Friday, January 31, 2014

தெய்வத்தை நம்பு! மனிதர்கள் எவ்வளவு உயர்ந்த பிறப்பாயினும் நம்பாதே!


கந்தனும், குமரனும் ஒரு அரசரிடம் பணிபுரிந்தனர். கந்தன் முருக பக்தன். "முருகனாலேயே எல்லாம் நடக்கிறது' என்று மன்னர் உள்ளிட்ட எல்லாரிடமும் சொல்வான். குமரன் "காக்கா' பிடிப்பவன். "அரசரால் தான் எல்லாம் நடக்கிறது' என்று சொல்லித் திரிவான்.
இவர்கள் சொல்வதில் எது சரியானது என அரசருக்கு சந்தேகம் வந்தது. மந்திரியை அழைத்து அவர்களை பரீட்சிக்க சொன்னார்.
மந்திரி அவர்களிடம் நூறு வெள்ளிக்காசுகளைக் கொடுத்து, ""இதை வைத்துக் கொண்டு நீங்கள் நூறு நாட்கள் வெளியூரில் தங்க வேண்டும். பிறகு இங்கே வாருங்கள். இது அரச கட்டளை,'' என்றார்.
அவர்களும் புறப்பட்டனர். செல்லும் வழியில் ஒரு முருகன் கோயிலைப் பார்த்த கந்தன், முருகனுக்கு அபிஷேகம் செய்து, சர்க்கரைப் பொங்கல் படைத்தான். அதை அங்கு வந்த ஏழைகளுக்கு கொடுத்து, அவர்கள் பசியாறுவதைப் பார்த்து மகிழ்ந்தான். நூறு காசுகளும் ஒரே நாளில் செலவழிந்து விட்டது.
"அவனை வணங்குவது என் கடமை, என்னைக் காப்பது அவன் கடமை' என்று நினைத்தவனாய் பயணத்தைத் தொடர்ந்தான்.
வழியில், ஒரு வண்டி குளத்தில் விழுந்து இருவர் தண்ணீரில் தத்தளிப்பதைப் பார்த்தான். அவர்களைக் காப்பாற்றினான். அதன்பிறகு, தத்தளித்தவர்கள் அவ்வூர் ராஜகுமாரன் மற்றும் வண்டியோட்டி என்பதைத் தெரிந்து கொண்டான். அவர்கள் அவனை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர். தன் மகனைக் காத்த கந்தனுக்கு, ராஜ உபசாரம் செய்த மன்னன், தங்கள் அரண்மனையில் தங்கிச் செல்லும்படி வேண்டினான். கந்தனுக்கு நூறு நாட்களும் ராஜ உபசாரம் நடந்தது.
குமரன், ஒரு சத்திரத்தில்தங்கினான். அவனது பணத்தை தலைக்கடியில் வைத்திருந்தான். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது, திருடர்கள் அதைக் கவர்ந்து சென்று விட்டனர். விழித்த அவன், வருத்தமடைந்து, பசியோடு நடந்த போது, கந்தன் தங்கியிருந்த அரண்மனை கண்ணில் பட்டது. அங்குள்ள நந்தவனத்திற்கு சென்றான். அப்போது, ஒரு மரத்திலிருந்த கழுகு, பாம்பைப் பிடித்து கொத்திக் கொண்டிருந்தது. பாம்பின் விஷம் மரத்தடியில் படுத்திருந்த, ராஜகுமாரனின் கழுத்தில் விழுந்ததைப் பார்த்தான். தன் கத்தியை எடுத்து, அந்த விஷத்தை சுரண்டினான். அப்போது, மன்னன் வந்து விட, தன் மகனை அவன் கொலை செய்ய முயற்சிக்கிறானோ என்று எண்ணி, சிறையில் அடைத்து விட்டான்.
ஒருநாள், கந்தன் சிறைவாசிகளுக்கு முருகனின் சிறப்பை எடுத்துரைக்க சென்றான். அங்கே குமரன் இருந்ததைப் பார்த்தான். நடந்ததை எடுத்துச் சொன்னான் குமரன்.
""குமரா! தெய்வத்தை நம்பு! மனிதர்கள் எவ்வளவு உயர்ந்த பிறப்பாயினும் நம்பாதே! மன்னர்களும் ஒருநாள் அழியப் போகிறவர்கள் தானே! அழியாப்பொருளான முருகப் பெருமானை மட்டுமே புகழ்ந்து பேசு,'' என்று புத்திமதி சொன்னான். குமரனும் அதை ஏற்றான். தாங்கள் வந்த விஷயத்தை மன்னனிடம் சொன்ன கந்தன், குமரனை விடுவிக்கச் செய்தான். இருவரும் தங்கள் நாட்டை அடைந்தனர்.
மன்னரிடம் குமரன்,""தெய்வ அனுகூலமே உயர்ந்தது என்பதைப் புரிந்து கொண்டேன்,'' என்றான்.

No comments:

Post a Comment