Thursday, August 22, 2013

கால்தூசுக்கு சமானம் என்று இனியும் சொல்லாதீர்!

யாரையாவது ஆத்திரத்தில் திட்டும் போது, ""என் கால் தூசுக்கு நீ சமமாவாயா? என்று கேட்பது வாடிக்கை. ஆனால், காஞ்சி மகாப்பெரியவர்  சொல்லும் இந்த கருத்தைக் கேட்டபிறகு, அப்படி சொல்ல முடியுமா என்ன! உணர்ச்சி வேகங்களின் பிரவாகம் வியாதியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறபோது கல்விதான் அதற்கு மருந்து. மூளை வளர்ச்சி மட்டுமின்றி முழு மநுஷ்ய வளர்ச்சிக்கான கல்வியாக அது இருக்க வேண்டும்.  மருந்து சாப்பிடும்போது  பத்தியம் வைக்காமலிருக்க மாட்டார்கள். மருந்தை விடக் கூடப் பத்தியமே வியாதி தீர்ப்பதில் அதிக உபகாரம் செய்வதும் உண்டு.  இதுபோலவே,"வித்யை என்கிற கல்வி மருந்தோடு சேரும் பத்தியமாக, "விநயம் என்ற எளிமையையும் ஆன்றோர் வைத்திருக்கிறார்கள். வித்யையும், விநயமும் யுவ பிராயத்தினருக்கு (இளைஞர்களுக்கு) இரண்டு கண்கள் மாதிரி. இப்போது விநயத்தில் அடங்கி, தாழ்ந்து இருந்தால் பிற்பாடு  உச்சநிலைக்கு உயரலாம். உதாரணத்துக்கு கால்தூசியை எடுத்துக் கொள்வோம். அது நம்முடைய காலுக்கு அடியில் பொடியூண்டாக இருக்கிறது. ஆனால், சட்டென்று காற்றிலே அந்தப் பொடி உயர்ந்து நம் தலைக்கு மேல் போய் விடுகிறதல்லவா? அப்படி, கல்வி கற்கும் நாளில் அடிநிலையில் அடங்கியிருந்தால், பிற்பாடு வாழ்க்கைக்குப் பொறுப்பெடுத்துக் கொள்ளும் நாளில் உயர்ந்த ஸ்தானம் பெறலாம்.  இந்த உண்மை நம்முடைய மகத்தான நாகரிகத்துக்கும்,  கலாசாரத்துக்கும் வாரிசாக உள்ள யுவர்களின்(இளைஞர்களின்) உள்ளத்தில் பதிய வேண்டும்.  கடவுள் அதற்கு கிருபை பண்ண வேண்டும். -காஞ்சி பெரியவர்

No comments:

Post a Comment