Tuesday, March 11, 2014

ஆரிய-திராவிட பேதம்;

வட மொழியில் உள்ள வேதங்களும், ஆகமங்களும், புராணங்களும், இதிகாசங்களும் ஆரியரினதும், பிராமணரினதும் படைப்பு என்றும், அவர்கள் புகுத்தியவை என்றும் புறந்தள்ளுகின்றோம். இவர்கள் மேல் கொண்ட கோபத்தாலும், துவேஷத்தாலும் எமது பெருஞ்செல்வங்களான வேத ஆகமங்களையும், ஏனைய வட மொழி நூல்களையும் அவர்களுடன் சேர்த்துப் புறந்தள்ளி வறியவராகின்றோம். சைவத்தின் தாரக மந்திரமாம் பஞ்சாட்சரம் கிருஷ்ண யசுர் வேத்த்தில் உள்ள ஸ்ரீ ருத்திரத்தில் இருக்கும் வட மொழி மந்திரம் என்பதை மறந்து விடுகின்...றோம். வடமொழியில் உள்ள வேதத்தின் ஸ்ரீ ருத்திரத்தை செபித்தே உருத்திர பசுபதி நாயானார் சிவபதம் பெற்றார் என்று பெரிய புராணம் கூறுவதையும் மறந்துவிடுகின்றோம். திருமுறைகளில் இருந்து புராணக்கதைகளையும், இதிகாசக்கதைகளையும் தணிக்கை செய்து எடுத்து விட்டால் புத்தகங்களில் வெற்று அட்டை மட்டும் தான் நமக்கு மிஞ்சும். நாம் இப்போது அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றோம், உள் வீட்டுக்குள் இருந்து கொண்டு அதையே உடைத்தெறிகின்றோம்; நுனிக்கிளையில் இருந்து கொண்டு அடி மரத்தை வெட்டுகின்றோம்; தேவாரம் படித்துக்கொண்டு திருக்கோயில்களை இடிக்கின்றோம். வேறு எந்த சமயத்துக்கோ அல்லது இந்திய தத்துவத்துக்கோ இல்லாத பிரிவினைவாதம் வடக்கு- தெற்கு என்றும், ஆரியம்- திராவிடம் என்றும், தமிழ்- வட மொழி என்றும், பிராமணர்-பிராமணரல்லாதார் என்றும், தமிழர்- தமிழர் அல்லாதார் என்றும் சைவத்தில் தலைவிரித்தாடுகின்றது. இது எமது சவால் மட்டுமல்ல சாபக்கேடும்கூட.

No comments:

Post a Comment