Friday, November 30, 2012

எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு

ராமானுஜர் கீழ்திருப்பதியில் தங்கி, தன் தாய்மாமாவான திருமலைநம்பியிடம் ராமாயணத்தின் தத்துவார்த்த ரகசியங்களை கற்றுக் கொண்டிருந்தார். கோவிந்தன் என்னும் சீடர் திருமலைநம்பிக்கு பணிவிடை செய்து வந்தார். இவர் ராமானுஜரின் உறவினரும் கூட. அவரது குருபக்தியைக் கண்ட ராமானுஜர் மிகவும் மகிழ்ந்தார்.
பூஜைக்காக கோவிந்தன் பூப்பறிக்கச் செல்வது வழக்கம். ஒருநாள் நந்தவனம் சென்ற கோவிந்தன் நெடுநேரமாகியும் திரும்பவில்லை. ராமானுஜர் அவரைத் தேடி நந்தவனத்திற்குப் புறப்பட்டார். அங்கே அவர் கண்ட காட்சி அதிர்ச்சி அளித்தது.
கோவிந்தன் ஒரு பாம்பினைக் கையில் பிடித்தபடி, அதன் வாயில் கையை வைத்துக் கொண்டிருந்தார். "கோவிந்தா' என்று கத்தியபடி ராமானுஜர் ஓடி வந்தார்.
""கோவிந்தா! பாம்போடு என்ன விளையாட்டு?' என்று மூச்சிறைத்தபடியே கேட்டார்.
அவர் அமைதியாக,""ராமானுஜரே! நான் பூப்பறித்த போது இந்த பாம்பு துடித்துக் கொண்டிருந்தது. கூரிய முள் அதன் மீது குத்தியிருந்ததைப் பார்த்து, அதை எடுத்துக் கொண்டிருந்தேன். அப்போது, நீங்கள் வந்து விட்டீர்கள்,'' என்றார். ""எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டும் நீயே மேலானவன்,'' என்று கோவிந்தனை ஆரத்தழுவினார் ராமானுஜர்.

திருப்பதிமலைக்கு கால்களால் ஏற விரும்பாத ராமானுஜர், முழங்கால்களால் தவழ்ந்தபடியே மலையேறிச் சென்றார்.

ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வார் நந்தவனம் அமைப்பதற்காக திருப்பதியில் தங்கியிருந்தார். ஒருமுறை, ராமானுஜர் திருப்பதி வந்துள்ளதை அறிந்து அவரைக் காண வந்தார்.
ராமானுஜர் அவரிடம், ""அனந்தா! நந்தவன கைங்கர்யம் எப்படி இருக்கிறது?'' என்று கேட்டார்.
""குருநாதரே! உங்கள் ஆசியால் சிறப்பாகவே நடக்கிறது! உங்களுக்காக உணவு செய்து கொண்டு வந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்ள வேண்டும்!,'' என்றார் அனந்தாழ்வார்.
பரிமாறிய அனந்தாழ்வார் ராமானுஜரிடம், ""திருமலையில் தங்களின் வருகையை எதிர்பார்த்து பலர் காத்திருக்கின்றனர். எப்போதுமலைக்கு வருவீர்கள்?'' என்றார்.
""வேங்கடமலையே புனிதமானது. ஆழ்வார்கள் கூட இதன் புனிதத்தை எண்ணி காலடி வைக்க அஞ்சினர். அப்படியிருக்கும்போது நான் மட்டும் எப்படி திருமலை மீது கால் பதித்து ஏறுவேன்?'' என்று கேட்டார்.
"மலையேற ராமானுஜரே மறுத்து விட்டால் சாமான்ய மக்களும் மலைக்குச் செல்ல விரும்ப மாட்டார்கள். இதனால், வெங்கடேசரை யாரும் தரிசிக்க முடியாமல் போகுமே!' என்று அனந்தாழ்வார் வருந்தினார்.
அவர் ராமானுஜரிடம், ""தங்களின் பாதங்கள் திருமலை மீது பட்டால் தான் இதன் மகத்துவம் மேலும் கூடும். அதனால் நீங்கள் மலையேற வேண்டும்,'' என்று கேட்டுக் கொண்டார். அவரின் வேண்டுகோளை ஏற்றார் ராமானுஜர். கால்களால் ஏற விரும்பாத ராமானுஜர், முழங்கால்களால் தவழ்ந்தபடியே மலையேறிச் சென்றார்.

வாழ்க்கை!இதுதான்

ரிபுமகரிஷிக்கு நிதாகர் என்ற சீடர்.
இவருக்கு ஆத்ம ஞானம் அடைய வேண்டும் என்பது விருப்பம்.
""ஆத்மா என்பது அணு போன்றது. அதற்கு <உறுப்பெல்லாம் கிடையாது. பிராமணன், வைஸ்யன், சூத்திரன் என்பதெல்லாம் உடலைப் பொறுத்த விஷயம். ஆத்மாவுக்கு இந்தப் பாகுபாடு கிடையாது. தற்போது சூத்திரனாக இருப்பவன், அவன் செய்யும் வினைகளுக்கேற்ப பிராமணனாகவும் பிறக்கலாம், க்ஷத்திரியனாகவும் (அரசன்) மாறலாம், கீழ்நிலையான மிருகமாகவும் பிறக்கலாம்<,'' என்று உபதேசித்தார் ரிஷி.
நிதாகருக்கு புரிந்தும் புரியாதது போல் இருந்தது.
ஆயிரம் வருஷம் இதுபற்றி சிந்தித்தார்.
ஒருநாள் காட்டில் தர்ப்பை அறுத்து வந்தார். அவ்வூர் ராஜா யானை மீது அமர்ந்து ஊர்வலம் வந்து கொண்டிருந்தான். அப்போது மகரிஷி ரிபு வந்தார். நீண்டகாலம் ஆகிவிட்டதால் ரிபுவை, நிதாகருக்கு அடையாளம் தெரியவில்லை. யாரோ சாமியார் என நினைத்து விட்டார்.
""ஏன் இங்கே நிற்கிறாய்?'' ரிபு கேட்டார்.
""எதிரே ராஜாவின் யானை ஊர்வலம் வருகிறது? அதனால் ஒதுங்கி நிற்கிறேன்,''.
""ராஜாவா யார் அது?''
""யானை மேல் உட்கார்ந்திருக்கிறாரே...
அவர் தான்''.
""யானையா...அப்படியானால் என்ன?''
""மகரிஷியாக இருக்கீறீர்! இது கூட உமக்கு தெரியாதா! கருப்பாக நீண்டு வளைந்த கையுடன் குண்டாக இருக்கிறதே ராஜாவுக்கு கீழே! அதுதான்!''.
""அப்படியா! ராஜா மேலே...யானை கீழே.. என்றீரே! மேலே என்றால் என்ன? கீழே என்றால் என்ன?''.
ரிபு இப்படி கேட்டாரோ இல்லையோ...நிதாகர் டென்ஷனாகி விட்டார். மகரிஷியைக் கீழே தள்ளினார். அவர் மீது இரண்டு பக்கமும் காலைத் தூக்கிப் போட்டார். ""இப்போது புரியுதா? நீர் கீழே...நான் மேலே!''
அப்போதும் ரிபு அமைதியாக கேட்டார்.
""நீர்' என்பது யார்? "நான் என்பவர் யார்?''
இப்போது தான் நிதாகர் சிந்தித்தார்.
""இவர் சாதாரண ஆளல்ல! யாரோ மகான். ஒரே கேள்வியில் மடக்கி விட்டாரே! கோபமே வரவில்லையே! இவர் மாபெரும் தபஸ்வி,' 'என நினைத்தவரின் முகத்தை உற்றுக்கவனித்த நிதாகர், அவர் தனது குரு என்பதை தெரிந்து கொண்டு, காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.
""நிதாகா! நான் உன் குரு என்பதை ஆயிரம்
ஆண்டுகள் ஆகிவிட்டதால் மறந்து விட்டாய்.
இத்தனை ஆண்டுகள் ஆகியும், ஆத்மஞானம் என்றால் என்ன என்பது பற்றி அறியாமல் இருந்து விட்டாயே! "நான் யார்?' என்ற கேள்வியை திரும்பத்திரும்ப உன்னிடமே கேள். உன் தாய்,
தந்தை, மனைவி, பிள்ளைகள் எல்லா உறவுகளுமே மாயை. இவை உன்னிடம் சில காலம் இருந்து
விட்டு போய் விடும். ஏன்... நீயும் மறைந்து போவாய். இந்த உண்மையை மீண்டும் மீண்டும் சிந்தித்துப் பார். நாம் இறைவனிடம் இருந்து வந்தவர்கள். அவன் மட்டுமே நமக்கு நிரந்தர சொந்தம் என்ற ஆத்மஞானம் கைகூடும்,''
என்றார்.
நிதாகருக்கு சிந்தனையில் தெளிவு பிறந்தது.

அளவுக்கு மீறிய ஆசையால், உயிருக்கே ஆபத்தை வரவழைத்துக் கொள்ளக்கூடாது

ஒரு ஆற்றில் ஏக வெள்ளம். ஒருவன் அக்கறைக்கு அவசியம் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். கையில் பணப்பை இருந்தது.
படகுகள் நின்றன. அதில் ஏறினால், படகுக்காரன் ஐந்து ரூபாய் கேட்பானே! மிச்சம் பிடிக்கலாம்! என நினைத்து, அசட்டு தைரியத்தில் ஆற்றுக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தான்.
ஓரிடத்தில் சுழலில் சிக்கினான். பணப்பை அடித்துச் செல்லப்பட்டது. ""ஐயையோ! என் பணத்தைக் காப்பாத்துங்க!'' என்று கத்தினான். அந்த சமயத்தில் அங்கு நீச்சலடித்து வந்த இளைஞன், வேகமாய் நீந்தி பணப்பையை எடுத்துக்கொண்டு கரையேறினான்.
அங்கே சிலர் நின்றனர்.
""யாரப்பா! பணப்பையை தவற விட்டது! பிடியுங்க!'' என்றான். யாரும் அது தங்களுடையது இல்லை என்றனர். அப்படியானால், பணத்தை தவறவிட்டவன்...அவன் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தது தெரிய வந்தது.
""ஐயையோ! பணத்தைக் காப்பாற்று என்று சொன்னவன், "எனக்கு நீச்சல் தெரியாது, என்னைக் காப்பாற்று' என்று சொல்லியிருந்தால், அவனைக் காப்பாற்றியிருப்பேனே!'' என்று வருத்தப்பட்டான்.
பார்த்தீர்களா! பணத்தாசை உயிரையே குடிக்கிறது. சம்பாதிக்க வேண்டியது தான்! ஆனால், அளவுக்கு மீறிய ஆசையால், உயிருக்கே ஆபத்தை வரவழைத்துக் கொள்ளக்கூடாது! புரிகிறதா!

பணியிலும், தொழிலிலும் நிதானம் வேண்டும்

புத்தரிடம் ஒரு பணக்கார சீடன் சேர்ந்தான். அவன் எதிலுமே கடும் தீவிரத்தைக் கடைபிடிப்பதை அவர் கவனித்தார். அவனுக்கு நல்லறிவு புகட்ட எண்ணினார்.
ஒருமுறை அவனது அறைக்குள் சென்றார். அங்கே புத்தம் புதிய வீணை ஒன்று இருந்தது.
""சீடனே! இந்த வீணையை இசைக்க ஆசையாக இருக்கிறது. மீட்டட்டுமா!'' என்றார்.
""தங்கள் கைபட என் வீணை என்ன புண்ணியம் செய்ததோ! புத்தபிரானே! தங்கள் திருக்கரங்களால் இசைப்பதைக் கேட்க நானும் ஆவலாய் உள்ளேன்,''.
புத்தர் வீணையை எடுத்து நரம்புகளை முறுக்கேற்றினார். ஒரு கட்டத்தில் மேலும் மேலும் திருக, சீடன் அவரிடம்,""ஐயனே! இப்படி முறுக்கேற்றினால் நரம்பு அறுந்து விடுமே!'' என்று பரபரப்புடன் சொன்னான்.
""அப்படியா!'' என்ற புத்தர், நரம்புகளை தளர்த்த ஆரம்பித்தார். அது அளவுக்கதிகமாக தொய்வாகவே, ""எம்பிரானே! இப்படி செய்தால் வீணையை இசைக்க முடியாதே!'' என்றார்.
புத்தர் வீணையை தரையில் வைத்தார்.
""சீடனே! நாம் உபயோகிக்கும் ஒவ்வொரு பொருளிலும் வாழ்க்கையின் தத்துவம் புதைந்து கிடக்கிறது. வீணையின் நரம்புகளை அதிகம் இறுக்கினால் அறுந்துபோகும், தளர்த்தினால் ஒலி எழாது. இதுபோல் தான் கடுமையான பயிற்சியால் உடல் தளர்ந்து விடும். அடுத்து வேலை செய்ய முடியாது. குறைவாக உழைத்தாலோ சோம்பலுக்கு இடமளிக்கும். எனவே, நிதானமாக எதையும் செய். சாதித்துக் காட்டுவாய்!'' என்றார்.
பணியிலும், தொழிலிலும் நிதானம் வேண்டும்! புரிகிறதா!

உலகத்தில் விலை மதிப்பற்ற பொருள் நேரம் மட்டுமே

பெஞ்சமின் பிராங்க்ளின் என்ற அறிஞர், ஒரு புத்தகக்கடை வைத்திருந்தார். அன்று அவருக்கு முக்கியமான பணி. விற்பனையைக் கவனிக்கும்படி தனது பணியாளரிடம் சொல்லி விட்டு, தனது அறையில் இருந்து வேலையைப் பார்க்கத் துவங்கினார். அப்போது ஒரு வாடிக்கையாளர் வந்தார். புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தார். நீண்ட நேரத்துக்குப் பின் ஒரு புத்தகத்தை எடுத்தார்.
விற்பனையாளரிடம் அதன் விலை என்ன என்றார்.
""ஒரு டாலர்'' என்றார் விற்பனையாளர்.
""விலை அதிகமாக இருக்கிறதே'' என்றவர், இன்னொரு புத்தகத்தைத் தேடி எடுத்தார். அதன் விலையைக் கேட்டார்.
""இதுவும் ஒரு டாலர் தான்,'' என்ற விற்பனையாளரிடம்,""தம்பி! இதன் விலை தொடர்பாக, நான் உங்கள் முதலாளியிடம் பேச வேண்டும். அவரை வரச்சொல்லுங்கள்,'' என்றார்.
""ஐயா! அவர் முக்கியப் பணியில் இருக்கிறார். தங்களிடம் பேசும் அளவுக்கு நேரமில்லை. நீங்கள் இந்த விலையைக் கொடுத்து புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்,'' என்றார்.
விற்பனையாளரிடம் கடுமையாக வாதாடி, உரிமையாளர் இங்கே வந்தே ஆக வேண்டுமென அடம்பிடித்தார்.
வேறு வழியின்றி ஊழியர் பிராங்க்ளினிடம் சென்று விஷயத்தைச் சொன்னார்.
பிராங்க்ளின் வெளியே வந்தார்.
""ஐயா! இந்த புத்தகம் எனக்கு வேண்டும். ஒரு டாலர் என்பது அதிகமாக இருக்கிறது. குறைத்துச் சொல்லுங்கள்,'' என்றார். பிராங்க்ளின் மறுத்தார்.
சிறிதுநேரம் வாக்குவாதம் தொடர்ந்தது.
""கடைசியாக இதன் விலையைக் கூறுங்கள்,'' என்றார் வந்தவர்.
""ஒரு டாலர் 25 சென்ட்.'' என்றார் பிராங்க்ளின்.
வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியாகி விட்டது.
""நான் குறைக்கச் சொன்னால் நீங்கள் உயர்த்திச் சொல்கிறீர்களே! எதற்கு?'' என்றார்.
""புத்தகத்தின் விலை ஒரு டாலர் தான். நான் நேரத்தைப் பொன்னாக மதிப்பவன்.
என் பணியை இவ்வளவு நேரம் கெடுத்தீர்களே! அதற்கு 25சென்ட்,'' என்றார் பிராங்க்ளின்.
வந்தவரோ விடாக்கண்டன். குறைத்தே ஆக வேண்டுமென அவரிடம் வாதிட, ""இரண்டு டாலர்'' என்றார் பிராங்க்ளின்.
வாடிக்கையாளர் கோபம் கொப்பளிக்க நின்ற போது, ""ஏன் மேலும் உயர்த்தினீர்கள்?'' என்றார்.
""நான் நேரத்தின் அருமையை உணர்ந்தவன். நீங்கள் உணரவில்லை. அதற்காகத்தான் இந்த விலை உயர்வு,'' என்றார்.
வந்தவர் இரண்டு டாலரைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினார்.
உலகத்தில் விலை மதிப்பற்ற பொருள் நேரம் மட்டுமே. பணக்காரனாவதற்கு ஒரே தகுதி காலத்தின் அருமையை உணர்வது தான். சரிதானே!

நேர்த்திக்கடனை மறக்கலாமா?

வயதான பெற்றோருக்கு நான் ஒரே மகள். பத்மாவதி தாயாரை வேண்டிப் பிறந்தவள் என்பதால் "அலமேலு' என்று பெயரிட்டனர். ஆண்டுதோறும் கார்த்திகை பிரம்மோற்ஸவத்திற்கு பத்மாவதியைத் தரிசிக்கச் சென்று விடுவோம். என் பதினைந்து வயதில் அப்பா காலமான பின், திருப்பதி செல்ல முடியாமல் போனது. வீட்டிலேயே அம்மா புரட்டாசி விரதம் இருந்தார்.
எனக்கு திருமண வயது வந்ததும், மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார்கள். நல்ல வரன் ஏதும் அமையவில்லை.
ஒருநாள் அம்மா ,""பத்மாவதி தாயே! அலமேலுவின் கல்யாணம் உன் அருளால சீக்கிரமே நடக்கணும்! தங்கமோதிரத்தை உனக்கு காணிக்கையா செலுத்துறேன்,'' என்று வேண்டிக் கொண்டார்.
அந்த வருஷத்திலேயே மலேசியாவில் வேலை பார்க்கும் மாப்பிள்ளை எனக்கு அமைந்தது. ஜாம்ஜாமென்று கல்யாணமும் நடந்தது. சில ஆண்டுகள் கழித்து அம்மா காலமானார். அதன்பின், திருப்பதி வேண்டுதல் எனக்கு மறந்தே போனது.
இரு பெண் குழந்தைகளுக்குத் தாயானேன்.
காலம் வேகமாக ஓடியது. மூத்தவளுக்கு உறவினர் மூலம் தமிழகத்தில் மாப்பிள்ளை தேடினோம். வசதியான இடம் சீக்கிரமே அமைந்தது. மாப்பிள்ளை வீட்டார் கல்யாணத்தை திருப்பதியில் நடத்த விரும்பினர். நாங்களும் சம்மதித்தோம். கல்யாண வேலைகள் மும்முரமாக நடந்தன. ஒரு மாதம் தான் இருந்தது. ஆனால் திடீரென, ""பெண் ஜாதகம் சரியாகப் பொருந்தவில்லை. எங்களுக்கு சம்மதம் இல்லை,'' என மாப்பிள்ளை வீட்டாரின் அதிர்ச்சி தகவல் எங்களுக்குக் கிடைத்தது.
சம்பந்தத்தை அறிமுகப்படுத்திய உறவினர் மூலம், இரு குடும்பமும் சேர்ந்து ஒரே ஜோசியரிடம் ஜாதகம் பார்க்க முடிவெடுத்தோம். திருப்பதி போனதாகச் சொல்லி அந்த ஜோதிடர் லட்டு பிரசாதம் கொடுத்தார். அதை வாங்கியதும் பயம் அறவே போனது. ஜோதிடரும் கொஞ்ச நேரத்தில் இரு ஜாதகங்களையும் பார்த்து,""பொருத்தம் இல்லைன்னு யார் சொன்னது? இதை தாராளமாச் சேர்க்கலாம்,'' என்று முடித்தார்.
கல்யாணம் திருப்பதியில் நடந்தது. நீண்டகாலத்திற்குப் பின் திருப்பதி வந்திருப்பதை எண்ணி மகிழ்ந்தேன்.
புதுமணத் தம்பதியோடு காத்திருந்தோம். பத்மாவதி தாயாரைக் கண்டதும், ""தாயே! உன் அருளால் கல்யாணம் நல்லபடியாக முடிந்து விட்டது. கோடி நமஸ்காரம்!'' என்று வணங்கினேன்.
அதன் பின் காணிக்கை செலுத்த ஆயத்தமானோம். காணிக்கைப் பையில் இருந்த காசுகளை அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். என் கணவரும் வேகமாகக் காசுகளை எடுத்துப் போட்டார். அப்போது, அவர் கையில் இருந்த மோதிரம் உள்ளே விழுந்து
விட்டது. ""ஆ! யாரோ மோதிரத்தை இழுப்பது போல இருக்குதே!'' என்றார் பரபரப்புடன்.
""அலமேலு! இது நம்ம கல்யாணத்துக்கு உன் அம்மா கொடுத்த மோதிரம்! இப்படி எதிர்பாராம உண்டியலில் போயிட்டுதே!,'' என்றார். அதைக் கேட்டதும் அம்மா எனக்காக வைத்த வேண்டுதல் சட்டென ஞாபகம் வந்தது.
""ஏங்க! மோதிரக் காணிக்கையை மறக்காம அம்மா வாங்கிட்டாளே!'' என்றேன் ஆச்சர்யத்துடன். புரியாமல் விழித்த கணவரிடம் விஷயத்தைச் சொன்னேன் விலாவாரியாக.
பத்மாவதி தாயார் மகிமையை என்னவென்று சொல்வது!

கஞ்சப்பிரபு.

ஒரு பணக்காரருக்கு ஒரே மகள். ஆசாமி எச்சில் கையால் காகம் ஓட்டாத கஞ்சப்பிரபு. ஒருசமயம், அந்தப்பெண் கடும் நோய்வாய்ப்பட்டாள். பெரிய டாக்டரிடம் போனால், அதிகம் செலவாகுமென, உள்ளூர் வைத்தியரிடம் காட்டனார். வியாதி அசையவில்லை. வேறு வழியில்லாமல், பெரிய டாக்டரிடம் போனார். அவரும் கைவிரித்து விட்டார்.
சொத்துக்கு ஒரே வாரிசான மகள் இறந்து போனால், தன் பணத்தை உற்றாரும், ஊராரும் கொள்ளையிட்டு விடுவார்களே என பயந்த பணக்காரர், ஒரு துறவியை வரவழைத்தார்.
""சுவாமி! இவள் பிழைத்தாக வேண்டும்! ஏதாச்சும் வழி சொல்லுங்க'' என்றார்.
""நீ இவளுக்கு வியாதி தீரும் வரை தினமும் பகவத்கீதை பாராயணம் செய்ய வேண்டும். அல்லது ஊருக்கே அன்னதானம் செய்ய வேண்டும், என்ன செய்யப் போகிறாய்?'' என்றார்.
""நான் கீதையே பாராயணம் செய்துவிடுகிறேன்,'' என அவசரமாகச் சொன்னார் பணக்காரர்.
""அடப்பாவி! ஒரு நல்ல தகப்பனாக இருந்திருந்தால் இரண்டையுமே செய்கிறேன் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும். தானம் கொடுப்பதால், என் மகள் பிழைப்பாள் என்றால் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கிறேன் என சொல்லியிருக்க வேண்டும். நீ பணத்தை மட்டுமே விரும்புகிறாய். என்னால் ஏதும் செய்ய முடியாது,'' என சொல்லிவிட்டு போய்விட்டார்.
அந்தப்பெண் உயிரிழந்தாள். பணக்காரரின் சொத்து சொந்தங்களிடம் சிக்கி சின்னாபின்னமானது

இந்த உலகில் ஒருநாள் சர்க்கரை போல் கரைந்து போகும்

தந்தையே! எனக்கு ஞானம் பிறந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?'' கிளிமூக்கை அசைத்தபடியே சுகப்பிரம்மர் வியாசரிடம் கேட்டார்.
""சுகா! ஞானம் பிறக்க வேண்டுமானால் ஒரு குருவின் அருள்தேவை. நீ ஞானவான் ஆகிவிட்டதாக உன் குரு அறிவிக்க வேண்டும்!''.
""எனக்குத் தெரிந்த குரு யாருமில்லையே! நீங்களே சொல்லுங்கள். நான் யாரை குருவாக ஏற்பது?''.
""மிதிலை மன்னர் ஜனகரைப் பார். அவர் ஒப்புக்கொண்டால், உனக்கு ஞானம் பிறந்து விட்டதாக அர்த்தம். அவர் இல்லறத்திலும், அரசாங்கத்திலும் இருந்தாலும் பற்றற்றவர். கர்மயோகி''.
""சரி..உடனே அவரைச் சந்திக்கிறேன்,''.
சுகர் மிதிலையை அடைந்து ஜனகரை வணங்கினார். ""தாங்கள் யார்? என்ன விஷயமாக வருகிறீர்கள்?''
""பெயர் சுகர், தந்தை வேதம் வகுத்த வியாசர், நான் ஞானவானாகி விட்டேனா என்று அறிந்து கொள்ள வந்தேன். தங்களையே குருவாக ஏற்று அதைத் தெரிந்து வரும்படி தந்தையின் கட்டளை!''.
""அப்படியா? அரண்மனைக்குள் வரும் போது என்ன பார்த்தீர்கள்?''
""தூண்கள், படிக்கட்டுகள், தரைத்தளங்கள் ஆகிய சர்க்கரைத் துண்டுகளைப் பார்த்தேன். ஆங்காங்கே சர்க்கரைத் துண்டுகளாய் நிற்கும் காவலர்களைக் கண்டேன். இப்போது, ஒரு சர்க்கரைத் துண்டுடன் இன்னொரு சர்க்கரைத் துண்டாய் நின்று பேசிக்கொண்டிருக்கிறேன்,''.
""சுகப்பிரம்மரே! தாங்கள் ஏற்கனவே ஞானியாகத்தான் இருக்கிறீர்கள்! நீங்கள் செல்லலாம்,''..விடை கொடுத்தார் ஜனகர்.
இந்த உலகில் நாம் வாழும் வீடும், கட்டிய கட்டடங்களும் ஒருநாள் சர்க்கரை போல் கரைந்து போகும். மனிதராகிய நாமும் மண்ணோடு மண்ணாய் கரைந்து போவோம். இதை யார் உணர்ந்து நடந்து கொள்கிறானோ, அவர்கள் எல்லாருமே ஞானிகள் தான்!

நீலகண்ட தீட்சிதர் -கல்விக்கடலுக்கு கண்ணொளி

சரஸ்வதி பூஜையை ஒட்டி, ஒரு ஆன்மிக கல்வியாளரின் தீர்க்கதரிசனம் பற்றி தெரிந்து கொள்வோமா!

மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம். அவரின் அவையில் பல கல்வியாளர்கள் இருந்தனர். அதில் ஒருவரான நீலகண்ட தீட்சிதர் சிறந்த அருளாளர். தீட்சிதர் மீது மன்னருக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அங்கயற்கண்ணி மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் வசந்தமண்டபம் (புதுமண்டபம்) கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. மன்னரும், தீட்சிதரும் வேலைகளைப் பார்வையிடுவது வழக்கம்.
பட்டத்து ராணியின் சிலையையும் புதுமண்டபத்தில் அமைக்க மன்னர் உத்தரவிட்டார். சிலை செய்த போது, உளி பட்டு தொடைப்பகுதியில் ஒரு சில்லு தெறித்து விழுந்தது. பின்னமான, சிலையை எடுத்து விட்டு சிற்பி மீண்டும் கல்லெடுத்து சிலை செதுக்கினார். மீண்டும் தொடைக்குக் கீழே உளி பட்டு சில்லு போனது. மன்னரின் கோபத்திற்கு ஆளாகவேண்டுமே என அஞ்சினார் சிற்பி. அந்த சமயத்தில் நீலகண்ட தீட்சிதர் அங்கு வந்தார்.
கவலையுடன் இருந்த சிற்பியிடம், ""ஏனப்பா உன் முகம் வாடியிருக்கிறது?'' என்று கேட்டார்.
ராணியின் சிலையைக் காட்டி பிரச்னையைச் சொன்னார் சிற்பி. இருமுறை முயன்றும் சரிவராத சிலையை தீட்சிதர் உற்றுப்பார்த்தார். அவரின் தெய்வீக கண்ணுக்கு உண்மை புரிந்தது. அவர் சிற்பியிடம்,"" சிற்பம் வடிப்பது தெய்வீகக்கலை. உன் கையில் இருக்கும் உளி சாதாரணமானதல்ல. உண்மையைத் தான் சிற்பம் காட்டுகிறது. வருந்தாதே!'' என்று சொல்லி புறப்பட்டார்.
மறுநாள் புதுமண்டபம் வந்த மன்னர் ராணியின் சிலையைக் கண்டார். தொடையில் சில்லு விழுந்திருப்பதைக் கண்டு சிற்பியிடம் விசாரித்தார். ஒருமுறைக்கு இருமுறை முயற்சித்த தையும், தீட்சிதர் கூறிய விளக்கத்தையும் மன்னரிடம் எடுத்துச் சொன்னார்.
மன்னருக்கு,"" ராணியின் தொடையில் இருக்கும் குறை தீட்சிதருக்கு எப்படி தெரிந்தது?'' என்று சந்தேகம் தீயாகப் பற்றி எரிந்தது. தீட்சிதரின் கண்களைப் பொசுக்க வேண்டும் என்று மனம் கொந்தளித்தது.
தீட்சிதரை அழைத்து வர, உடனே ஆள் அனுப்பினார். அப்போது தீட்சிதர் வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் மன்னர் தன்னை அழைத்திருக்கும் விபரீத காரணத்தை உணர்ந்தார். அங்கயற்கண்ணி மீனாட்சிக்கு கற்பூர ஆரத்தி
செய்யும் நேரம் வந்தது. அப்படியே கற்பூர ஜோதியை கண்களில் அப்பிக் கொண்டார்.
கண்கள் தீயில் வெந்து புண்ணானது. தான் நினைத்ததை, தீட்சிதரே நிறைவேற்றிக் கொண்ட செய்தி மன்னரை எட்டியது. தீட்சிதரின் தெய்வீகத் தன்மையை உணராமல் பெரும்பழி செய்து விட்டோமே என்று கலங்கினார்.
பின்னர், கல்விக்கடலான நீலகண்ட தீட்சிதர் மீனாட்சியம்மன் மீது "ஆனந்த சாகர ஸ்தவம் என்னும் ஸ்லோகம் பாடினார். மீனாட்சியின் அருளால் தீட்சிதரின் கண்கள் மீண்டும் ஒளி பெற்றன.

தினமும் இரவு தூங்கப்போகும்முன், அவனது திருநாமத்தை உச்சரிக்க வேண்டும்

ஒருவன் இன்னொருவனைப் பார்த்து, "செத்து செத்து விளையாடலாமா?' என்று கேட்டால், அதில் வேடிக்கைக்கு ஒன்றுமில்லை. ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் தினமும் செத்து தான் பிழைக்கிறான். இரவில் தூங்கி மறுநாள் எழுகிறோம். இடைப்பட்ட நேரத்தில் எங்கிருந்தோம்? செத்தவன் எப்படி உணர்ச்சியற்றுக் கிடப்பானோ, அதுபோல் தானே கிடந்தோம்!
"உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு' என்கிறார் வள்ளுவர்.
இந்த இடைப்பட்ட நேரத்தில், நம்மைப் பாதுகாப்பவன் கடவுள். அந்தக் கடவுளுக்கு நன்றி சொல்லும் விதத்தில் தினமும் இரவு தூங்கப்போகும்முன், அவனது திருநாமத்தை உச்சரிக்க வேண்டும். கோவிந்தா, நாராயணா, நமசிவாய, வெற்றி வடிவேலா, கருப்பசுவாமியே' என்று உங்களுக்கு எந்த தெய்வத்தின் மீது பிரியமோ, அந்த நாமத்தைச் சொல்லுங்கள்.
தினமும் செத்து பிழைக்க உதவும் இறைவனுக்கு செலுத்தும் நன்றிக்கடன் இதுதான்

நவராத்திரி சுபராத்திரி

நவராத்திரி விரதம் முழுக்க முழுக்க பெண்மைக்கு உரியது. "நவம்' என்ற சொல்லுக்கு "ஒன்பது' என்றும், "புதியது' என்றும் பொருள் உண்டு. மீண்டும் மீண்டும் புதிது புதிதாக இந்த விழா ஆண்டுதோறும் மாற்றங்களுடன் கொண்டாடப்படும். இதை அனுசரித்தே முன்னோர்கள் நவராத்திரி என்று பெயர் சூட்டியுள்ளனர்.
ஒருநாளில், பகல் பாதி சிவபிரானின் அம்சம். இரவு பாதி அம்பாளின் அம்சம். பகலும் இரவும் இணையாவிட்டால் நாள் என்பது இல்லை. இதில் தேவியைக் கொண்டாடுவதற்கு ஏற்ற நேரம் இரவு. பகலில் உயிர்த்தெழுந்த உயிர்களை, இரவு வடிவான தேவி அமைதியில் ஆழ்த்தி, (உறங்கச்செய்து) தாலாட்டுகிறாள். உயிர்கள் அனைத்தும் உறங்கும் காலத்தில், தான் உறங்காமல் இருந்து அவற்றைக் காப்பாற்றுகிறாள். வேதத்தில், "சகல பூதங்களையும் பெற்றவளே! பகவதியே! கருமையானவளே! இரவானவளே! உன்னை வணங்குகின்றேன்' என அம்பாளைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. வேதங்கள் காட்டிய வழியில் நாமும் இரவு காலத்தில் அவளைக் கொண்டாடுகிறோம்.

மனிதனின் எதிரி யார்?

ஆசை நம்மிடம் அடங்கமாட்டேன் என்றாலும், திரும்பத் திரும்ப அடக்கப் பார்த்துக் கொண்டே தானிருக்க வேண்டும். வைராக்யம் என்பதான ஆசையின்மையை, பற்றின்மையை சம்பாதித்துக் கொள்ள விடாமுயற்சி பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும்.
ஏனென்றால் ஆசை என்ற இந்த ஒரே சத்ருவை (எதிரி) எப்படியோ ஒரு தினுசில் எப்பாடு பட்டாவது ஒழித்துக் கட்டி விட்டால் போதும், அப்புறம் நீங்க ராஜா தான். ராஜா என்றால் இந்த உலகத்து ராஜா இல்லை. அவனுக்குள்ள ஆசையும் தொல்லையும் நமக்கு வேண்டவே வேண்டாம். ஆசை கிட்டேயே வராத சாஸ்வத சாந்தத்தை உடைய ராஜா.
மனதில் எழும் பல நூறாயிரம் கெட்ட விஷயங்களை ஒவ்வொன்றாக அடக்கப் பார்த்து பிரயோஜனமில்லை. அது முடியாத காரியம். ஆகையால் அவை கிளைகள் என்றால் அவற்றுக்கு வேராக உள்ள ஆசை என்ற ஒன்றை வெட்டிவிட்டால் போதும். ஆனால், வெளியே நீண்டிருக்கும் கிளையை வெட்டுவதைவிட, உள்ளே புதைந்துள்ள வேரைத் தோண்டி அழிப்பது ரொம்பவும் கஷ்டம் தான். இருந்தாலும் இதைச் செய்யாவிட்டால் வெட்டிய கிளைகள் மறுபடி மறுபடி முளைத்துக் கொண்டு தான் இருக்கும் என்பதால் எப்படியாவது இதைசாதித்துத் தான் ஆகவேண்டும்.

விஞ்ஞானம் வெற்றிதான்! ஆனால் மெஞ்ஞானம்...

மனிதன் விஞ்ஞானத்தில் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறான்.
உலகத்தின் எல்லையை விட்டு சந்திர மண்டலம், செவ்வாய் கிரகம் என அவன் சாதித்தவை அனைத்தும் மிக மிக பாராட்டுக்குரியவை. தனது அறிவைப் பயன்படுத்தி அவன் இதைச் சாதித்திருக் கிறான். ஆனால், இந்த சாதனைக்காக அவன் தன்னைத்தானே பாராட்டிக் கொள்வதையும், கடவுளை வென்று விட்டதாக கூறுவதையும் ஒப்புக்கொள்ள முடியாது.
காரணம், வெறும் குதிரையும், யானையும் படைகளாக இருந்த காலத்தில் அவற்றை அடக்க பீரங்கியைக் கண்டுபிடித்தான். பீரங்கியை அடக்க வெடிகுண்டுகளை தயாரித்தான். சாதாரண குண்டுகளைத் தகர்க்க அணுகுண்டை கொண்டு வந்தான். காட்டையும் ஆற்றையும் விளைநிலங்களையும் அழித்து செயற்கை உணவு வகைகளை அவன் தயாரித்ததும், நோய்கள் கடுமையாகத் தாக்கின. ஆக, மனித அறிவு கடைசியில் அழிவைத் தான் தந்தது.
மெய்ஞ்ஞானம் அப்படியல்ல! அது அன்பைப் போதிக்கிறது. நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கிறது. அது நமக்கு அளித்துள்ளதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்ற உணர்வினை உண்டாக்குகிறது. அக்கால மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தனர். அதனால் அவர்களுக்கு பிரச்னைகள் மிகக்குறைவாக இருந்தது. எனவே, மெய்ஞ்ஞானத்தை விஞ்ஞானம் வென்றுவிட்டதாகக் கூறுவதை எக்காலமும் ஏற்கமுடியாது.

சக்திபீடங்களில் மணிகர்ணிகா பீடமாகத் திகழ்வது காசி

சக்திபீடங்களில் மணிகர்ணிகா பீடமாகத் திகழ்வது காசி. தட்ச யாகத்தின் போது, கோபமடைந்த சிவன் அம்பாளின் உடலைத் தூக்கி ஆடும் போது, மணிகர்ணிகை என்னும் அம்பிகையின் குண்டலம் விழுந்த தலம் இது. கங்கைக்கு நிகரான நதியும் இல்லை. காசிக்கு நிகரான பதியும்(ஊர்) இல்லை என்பது சொல்வழக்கு. வாழ்வில் ஒருமுறையாவது காசிக்குச் சென்று கங்கையில் நீராடவேண்டும் என்பது லட்சியமாக இருக்கிறது. மோட்சத் தலங்கள் ஏழில் காசியே முதன்மையானது. உயிர்களின் பாவத்தைப் போக்கி பிறவி என்னும் பெருங்கடலைக் கடக்கும் தோணியாக விஸ்வநாதரும், விசாலாட்சியும் இங்கு வீற்றிருக்கின்றனர்.
காசியில் மரணம் அடையும் உயிர்களை விசாலாட்சியே தன் மடியில் கிடத்தி முந்தானையால் வீசி விடுவதாகவும், விஸ்வநாதர் அவர்களின் காதில் ராமநாமத்தை ஓதி முக்தி அளிப்பதாகவும் ஐதீகம். விசாலாட்சி என்பதற்கு " விசாலமான கண்களைக் கொண்டவள்' என்பது பொருள். தன் அகன்ற கண்களால் பக்தர்களின் மீது அருள்மழையை விசாலாட்சி பொழிகிறாள். பாசபந்தங்களைப் போக்கி முக்திவாசலைத் திறந்து விடுகிறாள்.
காசியில் வாரணம், அசி என்னும் ஆறுகள் வடக்கிலும் தெற்கிலுமாக ஓடுவதால் வாரணாசி என்ற பெயரும் உண்டு. கிரகங்களில் ஒருவரான புதன், காசி விஸ்வநாதரையும், விசாலாட்சியையும் வழிபட்டு கிரகபதவி அடைந்தார். இதனால் இங்கு வழிபட்டவர்களுக்கு கல்வி வளர்ச்சி, ஞானம் கிடைக்கும். இங்கு விமரிசையாக நடக்கும் விழாக்களில் நவராத்திரி முக்கியமானது.

கொலு மேடையில் எத்தனை படி?

கொலு வைப்பவர்கள் புரட்டாசி அமாவாசை நாளில் (மகாளய அமாவாசை) கொலு வைத்து விட வேண்டும். கொலு என்றால் "அழகு'. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலங்கள் போடவேண்டும். ரங்கோலி இட்டால் எடுப்பாக இருக்கும். மேடை அமைத்து பொம்மைகளை வரிசைப்படுத்த வேண்டும். 5.7.9 படிகள் அமைத்து கொலு வைக்கலாம். அவரவர் வசதிக்கு தகுந்தபடியான பொம்மைகளை வாங்கிக் கொள்ளலாம்.

கலைமகள் பெயர்க்காரணம்

சரஸ்வதியை "கலைமகள்' என்கிறார்கள். "கலை' என்றால் "வளர்வது'. கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும். அதற்கு கரையில்லை. தன் வாழ்நாளுக்குள், ஒருவன் எல்லாக்கலைகளையும் கற்று விட முடியாது. இதைத்தான் கற்றது கைம்மண்ணளவு, கல்லாதது உலகளவு என்பர். சிவனைப் போல, சரஸ்வதியின் தலையிலும் மூன்றாம் பிறை சந்திரன் உள்ளது. சகலகலாவல்லியான அவளே மூன்றாம் பிறை அளவுக்கு தான் தனக்கு கலைகள் தெரியும் என்று அடக்கத்துடன் காட்டுகிறாள்.

நவராத்திரி காலத்தில் கூட்டாக வீணை இசைப்பது ஏன்?

நவராத்திரி காலத்தில் சரஸ்வதியை வழிபடும் கடைசி மூன்று நாட்களும், கோயில்களிலும், வீடுகளிலும் கூட்டாக வீணை இசைப்பதைப் பார்க்கிறோம். இதற்கு காரணம் தெரியுமா? "நவரத்னமாலா' என்ற ஸ்தோத்திரத்தில், காளிதாசர், பராசக்தியின் கையில் வீணை இருக்கிறது என்று பாடியுள்ளார். அவளை சிவனின் பத்தினி என்றும், அவள் சங்கீத இனிமையில் மூழ்கி அமைதியாகவும், மென்மையான உள்ளம் பெற்றவளாக இருப்பதாகவும் கூறுகிறாள்.
பராசக்தி வீணை வாசிக்கும் கோலத்தில் இருக்கும்போது, அவளை "சியாமளா' என்று அழைப்பர். இன்னிசையில் மூழ்கி ஆனந்தமாய் இருக்கும் அவளை, அதே இன்னிசையால் பக்தர்களும் மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அப்போது, அந்த இடத்தில் இருக்கும் எல்லார் மனமும் அமைதிபெறும். அதனால் தான், நவராத்திரியின் போது, கூட்டாக வீணை வாசிக்கிறார்கள். அமைதியைத் தேடி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, நவராத்திரி காலத்தில் வழக்கத்தை விட அதிகமான மனஅமைதி கிடைக்கிறது.

சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?

மற்ற தேவியர் வண்ண ஆடை உடுத்த, சரஸ்வதி மட்டும் வெள்ளை ஆடை உடுத்தி, வெள்ளைத் தாமரையில் வீற்றிருக்கிறாள். இதற்கு காரணம் உண்டு. சரஸ்வதி ஞான வடிவானவள். ஞானம் எங்கிருக்கிறதோ, அங்கே அடக்கம் இருக்கும். அவள் கல்வி தெய்வம். என்னதான் சபாரி உடை அணிந்து வந்தாலும், தூய வெள்ளை வேஷ்டி, சட்டையுடன் சபை நடுவே வரும் அறிஞரைக் கண்டதும் அவையே கைகூப்புகிறது. மரியாதை செலுத்துகிறது. கற்றவர்கள் மரியாதைக்குரியவர்கள் என்பதை எடுத்துக்காட்டவே, கல்வி தெய்வமான அந்த தேவியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள். வெள்ளை என்பது மாசுமருவற்றது. ஒருவன் கற்ற கல்வியும், மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது

Thursday, November 29, 2012

நவராத்திரி நாட்களில், அம்பாளுக்கு சுண்டல் நிவேதனம்

நவராத்திரி நாட்களில், அம்பாளுக்கு விதவிதமான சுண்டல், பாயாச வகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது. இந்தப் பழக்கம் உருவாக காரணம் உண்டு. நவராத்திரி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் தான் வரும். இந்தக் காலம் அடை மழைக் காலம். மக்கள் பயிர்கள் செழித்து மகிழ்ச்சியுடன் இருக்கும் நேரம். தேவர்களுக்கு சிவ, விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை நிரந்தரமாக வாழச்செய்தது போல, பூமி உயிர்வாழ "மழை' என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள். இதனால் பூமி "சக்தி' பெறுகிறது. அந்த சக்தியை பெண்ணாகப் பாவித்து வழிபட்டனர். அந்த சக்திக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது.அறிவியல் ரீதியாகவும் இதற்கு காரணம் உண்டு. புரட்டாசி, ஐப்பசி அடைமழை காலத்தில் தோல்நோய் அதிகமாக ஏற்படும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு. சுண்டலிலுள்ள சத்துக்கள் தோல்நோய் வராமல் தடுக்கும். நமது ஆன்மிகம் சாதாரணமானதல்ல. ஒவ்வொன்றையும் நம் பெரியவர்கள், அர்த்தத்துடன் தான் செய்துள்ளனர்.

மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது

மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது என்கிறார் இங்கிலாந்து அறிஞர் சார்லஸ் டபிள்யூ லெட்பீட்டர். இவர் ஒருமுறை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகை தந்தார். அங்கே அவருக்கு குங்கும பிரசாதம் கொடுத்தார்கள். அடுத்து<, சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு சென்ற போது விபூதி தரப்பட்டது. இதை ஏன் இந்திய மக்கள் நெற்றியில் இட்டுக்கொள்கிறார்கள் என்பதை அறிய அவருக்கு ஆவல். உடனே, அதை பரிசோதனை செய்தார். அவற்றிலிருந்து காந்தசக்தி வெளிப்பட்டதை உணர்ந்தார். "இது என் வாழ்வில் நான் கண்ட அதிசயம்' எனதான் எழுதிய "தி இன்னர் லைப்' என்ற புத்தகத்தில் எழுதினார். இதை விட அதிசயம் ஒன்று உண்டு என்றும் அவர் சொல்கிறார். சில ஆண்டுகள் கழித்தபிறகு, அந்த குங்குமம், விபூதியை பரிசோதனை செய்தார். அப்போதும், முன்பு கண்ட அதே அளவு காந்தசக்தி சற்றும் குறையாமல் வெளிப்படுவது கண்டு அசந்து போனார். "இப்படி ஓர் அதிசயத்தை நான் எந்த நாட்டிலும் கண்டதில்லை' என்று அவர் எழுதி வைத்திருக்கிறார். நாம், மீனாட்சி குங்குமத்தை கோயில் தூண்களில் கொட்டி வைத்து பாழாக்கிக் கொண்டிருக்கிறோம். இனிமேலாவது, அன்னையின் குங்குமத்தை அளவோடு வாங்கி, பூஜையறையில் பத்திரமாக வைப்போம். அன்னையின் அருட்கடாட்சம் என்று நிலைத்திருக்கச் செய்வோம்.

சரஸ்வதிபூஜை - பொருள்

எளிமையான சரஸ்வதிபூஜை


ஒரு சிறிய மேஜையில் சரஸ்வதிபடம் அல்லது மஞ்சள், சந்தனத்தில் செய்த முகம் வைக்க வேண்டும். படத்திற்கு அருகம்புல், மலர்மாலைகள் அணிவிக்க வேண்டும். புத்தகங்களை மேஜையில் அடுக்கி, அதன்மேல் படத்தை வைக்க வேண்டும். படத்தின் முன்னால் இலைவிரித்து, வெற்றிலை பாக்கு, பழம், பொரி, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், தண்ணீர் படைக்க வேண்டும். கற்பூரம் அல்லது நெய்தீபம் காட்டி வணங்க வேண்டும். குழந்தைகளுக்கு பிரசாதம், கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை ஆகியவற்றை அவரவர் வசதிக்கு தக்கபடி வழங்க வேண்டும். மறுநாள், காலையில் புதுஇலை இட்டு வெற்றிலை பாக்கு, பழம், பொரி மட்டும் படைத்து பூஜை செய்து படத்தை எடுத்து விட வேண்டும். முகம் வைத்திருந்தால் அதை நீர்நிலையில் கரைக்க வேண்டும். பூஜா என்றே சொல்லே பூஜை ஆனது. "பூ' என்றால் பூர்த்தி. ஜா என்றால் உண்டாக்குவது.

சரஸ்வதிபூஜை - பொருள்

பண்டிகைகளில் "பூஜை' என்ற அடைமொழி சேர்ந்திருப்பது சரஸ்வதி பூஜைக்கு தான். தீபாவளி பூஜை, பொங்கல் பூஜை என்று சொல்வதில்லை. பூஜை என்ற சொல் "பூஜா' என்பதில் இருந்து பிறந்தது. "பூ' என்றால் "பூர்த்தி'. "ஜா' என்றால் "உண்டாக்குவது'. தான் என்ற அகங்காரம், அடுத்தவனை விட நன்றாக வேண்டுமென்ற பொறாமை, உலக வாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. இதையே சைவசித்தாந்தத்தில் "ஆணவம், கன்மம், மாயை' என்கிறார்கள். இந்த மும்மலங்களையும் அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே "பூஜை'. சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால், அவளது விழாவுக்கு மட்டும் "பூஜை' என்ற அடைமொழி இணைந்தது.


சரஸ்வதி பூஜையை ஒட்டி மாணவர்களுக்கு வாரியார் சுவாமிகள் தரும் சுவையான சேதி:
""கற்க கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக,'' என்பது வள்ளுவர் வாக்கு. படித்தால் என்ன லாபம்? சென்ற இடமெல்லாம் சிறப்பு கிடைக்கும். எல்லா நாடும் கற்றவருக்குச் சொந்தம். படிப்பது எதற்கு? உத்தியோகம் செய்வதற்கு மட்டுமல்ல, அறிவை வளர்ப்பதற்கும் கூட. திருக்குறள், ராமாயணம், மகாபாரதம் ஆகிய நூல்களைப் படிக்க வேண்டும். வழுக்கி விழுந்தவள், வாழப்பிறந்தவள் போன்ற மோசமான கதைகளைப் படிக்கக்கூடாது. இனிமேலாவது, இதுமாதிரி உள்ள நல்ல நூல்களைப் படியுங்கள். படிப்பில்லாதவர்களும் பணம் சேர்க்கிறார்கள். உள்ளூர் பாங்கில் பணம் போட்டால் தெரிந்துவிடுமென்று வெளிநாட்டு பாங்கில் பணம் போடுகிறார்கள். மாணவர்களுக்கு தெய்வபக்தி இருக்க வேண்டும். காலையில் எழுந்து பல்துலக்கி, நெற்றிக்கு விபூதி இட்டு, இறைவனின் திருநாமத்தைச் சொன்னபின் தான் காபியே குடிக்க வேண்டும்''. வாரியார் சொன்னதை மனதில் வரித்துக் கொள்வீர்களா மாணவர்களே!

குருபக்தி

காஞ்சி மகாப்பெரியவருக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்கள் காசிக்கண்ணன், வைத்தியநாதன் என்ற தொண்டர்கள். இருவரும் பெரியவர் மீது அளவற்ற பக்தி கொண்டவர்கள். ஒருசமயம் மகாப்பெரியவர் அளவற்ற மகிழ்ச்சியுடன் இருந்தார். அப்போது, ஒரு ஊழியர் ஓடிவந்து, ""பெரியவா! கண்ணன், வைத்தா (வைத்தியநாதனை இப்படி சுருக்கிச்சொல்வார் பெரியவர்) இருவருமே உங்களிடம் பக்தி செலுத்துகிறார்கள், இவர்களது பக்தியில் ஏதாவது வித்தியாசம் காண்கிறீர்களா?'' என்றார்.
பெரியவர் சிறிது யோசித்தார்.
""காசிக்கண்ணனிடம் நீ போய், பெரியவர் உன்னைக் கிணற்றில் குதிக்கச்சொன்னார் என்று சொன்னால், அவன்"பெரியவாளா சொன்னா! எதற்குச் சொன்னார், காரணமில்லாமல் அவர் ஏதும் சொல்லமாட்டாரே! சரி, பெரியவரிடமே கேட்டுவிட்டு பின் குதிக்கிறேன்' என்று சொல்வான். வைத்தாவோ, "பெரியவா சொன்னாளா! என்னையா!' என்று கனஆச்சரியத்துடன் கேட்டுவிட்டு, உடன் கிணற்றில் குதித்து விடுவான். இதுதான் வித்தியாசம். இருவருமே என்னைப் பொறுத்தவரை சமமானவர்கள் தான். காசிக்கண்ணன் யோஜனையுடன் செய்வான். வைத்தா யோசிக்காமல் செய்வான். கைங்கர்யத்தில் இருவரும் சமமே!'' என்று பதிலளித்தார்.

அன்னாபிஷேகம் நடத்துவது ஏன்?

அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறது. " ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன்,'' என்கிறது அந்த மந்திரம். கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். உடல்நிலைக்கேற்ப ஒருவருடைய ஜீரணசக்தி மாறும். அவரவர் தன்மைக்கேற்ப சாப்பிடுவது அவசியம். இதைத் தான் "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு'' என்று பெரியவர்கள் சொல்லி வைத்தனர். அளவாகச் சாப்பிட்டால் உடலில் வியாதிகள் அணுகாது. ஆரோக்கியம் நிலைத்திருக்கும்."நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழலாம். அன்னத்தை வீணாக்கக்கூடாது, அது தெய்வசொரூபம் என்பதை மக்களுக்கு உணர்த்தவே அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

மனிதனின் பரமஎதிரி'

வயிற்றில் உண்டாகும் பசித்தீயை மனிதனின் பரமஎதிரி' என்று வேதம் சொல்கிறது. பசித்தவனுக்கு உணவளித்தால் விருப்பத்துடன் சாப்பிடுவான். ஆனால், வயிறு நிரம்பியதும்,""போதும் போதும்! பரமதிருப்தியா சாப்பிட்டேன்'' என்று கைகளை உயர்த்திவிடுவான். தங்கத்தை அள்ளி தானமாகக் கொடுத்தாலும், "இன்னும் போதாது' என்று திரும்பத் திரும்பக் கேட்பான். பசிப்பிணியைப் போக்குவதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவர் வள்ளலார். இவரது தனிப்பெருங்கருணையால் வடலூரில் சத்தியதர்ம சாலை நிறுவப்பட்டு ஏழைகளுக்கு உணவளிக்கப்பட்டது. இவர் ஏற்றி வைத்த அணையாஅடுப்பில் எரியும் தீ, அங்கு வருவோரின் பசித்தீயை அணைத்துக் கொண்டிருக்கிறது.

மனிதனுக்கு இரண்டு விதமான அன்னங்கள் தேவை

மனிதனுக்கு இரண்டு விதமான அன்னங்கள் தேவை என்கின்றனர் ஞானிகள். முதல் அன்னம் நம் எல்லோருக்கும் தெரிந்தது தான். பசியைப் போக்கும் சாப்பாடு. இரண்டாவது வகை நம் உயிருக்கு தேவையானது. அதுவே பரம்பொருள்(கடவுள்) என்னும் அன்னம். சாப்பாட்டை மட்டும் உட்கொண்டு உலகவிஷயங்களில் ஈடுபடுவதை இறைவனே விரும்புவதில்லை. தன்னையும் "பக்தி' என்னும் கை கொண்டு உண்டு வந்தால் (வணங்கினால்) நமக்குள் பரிசுத்தத்தை ஏற்படுத்துவான். இதன் மூலம் ஆத்ம அபிவிருத்தி ஏற்படும்.

மந்திரமாவது நீறு'


பசுவின் சாணத்தை காயவைத்து நெருப்பில் இட்டு எடுக்கும் சாம்பலே திருநீறு. இதில் வாசனைப் பொருட்கள் சேர்க்கிறார்கள். இந்த ஒரிஜினல் திருநீறு கிருமிநாசினியாக செயல்பட்டு, உடலில் ஏற்படும் நோயைத் தீர்க்கிறது. இதைத் தொடர்ந்து பூசுவோருக்கு ஜலதோஷம் முதலியன ஏற்பட்டால் சுகமாகும். சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டால் திருநீறு பூசுவதுண்டு. வயிற்றுவலி வந்தால், கிராமமக்கள் சிறிது திருநீறை தண்ணீரில் கரைத்துக் குடிக்கிறார்கள். அடுப்பை எரித்துக் கிடைக்கும் சாதாரண சாம்பலை செடி, கொடிகளின் மீது தூவினாலே அதன் மீது ஊர்ந்து செல்லும் சிறுபூச்சிகள் இறந்துவிடும். இப்படியிருக்க, இறைவனுக்கு
மிகவும் பிடித்தமான பசுஞ்சாண சாம்பலைப் பூசினால், எவ்வளவு மகிமை என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதன் பெருமையை, "மந்திரமாவது நீறு' என,ஞானசம்பந்தர் போற்றுகிறார்.

வாழ்வுக்குப் பொருள் (பணம்) தேவை. ஆனால், வாழ்வதற்கும் ஒரு பொருள் (அர்த்தம்) தேவை அல்லவா?

இல்லறமல்லது நல்லறமன்று' என்பது அவ்வையின் வாக்கு. உலகில் எந்த நாட்டிற்கும் இல்லாத பெருமை நமக்கு உண்டு. அது தான் "குடும்பம்' என்ற அமைப்பு. சுனாமியின் போது உதவி செய்வதற்காக வந்த அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனுடன் மனைவி ஹிலாரியும் வந்திருந்தார். அப்போது ஹிலாரியிடம், ""இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்க, ""இந்தியா கோயில்கள் நிறைந்த நாடு என்பதை அறிவேன். ஆனால், இங்கு குடும்பங்களே கோயில்களாக உள்ளன. அதில்
மனைவியே தெய்வமாகத் திகழ்கிறாள் என்பது இங்கு வந்தபின்பு தான் தெரிகிறது,'' என்றார்.
நம்நாட்டைப் பொறுத்தவரை குடும்பவாழ்வு தொடங்குவதே திருமணத்தின் மூலம் தான். பத்து பொருத்தம் பார்த்து, பஞ்சபூதங்கள் சாட்சியாக, நான்குவேதம் முழங்க, மூன்றுமுடிச்சு போட்டு, இருமனங்கள் ஒன்றாக இணைவது தான் திருமணம். நல்ல சமையல் ஒருநாள் இன்பம், நல்ல அறுவடை ஓராண்டு இன்பம். நல்ல திருமணமோ காலமெல்லாம் இன்பம்.
தெய்வீகத்திருமணத்தைக் கூட வள்ளி திருமணம் என்று சொல்வார்களே தவிர, முருகன் திருமணம் என்று சொல்வதில்லை. இதைப்போலவே சீதாகல்யாணம், மீனாட்சி திருக்கல்யாணம் என்று சொல்வது மரபு. பெண்மை யைப் போற்றுவது தான் இதன் அடிப்படை.
மலரின் நறுமணம் போல, பெண்களும் "அன்பு' என்னும் மணம் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். பெண்ணுக்கு "கண் அவர்' என்பதே கணவரானது. கண்ணை இமை காப்பது போல குடும்பத்தைக் காப்பவள் மனைவி.(கீழ் இமை அசையாது). ""இரண்டு கண்களும் ஒரே பொருளையே காண்பது போல, கணவனும் மனைவியும் கருத்து ஒன்றி நற்செயல்களைச் செய்யவேண்டும்,'' என நன்னெறி வெண்பா நாற்பது என்னும் நூலில் சிவப்பிரகாசசுவாமிகள் குறிப்பிடுகிறார்.
சிவகுரு- ஆர்யாம்பாள் தெய்வீகத் தம்பதிகள் திருச்சூர் விருஷாசலம் கோயிலில் குழந்தை வரம் வேண்டி விரதமிருந்தனர். அன்றிரவு கோயிலில் உறங்கும்போது ஆர்யாம்பாளின் கனவில் தோன்றிய சிவன், ""அற்பாயுள் வாழும் நல்ல பிள்ளை வேண்டுமா? தீர்க்காயுள் உள்ள கெட்டபிள்ளை வேண்டுமா?'' என்று கேட்டார்.
சிவனிடம் ஆர்யாம்பாள்,""என் கணவரைக் கேட்டு முடிவு சொல்கிறேன்,'' என்றாள். கண் விழித்துப் பார்த்தால், கணவரும் ஆச்சர்யத்துடன் ஏதோ சொல்ல முயன்றார். இருந்தாலும், ""நீ எதையோ சொல்ல எழுந்தாய்! நீயே முதலில் சொல்'' என்று சிவகுரு சொல்ல அவள் தன் கனவை எடுத்துச் சொன்னாள். சிவகுரு தனக்கும் இதே அனுபவம் உண்டானதைக் கூறினார்.
""நானும் சிவனிடம் உன்னைப் போலவே மனைவியிடம் கேட்டு முடிவு சொல்வதாகக் கூறிவிட்டேன்,'' என்றார்.
இத்தம்பதிக்கு பிறந்த நல்ல பிள்ளை தான் ஆதிசங்கரர்.
""உண்மையான மனைவி, கணவனின் இல்லத்தில் அடிமை. இதயத்தில் அரசி,'' என்ற ரஸ்கினின் வார்த்தைகள் எவ்வளவு உண்மையானது!
அன்பு, பொறுமை, தியாகம், அருள், சகிப்புத்தன்மை, அறம் சார்ந்த பண்புகளை குடும்பத்தில் வளர்க்க வேண்டியது பெண்ணின் கடமை.
""அறம் செய்தால் அன்பு விளையும் அன்பினால் அருள் தோன்றும் அருளால் தவம் விளையும் தவத்தால் சிவம் தோன்றும்
சிவனும் ஜீவனும் ஒன்றாகும் பெற்ற சிற்றின்பமே பேரின்பமாகும்,'' என்பதை உணர்ந்து இறைநம்பிக்கையோடு இல்லறத்தை தொடர்வோம். வாழ்வுக்குப் பொருள் (பணம்) தேவை. ஆனால், வாழ்வதற்கும் ஒரு பொருள் (அர்த்தம்) தேவை அல்லவா?

நீங்கள் எல்லாரும் அர்ஜுனர்கள் தான்--சொல்கிறார் காஞ்சி பெரியவர்

நீங்கள் எல்லாரும் அர்ஜுனர்கள் தான். அவன் மாதிரி மனம் குழம்பி இருப்பவர்கள் தான். இன்றிலிருந்து மனதில் இருக்கும் அசுரசக்திகளை ஜெயிப்பதற்காக தெய்வீகமான விருத்திகளை நன்றாகத் திரட்டிக் கொள்ளவும், பரம எளிமையோடு பரமேஸ்வரனிடம் பக்தி செலுத்தவும் ஆரம்பியுங்கள். வாழ்க்கைப் போராட்டத்தை புத்திசாலித்தனமாக நடத்துங்கள். பகவானையே நினைத்துக் கொண்டு இப்போராட்டத்தை நடத்தினால் அவனிடம் மட்டுமே பற்று இருக்கும்.
ஞானவாசல் கதவு திறந்து உண்மையைக் காண்பது மநுஷ்ய ஜன்மா ஒன்றுக்குத் தான் உரியது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். பிராணி வர்க்கங்களில் மநுஷ்யன் ஒருத்தன் தான் தன்னையே பரபிரம்மமாக தெரிந்து கொள்கிற ஞானத்துக்கு முயல முடியும் என்பதால் தான் ""அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது'' என்று சொன்னாள் அவ்வை. இதையே தான் ஆச்சாரியாளும் (ஆதிசங்கரர்) விவேகசூடாமணியில் ""ஜந்தூநாம் நரஜந்ம துர்லபம்'' என்றார். இதனால், மநுஷ்ய ஜன்மா எடுத்த எல்லாரும் சற்றேனும் ஞானத்தை அடைவதற்குப் பிரயத்தனம் பண்ணவேண்டும். இதற்குப் பொழுது கிடைக்கவில்லை என்று சொல்வது கொஞ்சம் கூடச் சரியில்லை. அப்படிச் சொன்னால் நம்மைப் போல "அசடு' யாருமில்லை

பாதாதிகேசம் -கேசாதிபாதம்'

பொதுவாக அடியார்களும், புலவர்களும் இறைவனின் பாதத்திலிருந்து உச்சிமுடிவரை ஒவ்வொரு அங்கமாகப் போற்றிப் பாடுவர். இதனைப் பாதாதிகேச வர்ணனை என்பர். ஆனால், நம்மாழ்வார், இதற்கு நேர்மாறாக பெருமாளின் முடியிலிருந்து திருவடி வரை பாடினார். இதை "கேசாதிபாதம்' என்பர். நம்மாழ்வார் இப்படி பாடக் காரணம் உண்டு. ஒருமுறை, அவர் பெருமாளை எண்ணி தியானத்தில் ஆழ்ந்தார். தியானம் கலைந்து பார்த்தபோது, அவர் அமர்ந்திருந்த இடத்தில் பெருமாளின் திருமுடியைக் கண்டார். அவர் அமர்ந்திருந்த நிலையில், பாதமே முதலில் கண்களில் பட்டிருக்க வேண்டும். ஆனால், தன்னையே சுருக்கிக் கொண்டு, பெருமாள் கிரீட தரிசனம் காட்டியதால், ""முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?,'' என்று பாடிவிட்டார். நிஜமான பக்திக்கு ஆண்டவன் கட்டுப்படுவான் என்பதற்கு இந்நிகழ்ச்சி உதாரணம்

எவ்வளவு தான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் யாரும் வீணானதை பேசக்கூடாது

குருவின் முன் சீடர்கள் அடக்கத்தின் அடையாளமாக வாயைக் கையால் பொத்தி நிற்பதுண்டு. உயிரினங்களில் இயற்கையாகவே கையால் வாய் மூடி இருப்பது யானைக்கு மட்டுமே. இந்த தும்பிக்கை மூலம் விநாயகர் பெரிய தத்துவத்தை உணர்த்துகிறார். எவ்வளவு தான் கல்வி அறிவு பெற்றிருந்தாலும் "தொண தொண' என்று யாரும் வீணானதை பேசக்கூடாது. ஞானத்தின் அடையாளம் மவுனம் தான். வாயைத் திறந்தால், நல்ல விஷயங்கள் மட்டுமே வர வேண்டும். இதனால் தான் விநாயகரை "ஸுமுகர்' என்பர். இதற்கு "நல்ல வாயை உடையவர்' என்று பொருள். நல்ல விஷயங்களை பேசுபவர்களின் வீட்டில் எப்போதும் சுமூகமான நிலை இருக்கும். ஒரு இடத்தில் ஏதாவது பிரச்னை என்று வந்து விட்டால், சுமூகமான பேச்சு நடத்த வேண்டும். இல்லாவிட்டால் பிரச்னை பெரிதாகி விடும். ஞானத்தை அருளும் வித்யாகணபதியை வழிபட்டு வந்தால், நாம் இருக்கும் இடத்தில், சுமூகம் நிலவும்.

"ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன

"ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டால் என்ன?'' என்று சொல்வதைக் கேள்விப் பட்டிருப்பீர்கள். ராமாயணத்திலேயே இதற்கான நிகழ்ச்சி நடந்திருக்கிறது. சுக்ரீவன் தலைமையில் வானர வீரர்கள் ராவணனின் படைபலத்தைக் கண்டதும் தலைதெறித்து பின்வாங்கி ஓடுகின்றனர். இதைக்கண்ட அனுமன் திகைத்துப்போனார். வானர வீரர்களை அவர் பின்தொடர்ந்தார். அப்போது அவர்கள், ""இந்த நாட்டை ராமன் ஆண்டால் என்ன! ராவணன் ஆண்டால் நமக்கென்ன? நாம் ஏன் இவர்கள் இருவருக்கும் இடையில் சிக்கி போரில் ஈடுபட வேண்டும்?'' என்று பேசிக் கொண்டனர். இதையறிந்த ராமன் அனுமனிடம், வானரக்கூட்டத்தை ஒன்று திரட்டி அவர்களின் பயத்தைப் போக்கும்படி கூறினார்

உடல் நன்றாக இருக்கும்போதே, நாராயணனைச் சரணாகதி அடைய வேண்டும்

உடம்பும் ஒருவீடு தான். மாமிசம், ரத்தத்தினால் ஆன சுவர்களை, எலும்பு என்னும் தூண்கள் தாங்கி நிற்கின்றன. முடி, ரோமம் என்னும் கூரையினால் இந்த வீடு வேயப்பட்டிருக்கிறது. சாதாரண வீட்டிற்கு வாஸ்து சாஸ்திரப்படி தலைவாசல், கொல்லைப்புறம் என்று இரு வாசல்களை வைப்பர். ஆனால், உடலுக்கோ ஒன்பது வாசல். கடவுள் இந்த வீட்டிற்குள், உயிர் என்னும் ஜீவாத்மாவைக் குடி வைத்ததோடு, தானும் உடன் தங்கியிருக்கிறார். ஆனால், மனிதன் வீடு கட்டிக் கொடுத்த அவரை மறந்துவிட்டு, வீடு மட்டும் தனக்குச் சொந்தமானது என்று நன்றி இல்லாமல் வாழ்கிறான். உடல் நன்றாக இருக்கும்போதே, நாராயணனைச் சரணாகதி அடைய வேண்டும் என்று நமக்கு வழிகாட்டுகிறார் திருமங்கையாழ்வார். ""ஒருவனுக்கு வயதாகி விட்டால் பேச்சு போய் விடும். தளர்ச்சியால் பெருமூச்சு வாங்கும். கண்கள் பஞ்சாகி விடும். ஸ்ரீரங்கத்தில் துயிலும் ரங்கா! இப்போதே உன்னருள் கிடைக்க இரக்கம் காட்டமாட்டாயா!'' என்று பிள்ளைப்பெருமாள் அய்யங்காரும் உலகவாழ்வின் நிலையாமையைச் சொல்லி ரங்கநாதரை உதவிக்கு அழைக்கிறார்.

பணம் கிடைக்கிற நல்ல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

தெனாலிராமன் சிறுவனாக இருந்த காலத்திலேயே சிறந்த காளி பக்தராக விளங்கினார். இதுகண்டு மகிழ்ந்த காளிதேவி அவர் முன் தோன்றினாள். சிறுவன் தெனாலிராமனிடம், ""இதோ! உனக்கு பால்சோறும், தயிர்சோறும் கொண்டு வந்திருக்கிறேன். பால்சோறு சாப்பிட்டால் அறிவு வளரும். தயிர்ச்சாதம் சாப்பிட்டால் செல்வவிருத்தி ஏற்படும். இப்போது சொல். உனக்கு எது வேண்டும்?'' என்றாள். தெனாலிராமன் அதிபுத்திசாலி. ""அம்மா! இரண்டையும் ருசி பார்க்கிறேன். எது பிடித்திருக்கிறதோ அதைச் சாப்பிடுகிறேனே!''. அவர் என்ன செய்யப்போகிறார் என காளிக்குத் தெரியாதா என்ன! சிரித்தபடியே கிண்ணங்களை நீட்டினாள். அவள் எதிர்பார்த்தது போலவே, இரண்டு கிண்ணத்தில் உள்ளதையும் மாறி மாறி சாப்பிட்டு, ருசிபார்ப்பது போலவே காலி செய்தார் தெனாலி. பணம் சும்மா வராது! கிடைக்கிற நல்ல சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

எந்தச் செயலைச் செய்தாலும் "கிருஷ்ணார்ப்பணமாக' செய்ய வேண்டும்

கிருஷ்ணர் ஒருமுறை காட்டுவழியே சென்றார். வழியில் மகரிஷிகள் ஜபம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் கைகள் மேலும் ஜபமாலையை நகர்த்தாமல் அப்படியே நின்று விட்டது. சில ரிஷிகள் யாக சாலையில் "ஸ்வாஹா' மந்திரம் சொல்லி நெய்யை அக்னியில் சேர்த்துக் கொண்டிருந்தனர். அவர்களும் பொம்மையைப் போல அப்படியே கையைத் தூக்கியபடியே அசைவற்றுப் போயினர். ஜபம்,தவம் போன்ற ஆன்மிகச் சாதனை எல்லாம் பரம்பொருளான கிருஷ்ணரை அடைவதற்காகத் தான். கடவுளையே நேரில் கண்ட பின், இவை எல்லாம் எதற்கு என்று அந்த ரிஷிகள் ஆனந்தத்தில் மெய் மறந்து விட்டதே இதற்குக் காரணம். பத்து அஸ்வமேதயாகம் செய்த பாக்கியசாலி கூட மீண்டும் பிறவி எடுக்க வாய்ப்புண்டு. ஆனால், கிருஷ்ணரை வணங்கியவர்க்கு மீண்டும் பிறவி உண்டாகாது என்பது இந்த சம்பவம் மூலம் நிரூபிக்கப்படுகிறது. இதனால் எந்தச் செயலைச் செய்தாலும் "கிருஷ்ணார்ப்பணமாக' செய்ய வேண்டும் என்று சொல்வர்

வாழ்வில் எவ்வளவு கொடிய பிரச்னையாக இருந்தாலும் உடனடியாகத் தீர, நரசிம்மரை சுவாதியன்று வணங்கினால் போதும்

பஞ்சபூதங்களில் ஒன்றான காற்றுக்கு அதிபதி "வாயு'. வேகமாகச் செல்வதில் நிகரற்றது காற்று. "வாயுவேகம் மனோவேகம்' என்று சொல்வர். இதயத்தில் எதை நினைத்தாலும், அந்தக் கணமே மனம் அங்கு சென்றுவிடும். ஆஞ்சநேயருக்கு "மாருதி' என்ற பெயருண்டு. இதற்கு "வாயுவின் பிள்ளை' என்று பொருள். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு ஒரு அதிதேவதை உண்டு. இதில் சுவாதிக்குரியவராக இருப்பவர் வாயு. பிரகலாதனுக்கு ஆபத்து நேர்ந்த சமயத்தில் இரண்யனிடம் இருந்து காப்பதற்காக புயலைப் போல பறந்து வந்தவர் நரசிம்மர். எனவே அவருக்குரிய நட்சத்திரமாகவும் சுவாதி அமைந்தது. வாழ்வில் எவ்வளவு கொடிய பிரச்னையாக இருந்தாலும் உடனடியாகத் தீர, நரசிம்மரை சுவாதியன்று வணங்கினால் போதும். அருள்புரிய பறந்து வருவார்.

பிள்ளையாருக்கென்று ஏகப்பட்ட கோயில்கள் கட்டி வைத்திருப்பதும் தமிழ்நாட்டில் தான்

கலாசாரத்தில் பாஷை (மொழி) மிக முக்கியம். அதை வைத்துத்தானே சமய சம்பந்தமான நூல்கள், அறிவை வளர்த்துக் கொள்ளும் நூல்கள், மனசுக்கு விருப்பமான மற்ற கதை, கவிதை, காவியம் எல்லாமே? அப்படியிருக்கப்பட்ட தமிழ் பாஷைக்கு விக்னேஷ்வரர் ரொம்ப முக்கியம். எது ஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு சாமான் லிஸ்ட் எழுதினால் கூட சரி, முதலில் என்ன பண்ணுகிறோம்? "பிள்ளையார்சுழி' என்று தானே போடுகிறோம். எடுத்துக் கொண்ட காரியம் சுழித்துப் போகாமல் ரக்ஷித்துக் கொடுப்பதற்காக (காப்பாற்றுதல்) முதலில் பிள்ளையார்சுழி!
பிள்ளையார்சுழி என்ற அர்த்தத்தில், சம்ஸ்கிருதம் உள்பட இந்த தேச பாஷைகளில் வேறே எதிலும், இப்படி மங்களாரம்ப சிம்பலாக ஒன்று இல்லை. இது நம் தமிழ்மொழியின் பாக்கியம். பிள்ளையாருக்கென்று ஏகப்பட்ட கோயில்கள் கட்டி வைத்திருப்பதும் தமிழ்நாட்டில் தான். வேறு எந்த சுவாமிக்கும் இல்லாத அளவுக்கு பிள்ளையாருக்குத் தான் மூலைக்கு மூலைகோயில்! காணாபத்யத்துக்கு (விநாயகர்வழிபாட்டிற்கு) மகாராஷ்டிரம் தான் ராஜதானி(தலைநகர்) என்று சொல்வார்கள். ஆனால், கோயில் கணக்கு பார்த்தால் அது, தமிழ்நாட்டுக்கு ரொம்பவும் பின்தங்கி, எங்கேயோ தான் நிற்கும்.

ஐப்பசியில் தீபாவளி கொண்டாடுவது ஏன்?

இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக இருக்க வேண்டும் என்று சொல்வதுண்டு. தராசுக்கு துலாக்கோல் என்று பெயர் உண்டு. தீபாவளி கொண்டாடப்படும் ஐப்பசிக்கு "துலா மாதம்' என்று பெயர். தராசு எப்படி நடுநிலையாக தன் முள்ளைக் காட்டி நிற்குமோ, அதுபோல தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்ற பேதம் இல்லாமல்,எவன் இருக்கிறானோ அவனே நீதிமான். அதனாலேயே நீதிமன்றங்களில், நீதியின் சின்னமாக தராசை வைத்திருக்கிறார்கள். தீபாவளி நன்னாள் நீதியை எடுத்துச்சொல்கிறது. பெற்ற மகன் என்றும் பாராமல், அநியாயம் செய்த நரகாசுரனை திருமாலும், சத்தியபாமாவும் இணைந்து அழித்தனர். இந்த நீதியும், மனஉறுதியும் அனைவரிடமும் ஏற்பட வேண்டும் என்பதே தீபாவளித் திருநாள் நமக்கு உணர்த்தும் பாடம்.

ஒளித்திருநாள்

ஒளித்திருநாள்

தீபாவளி ஒளிநிரம்பிய விழா. வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கு வழிகாட்டும் விழா. இருள் உள்ள இடத்தில் ஒளி ஏற்றினால் இருள் அகன்று விடுவது இயல்பான ஒன்று. அதை குறிப்பால் உணர்த்துவது மட்டுமல்லாமல் அக இருள் (மன இருள்) அகல்வதற்கு பாதை போடுகிறது. புத்தாடை அணிந்து, பலகாரம் சாப்பிட்டு, பட்டாசு வெடித்து, உறவினர்களைச் சந்தித்து உற்சாகம் கொள்ளும் விழாவாக தீபாவளியைக் கருதிவிடக் கூடாது. நம் மேல் நாம் வைக்கும் அன்பைப்போல, நாம் பிறர் மேல் வைக்கும் அன்பும், பண்பும், பாசமும் தூய்மையானதாக இருக்க வேண்டும். நம்மை விடப் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு, நாம் உதவும் விழாவாக தீபாவளி இருக்க வேண்டும்

எண்ணெய் தேய்த்துக் குளியுங்க!

தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் சுத்தமாக இருக்க வேண்டும். அது வெந்நீராக இருப்பது அவசியம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதில் தனிச்சிறப்பு இருக்கிறது. தீபாவளியன்று நம் வீட்டில் இருக்கும் எண்ணெயில் திருமகளாகிய மகாலட்சுமி வாசம் செய்கிறாள். சாதாரணமாக எண்ணெய் தலையைக் கண்டால் அபசகுனம் என சொல்வோம். ஆனால், தீபாவளி நாளில் எண்ணெயில் லட்சுமி இருப்பதால் செல்வச்செழிப்பு ஏற்படும்.

தண்ணீரில் கங்கை

தீபாவளியன்று நாம் குளிக்கும் நீரில் கங்கை தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்கிறாள். அதனால் கங்கையில் குளித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும். இதனால் தான் தீபாவளி குளியலை "கங்கா ஸ்நானம்' என்று சொல்கிறார்கள். முற்றும் துறந்த துறவிகளுக்கும் கூட அன்று எண்ணெய் குளியல் உண்டு. கங்கா ஸ்நானத்தால் நம் பாவங்கள் முழுமையாகத் தொலைகின்றன


நரகாசுரனின் நிஜப்பெயர்

நரகாசுரனின் உண்மைப் பெயர் பவுமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. "நரன்' என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நரகஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே "நரகாசுரன்' என்றானது
 
நரக சதுர்த்தி
 
கிருஷ்ணர் ஐப்பசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று, இரவு முழுவதும் விழித்திருந்து அதிகாலை வேளையில் நரகாசுரனைக் கொன்றார். நரகாசுரன் கொல்லப்பட்ட சதுர்த்தசி என்பதால் இவ்வேளை நரக சதுர்த்தசி எனப்படுகிறது. சிவராத்திரி சைவத்திற்கு உரிய நாள். நரக சதுர்த்தசி வைணவத்திற்குரிய நாள். இதனால் சதுர்த்தசி திதிகளில் சிவன், பெருமாள் இருவரையும் வழிபட வேண்டும்.
 

காஞ்சிபெரியவரின் மாணவர்

காஞ்சி மகாபெரியவர் ஒருநாள் காமாட்சி அம்பாள் சந்நிதி தெருவில் பவனி வந்து கொண்டிருந்தார்.
அப்போது, ஒரு முதியவர் அவரைத் தரிசிக்க வீட்டு வாசலில் நின்றார். பெரியவர் அவரிடம்,""ஏம்ப்பா! ராமச்சந்திரா! உன்னுடைய ஆறு பிள்ளைகளும் சவுக்கியமா?'' என்றார்.
அந்த முதியவர் மகாபெரியவரின் மாணவர். பெரியவரிடம் வேதம் படித்த பெருமை அவருக்குண்டு. மகாபெரியவர் தன்னிடம் இவ்வாறு கேட்டதும் அவர் அசந்து விட்டார். அத்துடன், அவரது இளமைக்கால நினைவுகளும் மனதுக்குள் புரளத் துவங்கின. அதுபற்றி அவரே சொல்கிறார்.
""1938ல் பிறந்த எனக்கு 11 வயதில் உபநயனம். கீழம்பி என்ற இடத்திலுள்ள வேத பாடசாலையில் படிப்பு... இந்தியாவின் தலைசிறந்த வேத ஆசிரியர்களான பண்டிதர் வேப்பத்தூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள்,சிதம்பரம் ரங்கநாத சாஸ்திரிகள்,போலகம் ராமா சாஸ்திரிகள், சிதம்பரம் ரங்கநாத சாஸ்திரிகள், ஆந்திரா மண்டலி வெங்கடேச சாஸ்திரிகள், எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் ஆகியோரிடமெல்லாம் பாடம் படித்தேன். ஆனால், இதையெல்லாம் விட, காஞ்சிபுரத்திலுள்ள ஓரிக்கை
கிராமத்தில் மகாபெரியவர் சந்திர சேகரேந்திர மகா சுவாமிகளிடம் "பர்த்ருஹரி' (வைராக்கிய சதகம்) என்னும் பாடம் படித்தேனே!அதுதான் ஹைலைட்,''என்றார்.,
""பெரியவரிடமே பாடம் படித்த பெருமைக்குரியவர் தான் நீங்கள். ஆம்..உங்கள் குழந்தைகளைப் பற்றி பெரியவர் ஏதோ சொன்னாரே! அதுபற்றி சொல்லுங்க@ளன்,' 'என்றதும், ""நான் பெரியவரின் மாணவர் என்பது மட்டுமே அவருக்கு தெரியும்.
மற்றபடி, எனது குடும்பம் பற்றி பெரியவருக்கு தெரியாது. எனக்கு நான்கு மகன்கள், இரண்டு மகள்கள். இப்படி ஆறு பேர் இருப்பது பெரியவருக்கு எப்படி தெரிந்தது? அவர்களை நலம் விசாரிக்கிறாரே! அவர் தெய்வப்பிறவி என்பதால் தான், நமக்குள் நடக்கும் எல்லா விஷயங்களும் அவருக்குத் தெரிகின்றன,' 'என்று வியந்தார்.
இந்த முதியவரின் பெயர் ராமச்சந்திர சாஸ்திரிகள். இவரது குடும்பம் "நீலக்கல்' வகையறாவைச் சேர்ந்தது. நீலக்கல் என்பது
மன்னர் காலத்திய பட்டம். இவரது முன்னோர்களில் ஒருவரான முத்துசுவாமி சாஸ்திரிகளின் துணைவி தர்மசம்வர்த்தினி அம்மையார், சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகளின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
ஐம்பது ஆண்டுகளாக காமாட்சியம்மனுக்கு சேவை செய்து வருகிறார்.
ஒருமுறை, மகாபெரியவர் இவரை அழைத்து, ""உன் வம்சத்தின் பெயருக்கேற்ப, காமாட்சியம்மன் கோயில் தங்க விமானத்தில் ஒரு நீலக்கல் வை,'' என்றார். ராமச்சந்திர சாஸ்திரிகளும் அவ்வாறே செய்தார். கோயில் ஆபரணக் கொட்டடிக்கு (பொக்கிஷம்) ஐந்து சாவிகள் உண்டு. இதில் இரண்டு இவரது பொறுப்பில் இருக்கிறது.

கந்தசஷ்டி ஏன்?

கஷ்யப முனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன், தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள், இரண்டாயிரம் கைகள். சூரபத்மனுக்கு அசுரமுகம். தாரகனுக்கு யானைமுகம். சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கித் தவமிருந்தனர். தவப்பயனாக 1008 அண்டங்களையும் ஆட்சிசெய்யும் வரம் பெற்றனர்.
சூரியன், சந்திரன், அக்னிதேவன், குபேரன் முதலிய தேவர்கள் அனைவரும் அசுரர்களின் பணியாளர்களாக மாறினர். தேவர்கள் பிரம்மாவிடம் சென்று தங்கள் நிலையைச் சொல்லி வருந்தினர். ""சூரபத்மனை அழிக்க சிவனால் மட்டுமே முடியும். அதனால் அவரிடம் முறையிட்டால் விடுதலை கிடைக்கும்,'' என்றார் பிரம்மா. தேவர்களும் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அவருக்கு சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், ஈசானம், அகோரம், அதோமுகம் ஆகிய ஆறு முகங்கள் உண்டு. அவற்றில் இருந்து ஆறுநெருப்புப் பொறிகளை உண்டாக்கினார். அவை சரவணப்பொய்கையில் விழுந்து குழந்தைகளாக மாறின. அவற்றை ஒன்று சேர்த்த போது கந்தன் ஆனார். இவர் சூரபத்மனை வெற்றி கொண்டு தேவர்களைக் காத்தார். ஐப்பசி சஷ்டிதிதியில் சூரசம்ஹாரம் நிகழ்ந்ததாக ஐதீகம்.

முருகனின் மந்திரம்!

நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் முருகனின் பிறப்புக்கு கருவாக அமைந்ததால் அவர் "அக்னிகர்ப்பன்' எனப்பட்டார். அப்பொறிகள் கங்கையில் தவழ்ந்ததால் "காங்கேயன்' என்ற பெயர் வந்தது. சரவணப்பொய்கையில் வளர்ந்ததால் "சரவணபவன்' எனப்பட்டார். இதுவே முருகனுக்கு மந்திரப்பெயராக விளங்குகிறது. பக்தர்கள் ஆறெழுத்து மந்திரமான "ஓம் சரவணபவ' என்று ஜெபிப்பர். குழந்தைவடிவில் இருந்த ஆறுகுழந்தைகளை வளர்க்கும் பணியில் கார்த்திகைப்பெண்கள் ஈடுபட்டனர். அவர்களின் பெயரால் முருகனுக்கு "கார்த்திகேயன்' என்ற பெயர் ஏற்பட்டது. பிள்ளையைக் காண வந்த பார்வதி அன்போடு குழந்தைகளை ஒன்று சேர்த்து அணைத்து மகிழ்ந்தாள். ஆறுமுகமும் ஒன்றாகி

தெய்வங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு பெயர் வைக்கிறார்களா?

தெய்வங்களிடம் இருக்கும் ஆயுதங்களைக் குழந்தைகளுக்கு இடும் வழக்கம் இல்லை. சூலம், உடுக்கை, ஈட்டி என்று யாராவது பெயர் வைக்கிறார்களா? ஆனால், முருகனின் வெற்றி வேலைச் சிறப்பிக்கும் விதத்தில், வெற்றிவேல், கதிர்வேல், தங்கவேல், சக்திவேல்,வடிவேல், முத்துவேல், வேலாயுதம் என்று பெயரிடுகிறார்கள். கச்சியப்ப சிவாச்சாரி யார் கந்தபுராணத்தில் முருகனை வணங்கும்போது, ""திருக்கைவேல் போற்றி போற்றி!'' என்று ஒருமுறைக்கு இருமுறை போற்றுகிறார். முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதைப் போல வேலுக்கும் ஆறு முகங்கள் உண்டு.

வள்ளிக்கு தாமரையும், தெய்வானைக்கு குமுத மலரும்

முருகன் சிவந்தமேனியுடன், கையில் வேல் தாங்கியிருப்பார். வலதுபக்கம் வள்ளியும், இடப்புறம் தெய்வானையும் காட்சியளிப்பர். சூரியன் முருகனின் வலக்கண்ணாகவும், சந்திரன் இடக்கண்ணாகவும் உள்ளது. சூரியனைக் கண்டு தாமரை மலரும். சந்திரனைக் கண்டு நீலோத்பலம் என்னும் குமுதமலர் மலரும். அதனால், சித்திரம் தீட்டும்போது வலப்புறம் இருக்கும் வள்ளிக்கு தாமரையும், இடப்புறம் இருக்கும் தெய்வானைக்கு குமுத மலரும் வரைய வேண்டும். முருகனின் பார்வையால் இம்மலர்கள் மலர்வதைப் போல பக்தர்களின் வாழ்வும், எப்போதும் மலர்ந்திருக்கும்

முருகா'' என்ற பெயரை மனதால் நினைத்தாலும், உள்ளம் உருகிச் சொன்னாலும்இனிமையான வாழ்வு அமையும்

தமிழ் எழுத்துகள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்றாகும். மெல்லினம் மென்மையும், இனிமையும் மிக்கது. மெல்லினத்தை முதலில் வைத்து, இடையின, வல்லின எழுத்தை அதன் பின் அமைத்து உண்டான பெயர் முருகு. "முருகா' என்ற பெயருக்கு தெய்வத்தன்மை, அழகு, இளமை, மகிழ்ச்சி, மணம், இனிமை என்னும் ஆறுபொருள்கள் உண்டு. முருகனின் பெயர்களில் முருகன், குமரன், குகன் ஆகிய மூன்றும் சிறப்பு மிக்கவை. இதனை அருணகிரிநாதர், ""முருகன், குமரன், குகன் என்று மொழிந்து உருகும் செயல் தந்து உணர்வென்று அருள்வாய்,'' என்று கந்தரநுபூதியில் குறிப்பிட்டுள்ளார். ""முருகா'' என்ற பெயரை மனதால் நினைத்தாலும், உள்ளம் உருகிச் சொன்னாலும்இனிமையான வாழ்வு அமையும்.

"குறிஞ்சிக்கிழவன்-- முருக'ன்

சிவபெருமானின் இளைய பிள்ளையான முருகனை "குமரன்' (இளைஞன்) என்று சொல்லி தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்பெருமானுக்கு "குறிஞ்சிக்கிழவன்' "தமிழ்க்கிழவன்' என்ற பெயர்கள் உண்டு. "கிழவன்' என்றால் "உரிமை கொண்டவன் அல்லது தலைவன்' என்று பொருள். தமிழ் மொழிக்கு உரியவன் என்பதால் தமிழ்க்கிழவன் என்றும், மலைக்கு உரிய தெய்வமாக விளங்குவதால் குறிஞ்சிக் கிழவன் என்றும் பெயர் பெற்றார்.

பாதுகாப்பு தரும் மந்திரம்

விநாயகர், சுப்பிரமணியர், சிவன், விஷ்ணு என எல்லா தெய்வத்திற்கும் தனித்தனி காயத்ரி (மந்திரம்) உண்டு. 24 எழுத்துக்களைக் கொண்ட மந்திரம் மூன்று பாதங்களைக் கொண்டது. ஒவ்வொரு பாதத்திலும் எட்டுஎழுத்துக்கள் இருக்கும். முதல் பாதத்தில் தெய்வத்தின் பெயரைச் சொல்லி, "அப்படிப்பட்டவரை அறிவோம்' என்றும், இரண்டாம் பாதத்தில் தெய்வத்தின் வேறொரு பெயரைச் சொல்லி "அவரை தியானிப்போம்' என்றும், மூன்றாம் பாதத்தில் "அவர் நம்மை நல்லவழியில் தூண்டட்டும்' என்றும் வரும். எந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தைத் தொடர்ந்து ஜெபிக்கிறோமோ, அந்த தெய்வத்தின் அருட்சக்தி நம்மைக் கவசம் போல எப்போதும் பாதுகாத்து நிற்கும்.

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை ஏன்

ஆஞ்சநேயருக்கு துளசிமாலை, வெற்றிலைமாலை,வடைமாலை சாத்தி வழிபடுவர். இதில் வெற்றிலை மாலை சாத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது ஐதீகம். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளுங்கள். ராவணனோடு யுத்தம் செய்த ராமர் முடிவில் வெற்றி பெற்றார். இச்செய்தியை அசோகவனத்தில் இருக்கும் சீதைக்குத் தெரிவிக்க புறப்பட்டார் ஆஞ்சநேயர். அந்தச்செய்தி சீதையின் காதில் தேனாகப் பாய்ந்தது. மகிழ்ச்சிப் பெருக்கில் அவருக்கு பரிசளிக்க விரும்பினாள். அவள் அமர்ந்திருந்த இடத்தில் வெற்றிலைக் கொடி படர்ந்திருப்பதைக் கண்டாள். அந்த கொடியைப் பறித்து விட்டு, ""நல்ல செய்தி சொல்லவந்த உனக்கு இந்த வெற்றிலை மாலையைப் பரிசாக அளிக் கி றேன். ஏற்றுக் கொள்!'' என்றாள். அன்னை யின் கையால் கிடைத்த மாலையை ஏற்றுக்கொண்ட ஆஞ்சநேயர் மகிழ்ந்தார். இதன் அடிப்படையில் பக்தர்கள், தங்கள் செயல்களில் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்தும் வழக்கம் உள்ளது.

ராமகிருஷ்ணர் சாப்பிட்ட இனிப்பு

ராமகிருஷ்ண பரமஹம்சர் எப்போதும் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். தியானம் கலைந்து எழுந்தவுடன், ஜிலேபி உண்பது அவரது வழக்கம். இதைக் கண்ட சிலர், "ஆன்மஞானம் பெற்ற இவருக்கு ஏன் இப்படி ஒரு விநோத ஆசை ஏற்பட்டது?' என்று ஆச்சரியப்பட்டனர். அவர்களின் சந்தேகம் தீர, ராமகிருஷ்ணர் பதிலளித்தார். ""எனக்கும் இந்த உலகிற்கும் உள்ள ஒரே தொடர்பு உணவு மட்டும் தான். உணவு என்ற இந்த ஒரே ஒரு ஆசையை மட்டும் விட்டு விலகி விட்டால் இறைவனோடு ஐக்கியமாகி விடுவேன். அப்படி நான் மறைந்து போனால், ஆழ்நிலை தியானத்தில் எனக்கு கிடைக்கும் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியாமல் போய்விடும். அதனால், தியானத்தில் அமரும் முன் ஜிலேபி சாப்பிடவேண்டும் என்று எண்ணிக் கொண்டு அமர்ந்து விடுவேன். தியானம் செய்யும் போதும், ஜிலேபி ஆசை என்னை விடாது தொடரும். அதனால், முக்திக்குச் செல்லமுடியாமல் மீண்டும் இங்கேயே வந்து விடுவேன்,'' என்றார்.

தந்தை சொல்லை பிள்ளைகள் கேட்க வேண்டும்

ஒருகாலத்தில், அப்பாவைக் கண்டால் பிள்ளைகள் நடுநடுங்குவார்கள். பணிக்குச் சென்றுவிட்டு, தன் கணவர் வீடு திரும்பும் முன், அம்மா பிள்ளைகளை "அலார்ட்' செய்து விடுவாள். ""டேய்! எல்லாரும் படியுங்க! அப்பா வர்ற நேரம். அங்கே இங்கேன்னு கூச்சல் போட்டுகிட்டு திரிஞ்சா முதுகுத்தோல் பிய்ஞ்சிடும்'' என்று பயமுறுத்துவாள். பிள்ளைகளும் "கப்சிப்' ஆகி விடுவார்கள்.
"ஆனால்... இன்று...' கலியுகதர்மம் வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. இவர் ஆபீஸ், வேலை, வெளிநாடு, உள்நாடு என சுற்றிவிட்டு ஞாயிற்றுக்கிழமை தான் வீட்டுக்கு வருவார். அவரைப் பார்க்கிற குழந்தை, ""அம்மா! இந்த மாமா யாரும்மா! அடுத்த தடவை வரும்போது சாக்லெட் வாங்கிட்டு வரச்சொல்லு' என்கிறது. நிலைமை தலைகீழாகி விட்டது.
வேலைக்குப் போகிறோம் என்ற பெயரில், குழந்தைகளுடன் ஒட்டுதல் இல்லாமல் போய்விட்டது. அன்றைய தினம் இதை விடக் கடுமையான வேலைகளைப் பார்த்தாலும் கூட, அப்பாவுக்கு குடும்பப்பொறுப்பு இருந்தது. ஒரு குழந்தை படிப்பில் முன்னேறவும், வாழ்க்கை என்னும் வானத்தில் சிறகடித்து பறக்கவும் இரண்டு இறக்கைகள் தேவை. ஒன்று தாய், இன்னொன்று தந்தை. ஆனால், இறக்கை இல்லாத பறவையாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள் நமது குழந்தைகள்.
தந்தையின் கடமை உணர்ச்சிக்கு ஒரு சம்பவத்தைக் கேளுங்கள். வங்காளத்தில் தோன்றிய அவதார புருஷர் ஸ்ரீசைதன்யர். இவரைப் படிக்க வைக்க வேண்டும் என்பது அவரது தந்தை மிஸ்ராவின் விருப்பம். சைதன்யருக்கோ படிப்பில் ஆர்வமில்லை. இதனால், பிள்ளையை திட்டிக்கொண்டே இருப்பார். ஒருநாள், கனவில் ஒரு மகான் தோன்றினார்.
""மிஸ்ரா, குழந்தையைத் திட்டாதே. அவன் ஒரு மகானாகப் போகிறவன். கல்வி அவனுக்குத் தேவையில்லை,'' என்றார்.
அதற்கு பதிலளித்த மிஸ்ரா,""சுவாமி! நீங்கள் பெரிய மகானாக இருக்கலாம், என் பிள்ளையும் பிற்காலத்தில் மகானாக மாறலாம். ஆனால், இன்று தந்தை என்ற நிலையில், என் கடமையைச் செய்தாக வேண்டும். அவன் படிக்க வேண்டும்,'' என பதிலளித்தார். மிஸ்ராவின் கடமை உணர்ச்சியை அந்த மகான் பாராட்டினார். அத்துடன் கனவு கலைந்து விட்டது. பிற்காலத்தில், தந்தையின் கடமையுணர்வால், மக்காக இருந்த ஸ்ரீசைதன்யரும் படித்து ஆசிரியர் பணியில் இணைந்தார். சிறுவயதில் தான் செய்த தவறுகளை மனதில் வைத்து, மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். அனைவரும் பாராட்டும்படியான நிலையைப் பெற்றார். மகானாகவும் மாறினார்.
தந்தை சொல்லை பிள்ளைகள் கேட்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் பெற்றவர்களுக்கும் கவனம் வேண்டும். சரிதானே!

ஒருவருக்கு ஏழரைச்சனி முடிந்த பிறகும் எள்தீபம் ஏற்றி வழிபடலாமா?

* ஒருவருக்கு ஏழரைச்சனி முடிந்த பிறகும் எள்தீபம் ஏற்றி வழிபடலாமா?
செய்வதானால் ஒன்றும் தவறில்லை. நமக்காக இல்லாவிட்டாலும் பொதுவாகக் குடும்பத்தாருக்காக தொடர்ந்து எள்தீபம் ஏற்றி வழிபடலாம்

தெய்வங்களுக்கு உகந்த மலர்கள் யாவை? எந்த தெய்வத்திற்கு எந்த மலர் சூட்ட வேண்டும்?
எருக்கு, செண்பகம், கொன்றை, நந்தியாவர்த்தம், மல்லிகை, காக்கரட்டை, அரளி, பவழமல்லி, மகிழம்பூ, செம்பருத்தி, தாமரை, அல்லி, மருதோன்றிப்பூ, வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மருள் ஆகியவை உகந்தவை. விநாயகருக்கு எருக்கு, அருகம்புல், முருகனுக்கு அரளி, மல்லிகை, சிவனுக்கு வில்வம், விஷ்ணுவுக்கு துளசி,பவழமல்லி, அம்மனுக்கு எருக்கு நீங்கலாக மற்ற பூக்கள் சிறப்பானவை. சிவனுக்கு செம்பருத்தி கூடாது.

சபரிமலை செல்லும்போது பம்பை நதிக்கரையில்திதி கொடுக்கலாமா?
புண்ணிய நதிக்கரையில் திதி கொடுப்பது விசேஷமானது. பம்பை நதிக்கரையில் தாராளமாகத் திதி கொடுக்கலாம்.

.

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்

 குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தைக் கூறுங்கள்?
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குலதெய்வ வழிபாட்டின் முக்கிய குறிக்கோள். குழந்தைகளுக்கு முடிஎடுப்பது, காது குத்துவது, திருமணப்பட்டுப்புடவை, திருமாங்கல்யம் போன்றவற்றை வைத்துக் குலதெய்வபூஜை செய்வது, நாமும் நம் குலமும் (எதிர்கால சந்ததி) தழைக்கச் செய்யப்படுவதாகும்.

ராசிக்கல்மோதிரம் அணிந்தால் வாழ்க்கை உயருமா?
ராசிக்கல் என்ன என்பதைப் பற்றியும், அதை அணிவதால் என்ன பலன் என்பது பற்றியும் சாஸ்திர நூல்களில் எதுவும் ஆதாரங்கள் இருப்பதாகத் தெரியவில்லை. புதிதாக வந்துள்ள செய்திகளைப் பற்றி கருத்து கூற விரும்பவில்லை.

சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?

** சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடலாமா?
தெய்வப்படங்களை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் தெய்வத்திடம் வரம் பெற்று நலமாய் வாழவேண்டும் என்பது. மகான்களின் படத்தை வீட்டில் வைத்து வழிபடுகிறோம். காரணம் ஏதாவது சூழ்நிலையில் நாம் தவறு செய்ய முற்படும்போது அவர்களின் அருளுரைகள் நம்மைத் தடுத்து நிறுத்துவதற்காக. 18 சித்தர்களும் மனிதநேயமே உருவாக வாழ்ந்தவர்கள். கண்ணுக்குத் தெரியாமல் இன்னும் வாழ்வதாகக் கூறுகிறார்கள். தமக்கென எதுவுமே செய்து கொள்ளாமல் பிறருக்குத் தொண்டு செய்வதையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள். அவர்களது கொள்கையைக் கடைபிடிக்க விரும்பினால் தாராளமாக சித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள். ஜோதிடம், வாஸ்து, பரிகாரம் என்று கூறி அவர்களைத் தாழ்த்தி விடாதீர்கள்.

அரச மரத்தை மாலையில் சுற்றக் கூடாது என்று சொல்வதன் பொருள் என்ன?

அரச மரத்தை மாலையில் சுற்றக் கூடாது என்று சொல்வதன் பொருள் என்ன?
.
சூரிய உதய காலத்தில் லட்சுமி நாராயணர் அரசமரத்தில் இருந்து அருள்கிறார். அந்த நேரத்தில் வலம் வந்தால் கேட்டது கிடைக்கும். பொதுவாக மரங்கள் பகலில் ஆக்சிஜனையும், இரவில் கார்பன் டை ஆக்ஸைடையும் வெளிப்படுத்தும் இயல்புடையவை. அதுவும் விடியற்காலையில் அரசமரம் வெளியிடும் பிராணவாயு உடலுக்கு மிகவும் நல்லது. மாலைநேரத்தில் இந்நிலை மாறிவிடுவதால் கூடாது என்றும் கூறுகின்றனர்.

புத்தாடைகளில் மஞ்சள் வைத்து உடுத்துவது ஏன்?
சுபநிகழ்ச்சிகளுக்குப் புத்தாடை அணியும்போது மங்களத்தின் சின்னமான மஞ்சளைத் தடவி அணிவது நம் மரபு.

இறைவனை வணங்கும்போது சிலர் கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குகிறார்கள். சிலர் கைகளைக் குவித்து முகத்திற்கு அருகில் வைத்து வணங்குகிறார்கள். எது சரியானது?

இறைவனை வணங்கும்போது சிலர் கைகளை தலைக்குமேல் தூக்கி வணங்குகிறார்கள். சிலர் கைகளைக் குவித்து முகத்திற்கு அருகில் வைத்து வணங்குகிறார்கள். எது சரியானது?
இரண்டுமே சரியானது தான். ஒரு விரலால் கன்னத்தில் தட்டிக் கொண்டும், ஆள்காட்டி விரலை மடக்கி வாயில் வைத்து "ச்' கொட்டியும் வணங்கும் இன்றைய நாகரிகத்தில், கைகளைக் கூப்பி வணங்குபவர்களை முதலில் நாம் வணங்கலாம். கரம் குவித்தல், சிரம் குவித்தல் என இரண்டையுமே மாணிக்கவாசகர் சிவபுராணத்தில் கூறுகிறார். தாங்கள் முதலாவதாகக் கூறியது சிரம் குவித்தலையும், இரண்டாவதாகக் கூறியது கரம்குவித்தலையும் சாரும். கரம் குவித்து வணங்கினால் சுவாமி சந்தோஷப்பட்டு கேட்டதைத் தருகிறார். சிரம் குவித்து வழிபட்டால் வாழ்க்கைத் தரத்தையே உயர்த்தி விடுவார். சிவபுராணத்தில், ""கரங்குவிப்பார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க; சிரங்குவிப்பார் ஓங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க'' என்று மாணிக்கவாசகர் பாடுகிறார்.

கல்வியில் சிறந்து விளங்க சொல்ல வேண்டிய மந்திரம் என்ன? அதன் பொருளையும் சொல்லுங்கள்.
பெற்றோர், ஆசிரியர்களின் அன்பும் ஆதரவும் நிறைந்த வார்த்தைகள் தான் முதல்நிலை. குழந்தைகளிடம் தன்னம்பிக்கை வளர கீழ்க்கண்ட மந்திரத்தையும் சொல்லிக் கொடுங்கள்.
""சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா''

பொருள்: எல்லா வரங்களையும் தந்தருளும் சரஸ்வதி தாயே! எனக்கு கல்வி அறிவைப் பெருகச் செய்வாயாக! உனக்கு நமஸ்காரம்.

அம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுப்பது ஏன்?

அம்மன் கோயில்களில் முளைப்பாரி எடுப்பது ஏன்?
தானியங்களை ஊற வைத்து முளைவிட்டு சிறிது வளர்ந்தபின் அதனை விழாக்காலங்களில் அம்மனுக்கு சமர்ப்பணம் செய்யவேண்டும். விழா நல்லமுறையில் நடந்தேறி அம்மன் சந்தோஷப்பட்டு முளைப்பாரியைப் போன்று பசுமையாக எல்லாப் பயிர்களும் விளைய மழை அருள்வதாக ஐதீகம். இதனை மந்திரப்பூர்வமாக அங்குரார்ப்பணம் என்று அர்ச்சகர்களும் செய்வார்கள்.

கடவுளை நேருக்குநேர் நின்று வணங்குவது அல்லது ஒருபக்கமாக நின்று வணங்குவது எது சரியானது?

கடவுளை நேருக்குநேர் நின்று வணங்குவது அல்லது ஒருபக்கமாக நின்று வணங்குவது எது சரியானது?
இறைவனுக்கு மூன்று கண்கள். இவற்றில் நெற்றிக்கண் நெருப்பு வடிவமானது. இந்த பார்வை நன்மை அளிக்காது. மற்றைய இரு கண்கள் சூரியசந்திர வடிவமானவை. இவை நன்மை பயக்கக்கூடியவை. தெய்வத்தின் கடைக்கண் பார்வை தான் நமக்கு வேண்டும். இதைத் தான் ""கடாக்ஷம்'' என்பர். ""கட'' என்றால் கடைசி. ""அக்ஷம்'' என்றால் கண். அதாவது, கடைக்கண் பார்வை. இது கருணையே வடிவமானது. சகல ஐஸ்வர்யங்களையும் தர வல்லது. அதற்காகத்தான் நேருக்குநேர் நின்று தரிசிக்காமல் பக்கமாக நின்று வழிபட வேண்டும்

வடக்கு நோக்கி தலை வைக்கக் கூடாதா?

வடக்கு நோக்கி தலை வைக்கக் கூடாதா?
தன் ஊரில் கிழக்கேயும், வேற்று ஊரில் மேற்கேயும் தலை வைத்துப் படுக்க வேண்டும் என்பது கிராமத்துப் பழமொழி. பொதுவாக இந்த நியதி சாஸ்திரங்களிலும் காணப்படுகிறது. ஆனால், தெற்கே தலை வைத்துப் படுப்பது, சில இடங்களில் காலங்காலமாக வழக்கத்தில் இருக்கிறது. வடக்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது. இது வீட்டுக்கு ஆகாது என்று சொல்வர். வடக்கில் காந்த ஈர்ப்பு சக்தி அதிகமுண்டு என்றும் அதனால், மூளை பாதிக்கப்படும் என்ற கருத்தும் இருக்கிறது. திசை காட்டும் கருவியின் முள் வடக்கு நோக்கி திசை காட்டுவது, அந்த திசையின் காந்த சக்தியால் தான்.

பெண்கள் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தலாமா?

பெண்கள் கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தலாமா?
பெண்குழந்தைக்கு ஏழுவயதுக்குள் முடியிறக்கும் வேண்டுதல்களை நிறைவேற்றி விட வேண்டும். முடியாத பட்சத்தில் ஒன்பது வயதுவரை செய்யலாம். அதற்குப்பிறகு பெண்கள் முடியிறக்குவது கூடாது. அதுவும் திருமணமான பெண்கள், சுமங்கலிகள் என்ற பெயர் பெற்று விடுவதால் கண்டிப்பாக முடியிறக்கக் கூடாது.

கும்பாபிஷேகத்தின் போது கோபுர கலசத்தில் வரகு தானியத்தைஏன் போடுகிறார்கள்?

** கும்பாபிஷேகத்தின் போது கோபுர கலசத்தில் வரகு தானியத்தைஏன் போடுகிறார்கள்?
கோபுரகலசம் தெய்வசக்தியை வரவழைக்கும் ஆற்றல் உடையது. மூலஸ்தானக் கருவறையில் இருக்கும் தெய்வ விக்ரஹத்தின் சக்தியானது இதன் மூலமே பெறப்படுகிறது. இக்கலசம் இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படாமல் இருக்க அதனுள் வரகு தானியம் இடப்படுகிறது. அதாவது மிக உயரத்தில் இருக்கும் உலோகத்தால் ஆன கோபுர கலசத்தை மின்னல், இடி போன்றவை தாக்கும் வாய்ப்புகள் அதிகம். வரகு, மின்னலின் சக்தியை செயலிழக்கச் செய்து விடும். இந்ததானியத்திற்கு இயற்கையாக இத்தன்மை உண்டு. கோபுரக்கலசங்களின் வாயிலாக அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கூட இடி தாக்காமல் பாதுகாக்கும்அரிய முறையினை நம் ஆன்றோர்கள் அக்காலத்திலேயே கண்டுபிடித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் இரு குழந்தைகள் இருந்தால் பரிகாரம் செய்ய வேண்டுமா?

ஒரே குடும்பத்தில் ஒரே நட்சத்திரத்தில் இரு குழந்தைகள் இருந்தால் பரிகாரம் செய்ய வேண்டுமா?
அப்படி எதுவும் சாஸ்திரங்களில் கூறப்படவில்லை. இது இயற்கையாக நிகழ்வது. நல்லதாகவே எடுத்துக் கொள்வோமே.

** பெரியவர்கள் ஆசிவழங்கும்போது அட்சதை போடுவது ஏன்?
.

அட்சய, அட்சத என்ற சொற்களுக்கு "குறைவில்லாதது' என்று பொருள். மணிமேகலையின் அட்சய பாத்திரம் எடுக்க எடுக்க குறையாதது. அரிசியில் மஞ்சள் பொடியைக் கலந்து அட்சதையாக்கி பெரியவர்கள் நம் மீது போட்டு வாழ்த்துவதால், வாழ்வில் எந்த குறைவும் ஏற்படாது

லலிதாசகஸ்ரநாம பாராயணத்தின் மகத்துவம்

* லலிதாசகஸ்ரநாம பாராயணத்தின் மகத்துவத்தைக் கூறுங்கள்.
ஓம் ஸ்ரீ மாத்ரே நம: என்னும் முதல் நாமாவளியே உயர்ந்தது தான். மாதா என்றால் அன்னை. தாய்க்கு நமஸ்காரம் என்பது இதன் பொருள். உரையாசிரியர்களின் உரையினால் சிறப்பு பெற்றவை இரண்டு. ஒன்று லலிதா சகஸ்ரநாமம். மற்றொன்று விஷ்ணுசகஸ்ரநாமம்.
பாஸ்கரராயர் என்பவரால் "ஸெளபாக்ய பாஸ்கரீ' என்னும் பெயரில் உரை எழுதப்பட்டது லலிதாசகஸ்ரநாமம். அவர் தமது உரையில் முதல் நாமாவளியாகிய ஸ்ரீமாதா என்பதற்கு மட்டுமே மிக விரிவாக உரை எழுதியுள்ளார். மாதா என்றால் தாய். ஸ்ரீமாதா என்றால் எல்லையில்லாக் கருணையுடைய தாய். ஆனால் உரையாசிரியர் பல பொருள் தரும் ஒரு சொல்லாக அதனைக் குறிப்பிடுகிறார். "ஸ்ரீ' என்பதற்கு அழகு, பெருமை, மகிமை, செல்வம், லட்சுமி என்னும் பொருள்களோடு விஷம் என்ற பொருளும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட விஷத்தால் பலர் மூர்ச்சையாயினர். எல்லோரும் சிவனைத் தஞ்சம் அடைந்தனர். அவர்களைக் காப்பாற்ற, விஷத்தைத் தானே விழுங்க முன்வந்தார் அவர். விஷத்தின் கொடுமையால் பெருமானது உடலிலும் வயிற்றிலும் உள்ள மற்ற உலகங்கள் பாதிக்கப்படுமே என்று அஞ்சினாள் உமாதேவி. தொண்டையிலேயே தடுத்து நிறுத்தி உயிர்களைக் காப்பாற்றினாள். ஸ்ரீ என்றால் விஷம். "மாதி' என்றால் தடுத்து நிறுத்தியவள் என்று பொருள். இலக்கணக் குறிப்புகளால் ஸ்ரீமாதி என்பதே "ஸ்ரீமாதா'வாகி நாமாவளியில் நான்காம் வேற்றுமையாக "ஸ்ரீமாத்ரே நம:' என்றாகியது என்று அவரது உரையில் உள்ளது. எனவே, லலிதா சகஸ்ர நாமாவளிகளில் எல்லாமே உயர்ந்தவை தான். எப்போது வேண்டுமானா<லும் பாராயணம் செய்யலாம். இதனால் வாழ்வில் எல்லா சவுபாக்கியங்களும் கிட்டும்.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்?

 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவது ஏன்?
.
ஆண்டுதோறும் பொங்கல் வருகிறது. வீட்டைச் சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கொண்டாடுகிறோம். அதுபோல, கடவுள் குடியிருக்கும் கோயிலை 12 ஆண்டுக்கு ஒருமுறையாவது சுத்தம் செய்து வர்ணம் தீட்டி கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்கிறார் காஞ்சிப்பெரியவர். சுவாமி பீடத்தில் சாத்தப்படும் அஷ்டபந்தனமருந்து 12 ஆண்டுகளில் வலிமை இழந்து கரையத் தொடங்கிவிடும். எனவே, புதிதாக மருந்து சாத்தி, திருப்பணிகளையும் செய்துவிட்டால் தெய்வ சாந்நித்யம் குறையாமல் விளங்கும்.


இக்கால குழந்தைகளிடம் பக்தியை எப்படி வளர்க்க வேண்டும்?
முதலில் பெற்றோர் தினமும் வழிபாடு செய்ய வேண்டும். பூஜைக்கு தேவையான உதவிகளான பூப்பறித்தல், விளக்கேற்றுதல், கோலமிடுதல் போன்றவற்றைச் செய்ய பழக்கவேண்டும். பக்திப்பாடல்கள், ஸ்தோத்திரங்கள் சொல்லும்போது அவர்களையும் நம்முடன் சேர்ந்து சொல்லச் செய்ய வேண்டும். சினிமா, சீரியல் குழந்தைகளுடன் சேர்ந்து பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் தெய்வீக விஷயங்கள், கதைகள்<, புராணங்களை எடுத்துச் சொல்ல வேண்டும். நம் குழந்தைகள் நல்லவர்களாகவும், தெய்வபக்தி உள்ளவர்களாகவும் வளர்வதற்கான முறையில், முதலில் பெரியவர்கள் தங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியதும் இதற்கு அவசியம்.

*

கருவறைக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்திருப்பது ஏன்?

 பணிக்காக கணவர் அதிகாலை வெளியூர் கிளம்பிய பிறகு மனைவி வாசல் தெளித்து கோலமிடுவது சரியா?
காலை முதல் இரவு வரை செய்யப்படும் எல்லா விஷயங்களும் நல்லபடியாக அமையவேண்டும் என்பதற்காகத் தான் வாசல் தெளித்து கோலமிட்டு அந்த நாளை மங்களகரமாக தொடங்குகிறோம். எவ்வளவு அதிகாலை வேளையில் புறப்பட்டாலும், அதற்கு முன் வாசல் தெளித்து கோலமிட்டு, குளித்து, சுவாமி விளக்கேற்றி கும்பிட்டு கணவருக்குச் சிற்றுண்டி கொடுத்து அனுப்புவது தான் இல்லத்தரசியின் கடமை.

* கருவறைக்கு நேர் எதிரில் கண்ணாடி வைத்திருப்பது ஏன்?
சுவாமிக்கு மூன்று கண்கள். வலக்கண் சூரியனாகவும், இடக்கண் சந்திரனாகவும், நெற்றிக்கண் அக்னியாகவும் உள்ளன. இதில் சூரியசந்திர பார்வை நம் மீது பட்டால் நல்லது. நெற்றிக்கண் நெருப்புப்பார்வை நம் மீது விழாமல் இருக்க கண்ணாடி வைத்துள்ளனர்.

ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?

 ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை வந்தால் சுபநிகழ்ச்சி நடத்தலாமா?
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருமானால் சுபநிகழ்ச்சி நடத்தக்கூடாது. புதிதாக கும்பாபிஷேகம் செய்யக்கூடாது. கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம், மணிவிழா, வளைகாப்பு, காதுகுத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தலாம். தவிர்க்கமுடியாதபட்சத்தில் தோஷ சாந்திஹோமம் செய்து விட்டு சிலர் திருமணம் நடத்துவர்.

* பஞ்சாங்கம் தினமும் பார்க்கலாமா? அதைப் படிப்பதன் பலன் என்ன?
கிழமை, நட்சத்திரம், தேதி முதலியவற்றைத் தெரிந்து கொள்ளப் பஞ்சாங்கம் பார்த்துத் தானே ஆக வேண்டும். ஒருமுறை பஞ்சாங்கம் படித்தால், கங்கையில் நீராடிய பலன் கிடைக்கும்.

அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்


அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதெது செய்வானோ ஏமன்றானே
அருட்பெரும்ஜோதியை போற்று நெஞ்சே

ஆலய வழிபாட்டிற்கு நல்லநேரம் பார்த்துச் சென்றால் தான் பலன் கிடைக்குமா?

** ஆலய வழிபாட்டிற்கு நல்லநேரம் பார்த்துச் சென்றால் தான் பலன் கிடைக்குமா?
நல்லவேளை! சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு, காலை எழுந்திருப்பதற்கு இவற்றிற்கும் நல்லநேரம் பார்க்கலாமா என்று கேட்கவில்லையே! ஆலய வழிபாடு என்பது தினமும் செய்யவேண்டிய வழக்கங்களில் ஒன்று. இதற்கெல்லாம் நல்லநேரம் பார்ப்பதும், அதைக் காரணம் காட்டி போகாமல் இருப்பதும் சோம்பேறிகளின் வழக்கம்

நியாயம் தங்கள் பக்கம் இருந்தாலும், ஆண்கள் உடன்பிறந்த சகோதரியின் சாபத்திற்கு ஆளாக நேரிடுகிறதே. இது பலிக்குமா?
.
நியாயம், அநியாயம் பார்க்கும்படி உடன் பிறந்தவர்களிடையே அப்படி என்ன மனக்கசப்பு? சட்டென்று கோபப்படும் சுபாவமுள்ளவர்களாக இருந்தாலும், பெண்களுக்குப் பிறந்த வீட்டாரிடம் தனிப்பாசம் எப்போதும் இருக்கும். சகோதர, சகோதரிகளிடையே சாதாரண பேச்சுவார்த்தை சண்டையாக முற்றும்போது அமைதி காக்க வேண்டும். இந்த பிறவியில் சகோதர சகோதரிகளாகப் பிறந்திருக் கும் நாம், அடுத்த பிறவிகளில் எங்கு எப்படி பிறப்போமோ? எனவே, ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமானால் விட்டுக் கொடுத்துப் போவதில் தவறில்லை. நியாயமும், தர்மமும் உங்கள் பக்கம் இருக்கும் பட்சத்தில் யாருடைய சாபமும் பாதிக்காது. பயப்படவேண்டாம். எனினும், சகோதரிகளின் மனம்கலங்காமல் பார்த்துக் கொள்வது சிறப்பு.

* குலதெய்வம் தெரியாவிட்டால் யாரை குலதெய்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்?
உங்கள் தந்தைவழி உறவினர்களில் யாருக்காவது தெரிந்திருக்கும். அவர்களிடம் கேட்டுத் தெரிந்து வழிபடுவது சாலச்சிறந்தது. முடியாதபட்சத்தில் உங்கள் பெயர், ராசிப்படி சயனகோலத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியை குலதெய்வமாக ஏற்கலாம்.

.

கணவன் மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்கவேண்டும்?

* கணவன் மனைவி ஒற்றுமை வளர எந்த விரதம் இருக்கவேண்டும்?
சோமவார(திங்கள்கிழமை) விரதம் இருந்து வாருங்கள். பார்வதியை சிவன் திருமணம் செய்து கொண்டது சோமவாரத்தில் தான். விரதம் இருப்பது மட்டும் முக்கியமில்லை. நீங்கள் எதற்காக விரதம் இருக்கிறீர்கள் என்று மனைவி புரிந்து கொள்ளவேண்டும். சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சண்டையிடாமல் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் அன்பு அகலாமல் வாழ்வதே ஒரு விரதம் தான்.

*பார்வைக் குறைபாடு நீங்க எந்த தெய்வத்தை வழிபடவேண்டும்?
எல்லாத் தெய்வங்களையும் வழிபடலாம். விடியற்காலையில் சூரிய உதயத்தின் போது சூரியனைப் பார்த்தவாறு 12முறை நமஸ்காரம் செய்து வாருங்கள். ஆதித்ய ஹ்ருதயம் நூல் தமிழில் கிடைக்கிறது. அதையும் பாராயணம் செய்யுங்கள்