Thursday, August 22, 2013

பிரச்னை இருக்கா? செவ்வாயில் பேசுங்கள்!

பிரச்னை இல்லாத வாழ்க்கை ஏது! ஆனால், அது இழுத்துக்கொண்டே போனால் தீர்வு தான் என்ன! பிரச்னைகளை செவ்வாய்க்கிழமையன்று பேசி முடித்தால் அதற்கு தீர்வு கிடைக்கும் என்கிறார் ஜோதிடமுரசு மிதுனம் செல்வம்.நமது வாழ்க்கையில் ஆன்மிகமும், ஜோதிடமும் இரு கண்களாக இணைந்தே இருக்கின்றன. வாரம், நட்சத்திரம், திதி, யோகம், கரணம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு விஷயங்களையும், விசேஷங்களையும் ஏற்படுத்திக் கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் காலம்,நேரம், சகுனம் பார்ப்பது என்பது தொடர்ந்து வரும் நிகழ்வு தான். அதற்காக ஆதாரம், சான்றுகள் இல்லாமல் தலைகால் வைத்து,இதைச் செய்யாதே! அதைச் செய்யாதே! இந்த நேரம் பொல்லாத நேரம்! இந்த நாள் மோசமான நாள்! என்றெல்லாம் வதந்திகளை பரப்பினர். இதன் அடிப்படையில் ஒதுக்கப்பட்ட கிழமை தான் செவ்வாய். உண்மையில், செவ்வாய்க்கிழமையை ஒதுக்க வேண்டும் என்பதற்கு எந்தவித சாஸ்திர ஆதாரமும் இல்லை.மார்கழி மாதத்தை பீடை மாதம் என்பார்கள். ஆனால், உண்மையில் பீத(பீடு) மாதம் என்பது தான் பீடைமாதம் என வழக்கத்தில் வந்து விட்டது. மாதங்களில் நான் மார்கழி என்று கிருஷ்ணரும் கீதையில் கூறுகிறார். மார்கழி மாதத்திற்கு வந்த கதி தான் செவ்வாய்க்கிழமைக்கும் வந்துவிட்டது. இன்னும் சில ஜோதிட ஆதாரங்களையும் சொல்லலாம்.
நட்சத்திரங்களைப் பற்றிச் சொல்லும்போது, ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது, மூலம் மாமனாருக்கு ஆகாது என்று சொல்வார்கள். ஆனால், சப்தரிஷி வாக்கியங்களில் இதற்கு ஆதாரமோ, சான்றுகளோ இல்லை. இது போலத்தான், கிழமைகளைப் பற்றிய கருத்துகளும் மக்கள் மத்தியில் பதிந்து விட்டன. கிழமை என்ற சொல்லுக்கு உரிமை என்று பொருள். செவ்வாய் கிரகத்திற்கு உரிய நாள் என்பதால், செவ்வாய்க்கிழமை என்று அழைக்கப்படுகிறது. செவ்வாய் என்ற சொல்லுக்கே மங்களம் என்று தான் பொருள். சுபநிகழ்ச்சிகளையே மங்கள நிகழ்ச்சிகள் என்று சொல்வர். இவ்வாறு இருக்கும்போது, செவ்வாய்க்கிழமையை ஒதுக்கவேண்டிய அவசியம் அறவே இல்லை. செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியான அங்காரகனையும் மங்களன் என்ற வார்த்தையால் குறிப்பிடுவர். ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர் பூமாதேவியின் அம்சமாவார். ஆகையால்தான், இவரை பூமிகாரகன் என சாஸ்திரம் புகழ்கிறது. நம் உடம்பில் ரத்தம், வெப்பம் ஆகியவற்றிற்கும் செவ்வாயே காரணம். பெண்கள் பூப்படைதல், திருமணம், மண், மனை, வீடு, சகோதரன், உத்தியோகம் போன்றவற்றிற்கெல்லாம் செவ்வாயே அடிப்படைக்காரணம். நம் நாட்டில் தென்பகுதி, வடபகுதிகளில் மாறுபட்ட பழக்கவழக்கங்கள் உள்ளன. இங்கு நாம் செவ்வாய்க்கிழமையை காரணமே இல்லாமல் தவிர்க்கிறோம். வடநாட்டில் மங்கல நிகழ்ச்சிகள் சர்வ சாதாரணமாக நடக்கிறது. அவர்கள் செவ்வாயை மங்கள்வார் என்று குறிப்பிடுகின்ற னர். இந்நாளில் சுபநிகழ்ச்சிகளைச் செய்தால், யோகத்தை விருத்தி செய்யும் என்று நம்புகின்றனர். செவ்வாய்க்கிழமை மற்றும் செவ்வாய் ஓரையில் செய்வதற்கென்றே சில சுபநிகழ்ச்சிகள் உள்ளன. இந்தநாளில் சொத்துகள் வாங்குவது, விற்பது பற்றி பேசலாம். இடம், தோட்டம், நிலத்தைப் போய் பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். சகோதரர்களிடையே பிரச்னை இருந்தால் இந்நாளில் பேசித் தீர்க்கலாம். வேலையில் சேரலாம். பூமிபூஜை போடலாம். வீடு மாறலாம். பால்காய்ச்சலாம். இந்நாளில் வாங்கிய கடனை அடைத்தால் மீண்டும் கடன்படாத நிலைமைக்கு கூட வாய்ப்புண்டு. இந்தநாளில் முருகன் கோயில்களுக்குச் சென்று வழிபட்டால், நாளும் வினையும் நம்மை எதுவும் செய்யாது. செவ்வாய்க்கிழமையில் செய்கின்ற சுபநிகழ்ச்சிகள் நிலைத்து நின்று பலன் தரும்.

No comments:

Post a Comment