Thursday, November 29, 2012

எக்காலத்திலும் அழியாத செல்வம் கல்வியே. -வள்ளுவர்

மன மாசு நீங்க அறநெறிகளை உணர்த்தும் நல்ல நூல்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கவேண்டும். அந்நூல்கள் வலியுறுத்தும் நெறிமுறைகளைப் பின்பற்றி வாழவேண்டும்.
* எண், எழுத்து ஆகிய கணிதமும், இலக்கியமும் கண்களைப் போல வாழ்விற்கு துணை செய்கின்றன.
* கல்வி கற்றவர்களே கண்ணுடையவர்கள். மற்றவர்களோ, முகத்தில் இரு புண்களைப் பெற்றவர்கள்.
* பிறருடன் கூடி நல்லவிஷயங்களை மட்டுமே பேச வேண்டும். நல்லவர்களைப் பிரிய நேர்ந்தால், "ஐயோ! இவர்களை விட்டுப் பிரிகிறோமே!' என்று வருந்திப் பிரிய வேண்டும். இதுவே கற்றவர்கள் செய்யும் செயலாகும்.
* செல்வம் படைத்த பணக்காரர் முன் ஏழை உதவி கேட்டுப் பணிந்து நிற்பதைப் போல, ஆசிரியரிடம் மாணவர்கள் பணிவாகப் பாடம் பயில வேண்டும். ஆசிரியருக்கு பணியாதவர்கள் கீழோராகக் கருதப்படுவர்.
* தோண்டத் தோண்ட மணலில் நீர் சுரப்பது போல, நல்ல நூல்களைப் படிக்கப் படிக்க மனிதர்களின் அறிவு பெருகும்.
* கல்வியில் சிறந்தவன் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அது அவனுடைய சொந்தநாடே. எந்த ஊருக்குச் சென்றாலும் சொந்த ஊரே. நாம் வாழும் காலம் வரை கல்வி கற்பதில் ஆர்வம் கொள்ள வேண்டும்.
* ஒரு பிறவியில் நாம் கற்ற கல்வி, தொடர்ந்து வரும் ஏழேழு பிறவிக்கும் பாதுகாப்பாக வரும்.
* நமக்கு இன்பம் அளிப்பதோடு, மற்றவர்க்கும் மகிழ்ச்சியை வழங்குவ தால்,கல்வியை விருப்பத்துடன்கற்க வேண்டும்.
* பொன்னும் பொருளும் ஒருவருக்குச் செல்வம் ஆகாது. எக்காலத்திலும் அழியாத செல்வம் கல்வியே.
* கற்றவர்கள் கூடிய சபையில் படிக்காதவர்கள் அமைதி காப்பது நல்லது. இதனால், ஒருவரின் அறியாமை வெளிப்படாது. நல்லவர் என்ற பெயரையும் வாங்கலாம்.
* படிக்காவிட்டால் அறிஞர்களுடன் உறவாட முடியாது. படிக்காதவன் தன்னைப் பற்றி பெருமையாக நினைத்தால், அது அவனுடைய அறியாமையையே காட்டும்.
* உருவத்தால் மனிதராக இருந்தாலும், கல்வி கற்காவிட்டால் பயனற்ற தரிசு நிலத்துக்கே சமமாவர்.
* மதிநுட்பம் இல்லாத மனிதர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வது உயிரற்ற மண்பொம்மையை அழகுபடுத்துவது போலாகும். கல்வியே ஒருவருக்கு அழகைக் கொடுக்கும்.
* நல்லவர்களிடம் இருக்கும் வறுமை கொடியது. கல்வியறிவு இல்லாத கயவர்களிடம் இருக்கும் செல்வம், அதை விடக் கொடியது.
* செல்வச் செழிப்பு மிக்க நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும், கல்விபெறவில்லை என்றால் அவர் உயர்குடியில் பிறந்தவராக மாட்டார்.
* அறிவை வளர்க்கும் நல்ல நூல்களை படித்து பின்பற்றும் மேலோர்களுடன் படிக்காதவர்களை ஒப்பிடும் போது, அவர்களை விலங்குகள் என்றே சொல்ல வேண்டும்.
* அறிஞர்களிடம் நல்ல விஷயங்களைக் கேட்டுப் பெறும் கேள்விச் செல்வமே சிறந்த செல்வம்.
* கேள்விச் செல்வம் என்னும் உணவைப் பெறுவதில் விருப்பம் கொள்ளுங்கள். செவிக்கு உணவு இல்லாத நேரத்தில் சிறிதளவு வயிற்றுக்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment