Friday, January 31, 2014

நண்பனுக்காக தன் பிரகாசத்தையே விட்டுக் கொடுத்த பிறகும், சூரியன் இன்னும் இவ்வளவு பிரகாசிக்கிறான்

துவாரகையைச் சேர்ந்த சத்ராஜித்துக்கு நண்பனாக விளங்கியவர் சூரியன். இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவது வழக்கம். ஒருநாள், காலையில் உதித்த நண்பனான சூரியதேவனை சத்ராஜித் வணங்கினான். தகதகவென ஜொலித்துக் கொண்டிருந்த சூரியனின் பிரகாசத்தை சத்ராஜித்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ""சூர்யா! எப்போதும் உன்னை நெருப்புக் கோளமாகவே பார்க்கிறேன். கண்கள் கூசுகின்றன. என் நண்பனாக உன்னைக் காண முடியாதா?'' என்று கேட்டான்.
சூரியதேவன் சிரித்துக் கொண்டே, தன் கழுத்தில் இருந்த சியமந்தகம் என்னும் ரத்தினத்தை மறைத்து விட்டு, அவன் முன் காட்சியளித்தார். என்ன ஆச்சரியம்! இப்போது, அவன் கண்கள் கூசவில்லை.
""நண்பனே! நீ விரும்பியதைக் கொடுக்கவும் காத்திருக்கிறேன்'' என்று வரம் அளிக்கவும் தயாரானார் சூரியன்.
சத்ராஜித்துக்கு சூரியனின் சியமந்தக மணியை தானும் அணிய வேண்டும் என்ற ஆவல் உண்டானது. சூரியனும் அதைக் கொடுத்து விட்டார் நண்பனுக்காக. சத்ராஜித் அதை அணிந்தபடியே, துவாரகைக்குத் திரும்பினான். அவனைக் கண்ட மக்கள், கிருஷ்ணரிடம் சென்று சூரிய பகவான், துவாரகைக்கு வந்திருப்பதாக தெரிவித்தனர்.
கிருஷ்ணர் தன் ஞானதிருஷ்டியால் உண்மையை அறிந்தார். ""மக்களே! வந்திருப்பது சூரியதேவன் அல்ல! நம் சத்ராஜித் தான், சூரியனின் மாலையை அணிந்திருக்கிறான். அவன் அணிந்திருக்கும் சியாமந்தக மணியால், அவன் பிரகாசமுள்ளவனாகி விட்டான்'' என்ற உண்மையை தெரிவித்தார்.
நண்பனுக்காக தன் பிரகாசத்தையே விட்டுக் கொடுத்த பிறகும், சூரியன் இன்னும் இவ்வளவு பிரகாசிக்கிறான் என்றால், அந்தக்கால சூரியன் எப்படி இருந்திருக்குமென கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை! சரிதானே!

No comments:

Post a Comment