Tuesday, December 25, 2012

ஏகாதசி நாட்களில் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது.

சாந்திராயன பகுதியின் 11-வது நாளான ஏகாதசியில் உபவாசம் மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கலியுகத்தில் நம்பிக்கை, வைராக்கியம் மற்றும் பக்தியுடன் ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு, மனமானது முழுக்க ஹரியிடம் செலுத்தப்பட்டால் ஒருவன் பிறப்பிறப்புச் சுழலிலிருந்து விடுவிக்கப்படுவான்.

இதில் ஐயமேயில்லை. இந்த விஷயத்தில் மறை நூல்கள் நமக்கு உறுதி அளிக்கின்றன. பக்தர்கள் இந்த தினத்தில் உபவாசம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து ஜபம் செய்து ஹரி கீர்த்தனம், தியானம் செய்கின்றனர். சிலர் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்துவதில்லை. பூரண உபவாசம் இருக்க முடியாதவர்கள் சிறிது பால், பழம் சாப்பிடலாம்.

ஏகாதசி நாட்களில் அரிசி சாதம் சாப்பிடக்கூடாது. இது மிகவும் முக்கியம். பிரம்மாவின் தலையிலிருந்து விழுந்த வியர்வை. ஓர் அரக்கனின் உருவத்தை எடுத்து, எனக்கு வசிக்க ஒரு இடம் கொடுங்கள் என்று கேட்டது. "அரக்கனே, ஏகாதசி அன்று சாப்பிட்டவர் களின் சாதத்திëல் போய் இருந்து கொண்டு அவர்கள் வயிற்றில் புழுக்களாக ஆவாயாக'' என்று பிரம்மா பதில் சொன்னார்.

இதற்காக ஏகாதசி அன்று சாதம் தவிர்க்கப்படுகிறது. ஒருவன் ஏகாதசி உபவாசத்தை தொடர்ந்து செய்தால் பகவான் ஹரி மகிழ்வுறுகிறார். எல்லாப் பாவங்களும் போக்கப்படுகின்றன. மனம் தூய்மை அடைகிறது. பக்தி படிப்படியாக வளர்கிறது. கடவுளிடம் பக்தி தீவிரமடைகிறது. ஆசார சீலர்கள் சாதாரண ஏகாதசி நாட்களில் கூட பூரண உபவாசத்துடன் விழித்திருக்கின்றனர்.

விஷ்ணு பக்தர்களுக்கு ஒவ்வொரு ஏகாதசியும் புனிதமான நாள்தான். உபவாசத்தினால் ஏற்படும் நன்மைகள் இன்றைய நாட்களில் படித்த பலர் இந்தப் புண்ணிய தினத்தில் உபவாசம் அனுஷ்டிப்பதில்லை. இது கெட்ட உலகாயத சக்திகளின் தர்க்கத்தின் விளைவினால் ஏற்பட்டதாகும். சிறிது அறிவு விருத்தி அடைகின்றபொழுது ஜனங்கள் தேவை இல்லாத விவாதங்களிலும் தர்க்கத்திலும் ஈடுபடுகின்றனர் ஆன்மீக மார்க்கத்தில் அறிவு ஒரு தடங்கலாக இருக்கிறது.

இருதயத்தைப் பண்படுத்தாமல், வெறும் அறிவை மட்டும் வளர்த்தவர்கள் ஒவ்வொரு படித்தரத்திலும் சந்தேகப்படத் தொடங்குகின்றனர். அவர்கள் வழிதவறிப் போய்விடுகின்றனர். எல்லாவற்றிற்கும் அவர்கள் `ஏன்', `எப்படி' என்ற விளக்கம் கேட்கின்றனர். எல்லா நிழழ்ச்சிகளுக்கும் அவர்கள் விஞ்ஞான விளக்கத்தை வேண்டுகின்றனர்.

நிரூபணங்களுக்கும், யூகங்களுக்கும் அப்பாற்பட்டவர் ஆண்டவன். மிகுந்த பக்தி, மரியாதை மற்றும் இதயத் தூய்மையுடன் ஒருவன் சமயத்தை அணுக வேண்டும். அப்போதுதான் உள்ளங்கை நெல்லிக்கனி போல சமயத்தின் நுட்பங்கள் அவனுக்குத் தெரியவரும். தந்தையை நிரூபிக்க வேண்டுமென்று எவராவது தனது தாயைக் கேட்பார்களாப உபவாசம் காமத்தை அடக்குகிறது. அது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகிறது.

புலன்களையும் அது அடக்குகிறது. மனதையும் இதயத்தையும் அது தூய்மைப் படுத்துகிறது. ஏராளமான பாவங்களைப் போக்குகிறது. மனிதனின் பரம விரோதியான நாக்கை உபவாசம் கட்டுப்படுத்துகிறது. சுவாச, ரத்த ஓட்ட, ஜீரண மற்றும் சிறுநீரக மண்டலங்களை உபவாசம் செப்பனிடுகிறது. உடலின் எல்லா அசுத்தங்களையும், நச்சுக்களையும் அது இல்லாததாக்குகிறது. யூரிக் அமிலப் படிவங்களை அது நீக்குகிறது.

அசுத்தத் தங்கம் கொள்கலத்தில் இட்டு திரும்பத் திரும்ப உருக்கப்பட்டு தூய்மைப்படுத்தப்படுவது போல அசுத்த மனமும் அடிக்கடி உபவாசத்தால் தூய்மையாக்கப்படுகிறது. இளம், திடகாத்திரமான பிரம்மச்சாரிகள் எப்பொழுதெல்லாம் காமம் அவர்களைத் தொல்லைப்படுத்துகிறதோ, அப்பொழுதெல்லாம் உபவாசத்தை மேற்காள்ள வேண்டும்.

அப்போதுதான் மனம் அமைதி அடைந்து அவர்களுக்கு நல்ல தியானம் வாய்க்கும். உடல் மண்டலத்தை அமைதியாக்கி தீவிர தியானம் பயில்வது தான் உபவாசத்தின் முக்கிய நோக்கமாகும். புலன்களை உள்முகமாக்கி மனத்தை இறைவன் பால் பதியுங்கள். உங்களுக்கு வழிகாட்டி ஆன்மீகப் பாதையில் ஒளியைக் காட்டி அருளுறு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

"இறைவனே! எனக்கு வழிகாட்டு. என்னைக் காப்பாற்று. என்னைக் காப்பாற்று. நான் உன்னுடையவன். நான் உன்னுடையவன். என்னைக் கைவிட்டு விடாதே'' என்று மனமுருகிச் சொல்லுங்கள். உபவாச நாட்களில், முக்கியமாக ஏகாதசி தினங்களில் இந்த சாதனையை கடைப்பிடியுங்கள். யோகத்தின் பத்து முக்கிய அம்சங்களில் உபவாசமும் ஒன்று.

ஆனாலும் அதிகமாகப் பட்டினி இருப்பதை தவிர்க்க வேண்டும். அது பலவீனத்தை உண்டாகும். உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்துங்கள். 24 மணி நேர உபவாசம் உங்களால் இருக்க முடியாவிட்டால், 10-12 மணி நேர உபவாசத்தை பால், பழத்துடன் மேற்கொள்ளுங்கள். படிப்படியாக உபவாசத்தை 15 மணி நேரத்திற்கும், அதன்பின் 24 மணி நேரத்திற்கும் உயர்த்துங்கள்.

உபவாசம் ஒருவனை மானசீகமாகவும், ஆன்மீகமாகவும் ஆற்றல் உடையவனாக்குகிறது. புகழ் பெற்ற ஹிந்து சட்ட நிபுணரான மனு, தமது மனுஸ்மிருதியில் ஐம்பெரும் பாவங்களைப் போக்குவதற்கு உபவாசத்தை மேற்கொள்ளச் சொல்லுகிறார். டாக்டர்களால் குணப்படுத்த முடியாதது என்று கைவிட்ட வியாதிகளை உபவாசம் குணப்படுத்துகிறது.

அவ்வப்போது உள்ளுறுப்புகளுக்கு ஓய்வு அளிப்பதற்கும், பிரம்மச்சர்யத்தைப் பாதுகாப்பதற்கும் நல்லாரோக்கியத்தைப் பேணுவதற்கும் பூரண உபவாசம் தேவைப்படுகிறது. அதிகம் உண்பதாலேயே எல்லா வியாதிகளும் உண்டாகின்றன. உபவாசம் ஒன்றே அவற்றைக் குணமாக்க உள்ள ஒரே வழியாகும்.

தூக்கத்தைக் கட்டுப்படுத்த பூரண உபவாசம் உதவுகிறது. தூக்கத்தைக்கட்டுத்த டீ அருந்துவது விரும்பத்தக்கது அல்ல. புறத்தில் உள்ள ஒன்றை அண்டியிருப்பதால் குறிப்பிடத்தக்க ஆன்மீக பலத்தை உங்களால் அடைய முடியாது. உபவாச காலத்தில் எல்லா தொடர்புகளையும் தவிருங்கள்.

தனியாக வாழுங்கள். சாதனையில் நேரத்தைச் செலவிடுங்கள். உபவாசத்தை முடிக்கும்போது ஜீரணிப்பதற்குக் கடினமான உணவை உட்கொள்ளாதீர்கள். பாலோ, பழச்சாறோ நன்மை தரும். உணவில் மிதமாக இருப்பதும், யோக தியானத்தில் புலன்களை அகமுகமாக்குவதும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போன்றவை. உடலை நல்ல செயல் நிலையில் வைக்கப் போதுமான அளவு சிறிது உணவும் தண்ணீரும் கொடுப்பதுதான் `மிதம்' என்பதன் பொருள்.

"உண்மையில் யோகம் என்பது அதிகமாக உண்பவனுக்கோ, உணவைத் தவிர்ப்பவனுக்கோ, அதிகமாகத் தூங்குபவனுக்கோ, அல்லது அதிகமாக விழித்திருப்பவனுக்கோ இல்லை'', என்பதை நீங்கள் பகவத் கீதையில் காண்பீர்கள். குறிப்பிட்ட புலனுலகப் பொருள்களிலிருந்து யோகி, தமது புலன்களை இழுத்துக் கொள்கிறார். புலன்கள் மனத்துடன் ஒடுக்கப்படுகின்றன. இந்த இரண்டு பயிற்சிகளிலும் ஒருவன் பூரணமாக நிலைபெறும்போது புலன்களின் மீது வெற்றி சாத்தியமாகும்.

No comments:

Post a Comment