Tuesday, December 25, 2012

அண்ணாமலைத் தலம்

ண்ணாமலைத் தலம் பஞ்சபூதத் தலங்களுள் நெருப்புத் தலம். நினைக்க முக்தி அளிப்பது. சிவபெருமான் வல்லாள மாமன்னனுக்கு புத்திரராகத் தோன்றித் திருவருள் புரிந்த தலம். பிரம்மாவும் திருமாலும் சிவபெருமானின் முடியையும் அடியையும் தேடிக் காண முடியாமல் செருக்கு தீர்ந்து திகைத்து நிற்க, தாமே பரம்பொருள் என்று காட்ட ஜோதிப் பிழம்பாகக் காட்சி கொடுத்த தலம். இதனை உணர்த்தும் வகையில்தான் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் சிறப்புமிக்க தீப தரிசன விழா நடைபெறுகிறது.

இறைவன்- அருணாசலேசுவரர்; அம்பிகை- உண்ணாமுலையம்மை. பார்வதி தேவியார் தவம் செய்து சிவபெருமானுடைய இடப்பாகம் பெற்ற தலம் இது.


கோவில் சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில், பல கோபுரங்களைக் கொண்டு விளங்குகின்றது. "கோபுரங்கள் மலிந்த கோவில் அண்ணாமலையார் கோவில்' என்னும் புகழ் படைத்தது. ஆறு பிராகாரங்கள் உள்ளன. கோபுரங்களும், பிராகாரங்களும் அமைந்துள்ளது போலவே திருக் கல்யாண மண்டபம், பதினாறுகால் மண்டபம், ஞானப்பால் மண்டபம், தீர்த்தவாரி மண்டபம், உருத்திராக்க மண்டபம், நந்தி மண்டபம் எனப் பல மண்டபங்கள் உள்ளன. 360 தீர்த்தங்கள் உள்ளன என்பர்.

இங்கே முப்பெரும் விழாக்களாகிய கார்த்திகைத் திருவிழா, பங்குனித் திருவிழா, தைத் திருவிழா முதலியன சிறப்பாக நடைபெறும். நான்காம் பிராகாரத்தில் பிரம்ம தீர்த்தத்துக்கு அருகில் கிளிக் கோபுரம் உள்ளது. அருணகிரிநாதர் கிளி உருவம் எடுத்து கந்தரனுபூதி பாடினார் என்பது வரலாறு.

"அடல் அருணைத் திருக்கோபுரத்தே
அந்த வாயிலுக்கு
வட அருகிற்சென்று கண்டு கொண்டேன்'
என்று அவரே பாடிப் போற்றுகின்றார்.
"விளவார் கனபடநூறிய
கடல் வண்ணனும் வேதக்
கிளர் தாமரை மலர் மேலுறை
கேடில் புகழோனும்
அளவாவணம் அழலாகிய
அண்ணாமலை அண்ணல்'

என்பது இத்தல தேவாரப் பாடல்களில் ஒன்று. தேவாரம் அருளிய மூவரும் பாடிப் பரவிய தலம் இது.

திருவாசகம் அருளிய மணிவாசகப் பெருமானும், "நான்முகனும் காணாமலை' என்றும்; "ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ்சோதியானவன்' என்றும் தமது திருவெம்பாவையில் போற்றிப் பாடுகிறார். திருவெம்பாவை என்னும் தெய்வீக நூல் இயற்றப்பட்ட தலம் இது.

வள்ளலார் இராமலிங்க சுவாமிகளும் தமது திருவருட்பாவில்,

"தேடுவார் தேடும் செல்வமே! சிவமே
திரு அருணாபுரித்தேவே!
ஏடுவார் இதழிக் கண்ணி எங்கோவே!
எந்தையே! எம்பெருமானே!
பாடுவார்க்கு அளிக்கும் பரம்பொருளே!
பாவியேன் பொய்யெலாம் பொறுத்து
நாடுவார் புகழும் நின்திருக்கோவில்
நண்ணுமா எனக்கு இவண் அருளே!'

என்று பாடுகிறார்.

மனிதன் மனிதனாக விளங்க நல்லறிவும் பக்தி நெறியும் அவசியம். அது கருதியே நாள், கிழமை, தேர், திருநாள், பண்டிகைப் பெருநாள் என்பன வகுத்து அமைத்தனர் நமது முன்னோர்.

கார்த்திகை தீபத்தை அண்ணாமலை தீபம் என்பர். அன்று எல்லா ஆலயங்களிலும், வீடுகளிலும் விளக்கு வரிசை வைப்பர். சொக்கப் பனை கொளுத்துவர். "மாவலியோ மாவலி!' என்று சிறுவர்- சிறுமியர் கூறி மகிழ்வர். தேங்காயும் வெல்லமும் கலந்த பொரி உருண்டை நிவேதிப்பர்.

கடவுள் கடமை

கார்த்திகை தீபம் என்பதினாலேயே அப் பெருநாள் கார்த்திகை மாதத்தில்தான் நிகழும் என்பது வெளிப்படை! அதிலும் பௌர்ணமி திதி- முழுமதி நாளில்தான் தீபோற்சவம். கார்த்திகைப் பௌர்ணமியில் என்ன விசேஷம்? ஏன் தீப வரிசை எடுக்கிறோம்? அதற்கு தெய்வ உண்மை ஒன்றுள்ளது.

ஈசன் கருணாமூர்த்தி. உயிர்கள் அனைத்தும் அவனது உன்னத படைப்பு. எனவே உயிர் களைக் காத்தல் அவனது கடமை. நமது மதிப் பிசகினாலும், பிறரது கொடுமையினாலும் நாம் துன்புறும் காலத்து நம்மைக் காக்கக் கூடியவன் அவன். கார்த்திகை தீபம் அந்த உண்மையினை விளக்க எழுந்ததாம்.

பரமன் கையால்...

தாரகாசுரனது புதல்வர் மூவர். கமலாக்ஷன், தாரகாக்ஷன், விதிதியுன் மாலி என்னும் அந்த மூவரும் பிரம்மதேவனை நோக்கித் தவம் கிடந்தனர்- என்றும் சாகாவரம் வேண்டி! 

""இந்திராதி தேவரும், எவ்வுயிரும் ஒருநாள் மறைந்தே தீரவேண்டுமாதலின், என்றும் சாகாவரம் கிட்டாது'' என்றான் நான்முகன்!

""அங்ஙனமாயின், பொன், வெள்ளி, இரும்பு ஆகியவற்றாலான மூன்று நகரங்கள் வேண்டும். நாங்கள் விரும்பிய வண்ணம் அவை எங்கும் பறந்து செல்ல வேண்டும். பரமனே நேரில் வந்து அழிக்க விரும்பினால்தான் நாங்கள் அழியலாகும்'' என்று அம்மூவரும் வரம் பெற்று வந்தனர்.

தவச் செருக்கு ஒருபுறம்; அம்முப்புரங்களின் வல்லமை ஒருபுறம்; தங்களது ஆற்றல் ஒருபுறம். இம்மூன்றும் கூடிக்கொள்ளவே. கமலாக்ஷன், தாரகாக்ஷன், விதிதியுன்மாலி என்னும் மூவரும் பொன், வெள்ளி, இரும்பினால் ஆகிய புரங்களில் அமர்ந்து வான வீதியிலே பறந்து செல்வர்.

விரும்பிய இடத்திலே அம்மூவரும் திரிபுரங் களுடன் இறங்குவர். விமானம் விழுந்தாலே நாசம் உண்டாகும். முப்புர விமானங்களும் சேர்ந்திறங்கினால் விளையும் அனர்த்தத்தினை உரைக்க வேண்டுமோ? உலக மாந்தர் அனைவரும் பெரிதும் வருந்தினர்: தேவரும் அப்படியே!

திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தானே துணை. அமரரும் மாந்தரும் அப்பரமனை அடைந்து குறையிரந்தனர். பெரும் தவவலிமை பெற்ற இராவணனை மாய்க்க இராமபிரான் வனத் திலே தவம் இயற்றினான்; ரிஷிகளின் ஆசி பெற்றான். துணைக்கு குரங்குப் படையையும் கூட்டிக் கொண்டான் அன்றோ?

முப்புர தவ வீரரை அழிக்க நம் பரமனும் துணைக் கொண்டான். என்ன துணை?

பண்பரந்த பூமியே ரதம்! சூரிய சந்திரரே அந்த ரதத்தின் கால்கள்! நான்கு வேதங்களும் குதிரைகள்! நான்முகனே சாரதி! பொன்மலை யான மேருவே வில்! உலகையளந்து உலகினைக் காக்கும் நாராயணனே அம்பு!

இவ்வளவு பலத்தையும் தேடிக் கொண்டான் அப்பரமன். பரிபூரணமான பலம் பெற்றபின் அவற்றை அப்பரமன் கையாண்டானா? இல்லை, இல்லை! அகிம்சா தர்மத்தையே மேற்கொண் டான். முப்புரங்களையும் பார்த்து நகைத்தான். அப்புரங்கள் மூன்றும் வெந்து சாம்பலாயின.

தவவலிமையால் தறுக்கு மிகுந்து முப்புரங் களின் துணைகொண்டு உலகையெல்லாம் வாட்டி வந்த அரக்கர் மூவரும் ஒரு கார்த்திகைப் பௌர்ணமியன்றே முடிந்தழிந்தனர். அது கண்டு அமரரும் மாந்தரும் பிற உயிர்களும் ஆறுதல் எய்தினர். அத்தகைய திவ்விய தினத்தை நாம் மறவாதிருக்கவே கார்த்திகை தீபம்!

நகையொளி

சாந்தத்தில் தோன்றிய புன்னகையே- ஆனந் தமே முப்புரங்களையும் எரித்தது. பரமனது நகையொளி எங்கும் பரவியது. அதன் அடை யாளமாகவே ஆலயத்திலும், வீட்டிலும் தீப வரிசை வைக்கிறோம். கார்த்திகை மாதம் முழுவதும் கங்கைக் கரையிலே தீபம் ஏற்றுவது உண்டு. இன்றும் வடநாட்டில் எல்லா இடங் களிலும் தீபவொளி செய்கிறார்கள்.

அதனை அருணாசல தீபம் என்பது ஏன்? திருவானைக்காவலில் உள்ளது அப்புலிங்கம்; சிதம்பரத்தில் உள்ளது ஆகாய லிங்கம்; திரு வண்ணாமலையில் உள்ளதோ ஜோதி லிங்க மாம்! முன்னம் ஒரு காலத்திலே திருவண்ணா மலை ஒரே ஜோதியாகத் துலங்கி நின்றது.

"மாவலியோ மாவலி' என்று குழந்தைகள் கூறிக் களிப்பதேன்?

ஒரு கார்த்திகை பௌர்ணமியன்று ஆலயம் ஒன்றில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. அது அணையும் சமயம், எண்ணெயைப் பருக வந்த எலியொன்று தற்செயலாக விளக்கின் திரியைத் தூண்டியது. உடனே தீபம் அணையாமல் பிரகாசிக்கலாயிற்று. அப்புண்ணியத்தின் பலத்தால் மறுபிறவியிலே அந்த எலி மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்தது.

மகாபலி சக்கரவர்த்தியோ மகாதானம் செய்தான். திருமால், வாமன அவதாரம் எடுத்து அவனிடம் மூவடி மண் யாசித்தார்: அவனும் கொடுத்தான்.

மகாபலியின் மகாதானம் கண்டு மகாவிஷ்ணு வுக்கு உவகை பிறந்தது. அதனால் பரமபதம் அளித்தார். அப்போது அவன் வரமொன்று வேண்டினான். அது யாது?

""கார்த்திகைப் பௌர்ணமியன்று, எலி வடிவில் ஆலய தீபத் திரியைத் தூண்டினேன். மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறந்தேன். கார்த்திகை தீபோற்சவத்தை எனது ஆயுள் அளவு கொண்டாடினேன். பரம பாகவதர்களுக் கும், ஏழை எளியவர்களுக்கும் வாரி வாரிப் பொருள்களை வழங்கினேன்; பரமபதம் எய்தினேன். அதனால், இப்பூலோக மாந்தரும் கார்த்திகைத் தீப உற்சவத்தைக் கொண்டாடி எல்லா நன்மைகளும் பெறுதல் வேண்டும்''

"யான் கண்ட இன்பம் இவ்வையகமும் எய்துக' என்பதே மகாபலியின் குறிக்கோளா யிற்று, அத்தகைய மகாபலியை நாம் மறந்து இருக்கலாம். ஆனால், நமது சிறுவர்- சிறுமி யரோ நமது முன்னோர்களின் அருளால் மறவாதிருந்து, "மாவலியோ மாவலி' என்று கூறித் தீப்பொறி பறக்கவிட்டுக் களிப்பெய்துகின்றனர்.

தீ மிகவும் நன்றாக எரிய வேண்டி குங்கிலியத்தை தீபத்தின்மீது வீசுவதுண்டு. அதனால் ஜோதி பெருகும். மணிமணிப் பொறிகளாகக் கிளம்பும். குங்கிலியக் கலய நாயனார், அது பற்றியே குங்கிலியக் கைங்கர்யம் செய்து வந்தார் போலும்.

முப்புரம் எரித்தான் முக்கண்ணன். கார்த்திகை தீபம் அன்று அவனை மறவாது பக்தி செய்தால் திரிபுரங்கள் எரிந்ததுபோல நமது பாவங்களும் தீர்ந்து போகும்; நற்கதியும் கிட்டுதல் திண்ணம்.

தெய்வத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம் என்பது உலக நீதி. தெய்வ நினைவே வாழ்க் கைக்கு அடிப்படை! வாழ்வு பெருகவே யாவரும் விரும்புவர். இதனை எண்ணி நமது சமயப் பண்பாடு அமைந்த விதம் அதிசயமே! "அரனை மறவேல்' என்றாள் ஔவைப் பிராட்டியும்

No comments:

Post a Comment