Monday, April 22, 2013

ராமநவமி வழிபாடு

நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்றிண்டெழுத்தினால்
ஸ்ரீராமர் அவதாரம் மிகவும் புண்ணியமானது. ராமநாமம் மிகவும் புனிதமானது. இவ்வாறு ஸ்ரீராம நாமத்திற்கு மகிமையும், சக்தியும் இருப்பதால் ஸ்ரீராமாயணத்தை அனுதினமும் பாராயணம் செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் கூறுகிறார்கள்.
வால்மீகி மகரிஷியால் எழுதப்பட்ட இதிகாச ரத்ன ராமாயணத்தை தினந்தோறும் பாராயணம் செய்வோருக்கு ஆயுள், ஆரோக்கியம், சந்தானம், செல்வம் போன்ற அஷ்ட ஐசுவரியங்களும் தானாகவே சித்திக்கும். ஸ்ரீராம மந்திரத்திற்கு ஈடு இணை எதுவுமில்லை. "ராம் ராம்'' என்று உச்சரித்தால் அங்கே ராமர் எழுந்தருளி விடுவார்.
ராமாயணம் படிக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் அருவமாக எழுந்தருளுவார் என்பது ஐதீகம். இதனால்தான் ராமாயண காலசேட்ப இறுதியில் ஆஞ்சநேய உற்சவம் செய்து பூர்த்தி செய்வது சம்பிரதாயம். ஸ்ரீமந்நாராயணனின் அவதாரங்களில் ஸ்ரீராமாவதாரம் மிகவும் ஒப்பற்ற வைபவங்கள் மிக்கதாகும்.
ராமபிரான் சித்திரை மாதத்தில் அவதரித்தார் என்று கூறப்பட்டாலும், பெரும்பாலும் பங்குனி மாத வளர்பிறை நவமி திதியிலேயே ராமநவமி கொண்டாடபப்டுகிறது. அஷ்டமி, நவமி ஆகிய இரு திதி தேவதைகளும் தங்களை கெட்ட திதிகளாக எல்லாரும் எண்ணுவதாக மகாவிஷ்ணுவிடம் கூறி வருதப்பட்டன.
அவர்கள் மீது கருணைகொண்டு நவமி திதியில் ராமராகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணராகவும் அவதரித்து திதி தேவதைகளின் மனக்குறையைப் போக்கினார் மகாவிஷ்ணு. முக்தி தரும் ஏழு தலங்களில் முதன்மையாகச் சொல்லப்படுவது அயோத்தி. சரயூ நதிக்கரையில் அமைந்த மீன் வடிவமுள்ள இந்த நகரில், இஷ்வாகு குலத்தில் 65-வது மன்னனாக அவதரித்தவர் ராமபிரான். தசரதனின் தாத்தாவின் பெயர் ரகு.
இவர் விஸ்வஜித் யாகம் நடத்தி தனது செல்வங்களையெல்லாம் தானமாக வழங்கினார். அதனால் ராமரின் வம்சம் ரகு வம்சம் என்றும் போற்றப்படும். ராமநவமியன்று ஸ்ரீராம ஜெயராம ஜெயஜெய ராமா' என்று 108 முறை மனமொன்றிச் சொன்னாலே போதும். எல்லையற்ற புண்ணியம் கிட்டும்.
ராமநவமியில் விரதமிருப்பதால் லட்சுமி கடாட்சம், வியாதிகள் அகலுதல், பகைவரும் நண்பராதல், தொலைந்த பொருட்கள் கிடைத்தல், பிள்ளைப்பேறு போன்றவற்றோடு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். `ஓம் நமோ நாராயண' என்னும் எட்டெழுத்து மந்திரத்திலுள்ள `ரா'வும் `ம'வும் இணைந்து உருவானதே `ராம' எனும் மந்திரம்.
இது ராமபிரான் பிறப்பதற்கு முன்பே உருவானதாகச் சொல்வார்கள். ராம நாமம் எல்லையற்ற ஆன்ம சக்தியை வழங்கக்கூடியது. `ரா' என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கெல்லாம் வெளியேறி விடுகின்றன என்றும், `ம' என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப் பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப்படுவதாகவும் சொல்வர்.
வால்மிகி முனிவர் ராமபிரான் பிறக்கும் முன்பே ராம சரிதத்தை எழுதி விட்டாராம். எதிர்காலத்தை முன்கூட்டியே அறியும் ஆற்றலை பிரம்ம தேவரிடம் பெற்ற இவர், மகாவிஷ்ணுவைத் தியானித்து அவரது அவதாரத்தை உணர்ந்து எழுதினார் என்பர்.

ஸ்ரீராமர் சக்கரம்

(ஞானியர்களால் ஆசீர்வதிக்கப் பட்ட ஸ்ரீராமர் சக்கரம் நம் அன்றாட பிரச்சினைகளுக்கு ஆரூடம் சொல்லுவதற்கு தக்க வழிகாட்டியாக அமைந்துள்ளது)

1. இராமர்- வனவாசம்
2. சீதை- துக்கம்
3. லட்சுமணர்- காரியசித்தி
4. விபீஷணர்- சர்வ லாபம்
5. கும்பகர்ணன்- மரணம்
6. இராவணன்- குலநாசம்
7. அங்கதன்- ராஜ்யபிராப்தி
8. சுக்ரீவன்- பந்துக்கள் வருகை
9. இந்திரன்- தனயன் திருமணம்
10. வாலி- காரியநாசம்
11. நாரதர்- கலகம்
12. குகன்- சிநேகிதர் வருகை
13. அனுமன்- பகுலாபம்
14. ஜாம்பவான்- தீர்க்க ஆயுள்
15. கைகேயி- கலகம்
16. பரதன்- சர்வகால சித்தி

நமக்கு நடக்க வேண்டிய காரியத்தை மனதில் நினைத்துக் கொண்டு, ஸ்ரீராமநாமத்தை தியானித்து, குழந்தையைக் கொண்டு, எண்ணைத் தொடச் செய்து பலனை அறிந்து கொள்ளலாம்.

ராம நாமம்

பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். ஸ்ரீராம நவமியன்று ராமநாமம் சொல்வதும், ராமநாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப்படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டுகிறது.

அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ராம நாமத்தை சொல்லி ராம நவமி கொண்டாடுவோம். தசரத மைந்தனின் அருள் பெறுவோம்.

ராமநவமி அன்று நீர்மோர், பானகம்

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீராமபிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள்

ஸ்ரீராமநவமி பூஜை செய்வது எப்படி?


ஸ்ரீராமநவமி விழா பல இடங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும் பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நாட்களில் ஸ்ரீராமரை வழிபட்டு விரதம் மேற் கொள்வர். பஜனைகள்,ராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர்,சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.ஸ்ரீராம நவமியன்று வீடுகளில் மாவிலை கட்டுவர் மாக்கோலம் போடுவார்கள்.

ராமநவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி,பூஜை அறையை சுத்தம் செய்து அலங்கரித்து, பட்டாபிஷேக ராமர் படத்திற்கு பூச்சூடி, பொட்டு வைத்து பூஜைகள் செய்யப்படும்.நைவேத்தியங்கள் படைத்து ராம நாமம் சொல்லி பூஜிக்க வேண்டும்.

ஸ்ரீராமர் விசுவாமித்திர முனிவருடம் இருந்த போதும், ராமர்14 ஆண்டுகள் வன வாசம் இருந்த போதும், நீர் மோரையும், பானகத்தையும் தாக சாந்தியாக அருந்தினாராம். அதனால் ராம நவமியில், ராமனுக்கு நீர் மோர், பானகம் படைப்பது முக்கியம்.

படைத்து, பூஜை கைங்கரியங்கள் செய்வதோடு, ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும்,ராம நாமத்தை பிறர் சொல்லக்கேட்பதும்,ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும், ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ஸ்ரீராம....

ஸ்ரீராம என்று சொன்னாலே ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும்.ஸ்ரீராம நவமியை, வட மாநிலங்களில் பத்து நாள் கொண்டாடி மகிழ்கின்றனர். தென் பகுதியிலும் வைணவ ஷேத்திரங்களில் உற்சவங்களோடு ராமநவமி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராம நவமிக்கு பத்து தினங்களுக்கு முன்பே, ராமாயணம் படிக்கத்துவங்கி ஸ்ரீராம நவமி அன்று, ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு செய்ய வேண்டும்.

சிவாலயங்களில் வழிபட வேண்டிய முறை

1. நீராடி தூய ஆடை உடுத்தித் திருநீறு அணிந்து முடிந்தால் ருத்ராட்சமும் அணிந்து செல்ல வேண்டும்.

2. மலர், தேங்காய், பழம், பூ, சூடம் ஆகிய இவற்றுள் அவரவர் வசதிக்கேற்ப இயன்றவைகளை எடுத்துச் செல்ல வேண்டும்.

3. கோபுரத்தைக் கண்டவுடன் இரு கைகூப்பி வணங்க வேண்டும்.

4. நமச்சிவாய ஐந்தெழுத்தை மனதில் ஜபித்தவாறே செல்ல வேண்டும்.

5. தல விநாயகரைத் தரிசித்துக குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டுக் கொண்டு செல்ல வேண்டும்.

6. பலி பீடம், நந்தி ஆகியவற்றை வணங்கிச் செல்ல வேண்டும்.

7. உள்ளே மூலமூர்த்தியை வணங்கிச் சுற்றிலுமுள்ள உற்சவ மூர்த்திகளையும் சண்டேசுவரரையும், பிற சந்நிதிகளையும் வணங்க வேண்டும்.

8. திருநீற்றினை இருகையால் பணிவுடன் பெற்றுக்கீழே சிந்தாது அணிந்து கொள்ள வேண்டும்.

9. ஆலயப் பிரகாரத்தை மும்முறை வலம் வர வேண்டும்.

10. தரிசிக்கும் காலத்தில் சந்நிதிகளுக்கு ஏற்ப துதிப் பாடல்களைச் சொல்லி வழிபடுதல் வேண்டும்.

11. வெளியே வந்து கொடி மரத்தின் கீழ் வீழ்ந்து வணங்க வேண்டும். (உள்ளே எந்த சந்நிதியிலும் தரையில் வீழ்ந்து வணங்க கூடாது)

12. சிறிது நேரம் அமர்ந்து அவரவர் நிலைக்கேற்ப தியானம் செய்து பின் அங்கிருந்து புறப்பட்டுச் சிவ சிந்தனையோடு செல்ல வேண்டும்.

பஞ்சாட்சர மந்திரமே மிகவும் சக்தி வாய்ந்தது

.
சிவ மந்திரங்களை நீங்கள் பாராயணம் செய்யும் போது வாழ்வின் எல்லா இன்பங்களையும் பெறுவீர்கள். சிவ மந்திரங்களுள் "நம சிவாய'' என்னும் பஞ்சாட்சர மந்திரமே மிகவும் சக்தி வாய்ந்தது. பிறர் காது கேட்க மந்திரத்தை உரக்கக் கூறுவது கூடாது.
தனக்கு மட்டும் கேட்கும் அளவு உதட்டசைவில் கூறுவது மத்திமம். மானசீகமாக மந்திரத்தை மனத்திற்குள் சிந்தனை செய்து ஜபிப்பதே உத்தமம். மந்திரங்களைப் பொருள் அறியாமல் ஜபித்தாலும் பலன் உண்டு.

சிவபெருமானுக்கு 5 வகை செயல்

சிவபெருமானுக்கு ஐந்து செயல்கள் உண்டு.
1. ஆக்கல் : உற்பத்தி, உலகம், பிரபஞ்சம் எல்லாமே அவனிடத்திலிருந்து தான் உற்பத்தியானது. இதைத்தான் படைக்கும் தொழிலுக்கு அதிகாரி சிவன் என்றார்கள்.
2. காத்தல்: இதை வடமொழியில் ஸ்திரி என்பார்கள். படைத்து விட்டால் போதுமா? அதைக் காத்து நிற்க வேண்டுமே அத்தொழிலும் சிவனுடையதே.
3. அழித்தல் : படைத்தல், காத்தல் என்ற இரு வினைகளுக்கு அதிகாரியாக விளங்குபவனுக்கு அழித்தல் தொழில் தானே வந்தடைகிறது.
4. மறைத்தல் : (திரோபவம்) 5. அருளல் : சிவன் கருணாமூர்த்தி என்பதைக் குறிக்கிறது. இந்த ஐந்து மாபெரும் சக்திகளால் தான் உலகமே இயங்குகிறது. இந்த இயக்கத்தை ஆடல் என்றார்கள். ஆடுபவன், ஆட்டுவிப்பவன் சிவபெருமான்.
ஐந்து நந்திகள்......
பெரிய சிவாலயங்களில் 5 வகையான நந்திகள் அமைந்திருப்பார்கள். இந்திர நந்தி, வேத நந்தி, ஆத்ம நந்தி, மால்விடை நந்தி, தரும நந்தி ஆகியவை தான் அவை. இவைகளில், இந்திர நந்தியை கோவிலுக்கு வெளியே சற்றுத் தொலைவில் கருவறையை நோக்கி அமைக்கின்றனர்.
வேத நந்தி அல்லது பிரதம நந்தியை சுதையாலும், சுண்ணாம்பாலும் மிகப் பெரிய அளவில் பெரிய மண்டபத்தினுள் அமைப்பார்கள். ஆத்ம நந்தி கொடி மரத்தின் அடியில் அமைகிறது. இதற்கே பிரதோஷ கால சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
மால்விடை நந்தி சக்தி பதமான இரண்டாவது பிரகாரத்தில் அமைகிறது. தரும நந்தி இறைவனுக்கு அருகில் மகா மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்

சிவபெருமான் ஆடிய 7 வகை தாண்டவங்க


சிவபெருமான் ஆடிய 7 வகை தாண்டவங்களும் அவை ஆடப்பட்ட இடங்களும் வருமாறு:-

1. படைத்தல் செயலாகிய காளிகா தாண்டவம் (திருவாலங்காடு)
2. காத்தலுக்குரிய கவுரி தாண்டவம் (திருப்பத்தூர்)
3. காத்தல் செயலுக்கு சந்தியா தாண்டவம் (மதுரை)
4. அழித்தலுக்குரிய சங்கார தாண்டவம் (ஆதாரமில்லை)
5. மறைத்தலுக்கு திரிபுர தாண்டவம் (குற்றாலம்)
6. அருளலுக்கு ஊர்த்தவ தாண்டவம் (திருநெல்வேலி)
7. ஐந்தொழிலுக்கு ஆனந்த தாண்டவம் (சிதம்பரம)

பஞ்சபூத தலங்கள்............

1. காஞ்சீபுரம் - பிருத்வி (நிலம்)மூலாதாரம்
2. திருவானைக்காவல் - அப்பு (நீர்)சுவாதிஷ்டானம்
3. திருவண்ணாமலை - தேயு (தீ)மணிபூராகம்
4. காளஹஸ்தி - வாயு (காற்று)அனாகதம்
5. சிதம்பரம் - ஆகாயம் (வான்)விசுத்தி

சிவ வடிவங்கள்-64

சிவபெருமான் சைவர்களின் தலைவராக வழிபடக்கூடிய கடவுள் ஆவார். இவர் மும்மூர்த்திகளுள் ஒருவர். முதல்வன் என்றும், மூவரும் அவனே என்றும், மூவரும் அறியாதவர் என்னும் தத்துவத்தை சைவ சித்தாந்தம் கூறுகிறது. சிவனை சிவம் என்றும், சிவப்பரம்பொருள் என்றும் சைவர்கள் அழைக்கின்றார்கள்.

சிவன்முப்பத்தாறு தத்துவங்களையும் கடந்து நின்று ஐந்தொழில்களையும் செய்து, ஆன்மாக்களின் மூன்று மலங்களையும் போக்கி வீடுபேறு அருளுகிறார். அருவத் திருமேனியுடைய சிவம் `சத்தர்' என்றும், அருவுருவத் திரு மேனியுடைய சிவம் "பரம்பொருள்' என்றும், உருவத் திருமேனியுடைய சிவம் `பிரவிருத்தர்' என்றும் சைவர்களால் அழைக்கப்படுகிறது.

சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை'' (பூரணத்துவம்), "மங்களமானது'' என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவை:- காலையில் தரிசிக்க நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க பாவம் அகலும்
அர்த்த சாமத்தில் தரிசிக்க வீடுபேறு கிடைக்கும்.

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.சிவனின் ஐந்து முகங்கள் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம். இம்முகத்தின் மூலம் ஆகம ரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்களால் வணங்குகிறார்கள். இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொருபங்கள் என்றும் குறிப்பிடலாம்.

மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன.சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதைவிட லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என வியாசர் மகாபாரதத்தில் கூறி இருக்கிறார்.

`லிங்கம்' என்னும் சொல்லுக்கு எல்லாம் தோன்றி மறையும் மூலம் எனவும் `மங்கலத்தைத் தரும் பரம்பொருள்' எனவும், `அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும் மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மை கொண்டது' என்றும் சிவாகமங்கள் விளக்குகின்றன.ஆலயங்களில் ஸ்தாபித்த லிங்கம் அசலம், இல்லங்களில் வைத்துப் பூஜிக்கும் லிங்கம் சலம்.

ஈசன் கருணைப் பெருக்கால் தோன்றியது சுயம்புலிங்கம்.சிவ வடிவங்கள் மொத்தம் 64 ஆகும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என மூன்று வகைக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. போக வடிவம் என்பது உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர் முதலானவற்றை குறிக்கும்.

யோக வடிவம் என்பது தட்சிணாமூர்த்தி சுகாசனர் முதலானவற்றை குறிக்கும். வேக வடிவம் என்பது கங்காளர், வீரபத்திரர் முதலானவற்றை குறிக்கும். இவை முறையே உயிர்களுக்கு போகத்தை அருளுவதற்கும், யோகத்தை அருள்வதற்கும், வினைகளை நீக்கி அருள்வதற்கும் ஏற்பட்டவை.

சிவலிங்கம்

தேவர்கள் சிவலிங்க வழிபாடு செய்வதற்காகவே விசுவ கர்மாவிடம் பற்பல சாந்தித்யங்களோடு கூடிய சிவலிங்கங்களைப் பெற்றனர். அவை :

அசுவினி தேவர்கள் - மண்ணாலான லிங்கம்
இந்திரன் - பதுமராக லிங்கம்
எமதர்மன் - கோமேதக லிங்கம்
சந்திரன் - முத்து லிங்கம்
சரஸ்வதி - சொர்ண லிங்கம்
வருணன் - நீல லிங்கம்
வாயுதேவன் - பித்தளை லிங்கம்
விஷ்ணு - இந்திர லிங்கம்
நாகர்கள் - பவள லிங்கம்
பிரம்மன் - சொர்ண லிங்கம்
ருத்திரர்கள் - திருவெண்ணீற்று லிங்கம்
குபேரன் - சொர்ண லிங்கம்
மகாலட்சுமி - நெய்யினாலான லிங்கம்

நைவைத்தியமும் பலன்களும்.............

சிவபெருமானுக்கு நாம் படைக்கும் நைவேத்திய பொருட்களால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

1. தயிர் சாதம், நீர் மோர் - மூல பவுத்திரம், எலும்புருக்கி நோய் தீரும்.

2. பால், சர்க்கரைப் பொங்கல் - வயிற்று கோளாறு தீரும்.

3. தேன், திணை மாவு - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

4. தயிர் சாதம் - காரியத் தடை நீங்கும்.

5. எலுமிச்சை, தேங்காய் சாதம் - அடிவயிற்றில் இருந்து தொடை வரை உள்ள நோய்கள் தீரும்.

6. வெண்பொங்கல், கடலை, சுண்டல்-ஆஸ்துமா, மூச்சு சம்மந்தமான நோய் தீரும்.

7. பங்குனி மாத பிரதோஷத்தன்று தேங்காய் சாதம், தக்காளி சாதம்- மணக்கிலேசம், பித்தம், பைத்தியம் தீரும்.

சிவபூஜைக்கான மாதங்களும், மலர்களும்

சித்திரை-பலாசம்,
வைகாசி-புன்னை,
ஆனி- வெள்ளெருக்கு,
ஆடி-அரளி,
ஆவணி-செண்பகம்,
புரட்டாசி- கொன்றை,
ஐப்பசி-தும்பை,
கார்த்திகை-கத்திரி,
மார்கழி-பட்டி,
தை- தாமரை,
மாசி- நீலோத்பலம்,
பங்குனி-மல்லிகை.

மாத பவுர்ணமிகளில் கீழே குறிப்பிடப்படுவனவற்றால் சிவபூஜை செய்தால் அனைத்து விருப்பங்களையும் அடையலாம்.

சித்திரை-மரிக்கொழுந்து.
வைகாசி-சந்தனம்,
ஆனி-முக்கனிகள்,
ஆடி-பால்,
ஆவணி-நாட்டுச்சர்க்கரை,
புரட்டாசி- அப்பம்,
ஐப்பசி-அன்னம்,
கார்த்திகை-தீபவரிசை,
மார்கழி-நெய்,
தை-கருப்பஞ்சாறு,
மாசி-நெய்யில் நனைந்த கம்பளம்,
பங்குனி-கெட்டித்தயிர்

சிவபூஜைக்குரிய மலர்கள்- பலன்கள்

செந்தாமரை- தனலாபம், வியாபார விருத்தி, ஆயுள் விருத்தி

* மனோரஞ்சிதம், பாரிஜாதம்-பக்தி, தம்பதி ஒற்றுமை, ஆயுள்விருத்தி

* வெண்தாமரை, நந்தியாவட்டை, மல்லிகை, இருவாட்சி-மனச்சஞ்சலம் நீங்கி, புத்திக்கூர்மை ஏற்படும். சகலகலாவிருத்தி.

* மாசிப்பச்சை, மரிக்கொழுந்து-நல்ல விவேகம், சுகபோகங்கள், உறவினர் ஒற்றுமை உண்டாகும்.

* மஞ்சள் அரளி, தங்க அரளி, செவ்வந்தி-கடன் நீங்கும் கன்னியருக்கு திருமண பாக்கியம் ஏற்படும்.

* செம்பருத்தி, அடுக்கு அரளி- புகழ், தொழில் விருத்தி.

* நீலச்சங்கு-அவச்சொல், அபாண்டம், தரித்திரம் நீங்கும் அருளும் ஆயுளும் கிட்டும்.

* வில்வம் கருந்துளசி, மகிழம்பூ- சங்கடங்கள் நீங்கி, சகலகாரியமும் கைக்கூடும்.

தாமரை, செண்பகம் ஆகியவற்றை மொட்டுகளாகவும் பூஜை செய்யலாம். ஏனையவை மலர்ந்திருக்க வேண்டும்.குங்குமப்பூ தவிர மற்ற முள் உள்ள பூக்கள் பூஜைக்கு உகந்தவை அல்ல.

கிளுவை, விளா, வெண்நொச்சி, மாவிலங்கை, வில்வம் ஆகியவை பஞ்ச வில்வங்களாகும்.மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, சதுர்த்தசி, அஷ்டமி, நவமி நாள்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்க கூடாது.

சிவனை எப்படி வணங்க வேண்டும்........

சிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3,4,7,9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக்கூடாது. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். கிழக்கு நோக்கிய சன்னதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.
தெற்கு, மேற்கு நோக்கிய சன்னதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும். வடக்கு நோக்கிய சன்னதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போதும், சங்கராந்தி காலத்திலும் மேற்கே கால் நீட்டி நமஸ்கரிக்கலாகாது.
அதே சமயம் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும். பிராகாரத்தில் பிரதக்ஷிணம் செய்யும்பொழுது மிகவும் நிதானமாகச் செய்யவேண்டும். உட்பிராகார பிரதக்ஷிணத்தைவிட வெளிப்பிரகார பிரதக்ஷிணமே சாலச் சிறந்தது. 3,5,7,7,15,21 என்ற எண்ணிக்கையில் ஒன்றினை மேற்கொண்டு செய்யலாம்.

சிவலிங்க தத்துவம்

சிவலிங்கத்தின் அடிப்பாகம் பிரம்ம பாகமாகும். இது, மனிதனின் உயிர் மூச்சுக்குரியது. நடுப்பாகம் மனிதனின் தசை, ரத்தம் ஆகியவற்றிற்கு பாதுகாப்பானது. மேல்பாகம் மனிதனின் எலும்பு, நரம்பு ஆகியவற்றை குறிக்கிறது.இப்படிப்பட்ட சிவலிங்கத்தை பூஜை செய்தால் மும்மூர்த்திகளை பூஜை செய்த பலனை பெறலாம்.

சிவன் கோவில் திசைகளின் பலன்கள்.........

வடகிழக்கு பார்வை - வாதநோய் தீரும்
தெற்கு பார்வை - அகால மரணம் நீங்கும்.
மேற்கு பார்வை - திருமண தடை நீங்கும், பிரிந்த தம்பதிகள் சேரும்.வடமேற்கு - பொன்னும்,பொருளும் சேரும்
தென்மேற்கு - தெய்வீக அருள் உண்டாகும்
வடக்கு - வேலை வெற்றியடையும்.

எந்தெந்த கிழமையில் என்னென்ன நைவேத்யம்?

ஞாயிறு-சர்க்கரைப்பொங்கல்
திங்கள்-பால் (அ)தயிர் அன்னம்
செவ்வாய்-வெண்பொங்கல்
புதன்-கதம்பசாதம்
வியாழன்-சித்ரான்னம்
வெள்ளி-பால் பாயசம்
சனி-புளிசாதம்,

சிவபூஜைக்கு கத்தரிக்காய் பக்குவம் நிவேதனம் செய்வது விசேஷம்.சிவபூஜைக்கு பின்னர் இருபது சிவபக்தர்களுக்கு அன்னம் அளிப்பது மிகவும் விசேஷம். 108 ருத்ர காயத்ரி ஜபிப்பது விசேஷம்.

சிவலிங்க பூஜையால் நன்மை அடைந்தவர்கள்

சிவலிங்க பூஜையால் நன்மை அடைந்தவர்கள்

1. வெள்ளை யானை, சிலந்தி, பாம்பு, முக்தி நிலை பெற்றன-ஸ்ரீகாளஹஸ்தி இராகு, கேது கிரகங்கள்.

2. கண்ணப்பார் முக்தி அடைந்தார்-ஸ்ரீ காளஹஸ்தி.

3. மார்க்கண்டேயர் நீண்ட ஆயுளைப் பெற்றார்-திருக்கடையூர்.

4. அம்பிகை வழிபட்ட தலம் - காஞ்சிபுரம்.

5. விநாயகர் வழிபட்ட தலம் - திருச்செங்கோடு.

6. முருகன் வழிபட்ட தலம் - திருமுருகன் பூண்டி.

7. திருமால் வழிபட்ட தலம் - திருவீழிமிழலை.

8. பிரம்மன் வழிபட்ட தலம் - சீர்காழி.9. இந்திரன் வழிபட்ட தலம் - மதுரை.

10. யானை வழிபட்ட தலம் - திருவானைக்காவல்.

11. எறும்பு வழிபட்ட தலம் - திருவெறும்பூர்.

12. பார்வதிதேவி மயிலாக வழிபட்ட தலம் - மயிலாப்பூர்.

ஊமத்தம் பூ பூஜை.........

எல்லோராலும் ஏற்கப்படாத ஊமத்தம் பூவை தனது பூஜைக்கு உகந்ததாகக் கொள்ளும் கருணைக்கடல் சிவபெருமான் ஆவார். அதிலும் குறிப்பாக ஸ்ரீ அக்னீஸ்வரரை ஊமத்தம் பூ கொண்டு வழிபடுகிறவர்களுக்கு மனக்கவலைகள் தீரும். பில்லி, சூனியங்கள் அகலும். சித்தம் தெளியும்.

சிவாலய பிரதட்சிண பலன்கள்

நந்தியையும் பலிபீடத்தையும் சேர்த்தே பிரதட்சிணம் செய்ய வேண்டும். அதனால் கிடைக்கும் பலன்கள் வருமாறு:-

3 முறை செய்தால் - நினைத்தது நடக்கும்.
5 முறை செய்தால் - வெற்றி உண்டாகும்.
7 முறை செய்தால் - நல்ல குணம் ஏற்படும்.
9 முறை செய்தால் - குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
11 முறை செய்தால் - நீண்ட ஆயுள் கிடைக்கும்.
13 முறை செய்தால் - வேண்டுதல் நிறைவேறும்.
15 முறை செய்தால் - செல்வம் கிடைக்கும்.
17 முறை செய்தால் - செல்வம் பெருகும்.
108 முறை செய்தால் - அஸ்வமேத யாகப் பலன்.
1008 முறை செய்தால் -ஒருவருட தீட்சை யாகப்பலன்

சிவலிங்க வழிபாடும், பலன்களும்

தர்ப்பைப் புல் லிங்கம் - லட்சுமி கடாட்சம்
ஆற்றுமணல் லிங்கம் - மோட்சம்
வெண்ணெய் லிங்கம் - நல்வாழ்வு
அரிசிமாவு லிங்கம் - சிறப்புகள் சேரும்
அன்ன லிங்கம் - தீர்க்காயுள்
களிமண் லிங்கம் - மனச்சாந்தி
பசுஞ்சாண லிங்கம் - ஆரோக்கியம்

ராவணனிடம் உபதேசம் கேட்ட இராமர்மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான்

மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம் இராமன், பவ்யமாக , அவன் காலடியில் நின்று , உபதேசம் கேட்டான் . உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும் , என வேண்டினான் .
இராவணன் உபதேசித்தான் ........
1 .
உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர் .
2 .
தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே .
3 .
உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு .
4 .
நான் அனுமனை சிறியவன் என எடை போட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே .
5 .
வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள் .
6 .
இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய் .

ஏன் ஆண்டவனுக்கு ஆடை ஆபரணம்


ஏன் ஆண்டவனுக்கு ஆடை ஆபரணம்

ஆடை ஆபரணம் ஆண்டவனுக்கு வேண்டுமா..

 

 

உதவி பெற்றதற்கு நன்றி சொல்வதற்கு ஒரு சிறந்த கடமை. ஒரு சிறு புல்லைக்கூட சிருஷ்டிக்கத் திறனற்ற மனிதனுக்கு இத்தனை உணவும், உடையும், மற்ற உபகரணங்களும் வழங்கும் ஆண்டவனுக்கு நன்றி காட்டுவது நமது கடமை. இவ்வாறு நன்றி கூறும் அடையாளமாகவே நாம் உண்பதை அவனுக்கு முன் காட்டி விவேதனம் செய்ய வேண்டும். அவனுக்குக் காட்டிவிட்டுப் பிறகு நாம்தான் உண்ணப்போகிறோம். நாம் பலவிதமான ஆடை ஆபரணங்கள் அணிவதற்கு அருள் செய்யும் ஆண்டவனுக்குத் திரு ஆபரணங்களையும் வஸ்திரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். எல்லோருமே இவ்விதம் வீட்டில் பூஜை செய்து, திரவியங்களை ஈஸ்வரார்ப்பணம் செய்ய இயலாது. எனவே, சமுதாயம் முழுவதும் சேர்ந்து இப்படி சமர்ப்பணம் பண்ணும்படியான பொது வழிபாட்டு நிலையங்களாக ஆலயங்கள் எழுந்துள்ளன

நந்தியின் தவமும் ஈசன் தந்த பட்டமும்


சிவாலயங்களில் கர்ப்பக்கிரகத்திற்கு எதிரில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் நந்திதேவர் தருமவிடை எனப்படுவார். அழிவே இல்லாதது தருமம். அது விடை (ரிஷபம்) வடிவில் இறைவனிடத்தில் சென்றடைய, அந்த நந்தியின் மீது ஈஸ்வரன் அமர்ந்திருக்கிறார். தருமம் இறைவனைத் தாங்குகிறது. அதுவிடும் மூச்சுக்காற்றுதான் இவருக்கு உயிர்நிலை தருகிறது. இதனால்தான் மூலவரின் தொப்புள் பகுதியை உயிர் நிலையாகக் கொண்டு, அதன் நேர்க்கோட்டில் நந்தியின் நாசி அமையுமாறு அமைக்கப்படுகிறது. இம்மூச்சு தடையேதுமின்றி மூலவரைச் சென்றடையத்தான் நந்தியின் குறுக்கே போவதும் விழுந்து வணங்குவதும் கூடாது என்பது வழக்கத்தில் இருக்கிறது.

ருத்ரன், தூயவன், சைலாதி, அக்னிரூபன், மிருதங்க வாத்யப்ரியன், சிவவாஹனன், தருணாகரமூர்த்தி, வீரமூர்த்தி, தனப்ரியன், கனகப்ரியன், சிவப்ரியன்- இப்படி பல்வேறு சிறப்புப் பெயர்களோடு புராணங்களும் ஆகமங்களும் போற்றும் மூர்த்தி நந்தியெம் பெருமானே.

திவ்ய வடிவமும், நெற்றிக் கண்ணும், நான்கு புயங்களும், கையில் பிரம்பு உடைவாளும், சடைமுடியும், சந்திரகலையும், நீலகண்டமும், யானை புரியும், இருபுயங்களில் மானும் மழுவும் கொண்டு இன்னுமொரு சிவரூபனாகவே திகழும் நந்தியின் கதைதான் என்ன?

சிலாதர் கண்டெடுத்த சிவக்குழந்தை
வீதஹவ்யர் என்ற பெயர் கொண்ட முனிவர், தம் சிறு வயதில் சிவனடியார் ஒருவரின் அன்னப் பாத்திரத்தில் விளையாட்டாக கல்லைப் போட்ட தீவினையால், இறந்த பிறகு பெரும் பாறை ஒன்றைத் தின்று தீர்க்க வேண்டும் என்ற தண்டனை இருப்பதை யமதூதர்கள் மூலம் முன்னரே அறிந்து, இறப்பதற்கு முன்னரே பாறையைத் தின்று தன் பாவம் போக்கிக்கொண்டவர். ஆதலால்தான் இவருக்குசிலாத முனிவர்என்ற பெயர் வந்தது.

திருமணம் முடிந்து பிள்ளை பெற்று பிதுர்க்கடனை நிறைவேற்ற சிலாத முனிவர் தவறியதால், அவரின் முன்னோர் நரகத்தில் உழன்று கொண்டிருந்தனர். இதனால் வருந்திய சிலாத முனிவர் சித்திரவதி என்ற பெண்ணை மணம் செய்து கொண்டும் பிள்ளைப் பேறு கிடைக்கவில்லை. கலக்கமுற்ற சிலாத முனிவர் இந்திரனின் ஆலோசனைப்படி ஸ்ரீ சைலமலை சென்று புத்திர காமேஷ்டி யாகம் செய்ய முற்பட்டபோது, தங்கப் பெட்டியில் சிவரூப சுந்தரனாக குழந்தையொன்றைக் கண்டெடுத்தார். அந்தக் குழந்தையே நந்தியெம் பெருமானாவார். நந்தி என்றால் மகிழ்ச்சி என்று பொருள். சிலாதரின் கவலையைப் போக்கி மகிழ்ச்சி உண்டாக்கும் விதம் கிடைத்தவர் ஆதலால் நந்தி என்று அவருக்குப் பெயரிட்டார் சிலாதர்.

நந்தியின் தவமும் ஈசன் தந்த பட்டமும்

சிறு வயதிலேயே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்தார் நந்தி. இந்நிலையில் சிலாதரின் இல்லத்துக்கு வருகை தந்த மித்ரன், வருணன் போன்றோர் நந்தியின் ஆயுள் இன்னும் ஒரு வருடமே என்று சிலாதரிடம் எடுத்துச் சொல்ல, மிக வருத்தம் கொண்டார் சிலாத முனிவர். நந்தி தன் தந்தைக்கு ஆறுதல் கூறிவிட்டு, சிவதவம் செய்யக் கிளம்பினார். முந்நூறு வருடங்கள் கடும் தவம் செய்தார் நந்தி. இறுதியாக அவரின் தவத்தினால் மகிழ்ந்த ஈசன், நந்தியைத் தன் அம்சமாகவே மாற்றி, தன் சிரசிலிருந்து மாலை எடுத்து நந்திக்கு அணிவித்து, அதிகார நந்தி என்ற பட்டத்தையும் அளித்து கயிலாயத்தில் அமர்த்தினார்.

தவம் செய்ததனால் நந்தியெம் பெருமான் சிவாலயங்கள்தோறும் வீற்றிருக்கும் பேறும், பிரதோஷ காலங்களில் வழிபடுவோருக்கு அருள் வரம் தரும் பேறும் கிடைக்கப் பெற்றார்.

சிவபெருமான் இருக்குமிடம் கயிலாயம். சிவபெருமானை நேரடியாகச் சென்று தரிசித்துவிட முடியாது. நந்தி உத்தரவு பெற்றுத்தான் கயிலைக்குள் நுழைய முடியும். எதையாவது செய்ய முடியாமல் யாராவது தடுத்தால், “இவன் என்ன நந்தி மாதிரி தடுக்கிறான்என்பார்கள். நந்தியின் வேலை தடுப்பதுதான்.

முப்புரம் எரிப்பதற்காக சிவன் புறப்பட்டார். அப்போது அச்சு முறிந்தது. விஷ்ணு நந்தியாகி, தேரினைத் தாங்கினார். தர்மதேவதை சிவனுக்கு நந்தியானார். அந்த நந்திதான் சிவாலயத்தின் கர்ப்பக் கிரகத்துக்கு மிக அருகில் இருக்கும் நந்தியாகும். அந்த நந்திக்கும் மூலவருக்கு இடையில் குறுக்கே போகக் கூடாது என்பார்கள். தர்ம நந்தியின் மூச்சுக்காற்று மூலவர்மீது பட்டுக்கொண்டே இருக்கும் என்பது ஐதீகம்.

 
பங்குனியில் நந்தியின் திருமணம்:
சிலாத முனிவர் திருவையாறு தலத்தில் உறையும் ஐயாறப்பர் பெருமான் மீது ஆழ்ந்த பக்தி கொண்டவர். ஆண்டுகள் பலவாகியும் மகப்பேறின்மையினால் மிகுந்த வருத்தமுற்ற சிலாதமுனிவர், தம் உயிரான ஐயாறப்பரைப் பூசித்து கடும் தவம் செய்தார். தனக்கு அறிவார்ந்த மகன் வேண்டுமென்று பிரார்த்தித்தார். சிலாத முனிவரே! என்னைப் போன்றே உனக்கொரு மகன் வேண்டும் என்றால் நீ புத்திரகாமேஷ்டி யாகம் செய்ய வேண்டும். யாகம் செய்ய யாக பூமியை உழும்போது பெட்டகம் ஒன்று தோன்றும். அதில் ஒரு புத்திரன் காணப்படுவான். அவனுக்கு ஆயுள் பதினாறு மட்டுமே. அவனை எடுத்துக்கொள்! என்று அசரீரியாகத் திருவாய் மலர்ந்தருளினார். சிவனருளை எண்ணி சிலாதமுனிவர் பெரிதும் மகிழ்ச்சியடைந்தார். இறைவன் அருளிய வண்ணம் யாக முடிவில் பூமியை உழும்போது ஒரு பெட்டகம் அகப்பட்டது. முனிவர் அதைத் திறந்து பார்த்தார். அதில் நான்கு தோள்களும் மூன்று கண்களும் பிறையணிந்த முடியும் கொண்டு விளங்கும் ஒரு மூர்த்தியைக் கண்டு வணங்கினார். ஐயாறப்பர் மீண்டும் அசரீரியாய், முனிவரே! பெட்டியை மூடித்திற என்று கட்டளையிட்டருளினார். பெட்டகத்திலிருந்த அம்மூர்த்தி முன்னைய வடிவம் நீங்கி பிரகாசத்தோடு அழகிய குழந்தை வடிவுடன் திகழ்ந்தது. அக்குழந்தையைக் கண்டு சிலாத முனிவரும் அவரது மனைவி சித்ராவதியாரும் பெருமகிழ்ச்சியும் பேரானந்தமும் அடைந்தனர்.

பெற்றோர் அக்குழந்தைக்கு செபேசுவரர் என்று நாமகரணம் செய்து வளர்த்து வந்தார்கள். செபேசுவரர் பதினான்கு வயதிற்குள் வேதாகம சாஸ்திரங்கள் உட்பட சகல கலைகளிலும் வல்லவரானார். அழகிலும் அறிவிலும் சிறந்த இம்மைந்தனை இன்னும் இரண்டு வருடத்தில் இழக்க நேருமே என்று ஏங்கி வருந்திய பெற்றோருக்கு ஆறுதல் கூறிவிட்டு ஐயாறப்பர் ஆலயத்தை அடைந்தார் செபேசுவரர். இறைவனைத் தொழுது வழிபட்டார். தனக்கு நீண்ட ஆயுளைத் தந்து பெற்றோரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தருளும்படி வேண்டினார். பின்னர் அங்கிருந்த அயனரி தீர்த்தத்திலே நீராடிய பிறகு, இடுப்பளவு நீரில் காலின் மேல் காலையூன்றி ஒற்றைக் காலில் நின்று, பஞ்சாட்சர மந்திரம் உச்சரித்தபடியே நீண்ட காலம் தவம் செய்தார். செபேசுவரரின் அருமைத் திருமேனியை நீரில் வாழும் ஜந்துகள் அரித்துத் தின்றன. செபேசுவரரின் உறுதியான தவத்தையும், வைராக்கியத்தையும், அன்பையும் கண்டு மகிழ்ந்த இறைவன் ஐயாறப்பர் அவருக்குக் காட்சியளித்தார். செபேசுவரர் வேண்டிய படியே நிலையான நீண்ட ஆயுளைத் தந்தருளினார். அதோடு, நிலைத்த பதினாறு பேறுகளையும் தந்தருள வேண்டும் என்று வரமாக அருளினார். மேலும், செபேசுவரரது புண்பட்ட உடலை நலமுறச் செய்தல் வேண்டுமெனத் திருவுளங் கொண்டு கங்கை நீர், மேகநீர், பிரமன் கமண்டலநீர், அம்மையின் முலைப்பால், இடபநந்தியின் வாய்நுரைநீர் எனும் ஐந்து நீரினாலும் தாமே அபிஷேகம் செய்தார், இறைவன். அதனால் செபேசுவரர் உடல் ஊறு நீங்கிச் சூரியன் போல் பிரகாசித்தார். சிலாத முனிவர் தம் மகனுக்குத் திருமணம் செய்விக்க எண்ணினார். அதற்கான நடவடிக்கை மேற்கொண்டார். வசிஷ்ட முனிவரின் பவுத்திரியும், வியாக்ரபாதமுனிவருடைய புத்திரியும், உபமன்யு முனிவரின் தங்கையுமாகிய சுயம்பிரகாச அம்மையாரை தமது புதல்வன் செபேசுவரருக்குத் திருமணம் செய்விக்க விரும்பினார்.

இறைவன் ஐயாறப்பர்; இறைவி அறம் வளர்த்த நாயகி ஆகியோரின் முன்னிலையில், திருமழபாடி வஜ்ர தம்பேசுவரர் கோயிலில் பவித்திரமான பங்குனித் திங்களில் புனர்வசு நட்சத்திரதினத்தில் செபேசுவரர்க்கும் சுயம்பிரகாச அம்மையாருக்கும் இனிதே திருமண விழா நடந்தேறியது. பின் செபேசுவரர் ஐயாறப்பரால் உபதேசம் பெற்று கைலாயத்தில் சிவகணங்களுக்குத் தலைவராகும் பதவியும்; முதன்மைத் திருவாயிலில் இருந்து காக்கும் உரிமையும், சைவ ஆச்சார்யருள் முதல் குருவாகும் தன்மையும் பெற்றார். இறைவன் அருளால் இத்தகைய பேறு பெற்ற செபேசுவரர் திருநந்தியெம்பெருமான் என்று அழைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து ஐயன் ஐயாறப்பரும்; அம்மை அறம் வளர்த்த நாயகியும், புதுமணத்தம்பதியரான நந்தியெம்பெருமானையும் சுயம்பிரகாச அம்மையாரையும் அழைத்துக் கொண்டு சப்த ஸ்தானத் தலங்களான திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களுக்குத் திருவுலா சென்று வருகிறார்கள். இறைவனும் இறைவியும் கண்ணாடிப் பல்லக்கிலும் நந்தியெம்பெருமானும் சுயம்பிரகாச அம்மையும் வெட்டிவேர் பல்லக்கிலும் உலா வருகிறார்கள். இந்நிகழ்ச்சி ஏழூர் திருவிழா என்று இன்றளவும் நடைபெற்று வருகிறது.