Thursday, April 4, 2013

கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்

கடவுளை வழிபட மனம் ஒன்றே போதும்… நம்மில் பலரும் காலை முதல் இரவு வரை பரபரப்புடன் செயல்படுகிறோம். இதில் பூஜை, புனஸ்காரம் இவற்றுக்கெல்லாம் நேரமில்லை என சொல்கிறோம். ஓய்வுக்குப் பின் பார்த்துக் கொள்ளலாம் என்ற முடிவும் பலரிடம் இருக்கிறது. ஆனால், பக்தி என்பதும் இளமை முதற்கொண்டே இருக்க வேண்டிய ஒன்று. “முதுமையில் என்னால் சொல்ல முடியுமோ முடியாதோ, அதனால் இப்போதே நாராயண நாமம் ஜபிக்கிறேன்’ என்று ஆழ்வார்கள் சொல்கிறார்கள். ஒருமுறை அர்ஜுனனுக்கு தான் மட்டுமே சிறப்பான சிவபூஜை செய்வதாக மமதை உண்டாயிற்று. இதை அறிந்த கண்ணன் அர்ச்சுனனை அழைத்துக் கொண்டு தேவலோகத்தில் பவனி வந்தார். ஓரிடத்தில் மலை போல குவிந்து கிடக்கும் மலர்க்குவியலை கண்டனர். அதன் மணம் மிக ரம்மியமாக இருந்தது. அர்ச்சுனன் அதை சிலர் அப்புறப்படுத்துவதை கண்டான். இதை இங்கே குவித்தவர் யார் என கண்ணனிடம் கேட்டான். மலர்களை அப்புறப்படுத்தும் பணியாளர்களிடமே கேட்கும்படி கண்ணன் கூறினான். அர்ஜுனனும் அவர்களிடம் கேட்க, “பேசுவதற்கு நேரமில்லை. அடுத்து சிவ பூஜை செய்வதற்குள் இவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் இன்னும் நிறைய மலர்கள் சேர்ந்து விடும்’ என்று பணியாளர்கள் சொல்லிவிட்டனர். யார் இவ்வளவு மலர்களைக் கொட்டி பூஜித்தது என ஆச்சரியப்பட்டான். கடைசியில் தனது சகோதரன், பீமனே இவ்வாறு செய்தவன் என்பதை அறிந்தான். “”அர்ஜுனா! பீமன் சிறந்த சிவபக்தன். உன்னைப் போல் வெளிப்படையாக பூஜிப்பதில்லை. மனப்பூர்வமாக மானஸ பூஜை செய்கிறான். அந்த வழிபாட்டில் அவன் ஈசனுக்கு அர்ப்பணிக்கும் கற்பனை மலர்களே இவை,” என்று மானஸ பூஜையின் பெருமையை எடுத்துரைத்தார் கண்ணன். மனோசக்தியின் ஆற்றல் மிக வலிமையுடையது. அதனால், மனப்பூர்வமாக இறைவனை வழிபடுவதும் மிக உயர்வுடையதே.

No comments:

Post a Comment