Saturday, December 22, 2012

ராகாகும்பர்

ராகாகும்பர்

பாண்டியநாட்டில் எப்படி கல்லும், முள்ளும் கவிபாடுமோ, அதுபோல பண்டரிபுரத்தில் நாத்திகனும் கூட நாமஸ்மரணம் செய்வான் என்பர். பார்த்தவுடனேயே பக்தி பரவசம் பொங்கும் தலம் அது. இந்த தலத்தில் வாழ்ந்தவர் ராகா. மண்பாண்டம் செய்வோர் குலத்திலே பிறந்தவர். அவர்களை இங்கே "கும்பர்' என்பார்கள். இதனால் இவர் ராகாகும்பர் எனப்பட்டார்.
ராகாகும்பரின் மனைவி பாகாபாய். இவர்களுக்கு ஒரு மகள். பெயர் பாங்காதேவி. மூவரும் நிஷ்காமியர்கள். "நிஷ்காமியம்' என்றால் "தனக்காகவோ, பிறருக்காகவோ இறைவனிடம் எந்த நிலையிலும் எதையும் கேட்பதில்லை'. அதாவது, "பலன் எதிர்பாராமல் பக்தி செலுத்துவது'. இறைவனைப் வணங்குவதற்கும், பிறருக்கு கொடுத்து உதவுவதற்கும் மட்டுமே உயிர் வாழ வேண்டும் என்பதே இவர்களின் கொள்கை.
இவர்கள், தங்களை நாடி வருவோருக்கு உணவளித்து தாங்களும் சாப்பிட, தங்கள் குலத்தொழிலை செவ்வனே செய்து வந்தனர். ராகாகும்பரின் கை பானை வனைந்து கொண்டிருந்தாலும், மனம் மட்டும் பாண்டுரங்கனையே சிந்தித்துக் கொண்டிருக்கும்.
ஒருநாள், பானைகளை வனைந்து சூளையில் வைப்பதற்காக அடுக்கி வைத்திருந்தார் ராகா. அன்றிரவு, ஒரு பூனை தனது
குட்டிகளை ஒரு பானைக்குள் வைத்து விட்டு, இரைதேட சென்று விட்டது. அதிகாலையே கண் விழித்த ராகா, பானைகளை எடுத்து சூளையில் வைத்தார். குட்டிகள் இருப்பதை அவர் அறியவில்லை. தீ மூட்டப்பட்டது. சற்று நேரத்தில் தாய்ப்பூனை வந்தது. பானைகளைக் காணாத அது, கத்திக் கொண்டே, அங்குமிங்கும் அலை பாய்ந்தது. இதைக் கண்ட ராகா, என்னவோ, ஏதோவென்று வந்து பார்க்க, சூளையில் இருந்து குட்டிகளின் கதறல் ஒலி கேட்டது.
ராகா பதறிப் போனார். அவர் கொண்ட கவலைக்கு அளவே இல்லை. இத்தனை நாளும் "ஹிம்சை' என்ற சொல்லையே அறியாத அவர், இன்று ஒரு கொடூர பாவத்தை செய்து விட்டதற்காக கலங்கினார்.
"" ஐயோ பாண்டுரங்கா! தீராத பாவத்திற்கு என்னை ஆளாக்கி விட்டாயே. தரையில் எறும்பு ஊர்ந்து சென்றாலும், ஒதுங்கிப்போகும் எனக்கா, இந்த நிலைமை? உள்ளிருக்கும் குட்டிகள் துடிதுடித்து செத்து விடுமே! இந்த தாய்ப்பூனையின் சாபம் என்னை விடுமா? உள்ளிருக்கும் பூனைகளைக் காப்பாற்று...காப்பாற்று...''எனக் கதறினார்.
அவரது கதறல் கேட்டு பாகாவும் ஓடிவந்தாள். நடந்ததை அறிந்து பதறி பாண்டுரங்கனை உதவிக்கு அழைத்தாள்.
சூளையின் முன்பு இருவரும் சாஷ்டாங்கமாக விழுந்தனர்.
""பாண்டுரங்கா! அந்த பூனைகளை எப்படியாவது காப்பாற்று. கொடுமையான இந்த தொழிலையே விட்டு விடுகிறேன்,'' என்றார் ராகா. பகல் முழுவதும் எரிந்த தீ, மாலையில் அணைந்தது.
அவசர அவசரமாய் சூளையைப் பிரித்தனர் ராகா தம்பதியர். என்ன அதிசயம்! பூனைக்குட்டிகள் இருந்த பெரிய பானை மட்டும் வேகவில்லை. உள்ளிருந்த குட்டிகள் குதித்து ஓடின. தாய்ப்பூனை அவற்றை நக்கிக் கொடுத்து தன் அன்பை வெளிப்படுத்தியது. பாண்டுரங்கனுக்கு நன்றி கூறக்கூட, ராகாகும்பருக்கு நா கூட எழவில்லை. ஊராரும் இந்தக் காட்சி கண்டு அதிசயமுற்றனர். அவர், இறைவனிடம் வாக்களித்தது போலவே, மண்பாண்டத் தொழிலை விட்டு விட்டார். காட்டில் சென்று விறகு வெட்டத் துவங்கினார். காய்ந்த மரங்களையே வெட்டுவார். பச்சை மரங்களைத் தொடக்கூட மாட்டார்.
சில நாட்கள் கழித்தது. பாங்காதேவி பீமா நதிக்கரைக்கு தியானம் செய்யச் சென்றாள். அங்கே, நாமதேவர் என்பவரின் மகள், துவைத்துக் கொண்டிருந்தாள். அவள் துவைத்த போது, தியானத்தில் அமர்ந்த பாங்கா மீது நீர்த்திவலைகள் தெறித்தன.
""தாயே! மெதுவாக துவையேன். நீர்த்திவலைகள் என் மீது விழுந்து, தியானத்திற்கு இடையூறாக இருக்கிறது,'' என்றாள்.
அந்த பெண்ணுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
""அடியே! அப்பனும், மகளுமாய் சேர்ந்து ஊரை ஏமாற்றுகிறீர்களோ! உங்களுக்கெல்லாம் எதற்கு ஆசார அனுஷ்டானங்கள். தன்னை நிஷ்காமியன் எனச் சொல்கிறான் உன் தந்தை. நிஷ்காமியத்தின் பொருளை நீ அறிந்தில்லையோ? எந்த நிலையிலும், பிற உயிர்களுக்காகவும் ஆண்டவனை வேண்டிக் கொள்ளாதவன் தான் நிஷ்காமியன். ஆனால், உன் தந்தையோ பாண்டுரங்கனை வேண்டி, பூனைகளைக் காப்பாற்றினான். எனவே அவன் காமியன் ஆகிறான். ஊரை ஏமாற்றாதீர்கள்,'' என படபடவென
பொரிந்தாள்.
""அடியே! தகாதன பேசாதே. நிஷ்காமியத்தில் கூறப்படும் பிற உயிர்கள் என்பது, தன்னைச் சார்ந்த உயிர்கள் என்பதையே குறிக்கும். நான் சூளைக்குள் அகப்பட்டிருந்தால், என் தந்தை இறைவனை வேண்டியிருக்க மாட்டார். ஆனால், பூனைகள் அடுத்த வீட்டு உயிர். அதைக் காப்பாற்றியதில் தவறில்லை. ஏன்... உன் தந்தையும் கூட நிஷ்காமியர் என்று தான் சொல்லிக் கொள்கிறார். அவர், இறந்து போன ஒரு பசுவை பண்டரிநாதர் மூலம் எழுப்பவில்லையோ,'' என்றாள்.
சண்டை வலுத்தது. இருவரும் அவரவர் தந்தையிடம் நடந்த விஷயத்தைக் கூறினர்.
குழந்தைகளின் சண்டையை பெரியவர்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை.
இருப்பினும் நாமதேவருக்கு, மனதில் ஒரு சலனம். அவர் சாதாரணப்பட்டவர் அல்ல. பாண்டுரங்கனை எப்போது வேண்டுமானாலும் அழைத்து, நேரில் பேசும் சக்தி மிக்கவர். (இப்போது கூட பண்டரிபுரம் கோயிலில் உள்ள கிழக்கு வாசல் நாமதேவர் வாசல் என்றே சொல்லப்படுகிறது. இவர் கோயிலில் படியாக இருக்க இறைவனிடம் வரம் கேட்டார். உன்னை வணங்க வரும் அடியவர்களின் பாதத்தில் ஒட்டிய துகள்கள், என் மீது படவேண்டும்,'' என்றார். நாமதேவர் படியைக் கடந்தே
கோயிலுக்குள் செல்ல முடியும்).
ராகாகும்பர், நிஷ்காமியர் தானா என்பதை அறிந்து கொள்ள விரும்பி, பாண்டுரங்கனிடமே கேட்டார்.
ராகாகும்பரின் பெருமையை நேரில் காட்ட, நாமதேவரையும், லட்சுமிதேவியையும் அழைத்துக் கொண்டு பாண்டுரங்கன் காட்டிற்குள் சென்றார். லட்சுமியின், பொற்சிலம்பை ராகாகும்பர் குடும்பத்தினர் வெட்டிக் கொண்டிருந்த மரப்புதரில் வைத்தார். மரத்தை வெட்டிய ராகாகும்பர் குடும்பத்தினர், ஒரு புதரில் பொற்சிலம்பு ஒளி வீசுவதைக் கண்டனர்.
அதிர்ச்சியுடன், ""ஆகா! யாரோ இதை இங்கே விட்டுச் சென்றுள்ளனர். பிறர் பொருளில் வாழ்வது போன்ற பாவம் உலகில் வேறு எதுவுமில்லை. இந்த மரமே எனக்கு வேண்டாம். நாளை வேறு மரத்தை வெட்டிக் கொள்கிறேன்,'' என்றவராய் அங்கிருந்து மனைவி, மகளோடு புறப்பட்டார்.
இதைக்கண்ட நாமதேவர் வெட்கப்பட்டார். இம்மகானைப் பற்றி சந்தேகம் கொண்டோமே என வருந்தினார். உடனே
பாண்டுரங்கன், லட்சுமி சமேதராக ராகா குடும்பத்தினருக்கு காட்சியளித்தார். அவர்கள் ஆனந்தத்தில், நிலத்தில் வீழ்ந்து பணிந்தனர். இனி, நீங்களும் எதையும் எதிர்பாராமல் பிறருக்கும் உதவி செய்வீர்கள் தானே!

No comments:

Post a Comment