Friday, November 30, 2012

நீலகண்ட தீட்சிதர் -கல்விக்கடலுக்கு கண்ணொளி

சரஸ்வதி பூஜையை ஒட்டி, ஒரு ஆன்மிக கல்வியாளரின் தீர்க்கதரிசனம் பற்றி தெரிந்து கொள்வோமா!

மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம். அவரின் அவையில் பல கல்வியாளர்கள் இருந்தனர். அதில் ஒருவரான நீலகண்ட தீட்சிதர் சிறந்த அருளாளர். தீட்சிதர் மீது மன்னருக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அங்கயற்கண்ணி மீனாட்சியம்மன் கோயிலுக்கு அருகில் வசந்தமண்டபம் (புதுமண்டபம்) கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. மன்னரும், தீட்சிதரும் வேலைகளைப் பார்வையிடுவது வழக்கம்.
பட்டத்து ராணியின் சிலையையும் புதுமண்டபத்தில் அமைக்க மன்னர் உத்தரவிட்டார். சிலை செய்த போது, உளி பட்டு தொடைப்பகுதியில் ஒரு சில்லு தெறித்து விழுந்தது. பின்னமான, சிலையை எடுத்து விட்டு சிற்பி மீண்டும் கல்லெடுத்து சிலை செதுக்கினார். மீண்டும் தொடைக்குக் கீழே உளி பட்டு சில்லு போனது. மன்னரின் கோபத்திற்கு ஆளாகவேண்டுமே என அஞ்சினார் சிற்பி. அந்த சமயத்தில் நீலகண்ட தீட்சிதர் அங்கு வந்தார்.
கவலையுடன் இருந்த சிற்பியிடம், ""ஏனப்பா உன் முகம் வாடியிருக்கிறது?'' என்று கேட்டார்.
ராணியின் சிலையைக் காட்டி பிரச்னையைச் சொன்னார் சிற்பி. இருமுறை முயன்றும் சரிவராத சிலையை தீட்சிதர் உற்றுப்பார்த்தார். அவரின் தெய்வீக கண்ணுக்கு உண்மை புரிந்தது. அவர் சிற்பியிடம்,"" சிற்பம் வடிப்பது தெய்வீகக்கலை. உன் கையில் இருக்கும் உளி சாதாரணமானதல்ல. உண்மையைத் தான் சிற்பம் காட்டுகிறது. வருந்தாதே!'' என்று சொல்லி புறப்பட்டார்.
மறுநாள் புதுமண்டபம் வந்த மன்னர் ராணியின் சிலையைக் கண்டார். தொடையில் சில்லு விழுந்திருப்பதைக் கண்டு சிற்பியிடம் விசாரித்தார். ஒருமுறைக்கு இருமுறை முயற்சித்த தையும், தீட்சிதர் கூறிய விளக்கத்தையும் மன்னரிடம் எடுத்துச் சொன்னார்.
மன்னருக்கு,"" ராணியின் தொடையில் இருக்கும் குறை தீட்சிதருக்கு எப்படி தெரிந்தது?'' என்று சந்தேகம் தீயாகப் பற்றி எரிந்தது. தீட்சிதரின் கண்களைப் பொசுக்க வேண்டும் என்று மனம் கொந்தளித்தது.
தீட்சிதரை அழைத்து வர, உடனே ஆள் அனுப்பினார். அப்போது தீட்சிதர் வீட்டில் பூஜை செய்து கொண்டிருந்தார். இந்த நேரத்தில் மன்னர் தன்னை அழைத்திருக்கும் விபரீத காரணத்தை உணர்ந்தார். அங்கயற்கண்ணி மீனாட்சிக்கு கற்பூர ஆரத்தி
செய்யும் நேரம் வந்தது. அப்படியே கற்பூர ஜோதியை கண்களில் அப்பிக் கொண்டார்.
கண்கள் தீயில் வெந்து புண்ணானது. தான் நினைத்ததை, தீட்சிதரே நிறைவேற்றிக் கொண்ட செய்தி மன்னரை எட்டியது. தீட்சிதரின் தெய்வீகத் தன்மையை உணராமல் பெரும்பழி செய்து விட்டோமே என்று கலங்கினார்.
பின்னர், கல்விக்கடலான நீலகண்ட தீட்சிதர் மீனாட்சியம்மன் மீது "ஆனந்த சாகர ஸ்தவம் என்னும் ஸ்லோகம் பாடினார். மீனாட்சியின் அருளால் தீட்சிதரின் கண்கள் மீண்டும் ஒளி பெற்றன.

No comments:

Post a Comment