Thursday, October 4, 2012

ஆண்டவனுக்கு பக்தி சிரத்தையுடன் நாம் அளிக்கும் எதுவும், உலக நன்மைக்கு அனைவருக்குமே பயன்படும்

பாண்டவர்கள் துர்வாச முனிவரின் கோபத்துக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக, துரியோதனன் அவரை ஆயிரம் சீடர்களான யோகிகளுடனும், பாண்டவர் வனவாசம் செய்யும் எளிய ஆசிரமத்துக்கு நண்பகல் வேளையில் அனுப்பி வைத்தான். அவர்கள் எல்லோரும் பசியுடன் அங்கு சென்றார்கள். திரௌபதியிடம் ஒரு அமுதசுரபி உண்டு. அதில் எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கும். ஆனால், அதிதிகள் அனைவருக்கும் உணவு அளித்த பின்பு, பாண்டவர்களும், திரௌபதியும் உணவருந்தி முடித்து அதை மூடி வைத்து விடுவார்கள். அதன் பிறகு அது உணவு தராது. அன்றும் அதைப் போல் அனைவரும் உணவருந்தி முடித்தபின்பு திரௌபதி அதை மூடி வைத்து விட்டாள். அப்போதுதான் துர்வாச முனிவர் ஆயிரம் யோகிகளுடன் அங்கு வந்திருந்தார். தருமர் அவர்களை வரவேற்றார். நதியில் நீராடித் திரும்பும்படியும், அதற்குள் உணவு தயாரித்து விடுவதாகவும் சொல்லி அவர்களை ஆற்றங்கரைக்கு அனுப்பி வைத்தார்.அவர்களும் ஆற்றங்கரைக்குச் சென்று விட்டார்கள். ஆயிரம் பேருக்கும் எப்படி உணவு தயாரிப்பது? என்ற கவலையுடன் திரௌபதி கிருஷ்ணனை நினைத்து வேண்டினாள். சில நொடிகளில் கிருஷ்ணன் அந்த இடத்திற்கு வந்து விட்டார். கிருஷ்ணனைப் பார்த்ததும், அவர் தன்னைக் காப்பாற்றி விடுவார் என்கிற நினைவில் மகிழ்ந்து போனாள். ஆனால், கிருஷ்ணரோ அவளைப் பார்த்து, “அம்மா திரௌபதி, நான் நெடுந்தொலைவிலிருந்து வந்தது எனக்குப் பசியாக இருக்கிறது. எனக்கு உடனே ஏதாவது உணவைக் கொடு” என்றார். திரௌபதி கண்கலங்கிப் போனாள். அவள், “கிருஷ்ணா, இங்கு வந்திருக்கும் ஆயிரம் பேருக்கு எப்படி உணவளிப்பது? என்று நான் உன்னை உதவிக்கு அழைத்தால், நீயும் இப்போது பசிக்கிறது... உணவு வேண்டும் என்கிறாயே... எனக்கு ஒன்றும் புரியவில்லை... நானோ சாப்பிட்டு முடித்தாகி விட்டது. இனி உணவுக்கு நான் எங்கே செல்வது?” என்று கண்ணீர் வடித்தாள். கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, “அப்படியெல்லாம் இருக்காது. உன்னிடமிருக்கும் அமுதசுரபியை இங்கே கொண்டு வா. நான் பார்த்துக் கொள்கிறேன். நிச்சயமாக, அதில் ஏதாவது உணவு இருக்கும்” என்றார். திரௌபதி உள்ளே சென்று கொண்டு வந்து காட்டிய காலிப் பாத்திரத்தை கிருஷ்ணர் வாங்கிப் பார்த்தார். அப்பாத்திரத்தினுள்ளே ஒரு கீரை இலை ஒட்டிக் கொண்டிருந்தது. அதை எடுத்து வாயிலே போட்டுக் கொண்ட கிருஷ்ணர், “திரௌபதி எனக்கு வயிறு நிறைந்து விட்டது. இனி உனக்குக் கவலை வேண்டாம்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். திரௌபதிக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டை விட்டு வெளியே வந்த திரௌபதி முன்பு துர்வாச முனிவரும், ஆயிரம் யோகிகளும் வந்து நின்றனர். திரௌபதிக்கு கவலை அதிகமாகி விட்டது. துர்வாச முனிவர், “அம்மா, நாங்கள் நீராடத்தான் போனோம். நீராடிவிட்டு வெளியேறியதும், எங்களுக்குள்ளிருந்த பசி போய் விட்டது. எங்கள் வயிறு முழுமையாக நிறைந்து விட்டது. நாங்கள் அங்கு நீர் கூட அருந்தவில்லை. இருப்பினும் பசி போய் விட்டது. இதற்கு உன் நல்ல எண்ணமும், உள்ளமும்தான் காரணமாக இருக்கும் போலிருக்கிறது” என்றார். திரௌபதிக்கு அனைத்தும் புரிந்துவிட்டது.கிருஷ்ணனுக்குக் கொடுத்த கீரை இலை போன்ற உணவு இவர்களனைவருக்கும் வயிறு நிறையச் செய்து விட்டது. இறைவனுக்கு உணவு படைப்பதும், அதைப் பிரசாதமாக நாம் ஏற்பதும் இந்தத் தத்துவத்தின் அடிப்படையில்தான். ஒரு பெரிய மரம் இருக்கிறது.அதில் ஆயிரக்கணக்கான இலைகள் இருக்கின்றன. அடிமரத்தில் வேருக்குத்தான் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால், அதுமரத்தின் அனைத்து இலைகளுக்கும் போய்ச் சேர்ந்து விடுகிறது. இதுபோல் ஆண்டவனுக்கு பக்தி சிரத்தையுடன் நாம் அளிக்கும் எதுவும், உலக நன்மைக்கு அனைவருக்குமே பயன்படும் என்பதே இங்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

No comments:

Post a Comment