செய்த பின்னரே மற்ற காரியங்களில் ஈடுபட வேண்டும். ஆசாரத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் நீராடி அருகில் உள்ள தலத்துக்குச் சென்று வழிபட்ட பின்னரே உணவருந்துவார்கள். இதன் பின்னரும் இடையிலும் வேறு அலுவல்களிலும், பண்டங்ள் வாங்குவதிலும், இடங்கள் பார்ப்பதிலும், நண்பர்கள் உறவினர்களைச் சந்திப்பதிலும், அலுவலக வேலைகளிலும் ஈடுபடுவதில் தவறில்லை. ஆயினும் முறையாக ஆசாரத்துடன் தல யாத்திரைக்கென்றே செல்பவர்கள் இவற்றைக்கூடத் தவிர்த்து கொள்வார்கள். இவ்வாறே ஒவ்வொரு தலங்களுக்கும் செல்லும்போதும் நாம் கவனிக்காமல் விடுகின்ற ஒன்று அங்குள்ள புண்ணிய தீர்த்தங்களாகும். புண்ணிய தலங்களுக்குச் சென்று, அங்குள்ள புண்ணிய தீர்த்தங்களில் முழுகி, அங்குள்ள புண்ணிய மூர்த்திகளை வழிபட்டு அங்கு அடியார்களுக்கு அமுதளிக்கும் மகேசுர பூசையும் பிராமணருக்கு போசன வசதிக்காக தட்சணையும் ஏழைகளுக்கு அன்னதானமும் வழங்கி வழிபட நமது வினைகள் நலிந்து நாம் புண்ணியர்கள் ஆவோம். தலத்தில் உள்ள மூர்த்திக்கும் புது வஸ்திரம் அலங்காரம் மாலைகள் சாத்துவித்து வழிபடுதல் சிறப்பு. புண்ணிய தீர்த்தங்களைச் சிவமயமாகப் பாவித்து அதிலே முழுகுதல் வேண்டும். அவ்வாறு நாம் முழுகும்போது நமது வினைகளும் மூழ்கின்றன. நாம் மீண்டும் எழுகின்றபோது அவ்வினைகள் எழுவதில்லை. அவ்வாறே நாம் தலங்களில் விழுந்து வணங்கும்போது நமது வினைகளும் வீழ்கின்றன. நாம் எழும்போது அவ்வினைகள் மீண்டும் எழுவதில்லை. இத்தலங்களை நாம் நடந்து வலம் வரும்போதும் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் நமது பாவங்கள் நசிகின்றன. பிராமணரைக்கொன்ற பிரம்மகத்தி போன்ற பாவங்கள்கூட இவற்றால் நலியும் என்று பின்வரும் சுலோகம் கூறுகின்றது. . "யானி கானி ச பாபானி பிரஹ்ம-ஹத்யாதிகானி ச தானி தானி ப்ராணஸ்யந்தி பிரதக்ஷிணா பதே பதே" புண்ணிய தலங்களில் எத்தனையோ மகான்கள், ஞானிகள், சித்தர்கள், அடியார்களின் புனிதமான பாதங்கள் பட்டிருக்கும். அவர்களின் உடல் படிந்து வணங்கியிருக்கும். அங்கெல்லாம் நாம் வீழ்ந்து வணங்கி அந்த மகான்களைத் தீண்டும் பேறு பெற்ற தூசுத்துணிக்கைகளில் ஒன்றாவது நம்மைத் தீண்டும் பேறு பெற்றால் நாம் ஜன்மசாபல்யம் அடைந்தவர்களாவோம். தலயாத்திரை முடிந்து வரும்போது நாம் யாத்திரை செய்த தலங்களின் விபூதி குங்கும பிரசாதங்களையும் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். பலர் தாம் தங்கும் இடங்களிலேயே அவற்றை விட்டு விட்டு வந்துவிடுவதைப் பார்க்கின்றோம். இது நாம் இறையருளையே விட்டு விட்டு வருவது போலாகும். விமானப் பயணத்தில் கொண்டுவர முடியாத பூக்கள், பழங்கள் போன்றவற்றை அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னர் கடல், ஆறு போன்ற ஏதாவதொரு ஓடும் நீரில் விட்டுவிடல் வேண்டும். அத்தோடு நாம் புறப்படும் இடத்தில் வழிபட்டுக்கிளம்பிய எமது இஷ்ட தெய்வத்தின் கோவில் மூர்த்திக்கும் வஸ்திரம் ,ஆபரணம், விளக்கு, குங்குமம் போன்ற பொருட்கள் வாங்கி வரல் வேண்டும். வீடு வந்து சேர்ந்ததும் முதல் காரியமாக நீராடி அந்த தலத்துக்குச் சென்று தாம் கொண்டு வந்த மேற்கூறிய பொருட்களை பக்தியுடன் சமர்ப்பித்து வழிபட்டு வீடு திரும்ப வேண்டும். தமது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தாம் கொண்டு வந்த பரிசுப் பொருட்களைக் கொடுப்பதற்கு முன்னால் தாம் கொண்டுவந்த தலங்களின் விபூதி குங்கும பிரசாதங்களை வழங்க வேண்டும். இவ்வாறு பிரசாதங்களைக் கொண்டுவருவதற்கு இங்கிருந்து செல்லும்போதே மூடித்திறக்கும் அமைப்புள்ள பிளாத்திக்கு அல்லது பொலித்தீன் பைகள் கொண்டு செல்வது வசதியாய் இருக்கும். இவற்றை தனித்தனியாக கொண்டுவர சிரமமாய் இருந்தால் விபூதி எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பையிலும் குங்குமம் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பையிலும் கொண்டு வரலாம். ஆயினும் அந்தந்தத் தலங்களின் பிரசாதங்களை தனித்தனியாக கொண்டு வந்து வழங்குவது சிறப்பானது. இவ்வாறு வழங்குவதனால் அங்கு சென்று வழிபட இயலாதவர்களுக்கும், வசதியிருந்தும் மனம் இல்லாமல் இருப்பவர்களுக்கும் கூட அவர்களின் வினை நலிந்து புண்ணியம் கிடைக்கின்றது. இவ்வாறு மற்றவர்களுக்கு சிவபுண்ணியம் சேர்ப்பித்தல் புண்ணியங்கள் எல்லாவற்றிலும் மேலான புண்ணியமாகும்.

No comments:

Post a Comment