Wednesday, April 3, 2013

குனித்த புருவமும் -அப்பர்.

குனித்த புருவமும் = பரத நாட்டியத்தில் புருவங்கள் ஏறி இறங்குவதின் மூலம் பாவங்களை வெளிப்படுத்தும் கலை உண்டு அல்லவா? இங்கே இறைவன் தன் புருவங்களைக் குனிப்பதின் மூலம் அடியார்களின் குறைகளைக் கூர்ந்து கேட்டு அறிந்து, தன்னையே சரண் என வந்தவர்களின் குறைகளைக் களையும் விதமாய்ப் புருவம் குனித்துக் கொள்வதாயும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்= தன்னை அடைக்கலம் என நம்பி வந்தோரை வருக என வரவேற்று அவர்களின் பிழைபொறுக்கும் விதமாய் கருணையுடன் கூடிய சிரிப்பையும், பனித்த சடையும்= சிவநெறியாளர்க்கு உரிய ஒழுக்கத்தைக் காட்டும் விதமாய் அமைந்ததாம் அந்தச் சடை பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்= நெருப்பை ஒத்த வண்ணத்தை ஒத்த இறைவன், தன்னிடம் நெருங்கும் பொருட்களை நெருப்பானது எவ்விதம் எரித்துத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறதோ, அவ்வாறே இறைவனும் தன்னிடம் நெருங்கும் அடியார்களைத் தன்னில் ஐக்கியம் செய்து கொள்ளுகிறான் என்னும் விதமாய் இனித்த முடைய எடுத்த பொற்பாதமும்=இறைவன் தன் தூக்கிய திருவடியால் அனைத்து உயிர்களையும் பிறவிக்கடலில் இருந்து விடுவிக்கிறான். ஊன்றிய திருவடியால், இப்பிறவியின் அனைத்துக் கருமங்களான ஆணவம், கன்மம், மாயையை அழுந்தித் தேய்த்து அவற்றை அகற்றுகிறான். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆடல் வல்லானின் ஆடல் திருக்கோலத்தைக் காணப் பெறுவோருக்கு வேறு என்ன வேண்டும் இந்த உலகில்? இதைவிடப் பேரானந்தம் வேறே உண்டோ? என்கிறார் அப்பர்.

No comments:

Post a Comment