Saturday, February 22, 2014

உங்கள் பிள்ளை நல்ல பிள்ளை' என்று ஊர் சொல்லி கேட்பதற்கு கொடுப்பினை வேண்டுமே

இப்போதெல்லாம், அப்பாக்களுக்கு நிறைய பிரச்னை. ""என் இதயமே நின்று விடும் அளவில் மகன்களின் பேச்சு இருந்தது,'' என்றெல்லாம் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம்.
ஆனால், ஆன்மிகத்தில் அப்படியில்லை. தன் மகனைப் பற்றி பெருமைப்பட்டுக் கொண்டார் தசரத மகாராஜா.
மூத்த மகன் ராமனுக்கு பட்டம் சூட்ட முடிவெடுத்தார் தசரதர். நாட்டு மக்களை அழைத்து,""அன்பிற்குரிய மக்களே! என் மகன் ராமனுக்கு முடிசூட்ட நினைத்திருக்கிறேன். உங்கள் கருத்தைச் சொல்லுங்களேன்,'' என்றார்.
""ஓ! தாரளமாக! அவர் சகல நற்குணங்களும் நிறைந்தவர். ஆட்சியமைக்க தகுதியானவர், அவரிடம் ஒப்படைத்து விடுங்கள்,'' என்றனர் மக்கள். ஆனால், அதோடு விட்டிருக்கலாம் இல்லையா!
""நீர் உடனடியாக பதவியை விட்டு இறங்கும்,'' என்றார்கள்.
தசரதருக்கு ஏக வருத்தம்.
"அறுபதாயிரம் ஆண்டுகள் இந்த தேசத்தை ஆண்டிருக்கிறேன். இந்த மக்களுக்கு குறை ஏதும் வைத்ததாகத் தெரியவில்லை. ஆனாலும், இவர்கள் தன்னை இறங்கு' என சொல்லி விட்டார்களே என வருத்தப்பட்டார்.
""ஏன் இப்படி சொல்கிறீர்கள்?'' என மக்களை கேட்டும் விட்டார்.
""மாமன்னரே! தங்கள் ஆட்சியில் எங்களுக்கு குறை ஏதும் கிடையாது. ஆனால், உங்கள் மகன் மிகுந்த குணசாலி. அவர் மீது கொண்ட அன்பின் காரணமாகவே, ராமராஜ்யம் விரைவில் மலரட்டுமே என்று சொன்னோம்,'' என்றனர் மக்கள்.
இப்போது, தசரதர் ரொம்பவே பெருமைப்பட்டார். சந்தோஷமடைந்தார். அந்த சந்தோஷத்தின் அளவு என்ன தெரியுமா?
தன் மகனை யாகம் செய்து பெற்ற காலத்தை விடவும், விஸ்வாமித்திரருடன் சென்று தாடகை என்ற அரக்கியை வதம் செய்து பெற்ற புகழை விடவும், யாராலும் ஒடிக்க முடியாத சிவதனுசு என்ற வில்லை வளைத்து, சீதையை திருமணம் செய்து பெற்ற மகிழ்ச்சியை விடவும் அதிக சந்தோஷமடைந்தார்.
"உங்கள் பிள்ளை நல்ல பிள்ளை' என்று ஊர் சொல்லி கேட்பதற்கு, இப்போதும் தகப்பனார்களுக்கு ஆசை இருக்கத்தான் செய்கிறது. கொடுப்பினை வேண்டுமே!

No comments:

Post a Comment